COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 29, 2018

தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கேட்டு
தலைமைச் செயலகம், முதல்வர் இல்லம் முற்றுகை

வே.சீதா

மே 19 - 20 தேதிகளில் விருத்தாசலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் நடத்திய பயிற்சி பட்டறையில், ‘ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சிக்கு தயாராவோம்’ என்ற தலைப்பில் வகுப்பு எடுக்கப்பட்டது.
இந்திய புரட்சிக்கான தயாரிப்புகளில் இளைஞர்கள் முன்நிற்க வேண்டுமென்றும், எங்கு அநீதி நடந்தாலும், உடனே அதனை எதிர்த்து துடிப்புடனும், துணிச்சலுடனும் போராட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
பயிற்சி முகாம் முடிந்த சில தினங்களிலேயே கொடூரமான தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தது. அநீதிக்கு எதிராக உடனடியாக களம் காண, புரட்சிகர இளைஞர் கழகமும், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கமும் முடிவெடுத்தன.
மே 23, 2018 தலைமைச் செயலகம் முற்றுகை
துப்பாக்கிச் சூடு செய்தி கிடைத்ததும்,  மறுநாள் தலைமைச் செயலகத்தை முற்றுகை இட, முடிவு செய்தோம். இரண்டு பெண்கள் உட்பட 50 தோழர்கள் உயர்நீதிமன்ற வாயிலில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகப் புறப்பட்டோம். என்னுடன் ஜெனிபர் என்ற இன்னும் ஒரு பெண் தோழரும் இருந்தார். தோழர் பாரதியோடு தோழர்கள் ராஜகுரு, தினகரன், மோகன்ராஜ் ஆகியோர் போராட்டத்தை கட்டமைப்பதில், வழிநடத்துவதில் முன்னணிப் பங்காற்றினர். பாரிமுனையில் தடையரண்கள் எழுப்பி தோழர்களின் சீற்றத்தை காவல்துறை முடக்கப் பார்த்தது. பழனிச்சாமி அரசு கொலைகார அரசு, அந்த அரசு பதவி விலக வேண்டும் என தோழர்கள் முழக்கமிட்டனர். தோழர்கள் கைது செய்யப்பட்டு தங்கசாலையில் காவலில் வைக்கப்பட்டனர்.  இரவு 8 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.
காவலில் இருந்த தோழர்கள் ஸ்டெர்லைட் ஆலை ஆபத்து பற்றியும் அநியாயமான துப்பாக்கி சூடு பற்றியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டி, 26.05.2018 அன்று, முதல்வர் இல்லத்தை முற்றுகையிடலாம் என முடிவு செய்தனர். 23ஆம் தேதி போராட்டத்தில் நமது அமைப்பில் இல்லாதவர்களும், நமது வாட்ஸ்அப் செய்தி அறிந்து  வந்தவர்களும் இருந்தார்கள்.
மே 24, 25 பிரச்சாரம்
தோழர்கள் சீதா, மோகன்ராஜ், தினகரன், வினித், ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் மின்சார ரயிலில், பேருந்துகளில் பயணம் செய் வோர் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். தோழர்கள் சீதா, தினகரன், மோகன்ராஜ் ஆகிய மூவரும் மக்கள் மத்தியில் உரையாற்றினர்.
வேதாந்தா ரிசோர்சஸ் அனில் அகர்வாலுக்கு சொந்தமானது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செப்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் உற்பத்தி செய்கிறது. இந்த தாமிர உருக்கு ஆலையால் நிலத்தடி நீரும், காற்று மண்டலமும் மாசாகி பல கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பொதுமக்கள் மூச்சுத் திணறலுக்கு, தொண்டை வலிக்கு, சுவாச கோளாறுகளுக்கு, புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். கடல் வளமும் மீன்  வளமும் பாதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் மதிப்பதில்லை. வேதாந்தாவின் பையில் மோடி, பழனிச்சாமி அரசுகள் இருப்பதால், ஸ்டெர்லைட், தூத்துக்குடி மக்களின், அவர்கள் சந்ததியினரின் வாழ்க்கையை கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
தூத்துக்குடி மக்கள் பிப்ரவரி 5, 2018 தொடங்கி 99 நாட்கள் அமைதியாக போராடி வந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு வளர்ந்து விரிவடைந்தது. தீவிரமடைந்தது. போராட்டத்தின் 100ஆவது நாளான மே 22 அன்று மக்கள் ஆண்கள் பெண்கள் சிறியவர்கள், பெரியவர்கள் என பல்லாயிரக்கணக்கில் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர்.
