அய்க்கிய
அமெரிக்க சான்மினாவின் இளந்தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
சட்டவிரோத
சம்பளப் பிடித்தம், பழி வாங்கும்
தன்மையுடைய ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராகவும், சங்க அங்கீகாரம், சம்பள உயர்வு என்ற கோரிக்கைகளோடும் அய்க்கிய
அமெரிக்க நிறுவனமான சான்மினா (எஸ்சிஅய்) இளம்தொழிலாளர்கள், ஏஅய்சிசிடியு தலைமையில் 21.11.2017 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி
வருகிறார்கள்.
2007ல் துவங்கப்பட்ட
சான்மினா நிறுவனம், தமிழக அரசோடு 03.07.2007 தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையொப்பமிட்டது. 1 ஏக்கர் நிலம்,
ரூ.19.5 லட்சத்திற்கு, 100 வருங்களுக்கு 100 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. 1 ஏக்கர் நிலத்திற்கு ரூ.4 லட்சம் வரை தமிழக அரசு நிர்வாகத்திற்கு
வழங்கியது. உற்பத்தி துவங்கியதும் முதலில் 1,325 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதாகவும்,
பிறகு 4,000 தொழிலாளர்கள் வரை பணி அமர்த்தப்படுவார்கள்
என்றும், நிறுவனம்
தெரிவித்தது. சலுகைகள் பெற்றது.
சிஅய்டியு
சங்கத்தில் 800 தொழிலாளர்கள்
இணைந்து, பல்வேறு
போராட்டங்களை நடத்தினர். பின்பு விஆர்எஸ் (விருப்ப ஓய்வுத் திட்டம்) மற்றும்
பல்வேறு முறைகளில் தொழிலாளர் எண்ணிக்கை 400ஆக குறைக்கப்பட் டது. ஒப்பந்தப்படி, 4,000 தொழிலாளர்களை நிறுவனம் பணிக்கு எடுக்கவில்லை.
மாறாக, தொழிலாளர்களை 800ல் இருந்து 400 ஆகக் குறைத்தது.
தொழிலாளர்கள்,
2016ல் அய்என்டியுசி
சங்கத்தில் இணைந்தனர். 07.02.2017 அன்று
தொழிலாளர்களிடம் தெரிவிக்காமல், சட்ட விரோதமாக,
முத்தரப்பு ஒப்பந்தம்
போடப்பட்டது. கோபம் கொண்ட தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவில் இணைந்தனர்.
ஏஅய்சிசிடியுவில்
தொழிலாளர்கள் இணைந்ததை பொறுத்துக் கொள்ளாத நிர்வாகம், சங்க முன்னணிகள் 8 பேருக்கு கட்டாய ஓய்வு என்ற தண்டனை, பொய்யான குற்றச்சாட்டுகள், விசாரணைகள், நிர்வாக அதிகாரிகளின் ஆபாச வார்த்தைகள்,
பெண்கள் உட்பட அனைத்து
தொழிலாளர்களுக்கும் கழிவறை செல்ல நேரம் குறித்தல், கரப்பான்பூச்சி, பாட்டில் துகள் போன்றவற்றோடு உணவு வழங்குவதை
எதிர்த்துக் கேட்டால் சம்பளப் பிடித்தம் என பழிவாங்குதல் நடவடிக்கைகள் எடுத்தது.
நிறுவனத்தின்
சட்டவிரோத செயல்களை எதிர்த்து, 21.11.2017 முதல் வேலை நிறுத்தம் செய்ய சங்கம் நிர்வாகத்திற்கு அறிவிப்பு தந்தது. 20.11.2017 அன்று முதல்முறையாக போராடுகிற முன்னணிகளோடு
நிர்வாக இயக்குநர் சந்தித்து, ரூ.2,500,
ஒரு வருடத்திற்கு
வழங்கப்படுமென தெரிவித்தார். இதை தொழிலாளர் தலைவர்கள் ஏற்கவில்லை. இரவு
ஒருதலைபட்சமாக ரூ.3,264 என மாற்றி
அறிவிக்கப்பட்டது. மேலும் இதர படிகள் உட்பட ரூ.4,000 வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்தது.
சங்கத்துடன்
பேசாமல், ஒருதலைபட்சமாக
நிர்வாகம் அறிவித்த சம்பள உயர்வை எதிர்த்து, தொழிலாளர்கள் 21.11.2017 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். அய்என்டியுசியிலுள்ள 30 தொழிலாளர்கள் மூலம், 300 பேர் வரை உள்ள ஏஅய்சிசிடியு போராட்டத்தை
உடைக்க நிர்வாகம் திட்டமிட்டது.
