விவாதம்
இமாச்சலபிரதேசம்
மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள்
காம்ரேட்
இமாச்சலபிரதேசத்தில்
1985 முதல் காங்கிரசும் பாரதிய
ஜனதா கட்சியும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. இது, பஞ்சாபுக்கு அடுத்து, மக்கள் தொகையில் 25 சதவீதம் வரை தலித்துகள் கொண்ட மாநிலம்.
இங்கு 68 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 2012ல் காங்கிரஸ் 42.81% வாக்குகளுடன் 36 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 2017ல் காங்கிரஸ் 41.8% வாக்குகளுடன் 21 இடங்களை மட்டுமே வென்றது. 2012ல் 38.47% வாக்குகளுடன் 26 இடங்களைப் பெற்ற பாஜக, 2017ல் 48.7% வாக்குகளுடன் 44 இடங்களை வென்றது. பாஜக 2012ல் பெற்ற 38.47% வாக்குகளோடு ஒப்பிடுகையில் 2017ல் கிட்டத்தட்ட 10% கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 53.3% வாக்குகளைப் பெற்றது. 3 வருடங்கள் கழித்த பின் கிட்டத்தட்ட 5% வாக்குகள் குறைந்துள்ளன. காங்கிரஸ் 2012ல் சுமார் 42% 2014ல் 38.45% வாக்குகளும் 2017ல் 41.8% வாக்குகளும் பெற்றுள்ளது.
இமாச்சலபிரதேசத்தில்
வாடிக்கையான ஆட்சி மாற்றம் என்ற பின்னணியில், பாஜக 2014லிருந்து 2017ல் கிட்டத்தட்ட 5% வாக் குகள் குறைவாகவும் காங்கிரஸ் 2014லிருந்து 2017ல் கிட்டத்தட்ட 3.4% வாக்குகள் கூடுத லாகவும் பெற்றுள்ளன. தேர்தல்
அரசியலில் வாக்கு எண்ணிக்கையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு பார்த்தால் பாஜகவுக்கு 2017 இமாச்சல தேர்தல் முடிவுகள் நம்பிக்கையும்
மகிழ்ச்சியும் தருவதாக அமையவில்லை. போதாக்குறைக்கு அதன் முதல்வர் வேட்பாளர்
முன்னாள் முதல்வர் துமால் 2017ல் தோற்றுப்
போனார். அமித் ஷாவின் அரை சத (50%) ஆருடம்,
44 ஆகக் குறைந்தது.
குஜராத்தில் 6ஆவது முறையாக தொடர் வெற்றி, இந்தியா எங்கும் தாமரை, காங்கிரசிலிருந்து விடுபட்ட இந்தியா, இந்திராவை விட கூடுதலான பலம் கொண்ட கூடுதலான
மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற தலைவர் நரேந்திர மோடி என சங் பரிவார் பகட்டாகப்
பேசினாலும், குஜராத் தேர்தல்
முடிவுகள் பாஜகவைச் சுட்டுப் பொசுக்கி வாட்டி வதைக்கின்றன.
182ல் 150 என அமித் ஷா வாய்ப் பந்தல் போட்டார். ஆனால்
பாஜக தட்டுத் தடுமாறித்தான் 99 இடங்கள்
வென்றது. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பார்கள். குஜராத்தின் நகரங்களாலும்,
கடைசி நேர இறுதி கட்ட பாகிஸ்தான்
எதிர்ப்பு, இசுலாமிய
எதிர்ப்பு சாதீய பிரச்சாரத்தாலும்தான் பாஜகவின் தலை தப்பியது. பாகிஸ்தானும்
காங்கிரசும் அகமது படேல் என்ற இசுலாமியரை முதல்வர் ஆக்கப் பார்க்கிறார்கள்,
அயோத்தியில் ராமன் கோயில்
கட்டவிடாமல் தடுக்கிறார்கள், இழிந்த சாதி எனத்
தன் சாதியைப் பேசிவிட்டார்கள் என்று மோடி கண்ணீர் மல்க கூசுôமல் பொய்ப் பிரச்சாரம் செய்ய
நிர்ப்பந்திக்கப்பட்டார். குஜராத் மாதிரி வளர்ச்சி பற்றி மோடி கும்பல் வாய்
திறக்கவில்லை. விவசாய நெருக்கடியும் வேலையின்மையும், பாஜகவின் காலைச் சுற்றி குப்புறத் தள்ளப்
பார்த்தன. தேச வெறி, மதவாதம், சாதிய அணிதிரட்டல் என்ற மோசமான ஆயுதங்களைத்
தயங்காமல், மோடி, எதிரிகள் மேல் ஏவினார்.
குஜராத்தில்
மொத்தம் 182 தொகுதிகள். 2012ல் பாஜக 115 இடங்களிலும் காங்கிரஸ் 61 இடங்களிலுமே வெற்றி பெற்றன. 2017ல் பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் அதன் ஆதரவு பெற்றவர்கள் 3 இடங்க ளிலும் வென்றுள்ளனர். காங்கிரசை விட 7% கூடுதல் வாக்குகள் பெற்றுள்ள பாஜக 16 இடங்களை இழக்க, காங்கிரசும், கூட்டாளிகளும் 19 இடங்கள் கூடுதலாகப் பெற்றனர்.
2012ல் 38.9% வாக்குகள் பெற்ற காங்கிரஸ் 2017ல் 43% வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக இம்முறை 49.1% வாக்குகள் பெற்றுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 2012ல் பெற்றதைக் காட்டிலும் 5% குறைவாக 38.45% வாக்குகளை மட்டுமே பெற்றது. பாஜகவை மோடியை
நாடாள அனுப்பிய 2014 தேர்தலில் 60.11% வாக்குகள் பெற்ற பாஜக 2017ல் கிட்டத்தட்ட 10% வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது.
