COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 29, 2018

சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுத்த 
பழனிச்சாமி அரசே பதவி விலகு!

ஜி.ரமேஷ்

ஆள்வோரை எதிர்த்து நீ முழக்கமிட்டால் உன் வாயில் குண்டு பாயும்.
அரசுக்குக் கண்டனம் தெரிவிக்க நீ கருஞ்சட்டை அணிந்தால் உன் கழுத்தில் குண்டு பாயும்.  கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக நீ செஞ்சட்டை அணிந்து நெஞ்சை நிமிர்த்தி மக்களைத் திரட்டினால் உன் நெஞ்சில் குண்டு பாயும். போராட வீதிக்கு வந்தால் நீ பிணமாவாய். இப்படி ஓர் எச்சரிக்கையை இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழக மக்களுக்கு தூத்துக்குடியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் மூலம் ஆட்சியாளர் கள் விடுத்துள்ளனர்.
அஇஅதிமுக, திமுக மற்றும் சில அரசியல் கட்சிகளுக்கு அப்பால், தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் நடக்கின்றன. இந்தப் போராட்டங்களில் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என்று சொல்லி, அந்தப் போராட்டங்களின் வலிமையை மறுதலித்து, மொத்த அரசியல் வெளியை, ஜனநாயக வெளியை சில கட்சிகளுக்குள் சுருக்க முதலாளித்துவ கருத்தியலாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலையால் தங்களின் பசுமையான விளைநிலத்தை, சுத்தமான நீரை, நல்ல காற்றை இழந்து பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு மரணமுறும் தூத்துக்குடி மக்கள், இனியும் பொறுப்பதற்கில்லை என்ற மன உறுதியுடன் அமைதியான வழியில் தங்கள் கிராமங்களில் மரத்தடியிலும் சின்னச் சின்ன பந்தல்கள் அமைத்தும் ஒன்றுகூடி அமர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்கள். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சியரிடமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் மனு கொடுத்து வந்தார்கள். இந்த தொடர் போராட்டம் குமரெட்டியார்புரத்தில் பிப்ரவரி 5 அன்று துவங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த கிராமங்களும் அவர்களைத் தொடர்ந்தார்கள். தமிழக அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, ஆளும் கட்சியின் கவுன்சிலர்கள் கூட அவர்களைச் சந்தித்து என்னவென்று கேட்கவில்லை. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருக ஆரம்பித்தது. கண்டுகொள்ளாத அரசை, கண்டுகொள்ளச் செய்ய மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைதியான முறையில் முற்றுகையிட்டு முறையிடுவது என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.
ஆட்சியாளர்கள், மக்களை அழைத்துப் பேசாமல், தங்களுக்கு ஆதரவான சிலரை அழைத்துப் பேசி ஒரு திடலைக் காட்டி அதில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ளச் சொன்னார்கள். மக்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வருகிறோம், முடிவு தெரியும் வரை அவ்விடத்திலிருந்து அறவழியில் போராடுவோம் என்றார்கள். அப்போதும் மாவட்ட நிர்வாகமும் அரசும் பேச்சுவார்த்தை நடத்தாமல், மற்ற மாவட்டங்களில் இருந்து போலீûஸக் கொண்டு வந்து தூத்துக்குடியில் குவித்தன. ஸ்டெர்லைட் ஆலை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பாதுகாப்பு கேட்கிறது. நீதிமன்றம் பாதுகாப்பு தரச் சொல்கிறது. 144 உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மே 22 அன்று மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணியாக வந்தார்கள். தூத்துக்குடி நகரம், கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் முத்து நகரை முற்றுகையிட்டனர். ஆண்களும் பெண்களும் முதியவர்களும் குழந் தைகளும் என சுதந்திரப் போராட்டத்தின் போது உப்புச் சத்தியாகிரகத்தில்  நடந்து வந்ததுபோல், வஉசியின் வாரிசுகளாய் நடந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்கள் கையில் கொடிகள் இல்லை. கோரிக்கை அட்டைகள் கூட இல்லை. இரண்டு நாட் களுக்குத் தேவைப்படும் சோற்றுப் பொட்டனங்களும் தண்ணீர் பாட்டில்களுமே இருந்தன. அதையும் போலீஸôர் பிடுக்கிக் கொண்டனர். குமரெட்டியார்புரத்தில் இருந்து வந்தவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி வெகுதூரத்தில் கொண்டு இறக்கிவிட்டுள்ளார்கள். துவண்டு விடாமல் மீண்டும் அங்கிருந்து நடந்து வந்தார்கள். வீரபாண்டியபுரம், பண்டாரப் பட்டி, மீளவிட்டான் என எல்லா கிராமங்களில் இருந்தும் அணிவகுத்து வந்தார்கள்.
ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பாளையங் கோட்டை சாலையில் சாரைசாரையாய் திரண்ட மக்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் நுழையும் முன்பே ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வாகனங்கள் தீப்பற்றி எரிகின்றன. அலுவலகக் கண்ணாடிகள்  உள்ளிருந்தே உடைக்கப்படுகின்றன. இதைப் பார்த்த பெண்களும் குழந்தைகளும் அலுவலக வளாகத்திற்குள் செல்லாமல் சாலையிலேயே அமர்கிறார்கள். எந்த எச்சரிக்கையும் செய்யப்படாமல் அவர்களை நோக்கி  துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்கின்றன. அடுத்து சில நேரம் அமைதி. அடுத்து வந்த மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வருகிறார்கள். அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டுச் சுடப்படுகிறார்கள். உரக்க முழக்கமிட்டு, முன்னேறிச் சென்ற ஸ்னோலின், தன் தோழி இண்பெட்டாவின் முன்னேயே வாயில் குண்டடி பட்டு சுருண்டு விழுகிறார். அவரைப் பிடிக்கப்போகும் போது இண்பெட்டாவின் கழுத்தை உரசிக் கொண்டு போகிறது மற்றொரு குண்டு. குண்டடிபட்டு ஒருவர் சுருண்டு விழ அவரைத் தூக்கச் சென்றவரின் இடுப்பிலும் காலிலும் குண்டு பாய்கிறது. குண்டுகள் எங்கிருந்து வருகின்றன என்றே தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பக்கம் திட்டமிட்டு மக்களை வர செய்து சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றுள்ளார்கள். போராட்டக்காரர்களை எதிர்கொண்டு தாக்கவில்லை காவல்துறையினர். சிதறி ஓடுபவர்களைத் துரத்தித் துரத்தி சுடுகிறார்கள். காவல்வாகனத்தின் மேல் ஏறி நின்று கொண்டும் படுத்துக்கொண்டும் சீருடை அணியாத ஸ்னைப்பர்கள் குறிபார்த்துச் சுடுகிறார்கள். 
எதிரி நாட்டுப் போர் வீரர்களை எதிர்த்துப் போரிடப் பயன்படுத்தப்படும் லாங் ரேன்ஜ் துப்பாக்கிகளால் சொந்த நாட்டு மக்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள். சிவப்புச் சட்டை, கருப்புச் சட்டை அணிந்தவர்கள், போராட்டக் களத்தில் முன்னின்றவர்கள், முழக்கமிட்டவர்கள் என குறி பார்த்து தலையிலும் மார்பிலும் முகத்திலும் சுடுகிறார்கள். புரட்சிகர இளைஞர் முன்னணியின் தமிழரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஜெயராமன் என அடையாளம் கண்டு சுட்டுள்ளார்கள்.
