COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, January 2, 2018

டிசம்பர் 21 - 23, 2017 தேதிகளில் புதுச்சேரியில் நடந்த
இகக(மாலெ) மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள்

             தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்களுடன் இகக மாலெயின் மத்திய கமிட்டி நிற்கிறது. உயிரிழந்த, படுகாயமுற்ற, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் குஜராத் தேர்தல்களில் மூழ்கியிருந்ததற்காக பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறது
.
             பிரிக்கால் தொழிலாளர் வழக்கில், மொத்த வழக்கும் ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை பாத்திரம் பற்றி கேள்வி எழுப்பியும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளபோது, பிரிக்கால் தொழிலாளர்கள் இரண்டு பேரின் ஆயுள்தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக மத்திய கமிட்டி கவலை தெரிவித்தது. மறுபுறம், உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலைக்கு எதிரான பிரிக்கால் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு மனுவை ஏன் விசாரிக்கக் கூடாது எனக் கேட்டு 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களில் ஒருவர் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பிரிக்கால் தொழிலாளர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, உயர்நீதி மன்றமும் ஒப்புக்கொண்டுள்ள, பதிவாகியுள்ள விவரங்களின் அடிப்படையில் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தை மத்திய கமிட்டி வலியுறுத்துகிறது. கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளும் இந்த கோரிக்கையுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பும் கையெழுத்து இயக்கம் நடத்துவார்கள். நாடு முழுவதும் வெவ்வேறு மொழிகளில் தொழிலாளர்களிடம் இருந்து பிரபலங்களிடம் இருந்தும் கையெழுத்துகள் பெறப்படும். சர்வதேச நண்பர்களிடம் இருந்தும் கையெழுத்துகள் பெறப்படும்.
             நேபாளத்தின் நாடாளுமன்றத் தேர்தல்களில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (அய்க்கிய மாலெ) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆகியவற்றின் கூட்டணியான இடதுசாரி கூட்டணி வசதியான பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருப்பதற்கு மத்திய கமிட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இந்த வெற்றி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடு உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும், குறிப்பாக பாசிச சக்திகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்திய கம்யூனிச இயக்கத்துக்கும் பெரும் உற்சாகம் அளிக்கக் கூடியதாகும். நேபாள மக்களின் விருப்பங்களை முன்னெடுத்துச் செல்ல நேபாள கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றுபட்டு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய கமிட்டி வாழ்த்துகள் தெரிவிக்கிறது.
             மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பாக, மின்னணு வாக்கு எந்திரங்களும், வாக்குப் பதிவு சரிபார்க்கும் சீட்டுகளும் பழுதடைவது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் அச்சங்கள் ஆகியவற்றை மத்திய கமிட்டி கவனத்தில் கொண்டது. இங்கொன்றும் அங்கொன்றுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு சரிபார்க்கும் சீட்டுகளும் மின்னணு வாக்கு எந்திரங்களும் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டது இந்த அச்சங்களை போக்க முடியவில்லை. அதிலும் 4 வாக்குச் சாவடிகளில் எண்ணிக்கை வெவ்வேறாக இருந்ததாக தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது. மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இந்த அய்யங்கள் அடிப்படையற்றவை என்று மெய்ப்பிக்க, தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. எனவே, வருங்காலத்தில் மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் என்று மத்திய கமிட்டி அழைப்பு விடுக்கிறது.
