ஆர்கே நகர் இடைத்
தேர்தலில் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்
பாஜகவுக்கு பலத்த
அடி
போகிற போக்கில்
திமுகவுக்கும் அடி
டாக்டர்
ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், முறைகேடுகளே நடக்கவில்லை, வாக்குகளுக்குப் பணம் தரப்படவில்லை என்று
எவரும் சொல்ல முடியாது.
அதே நேரம், நடுத்தர வர்க்க
மேட்டிமை முகச் சுழிப்புடன், புருவ
நெளிப்புடன், பணம்தான் தேர்தல்
முடிவைத் தீர்மானித்தது என்ற அரசியலற்ற அணுகுமுறையை, மக்களை மதிக்காத அணுகுமுறையை எடுப்பதும்
ஏற்கத்தக்கது அல்ல. ஆர்கே நகர் மக்கள் திட்டவட்டமாகவும் தீர்மானகரமாகவும்
வாக்களித்துள்ளனர். அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் திருத்தமாகச் செய்தி
சொல்லியுள்ளனர்.
‘இடைத்தேர்தல் -
இரட்டை இலை’ என்ற இரு பெரும்
ஆயுதங்களால், பழனிச்சாமி -
பன்னீர்செல்வம் அரசாங்கத்திற்கு பலத்த அடி விழுந்ததைத் தடுக்க முடியவில்லை. தோல்வி
சூதை கவ்வியது. தொகுதியின் கணிசமான மீனவ மக்கள், வார்தா, ஓக்கி புயல்கள்போது மாநில அரசாங்கம் காட்டிய
குற்றமய அலட்சியத்தை மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மாநில ஆளும் கட்சி, அதனை ஆட்டி வைக்கிற மத்திய ஆளும் கட்சி ஆகிய
இரண்டிற்கும் எதிராகப் பெரும் சீற்றத்தில் இருந்தனர். இந்த இரண்டு ஆட்சிகளுமே,
வசதி படைத்தவர்களுக்கு
வாரித் தந்து, சாமான்ய மக்களை
ஏறி மிதிப்பதாக மக்கள் கருதினர். இந்த இடைத் தேர்தல், பண மதிப்பகற்றுதல், ஜிஎஸ்டி, வேலை, வருமான இழப்பு, உரிமை பறிப்பு,
ஜனநாயக மறுப்பு, வாழ்வுரிமை பறிப்பு ஆகியவற்றுக்குக்
காரணமானவர்களுக்கு, விவசாயத்தை
ஒழித்துக் கட்டுபவர்களுக்கு சாதி ஆதிக்கம், மதவெறி கார்ப்பரேட் விசுவாச ஆட்சிகளுக்கு,
கட்சிகளுக்கு தண்டனை
வழங்க, அந்த மக்களுக்கு உதவியது.
தினகரன் புனிதர்
என்பதால், தினகரன்
மக்களுக்கானவர் என்பதால் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. முதன்மை போட்டியாளர்களில்
யார் யார் வேண்டாம் என மக்கள் முடிவு எடுத்தபோது, அந்த முடிவில் டிடிவி தினகரன் ஆதாயம்
அடைந்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடம் தர முடியாது, இடம் தரக் கூடாது என்பதால்தான் 2017ல் நோட்டாவுக்கு 2,373 வாக்குகள் அளித்த மக்கள், பாஜகவின் நாகராஜனுக்கு 1,368 வாக்குகளே அளித்தனர்.
எந்த ஒரு
தொகுதியிலும் அதிதீவிர விஷமிகள், அதிதீவிர
விவரமில்லாதவர்கள் 1,500 பேர் வரை
இருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லைதானே! (மீம்சில், அரிவாளோடு யார் அந்த 1,368 பேர் என்று தேடுபவர்கள், பெரிதும் கவலைப்பட வேண்டாம்)
பாஜகவுக்கு
காலூன்ற இடமில்லை என்று செய்தி சொன்னவர்கள், பழனிச்சாமி வகையறாவுக்கு உங்கள் ஆட்சியின்
நாட்கள் எண்ணப்படுகின்றன என்ற செய்தியைச் சொல்லி உள்ளனர். 2001ல் 2006ல் 2011ல் 2016ல் வெற்றி பெற்ற அஇஅதிமுக, வெற்றி பெற்ற இரட்டை இலைச் சின்னம் இந்த முறை
பலத்த அடி வாங்கி உள்ளது.