போராட்டத்திலுள்ள தொழிலாளர்களிடம் வேலைக்கு வரச் சொல்லி அதிகாரிகள் மூலம்
தொலைபேசி அழைப்பு விடுத்தது. வேலை நிறுத்தப் போராட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு 8 நாட்கள் சம்பளப்பிடித்தம், தற்காலிக பணி நீக்கம் என்ற தண்டனையை வழங்கியது.
சங்க முன்னணிகளுக்கு
கட்டாய ஓய்வு அளித்த நிர்வாகம், நிரந்தரமற்ற
தொழிலாளர்களை புதியதாக நூற்றுக்கணக்கில் பணியில் அமர்த்தி, நிரந்தரப் பணியில் ஈடுபடுத்தியது. இந்த
நிறுவனம், மருத்துவ
உபகரணங்கள் செய்யும் நிறுவனமாகும். இதில் பயிற்சியில்லாத தொழிலாளர்களை, பணியில் ஈடுபடுத்தினால், மக்களுக்கு தீங்கு நேரிடும் என்பதை நிர்வாகம்
பொருட்படுத்தவில்லை.
04.12.2017 அன்று தொழிலாளர்
ஆய்வாளரிடம், சென்னை
உயர்நீதிமன்ற கேட்ஸ் இந்தியா தீர்ப்பை சுட்டிக்காட்டி வேலை நிறுத்தப் போராட்டம்
நடைபெறும்போது, நிரந்தரமற்ற
பணியாளர்களை பணிக்கமர்த்தக் கூடாது எனவும், ஆலையில் சோதனை செய்து, நடவடிக்கை எடுக்குமாறும் தொழிலாளர்கள் மனு
அளித்தனர்.
05.12.2017 அன்று ஆய்வு
செய்த ஆய்வாளர், நிரந்தரமற்ற,
ஒப்பந்தத் தொழிலாளர்களை,
நிறுவனம் நிரந்தர
உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது என்றும், நிறுவன உரிமையாளருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்து சங்கத்திற்கு
கடிதம் அளித்தார். ஆனால் ஆய்வறிக்கையை சங்கத்திற்கு இது வரை அவர் தரவில்லை.
06.12.2017 அன்று தொழிலாளர்
ஆணையரகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு, பெயர் பலகை அருகில் மற்றும் ஒவ்வொரு தளத்திலும், தொழிலாளர் துறையா? அல்லது முதலாளிகள் துறையா? என்ற வாசகம் கொண்ட காகித அட்டையை ஒட்டினர்.
தொழிலாளர் ஆணையர் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். தொழிலாளர் உதவி ஆணையர் (அஇக)
முன்பு இருந்த வழக்கு தொழிலாளர் துணை ஆணையருக்கு (ஈஇக) மாற்றப்பட்டது. நிர்வாகம்
பேசித் தீர்வு காண மறுத்ததால், 18.12.2017 அன்று, சட்டமன்றத்தை
தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். 210 தொழிலாளர்கள்
கைது செய்யப்பட்டு, மாலை
விடுவிக்கப்பட்டனர்.
ஆர்.கே.நகர்
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதல்வரை முற்றுகையிட்டு 19.12.2017 அன்று போராட்டம் நடத்த தொழிலாளர்கள்
தயாராயினர். இதை அறிந்த காவல்துறை, தொழிலாளர்
செயலருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது. ஆனால், அதே நேரத்தில் தொழிலாளர்கள் அமெரிக்கத்
தூதரகத்தை முற்றுகையிட்டு 178 பேர் கைதாயினர்.
ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பல்வேறு
தொழிற்சாலைத் தொழிலாளர்கள், தொழிலாளர்
முன்னோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஒசூர் நெரொலக் தொழிற்சங்கம் சார்பில் ரூ.5,000 நன்கொடை வழங்கப்பட்டது. தொழிலாளர்கள்
மக்களிடம் நிதி மற்றும் ஆதரவு கோரினார்கள். இந்த முற்றுகைப் போராட்டங்களுக்கு
தொழிலாளர் முன்னோடிகளான தோழர்கள் நித்தியானந்தம், லோகநாதன் போன்றோர் தலைமை தாங்கினர்.
போராட்டத்தின் துவக்கத்திலேயே மீன் பிடித்து தருவதைவிட மீன் பிடிக்க கற்றுக்
தருதல்தான் சரியானது எனச் சொல்லி, தொழிலாளர்
முன்னோடிகளை முற்றுகைப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்க ஏஅய்சிசிடியு அழைப்பு
விடுத்திருந்தது.
19.12.2017 அன்று தொழிலாளர்
செயலரையும், 22.12.2017 அன்று தொழிலாளர்
ஆணையரையும் ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் பாரதி, இரணியப்பன் சந்தித்து மனு அளித்து கோரிக்கையை
பற்றி சொன்னார்கள். தொழிலாளர் துறையால் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த
முடியுமென்றும், தொழிலாளர்
போராட்டங்களால் மூலதனம் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிடுமென்றும், வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டுமென்றும் இந்த
அதிகாரிகள் தெரிவித்தார்கள். தொழிலாளர் கோரிக்கையை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஏஅய்சிசிடியு
அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி போராட்டப் பந்தல் மற்றும் தயாரிப்பு
கூட்டங்களிலும், முன்னணிகள்
கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டார்.