தண்ணீர் பீச்சியடிப்பார்கள், கண்ணீர் புகை போடுவார்கள், அதிகபட்சம் தடி கொண்டு அடிப்பார்கள் தாங்கி கொள்வோம் என்று வெறுங்கையுடன் வந்த எங்கள் மீது எவ்வித முன்னறிவிப்புமின்றி நேரடியாகத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன என்கிறார்கள் பெண்கள். நாங்கள் கலவரம் செய்ய வேண்டும் என்றால், வயதானவர்களை, பெண்களை,  குழந்தைகளை அழைத்து வருவோமா என்கிறார்கள் குண்டடிபட்டு அரசு மருத்துவமனையில் கிடக்கும் இளைஞர்கள். குண்டடிபட்டவர் களை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும்போது, அவர்கள் எங்களைப் பார்த்து, நான் செத்துப்போனாலும் பரவாயில்லை. நீங்கள் ஆலையை மூடும் வரை போராடுங்கள் என்று சொல்லிச் சென்றார்கள் என்று கண்ணீருடன் கதறுகிறார்கள் வீரபாண்டியபுரம், குமரெட்டியார்புரம் பெண்கள். ஒரு தனியார் நச்சு ஆலை முதலாளிக்காக ஓட்டுப்போட்ட எங்களைக் கொல்கிறது இந்த எடப்பாடி அரசு, எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையே மருத்துவ சிகிச்சை அளிக்கிறது, வாரம் ஒரு முறை நல்ல தண்ணீர் சப்ளை செய்கிறது, இதை ஸ்டெர்லைட் ஏன் செய்ய வேண்டும், அவர்களிடத்தில் கோளாறு இருக்கிறது என்றுதானே அர்த்தம் என்று கேட்கிறார் காயங்களுடன் தப்பி வந்த மகாலட்சுமி.
குமரெட்டியார்புரத்தில் முதலில் போராட்டத்தை ஆரம்பித்தோம், அங்கு எங்களுக்காக பலரும் வந்தார்கள், யாரும் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஸ்டெர்லைட் கம்பெனி அடியாட்களும் மப்டி போலீசும்தான், அவர்களே தீ வைத்துவிட்டு, கல்லெறிந்து விட்டு எங்கள் மீது பழிபோடுகிறார்கள், நாங்கள் போராட்டம் நடத்தும்போது எங்கள் ஊருக்கு கம்பெனி ஆட்களும் போலீசும் வந்து போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களை அடையாளம் காட்டிச் சுட்டுள்ளார்கள், அடித்து நொறுக்கியுள்ளார்கள் என்கிறார்கள் மக்கள்.
மறுநாள் அண்ணாநகர் முழுவதும் வீடு புகுந்து பெண்களைத் தாக்கி, அசிங்கமாகப் பேசி குழந்தைகளை, மாணவர்களை, இளைஞர்களை வெளியே இழுந்து வந்து ரோட்டில் போட்டு அடித்து பின்னர் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்கள். அண்ணா நகர் ஆறாவது தெருவில் வீட்டிற்குள் இருந்த இளைஞனை இழுந்து வந்து தெருவில் போட்டு ஏழு போலீஸ்காரர்கள் சேர்ந்து அடிக்கிறார்கள். வீட்டின் பால்கனியில் நின்றவர்களைப் பார்த்துச் சுட்டுள்ளார்கள். அந்தக் குண்டுகள் சுவரில் பட்டுள்ளன. அடையாளம் மாடிச் சுவரில் அப்படியே உள்ளது. வெளியூரில் இருந்து வந்த காளியப்பனை சுட்டுவிட்டு தரதரவென இழுத்துச் சென்று உயிர் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே அவர் கழுத்தில் பூட்ஸ் காலால் மிதித்தே கொன்றுள்ளார்கள் வெறி பிடித்த காவலர்கள். திரேஸ்புரத்தில் அடுத்த தெருவில் உள்ள தன் மகளுக்கு மீன் கொடுத்துவிட்டு வந்த 47 வயது ஜான்சியை தலையில் சுட்டுக் கொன்றுள்ளார்கள். திரேஸ்புரம் வந்ததும் காவலர்களிடம் ஒரு போலீஸ் அதிகாரி யாரெல்லாம் ரைபிள் வச்சிருக்காங்களோ எல்லாரும் சுடுங்க என்று சொல்லவும் கண்மூடித்தனமாகச் சுட்டுள்ளார்கள். தன் தாயைக் காணாமல் மருத்துவமனை சென்று தேடியுள்ளார் அவர் மகள். அவரை விரட்டியடித்துள்ளார்கள். ஜான்சிக்கு போலீசே வினிதா என்று பெயர் கொடுத்து அவர் மரணத்தையே மறைக்கப் பார்த்துள்ளார்கள். 22 அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்ததால் சுட்டதாகச் சொன்னவர்கள், அன்று மாலை யில், 5 கி.மீ அந்தப்புறம் உள்ள மீனவர் கிராமமான திரேஸ்புரத்தில் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும்? மறுநாள் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும்?
