COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 14, 2018

ஃபிளிப்கார்ட் வால்மார்ட்டானது

ஏகபோகமயமாதல்
உலகம் ஏகபோக நிதிமூலதன ஏகாதிபத்திய சகாப்தத்தில் நுழைந்ததில் இருந்தே,
நிறுவனங்கள் இணைவதும், நிறுவனங்கள் நிறுவனங்களைக் கையகப்படுத்துவதும் கார்ப்பரேட் பெருங்கதையாடலில் சுவையான பகுதிகளாகும். ஏகபோகம் என்ற சமஸ்கிருத சொல் நடைமுறைப் பயன்பாட்டால் தமிழ்ச் சொல் போல் ஆகிவிட்டது. ஒருவர் அல்லது ஒன்றே அனுபவிப்பது என ஏகபோகத்தை விளக்க முடியும். சுதந்திரப் போட்டியில் இருந்து ஏகபோகங்கள் எழுந்தாலும் ஏகபோகங்களுக்கிடையிலும் போட்டி உண்டு.
அய்ஃபோன் தயாரிப்பாளர் ஆப்பிள் 1 டிரில்லியன் டாலர் (ரூ.6ணீ லட்சம் கோடி) நிறு வனமாக உள்ளது. வாரன் பஃப்பட்டின்  பெர்க்ஷைர் ஹேத்வே 100 பில்லியன் டாலர்  ஆப்பிள் பங்குகளை வாங்கியபின் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 780 பில்லியன் டாலர் நிறுவனமாக உள்ள அமேசான், விரைவில் 1 டிரில்லி யன் டாலர் நிறுவனமாக உள்ளது. அமேசான் இணைய சேவைகள் சந்தையில் முன்னணியில் இருப்பதாலும் அமேசான், ஆப்பிளோடும் கூகுள் உரிமையாளர் அல்ஃபபெட்டுடன் வெற்றிகரமாகப் போட்டியிடுவதாலும், கடந்த 12 மாதங்களில் அதன் பங்கு மதிப்பு 70% உயர்ந்துள்ளது.
அல்ஃபபெட் சந்தை மதிப்பு 765 பில்லியன் டாலர். மைக்ரோசாஃப்ட் சந்தை மதிப்பு 749 பில்லியன் டாலர். இந்த நான்கோடு ஃபேஸ் புக்கின் மதிப்பையும் சேர்த்தால், ஸ்டேன்டர்ட் அண்ட் புலர் மதிப்பீடு நிறுவனப் பட்டியல்படி அய்க்கிய அமெரிக்காவின் முதல் 500 நிறுவனங்களின் ரூ.15,60,000 கோடி சந்தை மதிப்பில் அல்ஃபாபெட், அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் என்ற 5 நிறுவனங்கள் மட்டுமே 15%, அதாவது ரூ.2,34,000 கோடி சந்தை மதிப்பு பெற்றுள்ளன. 1% ஆகப் பெரிய நிறுவனங்கள், 15% சந்தை மதிப்பை வைத்துள்ளன. நவீன தகவல் தொழில்நுட்ப திசையில் பொருளாதாரம் செல்வதையும், பொருளா தாரம் ஏகபோகமாவதையும், ஆப்பிள், அமேசான், அல்ஃபபெட், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் நிலைமைகளிலிருந்து அறிய முடியும்.
