COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 18, 2018

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வகுத்துத் தந்துள்ள 
போராட்டப் பாதையில் தமிழ்நாட்டு மக்கள் முன்னேறிச் செல்வோம்!

எஸ்.குமாரசாமி

2018ஆம் ஆண்டுக்கு, போக்குவரத்துத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு, நம்பிக்கை தந்துள்ளார்கள்.
60,000 பேருக்கு ஒழுங்கு நடவடிக்கைக்கான குறிப்பாணை, வேலை நீக்க, தற்காலிக நீக்க அச்சுறுத்தல்கள், கைதுகள், வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவித்து நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு, 03.01.2018 அரசு போட்ட ஒப்பந்தம் இறுதியானது மேற்கொண்டு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டேன் என அரசு முரண்டு பிடித்தது ஆகிய அனைத்து தாக்குதல்களையும், தங்களது ஒன்றுபட்ட போர்க்குணமிக்க போராட்டத்தால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முறியடித்து விட்டார்கள்.
இந்தப் போராட்டம் சில குறிப்பான விசயங்களை முன்நிறுத்துகிறது. தனியார்மயம் என்பது மக்களுக்கு விரோதமானது, தனியார் மயம் என்றால் போட்டி, விளைவாய் விலை கட்டணம் குறையும், தரம் உயரும் என்ற வாதங்கள் கட்டுக்கதைகள் என்பதை, மக்கள் தம் வாழ்வனுபவங்கள் மூலம் உணர்ந்துள்ளனர். மட்டுமின்றி, நாடெங்கிலும், உலகமய -தாராளமய - தனியார்மயக் கொள்கைகளால் பயன்பெற்றவர்கள் அற்பசொற்ப எண்ணிக்கையினரே, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையே பிரும்மாண்டமானது என்பதும் மக்களுக்குத் தெரிந்துள்ளது. அரசு போக்குவரத்து ஊழியர் கள், 1,39,000 பேர் இரவும் பகலும், வெயிலிலும் குளிரிலும் மழையிலும், 22,000 பேருந்துகள் கொண்டு ஒரு நாளில் 2 கோடியே 10 லட்சம் பேர் கட்டுப்படியான கட்டணத்தில் பயணம் செய்ய உதவுகிறார்கள் என்பதும், மக்களுக்குத் தெரியும்.
மாரடைப்பு வந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் வண்டியை கடினப்பட்டு ஓர் ஓரத்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டு பயணிகளைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்ததும், மக்களுக்குத் தெரியும்.
நஷ்டத்தில் சம்பள உயர்வா என்ற கேள்வியும் எடுபடவில்லை. பொது விநியோகம், அரிசி, மின்சாரம் எல்லாமே, நலம்புரி அரசின் நல நடவடிக்கைகளாக இருக்க வேண்டும். மக்கள் சேவைகளில் லாப நஷ்டக் கணக்கு பார்ப்பது அநியாயம் என்பதும் சுலபமாக, மக்களுக்குத் தெரிந்தது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி களுக்குச் சம்பள உயர்வு, பெரும்பான்மையாக வீணாய்ப் போன சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு ரூ.50,000 சம்பள உயர்வு, நமக்காகப் பாடுபடும் போக்குவரத்து தொழிலாளிக்கு சம்பள உயர்வு தந்தால் அரசாங்கம் திவாலாகி விடாது என்பதும் மக்களுக்குப் புரிந்ததால், இந்த முறை போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு பகிரங்கமாக இல்லா விட்டாலும், மவுனமான மக்கள் ஆதரவு இருந்தது. மக்களையும் போக்குவரத்து தொழிலாளர்களையும், எதிரெதிராக நிறுத்தும் அரசின், நீதித்துறையின் முயற்சிகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி மற்றும் மக்கள் விரோத பழனிச்சாமி அரசாங்கங்களின் மீது மக்கள் கடும் சீற்றம் கொண்டிருந்ததால், இந்தப் போக்குவரத்துத் தொழிலாளியாவது, இந்த அரசாங்கத்துக்கு ஒரு நல்ல பாடம் கற்றுத் தரட்டும் என மக்கள் மனமார நினைத்தனர்.
கோரிக்கைகளின் நியாயத்தை, தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மக்களால் எளிதாகப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள முடிந்தது. பணிச்சுமையால் வேலையின் அழுத்தத்தால் ரூ.5 மதிப்புள்ள பயணச் சீட்டு தர முடியாத நடத்துனரை, கையாடல் குற்றம் சுமத்தி வேலை நீக்கம் செய்வதும், பல நூற்றுக்கணக்கான அத்தகைய வேலை நீக்கங்களை நீதிமன்றங்கள் ஆமாமாம் நியாயம்தான் என்று சொல்வதும் நடக்கும்போது, தமது வருங்கால வைப்பு நிதிப் பணம் ரூ.2,800 கோடியை ஓய்வூதியம் உள்ளிட்ட ரூ.5,000 கோடியை, அரசாங்கம் முறைகேடாக விழுங்கப் பார்த்ததாலும் தர மறுத்ததாலும், இந்த முறை போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதியாக இருந்தனர். இரண்டு வருடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறாமலே இறந்த அநியாயத்தை அவர்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை. 0.13 என்ற அளவில் காரணி வேறுபாடே தங்கள் சம்பள விவகாரத்தில் அரசுக்கும் சங்கங்களுக்கும் இருக்கும்போது, 0.13அய் சூறையாடும் கொள்ளை அடிக்கும் இந்த அரசு கொடுத்தாக வேண்டும் என்று, உறுதியாக நின்றார்கள்.