தூத்துக்குடி முழுவதும் கலவரம் நடந்தது என்று காட்ட வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். மே 22 அன்று தூத்துக்குடிக்கு ரயில் வந்துள்ளது. ஆனால், ரயில் போக்குவரத்து நிறுத்தம் என்று செய்தியை வெளியிடச் செய்துள்ளனர் போலீஸ். மணியாச்சிக்கு அந்தப்புறம் ரயிலை விட வேண்டாம் மக்கள் கலவரம் செய்கிறார்கள் என்று போலீஸில் இருந்து கூறினார்களாம். ஆனால், ரயில் வழக்கம் போல் சென்றது. பொது மக்கள் யாரும் எதுவும் செய்யவில்லை என்கிறார்கள் ரயில்வே தொழிலாளர்கள்.
வேதாந்தாவின் விசுவாசிகளான மோடி அரசும் பழனிச்சாமி அரசும், முன்னரே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்திவிட்டு, ஸ்டெர் லைட் அடியாட்களையும் மப்டி போலீûஸயும் கொண்டு தீ வைத்துவிட்டு கலவரம் என்று கதை கட்டினார்கள். இந்தத் தாக்குதல்கள், அத்துமீறல்கள் சமூக ஊடகம் மூலம் வெளியே தெரிந்து தமிழக மக்கள் மேலும் கொந்தளித்து விடக்கூடாது என்பதற்காக இணையதள சேவையை நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் முடக்கினார்கள்.
மோடியும் மோகன் பகவத்களும் முட்டி மோதினாலும் பாஜகவை தமிழகத்தில் அண்ட விடமாட்டோம் என அடித்து விரட்டுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். இது பெரியார் மண், தமிழ்நாட்டைச் சுடுகாடாக்க நினைக்கும் பொய் சொல்லி மோடியே திரும்பிப் போ என தமிழக மக்கள் மோடியைத் தரையிறங்கவிடாமல் விரட்டியடித்தார்கள். ஆனால், அந்த மோடிக்கு ஸ்டெர்லைட் கொலைகாரன் வேதாந்தா அகர்வால் லண்டனில் வரவேற்பு அளிக்கிறார். தமிழ்நாட்டில், பாஜகவைச் சேர்ந்த பெங்களூர்காரர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்கி நடத்தவிடாமல் நெடுவாசல் மக்கள் போரா டுகிறார்கள். மோடியின் நண்பர் அதானியின் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக இனயம், கன்னியாகுமரி மக்கள் போராடுகிறார்கள். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தேனி மக்கள் போராடுகிறார்கள். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அடுத்த கட்டப் போராட்டம் தொடங்கவிருக்கிறது. நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களை வஞ்சித்த மோடி எடிப்பாடிக்கு எதிராக போராட்டம் பற்றி எரிகிறது. காவிரியில் வஞ்சகம் செய்துவிட்ட இந்த ஆட்சியாளர்களை விடப்போவதில்லை என்று விவசாய மக்கள் திரண்டு கொண்டி ருக்கிறார்கள். இப்படி கொந்தளிப்பில் இருக்கும் தமிழ் நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கிட, அச்சுறுத்தும் நோக்கத்துடன்தான் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்துள்ளன மோடி அரசும் இபிஎஸ் ஒபிஎஸ் அரசும். ஜெயலலிதாவிற்கு பரமக்குடி என்றால், இந்த இரட்டை அடிமைகளுக்கு தூத்துக்குடி. பிரதமர் மோடி, சொந்த நாட்டில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.