2016 சட்டமன்றத்
தேர்தல்களில் ஆர்கே நகர் தொகுதியின் வாக்கு விவரங்கள்
அஇஅதிமுக ஜெயலலிதா 97218 55.87%
திமுக சிம்லா முத்துசோழன் 57673 33.14%
விடுதலைச்
சிறுத்தைகள் வசந்தி தேவி 4195 2.41%
பா.ம.க. அக்னெஸ் 3011 1.73%
பாஜக எம்.என்.ராஜா 2928 1.68%
2017 சட்டமன்றத் தேர்தல்களில்
ஆர்கே நகர் தொகுதியின் வாக்கு விவரங்கள்
டி.டி.வி.தினகரன் 89013 50.32%
மதுசூதனன் 48306 27.31%
மருதுகணேஷ் 24651 13.94%
நோட்டா 2373 1.34%
பாஜக கரு.நாகராஜன் 1368 0.77%
அஇஅதிமுக
வேட்பாளராக ஜெயலலிதா பெற்ற வாக்குகளில் 50 சதவீதம் வாக்குகளை 2017ல் அஇஅதிமுக
இழந்துள்ளது. மக்கள் எந்த அளவுக்கு, அஇஅதிமுக அரசாங்கத்தை வெறுக்கின்றனர் என்பதற்கான ஒரு குறியீடே 48,412 வாக்குகள் சரிவாகும்.
திமுகவுக்கு,
மெகா கூட்டணியும்
உதவவில்லை, 2ஜி வழக்கு
தீர்ப்பும் உதவவில்லை. மாறாக மோடி கருணாநிதி சந்திப்பு, மோடி கருணாநிதி குடும்பத்திடம் நலம் விசாரித்தது
ஆகியவற்றுக்கும் 2ஜி
தீர்ப்புக்கும் தொடர்பு உண்டு என மக்கள் கருதியதாகத் தோன்றுகிறது. பிரும்மாண்டமான
மெகா ஊழலில் எவருக்கும் தண்டனை இல்லை என்பது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத
விஷயமாக இருந்துள்ளதாகவே தோன்றுகிறது. ஆளும் கட்சியை வீட்டுக்கனுப்ப வேண்டும் என்றும்
எதிர்க்கட்சி லாயக்கில்லை என்றும் மக்கள் வாக்களித்துள்ளனர்.
மக்களின் துன்ப
துயரங்கள் கடவுளை மதத்தை நாட வைப்பது போல், பல நேரங்களில் திரிந்த சிதைவுற்ற
கருத்துக்களையும் உருவாக்குகிறது. ஜெயலலிதா மீது அனுதாபம் சசிகலா மீது கோபம்
என்பது, தினகரன்
சிறைவாசம், மத்திய அரசின்
பாரபட்சமான சோதனைகள் என்ற பின்னணியில் விபரீதமான முறையில் தினகரன் மீது ஓர்
அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தோன்றுகிறது.
திமுக, மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசு எதிர்ப்பில்
தீவிரமோ முனைப்போ காட்டுவதாக மக்கள் கருதவில்லை. தினகரன், ஜெயா டிவி மாநில, மத்திய அரசுகளை எதிர்ப்பதாக மக்கள்
கருதுகிறார்கள். இந்தப் பின்னணியில்தான் தினகரன் 89,013 வாக்குகள் பெற்றுள்ளார். மதுசூதனனைக்
காட்டிலும் 40000 வாக்குகளுக்கு
மேல் கூடுதலாக தினகரன் பெறுவதும், திமுக வைப்புத்
தொகை (டெபாசிட்) இழப்பதும் நடந்துள்ளது.
தினகரன் தானே
உண்மையான அஇஅதிமுக என்கிறார். இந்த தேர்தலில் தமிழக மக்கள் தமிழ்நாடு எங்கும்
வாக்களிக்கவில்லை. ஆர்.கே. நகர் என்ற ஒரு தொகுதியின் இடைத் தேர்தலில், எது உண்மையான அஇஅதிமுக என முடிவானதாகச் சொல்ல
முடியாது. அஇஅதிமுக பாஜகவுக்கு காவடி தூக்குவதையோ, அந்த அரசாங்கத்தின் குற்றச் செயல்களையோ மக்கள்
ஏற்கவில்லை. திமுக தானே மாற்று எனத் தன்னை மக்களிடம் நிரூபித்துக் கொள்ளவில்லை.