அரசு கூப்பிட்ட இடத்திற்கு சமரச அதிகாரியை வரவழைத்து, ஏகப்பெரும்பான்மை தொழிலாளர்கள் ஏற்காத ஒப்பந்தத்தை ஆளில்லாத சங்கங்களுடன் போட நாம் அனுமதித்தால், இனி எழுந்திருக்கவே முடியாது என்பதோடு, அது எல்லா முதலாளிகளுக்கும் முன் உதாரணமாக மாறிவிடும் என உணர்ந்ததால், இந்த முறை அவர்கள் போராட்டம் உணர்ச்சிமயமாகவும் போர்க்குணத்துடனும் தீவிரம் அடைந்தது. அஇஅதிமுகவின் சாதாரண தொண்டர்கள் கூட இரட்டை இலை சைகை காட்டி, அம்மா படத்தைத் தூக்கிக் காட்டி, கொண்டாட்டமாய்ப் போராட்டத்தில் பங்கு கொண்டார்கள்.
01.09.2016 முதல் வழங்கி இருக்க வேண்டிய ஊதிய உயர்வை அரசு தராமல் இழுத்த டித்து வந்த பின்னணியில், மே 2017ல் ஒரு வேலை நிறுத்தம் துவங்கினர். நீதிமன்றம் வேலை நிறுத்தத்தை தடை செய்தது. பஞ்சாயத்து பேசியது. 3 மாதங்களுக்குள் பாக்கிகளைத் தர, பிரச்சனையைத் தீர்க்க உறுதி தந்த அரசு, வார்த்தை தவறியதோடு மோசடி ஒப்பந்தமும் போட்டது. இந்தப் பின்னணியில்தான், நீயா நானா பார்த்துவிடுவோம் என்று வர்க்க உணர்வோடு போக்குவரத்து தொழிலாளர்கள் போராடினார்கள்.
இந்த முறையும் 2018லும் நீதிமன்றம் வேலை நிறுத்தத்தைத் தடை செய்தது.தடை செய்த முதல் அமர்வம், தடை கடந்து வேலை நிறுத்தம் செல்ல, அனுமதியின்றி யாரையும் வேலை நீக்கம் செய்யக் கூடாது என்ற முதல் மாற்றத்தைச் செய்தது.அடுத்து, இனியும் தான் விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்து, நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வத்திற்கு மாற்றியது. நீதிபதிகள், இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் வைத்தனர். ஆலோசனை சொன்னார்கள். மிரட்டவில்லை. அனைத்து தொழிற்சங்கங்களின் பொது மக்களின் பேராதரவு பெற்ற வேலை நிறுத்தம், 12.01.2018 இரவுடன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. போட்ட ஒப்பந்தம் போட்டதுதான், 1 ரூபாய் கூட கூடத் தரமாட்டேன் என்று இறுமாப்புடன் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர், 2.44 காரணியா அல்லது 2.57 காரணியா என நடுவரான முன்னாள் நீதிபதி பத்மநாபன் 1 மாதத்திற்குள் சொல்லும் தீர்ப்பை ஏற்பதாகச் சொல்லி உள்ளனர். கொள்கை அளவில் சம்பள உயர்வு என்ற விசயத்தில் அரசாங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. நவம்பர், 2017 வரையிலான பழைய பாக்கிகள் ரூ.750 கோடி வரை, பொங்கலுக்குள் தருவதாகச் சொல்லி உள்ளனர்.
‘யாராட்டமும்’ போராட்டத்தின் முன்னால் செல்லாது எனக் காட்டிய போராட்டத்தைக் கொண்டாடுவோம். இத்தகைய போராட்ட நாட்களே தமிழர் திருநாட்களாக மாற வேண்டும்.
நீதிமன்றங்கள், சர்வீஸ் மேட்டர்களில் பொதுநல வழக்குகளை விசாரிக்கக் கூடாது என இடஒதுக்கீடு என்ற நியாயமான பிரச்சனையில், உச்சநீதிமன்றம், நீதிபதி முகோபாத்யாயா அமர்வம் மூலம் தீர்ப்பு சொன்னது. அப்படி இருக்க, செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஒடுக்க, ‘மக்கள் நலன் காக்க புறப்படும்’ சிலர் தொடுக்கும் வழக்குகளில், தடை ஆணை கொடுப்பதை, நீதிமன்றங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திரு கே.சந்துரு, சென்னை உயர்நீதிமன்றத்தில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் தன் ஊழியர் வேலை நிறுத்தத்தைத் தடை செய்யக் கேட்டு வழக்கு போட்டபோது, வேலை அளிப்பவர் வேலை செய்பவர் பிரச்சனைகளில் கூட்டு பேர உரிமைக்கு எதிராக தொழிலாளர்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக நீதிமன்றம் தலையிடக் கூடாது, சற்று விலகி நிற்க வேண்டும் என்று வழங்கிய சரியான தீர்ப்பை இனியாவது, நீதிமன்றங்கள் பின்பற்றுவது, அனைவருக்கும் நல்லது.

Search