             2 ஜி ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது, மத்திய புலனாய்வு துறை பாத்திரம் பற்றிய காத்திரமான கேள்விகளை எழுப்புகிறது. வழக்கின் பிந்தைய கட்டங்களில் வழக்கு பலவீனப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக குற்றம் சாட்டுகிற தரப்பு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை இந்தத் தீர்ப்பு கோருகிறது. 2 ஜி வழக்கில் அனில் அம்பானிக்காக வாதாடிய முகுல் ரோஹத்கி தற்போதைய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 2 ஜி வழக்கில் முழுவதுமாக வெளிப்பட்ட கூடா நட்பு முதலாளித்துவத்துக்கு எதிராக நாட்டு மக்கள் மத்தியில் இருந்த சீற்றத்தை பயன்படுத்தித்தான் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆட்சியைப் பிடித்தது; ஊழல் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்தது. இன்று, திமுக தலைவர் கருணாநிதியை மோடி சந்தித்து ஆரத்தழுவிய சில நாட்களில், 2 ஜி ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் - திமுக தலைவர்கள், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள்தான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் - விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்வதில் தவறிவிட்டது பற்றி விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளது. முந்தைய அய்முகூ ஆட்சி, ஊழலின் சின்னம் என்பதை பிரதமர் மோடி தனது எந்த உரையிலும் பேசத் தவறுவதில்லை. பாஜகவுக்கு நெருக்கமான ஜெகன்னாத் மிஸ்ரா, மாட்டுத் தீவன ஊழலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்; ஆனால் லாலு யாதவ் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பும் கூண்டுக் கிளியான மத்திய புலனாய்வு துறையின் ஒருதலைபட்சமான பாத்திரம் பற்றி கேள்வி எழுப்புகிறது.
             ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் தோழர் ஜிக்னேஷ் மேவானி குஜராத்தின் வட்கம் தொகுதியிலும் இகக(மா)வின் தோழர் ராகேஷ் சின்ஹா ஹிமாச்சலின் தியாக் தொகுதியிலும் வெற்றி பெற்றதற்கு மத்தியக் கமிட்டி வாழ்த்துகளை தெரிவித்தது. இவர்கள் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்றங்களில் மக்கள் இயக்கங்களின் குரலை கேட்கச் செய்வார்கள் என்று மத்தியக் கமிட்டி நம்பிக்கை கொண்டுள்ளது.
             பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முனையும் அய்க்கிய அமெரிக்க முன்னெடுப்பை மத்தியக் கமிட்டி கண்டனம் செய்தது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து, இரண்டு அரசுகள் என்ற தீர்வுக்கான கொள்கையை கேலிக் கூத்தாக்கியதை மத்திய கமிட்டி கண்டனம் செய்தது. அய்க்கிய அமெரிக்காவின் வெளிப்படையான மிரட்டல், அச்சுறுத்தல் முயற்சிகளைத் தாண்டி அய்க்கிய அமெரிக்க முடிவை எதிர்க்கும் அய்நா தீர்மானத்துக்கு சில விரல் விட்டு எண்ணக்கூடிய சிறிய நாடுகள் தவிர உலகின் பெருவாரியான நாடுகள் ஆதரவளித்திருப்பதை மத்தியக் கமிட்டி வரவேற்கிறது.
             தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பீம் படைத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவண் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருப்பதையும் இகக(மாலெ) மற்றும் விவசாயிகள் மகாசபைத் தலைவர்களான அப்ரோஸ் ஆலம், மன்சூர் அலி, ரவீந்திர மகாஜன், ராதே ஷியாம் ஆகியோரை கொடூரமான குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி பிலிபிட் மாவட்டத்திலிருந்து அப்புறப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளையும் மத்தியக் கமிட்டி கண்டனம் செய்தது. அசாமின் விவசாயத் தலைவர் அகில் கோகாய் மீதான குண்டர் சட்டத்தை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த தீர்ப்பை மத்தியக் கமிட்டி வரவேற்கிறது. பீகாரில் வேலை நிறுத்தத்திலிருக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களின் கோரிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு, ஊழியர்கள் சங்கத் தலைவர்கள் ராம்பலி பிரசாத், பிரேம்சந்த் சின்ஹா ஆகியோரை அழைத்துவிட்டு கைது செய்து சிறையிலடைத்த ஜேடியு - பாஜக அரசாங்கத்துக்கு மத்தியக் கமிட்டி கண்டனம் தெரிவிக்கிறது.

             இசுலாமியர் என்பதால், அப்ரசுல் காவி பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இசுலாமியர், கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களுக்கு எதிராக மாணவர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள் என அனைத்து தரப்பினரையும் அணி திரட்ட மொத்தக் கட்சிக்கும் மத்தியக் கமிட்டி அறைகூவல் விடுக்கிறது.

Search