ஃபிளிப்கார்ட்டும் வால்மார்ட்டும்
2017 - 2018 நிதி ஆண்டில் ஃபிளிப்கார்டின் சந்தை ஆர்டர் மதிப்பு 7.5 பில்லியன் டாலர். ஃப்ளிப்கார்ட் 2017 - 2018ல் 5 கோடியே 40 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, 26 கோடியே 10 லட்சம் பொருட்களை ரூ.48,650 கோடிக்கு விற்றுள்ளது. இந்தியாவின் ஈ வர்த்தக ஆன்லைன்  சந்தை 2017ல் 33 பில்லியன் டாலர் என்றும் இது 2027ல் 200 பில்லியன் டாலர் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளிப் கார்ட், சோப் முதல் ஸ்மார்ட்ஃபோன் வரை விற்கிறது. புத்தகம் முதல் துணி வரை விற்கிறது. அதன் மெய்நிகர் கடைக்கு, அதாவது ஆன்லைன் பக்கத்திற்கு, ஒரு நாளில் ஒரு கோடி பேர் வருகை தருகின்றனர். ஃபிளிப்கார்ட்டுக்கு ஃபோன்பே டிஜிட்டல் பட்டுவாடா உதவுகிறது. ஃபிளிப்கார்ட்டின் ஈ கார்ட் சேவை ஒரு நாளில் 800 இந்திய நகரங்களில் 5 லட்சம் பொருட்களை வழங்குகிறது. (டெலிவரி செய் கிறது). ஈ வர்த்தகத்தில் ஃபிளிப்கார்ட் 39.5%, அமேசான் 31.1% சந்தை கொண்டுள்ளனவாம். பேடிஎம், சினாப் டீல், சொமாடோ, பிக் பாஸ்கட் மற்றும் யுசி பிரவுசர் நிறுவனங்கள் மூலமும் களத்தில் உள்ள மூன்றாவது நிறுவ னமான அலிபாபா, இந்தியாவில் இயங்குகிறது. ஜபாங், மிந்த்ரா நிறுவனங்களை விழுங்கிய, தற்சமயம் 30,000 பணியாளர்களைக் கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட்டின் சந்தை மதிப்பு 21 பில்லியன் டாலர் (ரூ.136500 கோடி) ஆகும். இது டாடா ஸ்டீலின் சந்தை மதிப்பான 10.06 பில்லியன் டாலரை விட அதிகம். இந்த ஃபிளிப் கார்ட்டைத்தான் வால்மார்ட் வாங்க உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கேர்ஃபோர்  ஜெர்மனியின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ, அய்க்கிய அமெரிக்காவின் கிரேகோ கேஸ்ட்கோ என்ற பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களை எல்லாம் விட வால்மார்ட் பெரியது. வால்மார்ட் அய்க்கிய அமெரிக்காவின் பென்ட்ஸ்வில்லி பீஸ்ட், அதாவது பென்ட்ஸ்வில்லி மிருகம் என அழைக்கப்படுகிறது. வால்மார்ட் 28 நாடுகளில் 23 லட்சம் பேரை வேலைக்கு வைத்துள்ளது. வால்மார்ட் மணிக்கு 10 டாலர் குறைந்தபட்ச சம்பளம் தராமல், சங்கம் அமைக்கும் உரிமை தராமல் தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் ஒரு நிறுவனம். 2017ல் வால்மார்ட்டின் விற்று முதல் 495 பில்லியன் டாலர் (ரூ.32,17,500 கோடி). வால்மார்ட் ஒரு தொழில் வர்த்தக நிறுவனம். அது டிரம்ப் சொல் வது போல் அய்க்கிய அமெரிக்கா முதலில் என்ற போலி வசனங்களை பேசாது. அதன் வியாபார தந்திரம் குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்று லாபம் சம்பாதிப்பதாகும். வால்மார்ட் 20,000க்கும் மேற்பட்ட சீன உற்பத்தியாளரிடமிருந்து ஆண்டுக்கு 290 பில்லியன் டாலர் (ரூ.18,85,000 கோடி) கொள் முதல் செய்கிறது. அதன் 01.01.2018 அறிக்கைப்படி 495 பில்லியன் டாலர் வருட வருவாயில், 27 பில்லியன் டாலர் மொத்த லாபமும் (ரூ.1,75,500 கோடி), நிகர வருமானம் 9.8 பில்லியன் டாலரும் (ரூ.63,000 கோடி) சம்பாதித்துள்ளது. வால்மார்ட்டின் பொருளாதாரம் சில நாடுகளின் பொருளாதாரத்தைக் காட்டிலும் பெரியதாகும். சில்லறை விற்பனைதான். ஆனால் பில்லியன் பில்லியனாய் வருமானம். எத்தகைய முரண்?
இந்தியாவில்  ஃபிளிப்கார்ட்டின் 21 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு பெரிய விஷயம் தான். இந்திய ஆன்லைன் விற்பனைக் கடலில் அது மிகப்பெரிய மீன்தான். ஆனால் உலகப் பெருங்கடலில் ஆன்லைனில் மட்டும் அல்லாமல் கடைகள் மூலமும் (ஆஃப்லைன்) விற்பனை செய்யும் வால்மார்ட் திமிங்கலம் அல்லவா? ஃபிளிப்கார்ட் என்ற, இந்தியாவில் இயங்கிய பெரிய மீனை, வால்மார்ட் திமிங்கலம் விழுங்கிவிட்டது.
