COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 14, 2018

மலேசியாவில் மீண்டும் மகாதிர் மொகமது

எஸ்.குமாரசாமி

தென்கிழக்கு ஆசிய, பல இன நாடான மலேசியாவில் பரபரப்பான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
அரசியலை விட்டு விலகியவர், 92 வயதில் தான் வளர்த்த கட்சிக்கு எதிராக, தான் அடையாளம் காட்டிய பிரதமருக்கு எதிராக, தான் விரட்டியவரோடு கூட்டு சேர்ந்து கொண்டு தேர்தலைச் சந்தித்தார். 1981 முதல் 2013 வரை 22 ஆண்டுகள் ஆட்சித் தலைவராக இருந்த மகாதிர் மொகமது, தன் னால் விரட்டப்பட்ட அன்வர் இப்ராஹிமோடு  கூட்டு சேர்ந்து கொண்டு, தான் 2009 முதல் ஆட்சியில் அமர்த்திய நஜிப் ரசாக்குக்கு எதிராக தேர்தல் களம் இறங்கினார். நஜிப் தாம் தோல்வி பெற, எதிராளிகள் வெற்றி பெறாமல் இருக்க தொகுதிகளை மறுவரையறை செய்தார். குறைவானவர்கள் வாக்களித்தால் தாம் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து வேலை நாளில் தேர்தல் நடைபெற வைத்தார்.
பிரதமர் நஜிப் பல பத்தாண்டுகளாகப் பதவியில் இருந்த பரிசன் தேசிய கூட்டணிக்கு தலைமை தாங்கினார். அவர், மகாதிர் நிறுவிய அய்க்கிய மலாய் தேசிய அமைப்பைத் தன் கைவசம் கொண்டிருந்தார்.
தோள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த சுயபால் புணர்ச்சிக் குற்றம் இதர முறைகேடுகள் எனப் பழி சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட, மக்கள் நீதிக் கட்சியின் அன்வர் இப்ராஹிமுடன் மகாதிர் கூட்டணி அமைத்தார். அந்த, ‘நம்பிக்கையின் கூட்டணி’ 115 இடங்கள் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. நஜிப் ரசாக் கூட்டணி 79 இடங்கள் பெற்று தோற்றது.
நஜிப் ரசாக் தரப்பு ரூ.3,500 கோடியை அய்எம்பிடியிலிருந்து, அரசு கருவூலத்தில் இருந்து சுருட்டியது. நஜிப்பின் கணக்கில் எந்த விளக்கமும் இல்லாமல் ரூ.4,000 கோடி ஏறியது எப்படி என்று எழுந்த பிரும்மாண்ட ஊழல் புகார் அலை, ஆட்சியைக் கவிழ்த்தது. ஜிஎஸ்டி போன்ற ஒரு வரியும் மக்கள் வெறுப்பை சம்பாதித்து இருந்தது. இந்தப் பின்னணியில் மலேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பியதாக மலேசியாவின் கருத்துருவாக்கும் கூட்டங்களால் முன்நிறுத்தப்பட்ட மகாதிர், இரும்பு மனிதர் எனப் பெயர் சூட்டப்பட்ட மகாதிர், மேலை நாடுகளின் தனி நபர் கலாச்சாரத்துக்கு இடம் கொடுக்காமல், இசுலாமிய கூட்டு வாழ்க்கையை, குடும்ப அமைப்பு முறையை முன்நிறுத்திய மகாதிர், மக்கள் தொகையில் 70 சதம் இருக்கிற மலாய் இசுலாமியரின் இரட்சகராக தேர்தலில் நின்றதால், அரசை எதிர்த்துப் போராடி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அன்வரின் எதிர்க்கட்சியோடு கூட்டு சேர்ந்ததால், இந்தக் கூட்டணி வென்றது. அன்வருக்கு அரச மன்னிப்பு பெற்று விடுதலை செய்து பிரதமர் ஆக்குவதாக, மகாதிர் சொல்லி உள்ளார். அரச மன்னிப்பு பெறப்பட்டுவிட்டது.  மகாதிர் பிரதமராகி விட்டார். அடுத்த ஆட்சி மாற்றம் சொன்னபடி நடக்குமா, எப்போது நடக்கும் எனக் காண வேண்டியுள்ளது. அனை வரது ஜனநாயகமும் நீதியும் மனித உரிமைகளும் உயர்த்திப் பிடிக்கப்படும் என, மகாதிரின் கூட்டணி சொல்லி உள்ளது.
ஆனால் கடந்த காலமும் தற்போதைய உலகச் சூழலும் வேறு திசையைக் காட்டுகின்றன. மகாதிர், மண்ணின் மைந்தர்கள் (பூமி புத்ரா) 70% மலாய் இசுலாமியர்களே என்றும், எஞ்சியுள்ள சீனர்கள், தமிழர்களைக் காட்டிலும் அவர்களுக்கே முன் உரிமை தரப்படும் என்றும் சொல்லி வந்தவர், நீதித்துறையை, ஊடகங்களை அடக்கியே வைத்திருந்தவர், அவரது காலத்தின் மதவாதம், கார்ப்பரேட் ஆட்சி, ஜனநாயக மறுப்பு ஆகியவற்றை மறந்து விட முடியாது.
இப்போதும் மலேசிய மூலப் பொருட்களுக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, நல்ல வாய்ப்பு உள்ளது. மகாதிரைத் தாண்டி மலேசிய மக்கள் ஒன்று திரண்டால், மக்கள் சார்பு மாற்றம் சாத்தியமே. மக்கள் மாற்றங்களைக் கொண்டு வர எல்லா இடங்களிலும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள், தங்கள் முன் இருக்கிற வாய்ப்புகளில் இருந்து, எது, யார் அந்தந்த நேர குறைவான தீமை அல்லது எது, யார் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும் எனத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

Search