பாஜக 2017ல் 49.1%, அதாவது, ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சம் (1.47 கோடி) வாக்குகள் பெற்றது. காங்கிரசும்
கூட்டாளிக ளும் 42.1%, அதாவது,
1.24 கோடி வாக்குகள்
பெற்றனர். 2012ல் காங்கிரசைக்
காட்டிலும் 24.45 லட்சம்
வாக்குகள் கூடுதலாகப் பெற்ற பாஜக 2017ல் 20.64 லட்சம்
வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது.
பாஜக வென்ற 99ல் 48 நகர்ப்புற தொகுதிகளாகும். 99 தொகுதிகளில்
கூடுதலாகப் பெற்ற 24.67 லட்சம்
வாக்குகளில், 72%, அதாவது,
21.26 லட்சம் வாக்குகள்
நகர்ப்புற தொகுதிகளில் மட்டுமே பெற்றுள்ளது. அது வென்ற 51 கிராமப்புற தொகுதிகளில் 8.41 லட்சம் வாக்குகள் (28%) மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ்
வெற்றி பெற்ற 77 இடங்களில்,
907910 வாக்குகள், 88%,
67 கிராமப்புற தொகுதிகளில்
இருந்து கிடைத்துள்ளது. நகரங்களில் பாஜக 48, காங்கிரஸ் 10, கிராமங்களில் காங்கிரஸ் 67 பாஜக 51 என்ற தேர்தல் முடிவுகள், எப்படி பாஜகவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்று
சொல்ல முடியும்?
எது
எப்படியாயினும் பாஜக திரும்பத் திரும்ப வெற்றி பெறுகிறது. தேர்தல்களைச் சந்திக்க,
மோடி - ஷா இரட்டையர்
எங்கேயும் எப்போதும் தயாராக உள்ளனர். கிராம ஊராட்சி வார்டு தேர்தல் வரை
பிரச்சாரத்திற்குச் செல்லத் தயாராய் உள்ளனர். தேர்தல்கள் மூலம் அதிகாரத்திற்கு
வந்த பாஜக, எல்லா
அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் கூட
சீர்குலைவுக்கு உள்ளாக்கத் தயாராய் உள்ளது.
பாஜக தடுமாறி
வென்றாலும், காங்கிரசும்
தடுமாறாமல் இல்லை. ராகுல் காந்தியும் காங்கிரசும் மதச்சார்பின்மை, 2002 இசுலாமியப் படுகொலைகள் பற்றிப் பேசவே இல்லை.
ராகுல் காந்தி இந்து அல்ல என சோம்நாத் கோவிலில் பதிவானதாக சங்பரிவார் சொல்ல,
ராகுல் பயந்து போய்
கோயில் கோயிலாகப் போகத் துவங்கினார். தமது குடும்பம் சிவபக்த குடும்பம் என்றார்.
பூணூலை எடுத்து சட்டைக்கு மேல் போட்டுக் கொண்டு, தான் காஷ்மீரத்துப் பண்டிட் என்று
சொல்லாததுதான் பாக்கி. ஆகவே, மக்கள்
போராட்டங்கள் மூலம்தான் (தேர்தல் கூட்டணிகள் மூலம் அல்ல) பாஜகவை அடிப்படையில்
வீழத்த முடியும் என்ற அடிப்படையிலான புரிதல் நிச்சயம் தேவைதான். ஆனால், அதே நேரம், பாஜகவை எல்லா தளங்களிலும் முறியடிக்க வேண்டும்
என்று சொல்லும் போது, தேர்தல்
களத்திலும் முறியடித்தாக வேண்டும் என்பது நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்த கடமையே.
மக்கள் சார்பு
மாற்றத்திற்கான, அனைத்தும் தழுவிய
ஜனநாயகத்தை நிறுவுவது அதற்கான சுதந்திரமான பாட்டாளி வர்க்க நிலைப்பாடுகளில்
அறுதியிடலில் ஊன்றி நிற்பது என்ற போர்த்தந்திர லட்சியங்களுக்கு வலு சேர்ப்பதாகவே,
இடதுசாரி தேர்தல்
செயல்தந்திரங்கள் அமைய முடியும். விதிவிலக்கான அசாதாரண சூழல்களில், அசாதாரண முடிவுகளுக்கும் திறந்த மனதோடு
இருந்தாக வேண்டாமா? பாஜக
முறியடிக்கப்பட வேண்டிய ஒரு துருவமாக உள்ள மாநிலங்களில், இடதுசாரிகள் பலம் பெற முயற்சிக்கும் அதே நேரம்,
பாஜகவை முறியடிப்பதற்கான
உத்திகளைப் பரிசீலிக்க வேண்டும். அதிதீவிர கார்ப்பரேட் ஆதரவு மதவெறி பாசிச பாஜக,
இந்தியாவில் உள்ள மற்ற
எல்லா கார்ப்பரேட் ஆதரவு முதலாளித்துவச் சக்திகளையும் விட ஆபத்தானது தானே. என்ன
விலை கொடுத்தாவது இந்துத்துவாவை முறியடிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொல்வதற்கு,
நாம் தேர்தல் களத்திலும்
பொருத்தப்பாடு காண வேண்டும். தேர்தல் தாண்டிய மக்கள் இந்தியாவைப் படைத்திடும்
நீண்டகால கடமையை நிறைவேற்ற வேண்டிய இடதுசாரிகள், தேர்தல் களம் உள்ளிட்ட எல்லா களங்களிலும்,
பாசிசத்தை முறியடிக்கத்
தயாராக வேண்டும்.