COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 29, 2018

கருத்தரங்கம்

விவசாய நெருக்கடி, வேலையின்மை - என்ன தீர்வு?

விவசாய நெருக்கடி, வேலையின்மை -  என்ன தீர்வு என்ற தலைப்பில், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கமும் அகில இந்திய விவசாய மகா சபையும் இணைந்து மே 23 அன்று கும்பகோணத்தில் கருத்தரங்கம் நடத்தின.
தஞ்சை, நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தோழர்கள் வந்திருந்தனர். இகக(மாலெ) மத்திய குழு உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுப்பிரமணியம்  வித்யாசாகர், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, வெங்கடேசன், தேசிகன், இளங்கோவன், கண்ணய்யன், தனவேல் கலந்துகொண்டனர். கூட்டத்தை அவிகிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் நடத்தினார். மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம் தீர்மானங்கள் முன்வைத்தார்.
அஇவிமச சார்பாக பேசிய தோழர் சிம்சன் விவசாய நெருக்கடியில் இடதுசாரி தலையீட்டின்  அவசியத்தை வலியுறுத்தினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  நிர்வாக குழு உறுப்பினர் தோழர் மு.அ.பாரதி பேசினார். விவசாய நெருக்கடி டெல்டாவை எப்படி பிடித்தாட்டுகிறது என்பதை விவரித்த அவர், இடதுசாரிகளின் போராட்டத்தை, மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளுக்கெதிராக, காவி பாசிசத்தை முறியடிக்க நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். கூட்டத்தில் பேசிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் தோழர் கே.பக்கிரிசாமி, டெல்டாவில் விவசாயத் தொழிலாளர்கள் கிராமப்புற வறியவர்கள் அனைவரும் சந்திக்கும், வேலையின்மை, வறுமை என்ற நெருக்கடியை விவரமாகவும் உணரத்தக்க வகையிலும் எடுத்துரைத்தார். இகக, இகக(மா)வைச் சேர்ந்த இந்த இரண்டு தோழர்களுக்கும் மாலெ தீப்பொறி வெளியீடான, ‘ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்தியப் புரட்சிக்குத் தயாராவோம்’ பிரசுரம் வழங்கப்பட்டது.
கருத்தரங்கில் பேசிய இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, மே 25 நக்சல்பாரி தினத்தில் நடக்க இருந்த கருத்தரங்கம்தான் வேறு காரணங்களால் மே 23 நடத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டு, நக்சல்பாரியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நக்சல்பாரி, விவசாய புரட்சியை உடனடி நிகழ்ச்சிநிரலில் கொண்டு வந்தது; கிராமப்புற வறிய உழைக்கும் மக்களை தேசத்தின் அரசியல் மய்ய நீரோட்டத்தில் முன் நிறுத்தியது; உழைக்கும் மக்கள் கைகளில் அதிகாரம் என்ற கேள்வியை அழுத்தம் திருத்தமாக முன்வைத்தது; தோழர்கள் பகத்சிங், சீனிவாசராவ் மரபில், லட்சியத் துடிப்பு, தியாகம், அர்ப்பணிப்பு, எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, மக்களோடு ஒன்றுகலத்தல் என்ற உயர்ந்த மரபுகளை முன்வைத்தது எனக் குறிப்பிட்டு, நக்சல்பாரியை, வெறுமனே ஆயுதங்களுடன், தேர்தல் புறக்கணிப்புடன் சுருக்கி குறுக்கி நிறுத்துவது, தட்டையான ஒருதலைப்பட்சமான யாந்திரிகமான பார்வை என எடுத்துரைத்தார். விவசாய நெருக்கடியில், மோடி, பழனிச்சாமி அரசுகள் கார்ப்பரேட்மயமாதலைத் தீவிரப்படுத்தும் வகையில், மூலதன ஊடுருவலை அதிகப்படுத்தும் விரிவுபடுத்தும் வகையில் தலையிடுகின்றன எனவும், குலாக்குகள் பணக்கார விவசாயிகள் கட்டுப்படியாகும் விலை கடன் தள்ளுபடியோடு நின்று விடுகிறார்கள் என்றும், இடதுசாரிகள், வேலை, கூலி, சமூக கவுரவம், வீட்டுமனை, கடனிலிருந்து விடுதலை, நிலம், குத்தகைதாரர் சாகுபடியாளர் நலன் ஆகிய கோரிக்கைகள் மீதான போராட்டங்களுடன் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொழிலாளர்கள் விவசாயிகள் ஒற்றுமை யதார்த்தமாக முன்வருவதைச் சுட்டிக்காட்டி, சங் பரிவாரை 2019 தேர்தலில் தோற்கடிக்க தகுந்த உத்திகளைக் கையாளும் அதே நேரம், மாற்றுக் கொள்கைகளுடன் மக்கள் போராட்டங்கள் அடிப்படையில் எழுகிற இடதுசாரிகளே உண்மையான சரியான மாற்றாக இருப்பார்கள் என வலியுறுத்தினார். 
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மக்களைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்பட வேண்டும்
கொலைகார பழனிச்சாமி அரசாங்கம் பதவி விலக வேண்டும்
படுகொலைக்கு காரணமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் இருவரையும் பொறுப்பிலிருந்து நீக்கி கைது செய்ய வேண்டும். வேதாந்தா முதலாளியை கைது செய்ய வேண்டும்.
நிலம், விவசாயம், விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள், விவசாயிகள் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
காவிரியில் பாரம்பரிய உரிமை நிலை நாட்டப்படவேண்டும். மாநில மக்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