மக்களை காக்க வேண்டிய காவல்துறை கலவரத்தை கட்டமைத்தது. கார்ப்பரேட்டுக்கு ஆதரவான பழனிச்சாமி அரசு மோடியின் ஆதரவு உண்டு என்ற துணிச்சலுள்ள பழனிச்சாமி அரசு, அனில் அகர்வாலுக்கு ஆதரவாக ஸ்னைப்பர்கள் மூலம் எஸ்எல்ஆர் துப்பாக்கிகள் கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுத்தது. வேட்டைக்காரன் விலங்குகளை கொல்வது போல், இயக்க ஒருங்கிணைப்பாளர்களை குறிவைத்துக் கொன்றது.
காவல்துறையும், அரசும்  மக்களை கண்டு அஞ்சினார்கள். ஆயுதம் தாங்கிய காவலர்கள் படைபலம் கொண்ட அரசு, மக்களை கண்டு பயந்தது. மக்களின் கருத்துக்கள், முழக்கங்கள், வார்த்தைகள் என்ற ஆயுதங்கள் கண்டு அஞ்சினார்கள். ஸ்நோலின் என்ற இளம்பெண் எதிர்த்து பேசியதற்காக, அவரை அவரது வாயில் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.
இணையதள சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு தூத்துக்குடி தனித் தீவாக்கப்பட்டது.
இந்த விஷயங்களை வேறு வேறு ரயில் பெட்டிகளிலும் பேருந்துகளிலும் 2 நிமிடம் 3 நிமிடங்களுக்கு எடுத்துச் சொன்னோம். இதுபோல் பேசிய இயக்க தோழர்களைத்தான் தூத்துக்குடியில் படுகொலை செய்தார்கள் என எடுத்துச் சொன்னோம். எங்கள் கருத்துக்களை கேட்ட மக்கள் விதிவிலக்கே இல்லாமல் மோடி பழனிச்சாமி அரசுகளை திட்டித் தீர்த்தார்கள். நிதி அள்ளி தந்தார்கள்.
மே 26, 2018, முதல்வர் இல்லம் முற்றுகை
பழனிச்சாமி, தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடந்தது என்று சொன்னதை கண்டித்து தமிழகமே கொந்தளித்தது. மக்களை பாது காக்காமல் வேதாந்தாவை பாதுகாக்க, படுகொலையும் செய்யத் துணிந்த பழனிச்சாமி அரசு இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது என்றுதான் பழனிச்சாமி இல்லத்தை முற்றுகையிட 26.05.2018 காலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில், காவல் துறை கண்காணிப்பு எல்லாம்  மீறி ஒன்று திரண்டோம்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், உத்தரவிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 கோடி நிவாரணம் வேண்டும், பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என முழங்கிக் கொண்டே முதல்வர் இல்லம் நோக்கிச் செல்ல முயன்றோம். புரட்சிகர இளைஞர் கழக, ஜனநாயக வழக்கறிஞர்  சங்க பதாகைகளுடன், ஏப்ரான்களுடன், கருத்து படங்களுடன் முற்றுகையிடச் சென்றோம். பதறித் துடித்து வந்த காவல்துறையினர், ஒரு வரை கூட நகரவிடாமல் பலர் சூழ்ந்து இழுத்து பிடித்து வண்டியில் ஏற்றினர். எல்லாவற்றையும் மீறி திமிறிக் கொண்டு உறுதியான தோழர்கள் உதவியுடன் தோழர் பாரதி ஊடகத்தினரிடம் போராட்ட செய்தியை எடுத்துச் சொன்னார். போராட்டம் நடந்த இடத்தை வண்டியில் சத்தம் இல்லாமல் கடந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சற்றும் வெட்கப்படாமல் கும்பிடு வைத்து போனார்.
அன்று காலையே தொலைக்காட்சிகள் முதல்வர் இல்ல முற்றுகை செய்தியை பரப்பினர். முதல்வர் இல்லம் நோக்கிய சாலை எங்கும் காணுமிடமெல்லாம் காவல் துறையினர் தென்பட்டனர். 10, 12, வண்டிகளுடன் புடைசூழ நாங்கள் கைது செய்யப்பட்டோம்.
காவல்துறை அத்துமீறல்களும்
காவலின் போது நடந்த விஷயங்களும்
குறிபார்த்து சுடத் தயாரான காவல்துறை எங்களை மட்டும் சும்மா விட்டுவிடுமா என்ன? 23.05.2018 அன்று தோழர் அதியமானை நெஞ்சில் கை வைத்து பலம் கொண்டு தள்ளினார்கள். என்னுடைய கண் இமைக்கும் புருவத்திற்கும் நடுவில் காயம் ஏற்படுத்தினர். தோழர்களை புரட்டி புரட்டி எடுத்து அடையாளம் காணமுடியாத காயங்களை ஏற்படுத்தியும், ஆடைகளை கிழித்தும் மகிழ்ந்தார்கள். 26ஆம் தேதி, வயதில் மூத்தவரான ஒரு பெண் காவல் அதிகாரி என்னை மனதளவில் சோர்வடைய வைக்க, வேண்டுமென்றே சிறுமைபடுத்தி பேசினார்.