வெண்மணி நடந்து 50 ஆண்டுகள் துவங்கும் போது, ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவு வந்துள்ளது.
கழகங்கள் ஆட்சி துவங்கி 50 ஆண்டுகள்
முடிந்த பிறகு, ஆர்.கே. நகர்
இடைத்தேர்தல் முடிவு வந்துள்ளது. கவுரவத்துக்காக சமத்துவத்துக்காக
நல்வாழ்க்கைக்காகப் போராடிய கிராமப்புற வறியவர்கள் கூலி உயர்வும் கேட்டார்கள்.
டிசம்பர் 25,
1968க்கு முன்பே கீழத்
தஞ்சையில் கம்யூனிஸ்ட் வேட்டை துவங்கிவிட்டது. அண்ணாதுரை தலைமை தாங்கிய அரசு ‘கிசான் போலீசை’ நிறுவி, அதனை, போராடிய விவசாயத் தொழிலாளர்கள் மீது ஏவியது. 44 தலித் விவசாயத் தொழிலாளர்கள் தீயில்
கொல்லப்பட்டது, நாட்டையே உலுக்கி
எடுத்தது. அண்ணாதுரை, ‘பகலில்
மார்க்சிஸ்ட்கள் இரவில் நக்சலைட்டுகள்’ என்று நக்சலைட் பூச்சாண்டி காட்டுவதில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நின்ற செங்கொடி இயக்கத்தை குறை சொன்னவர்களில்
பெரியாரும் இருந்தார் என்பது வரலாற்றுச் சோகமே. வெண்மணியில் துவங்கிய கழக
ஆட்சிகளின் முதல் கோணல், ரெனோ நிசானுக்கு
அள்ளித் தரும் முற்றும் கோணல் வரை நீடித்துள்ளது.
கழகங்கள் தமது
துவக்ககால முற்போக்கு விழுமியங்களை எல்லாம் தொலைத்துவிட்டன. அஇஅதிமுக, திமுக ஆட்சிகள் இயற்கை வளக் கொள்ளைக்கு,
தமிழக வளங்களை கருவூலத்தை
கார்ப்பரேட்கள் கொள்ளை அடிப்பதற்கு, சாதி ஆதிக்கத்திற்கு, மொழி, பண்பாடு, நீராதாரம், வருவாய் உள்ளிட்ட மாநில உரிமைகளை மத்திய
அரசிடம் விட்டுக் கொடுப்பதற்கு போட்டியிட்டுக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில்
ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. கழகங்களின் ஆட்சி ஒரு முழுச் சுற்று முடிந்துவிட்டது.
அவை படுதோல்வி அடைந்துள்ளன. அவை துரோகம் செய்துள்ளன. மக்களுக்கு விரோதமாகவே நடந்துள்ளன.
மாற்று பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளுடன் இடதுசாரிகள், நீண்ட அதே நேரம் விடாப்பிடியான பாதையில்,
தம்மை தமிழகத்தில் ஒரு
மாற்று அரசியல் சக்தியாக, நிலை நிறுத்திக்
கொள்ள வேண்டும். செங்கொடி இயக்கம், அம்பேத்கரிய
பெரியாரிய கருத்துக்களுடன் கரம் கோர்த்து களமாட வேண்டி உள்ளது. ஜனநாயகத்திற்காக,
சிவப்பும், நீலமும், கருப்பும் கைகோர்க்க வேண்டி உள்ளது. இன்றில்லா
விட்டால் நாளை இடதுசாரிகளுக்கு மக்கள் பெரிய அளவில் அங்கீகாரம் தருவார்கள்.
இடதுசாரிகளின் வெற்றியின் மூலம் மக்கள் வெற்றி பெறுவார்கள். அதற்கு, சொந்தக் காலில், சுதந்திர நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளுடன்,
கொள்கைப் பற்றுடன்
லட்சியத் துடிப்புடன், மக்கள்
நம்பிக்கையை பெறுவது இடதுசாரிகள் முன் உள்ள கடமை.