பிளிப்கார்ட்டை வால்மார்ட் விழுங்கியதால் இந்திய சில்லறை வர்த்தகத்துக்கு
புதிய ஆபத்தா?
சில்லறை வர்த்தகம், கடை வர்த்தகம் மற்றும் ஈ வர்த்தகம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது. மன்மோகன் ஆட்சிக் காலத்தில் ஈ வர்த்தகம் கிடையாது. அப்போது வால்மார்ட் சில்லறை வர்த்தகத்தில் நுழைய வழி செய்யப்பட்டபோது, சில கோடி சிறு வணிகர்கள், சிறுசிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் இந்திய மக்களோடு சேர்ந்து, சந்திரசேகர், அத்வானி போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த முயற்சியை எதிர்த்ததால், மத்திய அரசு அந்த முயற்சிகளைக் கைவிட்டது. ஆனால் வால்மார்ட், பார்தி நிறுவனம் மூலம் கடை போட்டது. இப்போது இந்திய சில்லறை வர்த்தகத்தில், ரிலையன்ஸ், ஃப்யூச்சர் குரூப், டிமார்ட் ஆகிய நிறுவனங்கள் நாடெங்கும் கடை போட்டுள்ளது யதார்த்தம். ஃப்ளிப்கார்ட், அமேசான், அலிபாபா ஆகிய நிறுவனங்கள் ஆன்லைனில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதும் யதார்த்தம். சில்லறை வர்த்தகத்துக்கு ஏற்கனவே ஆபத்து வந்துவிட்டது. ஃப்ளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்கி உள்ளதால் ஆபத்து தீவிரம் அடைந்துள்ளது.
இந்திய ஃபிளிப்கார்ட்டை
அந்நிய வால்மார்ட் விழுங்கிவிட்டதா?
ஃப்ளிப்கார்ட்டை இந்திய நிறுவனம் என அழைப்பது பொருத்தம் இல்லாதது. ஃப்ளிப்கார்ட்டில் சச்சின் பன்சால், பின்னி பன்சால் என்ற நிறுவனர்கள் இந்தியர்கள். பணியாளர்கள் இந்தியர்கள். இவர்கள் முதலீட்டில் சுமார் 20%, 22% வரை வைத்துள்ளனர். மற்றபடி முதலீட்டில் கிட்டத்தட்ட 80% ஜப்பானிய சாஃப்ட் பேங்க், டைகர் குளோபல், அக்சல், டென்சென்ட் மைக்ரோசாப்ட் போன்ற அந் நிய நிறுவனங்களே போட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவில் ஈடுபடும் அமேசான் அய்க்கிய அமெரிக்க நிறுவனம். அலிபாபா சீன நாட்டு நிறுவனம். இவர்களோடு தொடர்புடைய நிதி தொழில்நுட்ப (ஃபின் டெக்) நிறுவனங்களில் பெரிதும் அந்நிய முதலீடே உள்ளது.
ஃப்ளிப்கார்ட்டை நிறுவிய இருவரில் ஒருவரான சச்சின் பன்சால் 2016 டிசம்பரில் சொன்னார்: ‘நாமும் சீனா போல், அந்நிய நாட்டவர்களிடம் உங்கள் மூலதனம்தான் வேண்டும், உங்கள் நிறுவனங்கள் வேண்டாம் என்று சொல்வோம். அமேசான் கண்டோ அலிபாபா கண்டோ அஞ்சவில்லை. தொழில் நுட்பம், இணையதளம் போன்றவற்றில், சீனா அய்க்கிய அமெரிக்கா சார்பு வேண்டாம் நமக்கு அந்த ஆற்றல் உள்ளது’. இவர்தான், இந்தியா டெக் ஆர்க் அமைத்தார். நடிப்பு சுதேசிகள் ஆளும் காலத்தில், வால்மார்ட் இந்தியாவிற்குள் ஃப்ளிப்கார்ட் மூலம் நுழைய 16 பில்லியன் டாலர் செலவழித்தபோது, சச்சின் பன்சால் தன் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்று ரூ.6,500 கோடி பெற்றுக் கொண்டார். ஃப்ளிப்கார்ட் டின் அந்நிய முதலீட்டாளர்கள் காட்டில் பணமழை கொட்டியது. ஜப்பானிய சாஃப்ட் பேங்க் 2.5 கோடி பில்லியன் டாலர் போட்டு 4 கோடி பில்லியன் டாலர் பெற உள்ளது. இந்தத் தொகைக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி என 40% போய் விடுமா என்பதில் அவர்களுக்குச் சிறிது தயக்கம் உள்ளது. ஆகஸ்ட் 2018ல் விற்பனை கணக்கு காட்டினால், நீண்ட கால மூலதன ஆதாய வரி 10%தான் ஆகும் என்றும் கணக்கு போடுகிறார்கள். இந்த விற்பனையில் எங்கிருந்து வந்தது சுதேசியும் தேசபக்தியும்?  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, மோடி, இந்திய டிஜிட்டல் தொழிலை, அய்க்கிய அமெரிக்கா மற்றும் சீனாவின் காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தி உள்ளதாக நடுப்பக்க கட்டுரை எழுதும் நிலை உருவாகியுள்ளது.