தமிழக பாஜகவினர் எப்படியாவது இதற்கும் சிறுபான்மையினர் மீதும் தீவிரவாதிகள் மீது பழி போட்டு விடலாம் என்று துடிக்கிறார்கள். முதலில், மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்றார்கள். அடுத்து, மக்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள், மக்கள் போராட்டத் தில் வெளியாட்களும் வன்முறையாளர்களும் புகுந்து கலவரம் உருவாக்கிவிட்டனர் என்றார்கள். அடுத்து, பேரணி துவங்கிய இடம் சர்ச், இதில் இருந்தே தெரிகிறது. இதற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். நான்காவதாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பாத தீவிரவாதிகள், நக்சலைட் டுக்கள்தான் இதற்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இறந்தவர்கள், குண்டடிபட்டுக் கிடப்பவர்கள் 90% பேர் அவர்கள் சொல்லும் இந்துக்கள்தான். மாட்டை ஓட்டிச் சென்றாலே கொலை செய்யும் சங்கிகள், அவர்கள் சொல்லும் இந்து மக்கள் கொல்லப்பட்டுள்ளபோது, அனில்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். 
துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்வி, விடாமல் துரத்த துணை வட்டாட்சியர் மீது பழிசுமத்திவிட்டார்கள். சூழல் மோசமானதால் துப் பாக்கி சூடு நடத்தப்பட வேண்டியதாகிவிட்டது என்றார் அமைச்சர் ஜெயகுமார். காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிச்சாமி, தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன், காவலர்கள் தங்களைப் பாதுகாக்கவே சுட்டார்கள் என்றார். ஏன் தூத்துக்குடி செல்லவில்லை என்றால், 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் போது நாம் போகக்கூடாது, சட்டத்தை நாம் முதலில் மதிக்க வேண்டும் என்று அதிர்ச்சியான பதில் தந்தார் அடிமை முதலமைச்சர். ஊழல், மணற்கொள்ளை, வருமானத்திற்கு அதிகமான சொத்து என எல்லாவற்றிலும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் இந்த அமைச்சர்கள் சட்டத்தை மதிக்கிறார்களாம். மே 27 அன்று 144 நீக்கப்பட்ட பின்னர் தூத்துக்குடி மருத்துவமனைக்கு வந்த கடம்பூர் ராஜ÷வை கேள்வி கேட்டே துரத்திவிட்டார்கள் மக்கள். 28 அன்று காலை தூத்துக்குடி வந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், தூத்துக்குடி மக்கள் தூங்கி விழிக்கும் முன்பே, இரண்டு பேரை மட்டும் தனியான ஒரு அறைக்குக் கொண்டு வரச் செய்து பார்த்துவிட்டு ஓடிவிட்டார்.
மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த, போராடாமல் இருக்க துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். ஆனால், மந்திரிகள்தான் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் நிலத்தையும் நீரையும் காற்றையும் மீட்டெடுக்கும் வரை ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடும்வரை ஓய மாட்டோம். துப்பாக்கியால் சுட்டவுடன் பயந்துவிட மாட்டோம் நாங்கள் என்று, பண்டாரம்பட்டி மக்கள் மீண்டும் போராட்டத்தில் அமர்ந்து விட்டார்கள்.