22.12.2017 அன்று நடத்த
பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்க தூதரகம்
முன்பும், தொழிலாளர் ஆணையர்
அலுவலகத்திலும் சுமார் 300க்கும் மேற்பட்ட
காவல்துறையினர் தொழிலாளர்களை கைது செய்ய கூடி இருந்தனர். தொழிலாளர் ஆணையர்
அலுவலகத்தில், 100க்கும் மேற்பட்ட
காவல்துறையினர் தொழிலாளர்களை சுற்றி வளைத்தனர். எப்படியாவது வழக்கை தொழிலாளர்
துறையிடமிருந்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட வேண்டுமென்ற எண்ணம்
பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் வெளிப்பட்டது. நிர்வாகம், காவல்துறை, தொழிலாளர் துறை என்ற முக்கூட்டு
தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டது.
எல்லாம்
முடிந்தது, தொழிலாளர்களால்
இனி ஒன்றும் செய்ய முடியாது என எதிர் தரப்பினர் கருதி இருந்த நேரத்தில், தொழிலாளர் கள் குடும்பத்தினருடன் சட்டமன்றத்தை
முற்றுகையிட்டு, சிறைக்கு
செல்கிறோம் என்ற முடிவை எடுத்தனர். காவல்துறை, அதை அறிந்து கொண்ட பின்னணியில், சங்கத்தோடு அரசுத் தரப்பில் யார் பேச வேண்டுமென
கேட்டது. முதல்வர், துணை முதல்வரோடு
சந்திப்பு வேண்டும் எனச் சொல்லப்பட்டது.
27.12.2017 அன்று துணை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்க காவல்துறை ஏற்பாடு
செய்திருந்தது.
பேச்சுவார்த்தையில்
ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் பாரதி, இரணியப்பன், கிளை நிர்வாகிகள்,
நித்தியானந்தம், லோகநாதன், அர்ச்சுன், சுதாகர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில்,
துணை முதல்வர்
கோரிக்கைகளை பென்சிலால் தனியாக எழுதி வைத்துக் கொண்டார். கூடுதல் நேரமெடுத்துக்
கொண்டு கோரிக்கைகளை சொல்லுங்கள் என்று சொன்னார். 10 வருடம் பணி புரிந்தும், அதிகபட்சம் ரூ.17,000தானா மாதச் சம்பளம் எனக் கேள்வி எழுப்பினார்.
அவரின் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென சங்கத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. இது பற்றி தொழிலாளர் துறையில் பேசி, அது பற்றிய விவரங்களை சங்கத்திற்கு
தெரிவிப்பதாகச் சொன்னார்.
தொழிலாளர்கள்
ஒழுங்காக பணிபுரிந்தால் ஒழுங்கு நடவடிக்கை வராது என்றும், நிறுவனத்தில் போராட்டம் நடந்தால் மூலதனம் வேறு
மாநிலத்திற்கு சென்றுவிடும் என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.
24.01.2018 அன்று
பேச்சுவார்த்தையை எதிர்நோக்கியுள்ள பின்னணியில் 28.12.2017 அன்று இகக மாலெ மாநிலச் செயலர் என்ற முறையில்
தோழர் குமாரசாமி, சான்மினா
தொழிலாளர்களிடம் இககமாலெயில் சேர அழைப்பு விடுத்தார்.
ஏஅய்சிசிடியு,
அரசியல் நடத்துகிறது,
செய்கிறது, கட்சிக்காக தொழிலாளர்களை பயன்படுத்துகிறது என
அய்என்டியுசி தொழிலாளர் மத்தியில் விமர்சனம் செய்யும் பின்னணியில், பாட்டாளி வர்க்க அரசியலை வெளிப்படையாக
பேசுவதுதான் எங்கள் பணி என தோழர் எஸ்.கே. தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.
39 நாட்கள்
கடந்துள்ள, போராட்டத்தின்
துவக்கத்தில், சங்கத்திடம் ரூ.1.50 லட்சம் இருந்தது. 39வது நாளிலும் அதே தொகை சங்கத்திடம் இருக்கிறது.
உணவு, போக்குவரத்து செலவு
ஆகியவை மக்களிடமிருந்து பெறப்பட்ட போராட்ட நிதியில் இருந்து செலவிடப்பட்டன. 02.02.2018 அன்று, புரட்சிகர இளைஞர் கழகம் பதாகையில், பல்வேறு ஆலைத் தொழிலாளர் முன்னணிகளை அழைத்து,
திருப்பெரும்புதூரில்
ஆர்ப்பாட்டம் நடத்த தொழிலாளர்கள் தயாராக உள்ளனர்.