ஓர் ஆண் காவலர் கேமரா இல்லாமல் என்ன கோஷம் போடுகிறீர்கள் என கேலி பேசியபோது, போராட்டத்தை கொச்சைப்படுத்தாதே என்று தோழர்கள் சீறி எழுந்தனர். காவல்துறையினர் மன்னிப்பு கேட்டனர். மறுபுறம் வேறு சில பெண், ஆண் காவலர்கள் போலீஸ் பிழைப்பு, நேரம் காலம் இல்லாத நாறிப் போன பிழைப்பு என்றும் ஸ்டெர்லைட்டின் அநியாயத்தை, துப்பாக்கி சூட்டை மனசாட்சிப்படி கண்டிக்க முடியாத நிலை என்றும் புலம்பி தள்ளினார்கள். வயிற்றுப் பாட்டுக்காக இந்த வேலையில் உள்ளோம், உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாரையும் இந்த வேலையில் சேர விடாதீர்கள் என்று வேறு கேட்டுக் கொண்டார்கள்.
காவலில் இருந்தபோது ரிமாண்ட் செய்தால், அதாவது சிறையில் அடைத்தால், தகவல் சொல்ல வேண்டியவர்கள் விவரங்களை கேட்டார்கள். சிறைவாசம் உறுதி என்ற நிலையில் ஜிம்கானா தோழர்கள், ஆளுக்கு ஒரு துண்டும் லுங்கியும் கொண்டு வந்து தந்தார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் தோழர் பார்வேந்தன் வாழ்த்தி பேசி துண்டணிவித்தார். வழக்கறிஞர் ஆதவன், இடதுசாரி செயல்பாட்டாளர் வழக்கறிஞர் தோழர் கேசவன் வாழ்த்திப் பேசினர்.
பிணை கோருவதற்கு வழக்கறிஞர்கள் விஜய், அதியமான், மோனிஷா, கார்க்கிவேலன், ஆகியோர் தயாராக இருந்தனர். வெளியூர் பயணம் புறப்பட்டு போய்க் கொண்டிருந்த வழக்கறிஞர் புகழ்வேந்தன் பாதி வழியில் திரும்பினார்.
காவலில் இருந்தபோது நடந்த கூட்டத்தில் தோழர் பாரதி கவிஞர் மனுஷ்யபுத்திரனின் அரசாங்க லவுட் ஸ்பீக்கர் என்ற கவிதையைப் படித்துக் காட்டினார்.
அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்
உங்கள் அமைதிக்காகவே
உங்களைச் சுடுகிறோம்.
உங்கள் வளர்ச்சிக்காக
உங்கள் நிலங்களை பிடுங்கியதுபோல
உங்கள் நல்வாழ்விற்காகவே
உங்கள் காற்றை நஞ்சாக்கியதுபோல
உங்கள் முன்னேற்றத்திற்காகவே
உங்கள் நீர் நிலைகளை
அழித்தது போலவே
உங்கள் வேலை வாய்ப்பிற்காகவே
உங்கள் காடுகளையும்
மலைகளையும் அபகரித்தது போல
உங்கள் அமைதிக்காகவே
உங்களைச் சுடுகிறோம்
எதிர்ப்பின்றி செத்து போங்கள்
அமைதியை நிலை நாட்ட உதவுங்கள்
தோழர்கள் அனைவரும் சிறை செல்ல தயாராக இருந்தபோது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சொந்த ஜாமீனில் அனைவரையும் அன்று மாலையே விடுவித்து விட்டார்கள்.
அடுத்து என்ன?
கொலையாளிகள் மீது கொலை வழக்கு பதிவாகும் வரை, ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடப்படும் வரை, பழனிச்சாமி அரசு பதவி விலகும்வரை, இந்த போராட்டம் ஓயாது. என்னைப் போன்ற களப்பணியாளர்கள் ஒரே நாளில் மாநிலம் நெடுக நூற்றுக்கணக்கான இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டு நியாயம் கேட்கும் வகையிலான போராட்டங்கள் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களிடம் வால் ஆட்டினால் வாலை  ஒட்ட அறுத்துவிடுவோம் என உணர்த்த வேண்டும் என விரும்புகிறோம்.
புரட்சிகர இளைஞர் கழகத்தைப் பொறுத் தவரையில் ஏஅய்சிசிடியுவோடு இணைந்து நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க ஜ÷லை மாதம் சிறை செல்லும் போராட்டம் நடத்த இருக்கிறோம். டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களுக்கு 10 நாட்களுக்கு மேல் 50க்கு மேற்பட்டவர்கள் சென்று கிராமப்புற விவசாய தொழிலாளர்களுடன் ஒன்று கலக்க திட்டமிட்டுள்ளோம்

Search