வால்மார்ட் போன்றோரால் என்ன ஆபத்து?
இரண்டு கண்டங்களிலிருந்து இரண்டு உதாரணங்கள் பார்ப்போம். ஆப்பிரிக்க கானா நாட்டின் காஃபி உற்பத்தியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகச் சந்தைகளில் 30 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதில் 10 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டினர். இப்போது உலகச் சந்தையில் 60 பில்லியன் டாலர் காஃபி விற்பனையாகிறது. உற்பத்தியாளர்களுக்கு 30 பில்லியன் டாலர் கிடைக்கிறதா? இல்லை. நிறைய காஃபி விற்று, குறைவாக 6 பில்லியன் டாலர் சம்பாதித்தனர். ஒரு மில்க் சாக்லெட் பார் விலையில் 3.9% கானா நாட்டு கோகோ விவசாயிகளுக்கு கிடைக்கும். விநியோகம் செய்பவர்களுக்கு, சில்லறை வர்த்தகக்காரர்களுக்கு 100ல் 34 கிடைக்கும். சாக்லெட் முதலாளி 100ல் 55க்கும் மேல் பெறுவார். தென் அமெரிக்காவின் வாழைப்பழ விவசாயி சில்லறை விலையில் நூற்றில் அய்ந்து மட்டுமே பெறுவார். ‘வால் மார்ட் புகுந்த மெக்சிகோவின் நடைபாதைகளில் காலாற நடந்து பொருள் வாங்கியது முடிந்து போய்விட்டது’ என வால்மார்ட் முதலில் இந்தியாவில் நுழையப் பார்த்தபோது சொன்னார்கள்.
வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு மற்றும் ஏகபோக முதலீடு, சிறுவீத விவசாயத்தை, சிறுவணிகத்தை, சிறுசிறு தொழில்களை, மொத்தத்தில் முறைசாரா பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.
வால்மார்ட்டை மோடி வரவேற்றதாகத் தெரியவில்லையே?
இதுதான் ஆபத்து. மோடியின் பண மதிப்பகற்றம், நிதித் துறை சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கும் கருப்புப் பண ஒழிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த அரசு அந்நிய நிதி மூலதன அடிவருடி அரசு. பணம் இல்லா/குறைந்த பண பொருளாதாரம் என்ற கவர்ச்சி முழக்கங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரும்மாண்டமாய் வளர மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் ஆகும். டிஜிட்டல் பொருளாதாரம், டிஜிட்டல் விற்பனை கொடி கட்டிப் பறப்பதால்தான் ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகள் ரூ.1.05 லட்சம் கோடிக்கு வாங்கப்படுகின்றன. அதைவிட முக்கியமாக, இந்தியா உலக நிதி மூலதன சுழற்சியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்படுகிறது. ஏகப்பெரும்பான்மையோருக்கு  வாழ்வு தரும் முறைசாரா துறைகள், மோடி அரசின் நடவடிக்கையால், மூலதன ஆக்டோபஸ் பிடிக்குள் சென்றுவிட்டன.
மோடியின் கார்ப்பரேட், மதவெறி, பாசிச அரசு, பறித்தெடுத்தலின் மூலம் மூலதனத் திரட்சிக்கு, ஆகக் கூடுதல் விசுவாசத்துடன் ஆனதெல்லாம் செய்வதால்தான், வால்மார்ட் வந்துள்ளது. ஃப்ளிப்கார்ட்ûடை வாங்கி உள்ளது.

Search