விவசாயத்துக்கு விவசாய சமூகத்துக்கு தமிழக வளர்ச்சிக்கு ஆபத்தான பேரழிவுத் திட்டங்கள், புறவழிச்சாலைகள், மீத்தேன், ஹைட்ரோகார்பன், அனல் மின்நிலையங்கள், இனையம் துறைமுகம், பெட்ரோலிய - ரசாயன மண்டலங்கள், கூடங்குளம் அணு உலைப் பூங்கா, ஓஎன்ஜிசி, நியூட்ரினோ, உள்ளிட்ட அனைத்து கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களையும் மத்திய மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் திட்டங்களை எதிர்த்து போராடியவர் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
விவசாய வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்ட விவசாய உற்பத்தி, வேலை வாய்ப்பு, வாழ்வாதார பாதுகாப்பு மண்வளம், வனவளம், கடல் வளம் உள்ளிட்ட இயற்கை வளப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சார்பு வளர்ச்சித் திட்டங்களை முன்னுரிமைத் திட்டங்களாக செயல்படுத்த வேண்டும்.
நூறுநாள் வேலைத் திட்டத்தில் 300 நாட்கள் வேலை வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கு திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஆறு, கால்வாய், ஏரி, குளங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து, தூர் வாரும் திட்டங்களில் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
நூறுநாள் வேலைத் திட்டத்தில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடக்கின்றன. இதில் ஆளும் அதிமுக தலைவர்களே ஈடுபட்டுள்ளனர். முறைகேடு செய்து மக்கள் பணத்தை கையாடல் செய்துள்ளவர்களையும் உடந்தையான அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.
ஆதார், ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பெயரில் ஏழைகளை உணவுப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு திட்டங்களிலிருந்து அப்பு றப்படுத்துகிற நடவடிக்கைகளை அரசுகள் கைவிட வேண்டும். பொதுவிநியோக, வறுமை ஒழிப்பு, சமூக நலத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.
கிராமப்புற ஏழைகளின் அடிப்படை கோரிக்கையான வீட்டுமனை,  வீடு கோரிக்கையை  நிறைவேற்ற வேண்டும். இதை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் சட்டம் கொண்டு வர வேண்டும். கோவில், மடம், நிலங்களில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை எளியோருக்கு அந்த இடத்தை சொந்தமாக்க வேண்டும்.
 கோவில், மடம் நிலங்களை பயிரிடும் குத்தகை, வார விவசாயிகளுக்கு அந்த நிலங்களில் குத்தகை, வார உரிமையை வழங்க பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு கடன், இடுபொருள், பயிர்க்காப்பீட்டு திட்டங்களை வழங்க வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு விவசாய நிலம் வழங்குகிற வகையில் நிலச் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். உச்ச வரம்பு அளவைக் குறைக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி, பூதான் நிலங்களை கைப்பற்றி தலித்துகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழக பழங்குடி மக்களை வறுமையில் இருந்து பாதுகாக்க, ஆந்திர வனப்பகுதிகளில் நடக்கும் படுகொலைகளிலிருந்து பாதுகாக்க, வன உரிமைச் சட்டம் 2006அய் தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக செயல்படுத்த வேண்டும். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். மீனவ மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஆபத்தான கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கடற்கரை மேலாளுமை சட்டம் ரத்து செய்யப் பட வேண்டும்.
தலித் மக்களது பாதுகாப்பையும் கவுரவத்தையும் மேலும் அச்சுறுத்துகிற வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரிக்கால் தொழிலாளர் வழக்கில் இருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள 47/2008 திருத்தச் சட்டத்திற்கு நிலையாணை விதிகள் ஏற்படுத்த வேண்டும். மோடி அரசு கொண்டு வந்துள்ள பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மென்ட் என்ற தொழிலாளர் விரோத திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக உடனடியாக மூட வேண்டும்.
தமிழக மாணவர்கள் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்.
கருத்தரங்கம் முடிந்தவுடன் ஓர் எளிய உணவு உண்ட பிறகு, தோழர்கள் உணர்ச்சிமயமான முழக்கங்களுடன் ஊர்வலமாய் ஆர்ப்பாட்டம் நடத்த பேருந்து நிலையம் சென்றனர். பேருந்து நிலையத்தில் உரையாற்றிய தோழர் பாலசுந்தரம், ஸ்டெர்லைட் முழுமையாக மூடப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது எனவும், போராட்ட இயக்க முன்னணிகளை குறிவைத்து கொன்றவர்கள் மீது கொலை வழக்கு போடப்பட வேண்டும் எனவும், எடுபிடி கொள்ளைக்கார கொலைகார பழனிச்சாமி அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Search