இளைஞர்கள், மாணவர்களை கைது செய்து கொலை வெறி கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, தூத்துக்குடி மாவட்ட நீதிபதிகள், ஜாமீனில் வரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களைக்கூட சொந்த ஜாமீனில் செல்வதற்கு உத்தரவிட்டார்கள். எப்படியும் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியில் நடத்தியே தீருவேன் என்று அனில் அகர்வால் சொல்கிறார் என்றால், உச்சநீதிமன்றம் தன்னுடைய விசுவாசியான மோடியின்  கையசைப்பில் இயங்கும் என்கிற நினைப்பில்தான். ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்பு உள்ளது என்பது சரிதான், ஆகையால், ரூ.100 கோடி அபராதம் கட்டி விட்டு தொடர்ந்து நடத்தலாம் என ஏற்கனவே, உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இருக்கும்போது தூத்துக்குடி நீதிபதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பது வரவேற்கத்தக்க முன்னுதாரணம்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் துவங்குகிறது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னரும் ஸ்டெர்லைட்டை மூடாமல் எங்கள் போராளிகளின் உடல்களை வாங்க மாட்டோம், உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை என்று உறுதி குலையாத மக்கள். மக்கள் நேரடியாகக் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத அமைச்சர்கள். தமிழகம் எங்கும் எதிர்ப்புகள். இவை ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைப்பதற்கு அரசாணை வெளியிட வைத்துள்ளது. இதுவும் கண் துடைப்பே. வேதாந்தா உச்சநீதிமன்றம் போகலாம். நீதிமன்றத்தில் வேதாந்தா அகர்வால் மோட்சம் பெறலாம்.
தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறது அரசும் காவல்துறையும். பிரச்சனையை உருவாக்கியவர்களே அவர்கள்தான்.  கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 என்று சுருக்கப்பார்க்கிறது அரசு. ஆனால், அதிகம் பேர் இருக்கலாம். இன்னும் பலர் வீடுகளுக்கு வந்து சேர வில்லை. அவர்கள் வந்தால்தான் உண்மை நிலவரம் தெரியும். குண்டடி பட்டு கொடுங்காயமுற்றவர்களை திருநெல்வேலி மற்றும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி, அங்கு அவர்கள் இறந்த பிறகு சாதாரணமாக நோயினால் இறப்பு என்பதுபோல் காண்பித்து, உறவினர்களை மிரட்டியோ, ஏமாற்றியோ சடலக்கூராய்வு செய்யாமல் அனுப்புகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. புதியமுத்தூரில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் உடலை உறவினர்கள் வாங்கி வந்து அடக்கம் செய்துவிட்டனர். சுவரொட்டிகள் கூட ஒட்டப்பட்டுள்ளதாம். ஆனால், அவர் பெயர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் பட்டியலில் இல்லை. உண்மைகளை வெளிக்கொணர வேண்டியுள்ளது. தூத்துக்குடியின் 7 காவல்நிலை யங்களிலும் குறைந்தது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், துப்பாக்கியால் சுட்டவர்கள், சுடச் சொன்னவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்குப் பதிவு செய்ய சட்ட உதவிகள் தேவை.
துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை திரும்பத் திறக்க முடியாத படி நிரந்தரமாக மூட நடவடிக்கை வேண்டும்.
பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் துப்பாக்கிச் சூடு பற்றி முழுமையான நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு தாமிரபரணி படுகொலை நடந்த ஜ÷லை 23க்குள் அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஸ்டெர்லைட் இயங்கத் துவங்கியதில் இருந்து இன்று வரை நடந்த மீறல்கள் பற்றி, குறிப்பிட்ட கால அளவில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
மே 22 அன்று வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல் துறைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், காவல் உதவிக் கண்காணிப்பாளர் என மேல் இருந்து கீழ் வரை துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான அனைத்து அதிகாரிகளும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.
மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கும் நிரந்தர காயமுற்றுள்ளவர்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் காய முற்றுவர்களுக்கு அவர்கள் வேலைக்குச் செல்லும் நாள் வரை மாதம் ரூ.15,000 உதவித்தொகை வேண்டும்.
மே 22, 23, அதைத் தொடர்ந்த நாட்களில் துப்பாக்கிச் சூட்டில் தடியடியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான சிறப்பான சிகிச்சை வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 20 ஆண்டுக ளில் நிலம், நீர், விவசாயம், மீன் வளம் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், பல்வேறு வகையான நோய் பாதிப்புகள், இறப்புகள் அனைத்தையும் பற்றி ஓர் உயர்மட்ட குழுவை அமைத்து முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். 

Search