ஆய்வாளர்
முற்றுகை, ஆணையர் முற்றுகை,
போராட்டம் போன்ற
நடவடிக்கைகளால், தொழிலாளர்களின்
போராட்ட வலிமையால், வேறு வழியின்றி
அரசுத் தரப்பில் அழைக்கப்பட்டு தொழிலாளர் செயலர் சந்திப்பும் துணை முதல்வர்
சந்திப்பும் நடத்தப்பட்டது. யாரையும் கெஞ்சிக் கேட்டு இந்த சந்திப்புகள்
நடக்கவில்லை.
முடியாது என்று
முற்றுப்புள்ளி வைத்து விடாமல் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் போராட்டம்
தொடர்கிறது. 300 தொழிலாளர்
பிரச்சனை பற்றி துணை முதல்வர் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தொழிலாளர்கள்
உருவாக்கியுள்ளனர்.
பன்னாட்டு,
இந்நாட்டு
பெருநிறுவனங்களுக்கு எதிராக போராட முடியாது என்ற சிந்தனையை தகர்க்கும் வேலையில்,
சான்மினா தொழிலாளர்கள்
வெற்றியடைந்துள்ளனர். 3 லட்சம் பேர் பணி
புரியும் திரும்பெரும்புதூர் பகுதியில் சான்மினா தொழிலாளர்களின் போராட்டம் மிகுந்த
நம்பிக்கையை நிச்சயமாக ஏற்படுத்தும்.
ஏஅய்சிசிடியு
மாநிலச் செயலர் தோழர் பாரதி, மாநில துணைத்
தலைவர் இரணியப்பன் இந்தப் போராட்டங்களை வழிநடத்து கின்றனர். சான்மினா முன்னணி இளம்
தலைவர்கள் போராட்டத்தை நம்பிக்கையோடு நடத்தி வருகிறார்கள். தமிழக தொழிலாளர்களின்
போராட்ட வரைபடத்தில் சான்மினா போராட்டம் நம்பிக்கை தருகிறது.
வேலை நிறுத்தப்
போராட்டம் துவங்கும் முன்பே, எந்த
வாக்குறுதியுடன் போராட்டம் நடத்தப்படாதென்றும், தொழிலாளர்கள்
பணப் பயன்களுக்காக மட்டும் போராடக் கூடாது என்றும், சுயமரியாதைக்காக போராட வேண்டும் என்றும்
ஏஅய்சிசிடியு தரப்பில் சொல்லப் பட்டது. போராட்டம் எப்போது முடியுமென கேட்கக்
கூடாது எனவும், எப்படி முடியுமென
யோசிப்பதுதான் பாட்டாளி வர்க்க பண்பு என சொல்லப்பட்டது.
2015ல் ஏஅய்சிசிடியு
மட்டுமே ஏசியன் பெயின்ட்ஸ், ஜிம்கானா
கிளப்பில் 100 நாட்கள் கடந்து
வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது. அந்த வருடத்தில் அதிகபட்ச நாட்கள் நடந்த
போராட்டங்கள் அவை. அந்த வரிசையில் சான்மினா தொழிலாளர்களும் பங்களிக்க
முன்வந்துள்ளார்கள். தொழிலாளர்களுக்கும், சங்க முன்னணிகளுக்கும் எந்த இடைவெளியும் இல்லை. இந்த போராட்டம் முழுக்க
முழுக்க புதியவர்களோடு தொடர்புடையதாக உள்ளது.
போராடத் தயார்,
சிறை செல்லத் தயார்,
இரத்தம் சிந்தத் தயார்
எனத் தொழிலாளர்கள் முடிவெடுக்க வேண்டுமென தோழர் எஸ்.கே. தொழிலாளர் மத்தியில்
சொன்னபோது, நிர்வாகம்,
ஏஅய்சிசிடியு சங்கத்தினர்
வன்முறையாளர்கள் எனவும் சமரசப் பேச்சுவார்தையில் கலந்து கொள்ள பாதுகாப்பு வழங்க
வேண்டுமெனவும் தெரிவித்தது. இந்த வேலை நிறுத்தக் காலத்தில் 39 நாட்கள் தொழிலாளர்கள் சோர்வடையவில்லை. மாறாக,
எப்போது சிறைக்குச்
செல்வோம் என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘நீங்க எப்பவும் ரெடியா பேஸ்ட் பிரஷ்ஷோட
வந்துடறீங்க’ என்று
காவல்துறையினர் கவலைப்பட்டு சொல்லும் அளவுக்கு சான்மினாவின் இளம்தொழிலாளர்
மத்தியில் தயார்நிலை உள்ளது.