COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 29, 2018

புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில பயிற்சி முகாம்

இளம் தோழர்களை கட்சியில் ஈர்க்கச் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கடந்த இரண்டு வருடங்களாக, இகக(மாலெ) தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.
இந்த முயற்சிகளை ஒருமுகப்படுத்தவும், வளர்ந்து வரும் செல்வாக்கை அமைப்புரீதியாக, அரசியல்ரீதியாக நெறிப்படுத்தவும், வேலைகளை பிற மாவட்டங்களுக்கு விரிவு செய்யவும், மே 19, 20 தேதிகளில் பயிற்சி முகாம் நடத்த முடிவானது. 
கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பாரதி, ராஜகுரு, தனவேல் பயிற்சி முகாம் நடத்துவது பற்றி மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமியுடன் விவாதித்தனர். மாலெ தீப்பொறி வெளியீடான ‘ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்தியப் புரட்சிக்குத் தயாராவோம்’ தொகுப்பை விளக்கி விவாதிக்க ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம் எனவும், இரண்டாவது நாள் வேலைப் பரிசீலனை, அடுத்தகட்ட போராட்டங்கள், மாவட்ட, மாநில மாநாடுகள் பற்றி விவாதிக்கலாம் எனவும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலைமை தோழர்கள், வகுப்பு எடுப்பார்கள் எனவும் முடிவானது.
சென்னை, காஞ்சி, கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், நெல்லை என எட்டு மாவட்டங்களில் இருந்து தோழர்கள் கலந்துகொண்டனர். கடலூர் மாவட்டத் தோழர்கள் எப்போதும் போல் சளைக்காமல், விருத்தாசலத்தில், வெயிலின் கொடுமை தெரியாமல் முகாம் நடக்க, சிறந்த உணவுகள் கிடைக்க, முதல் நாள் இரவு சேகுவாராவின் போராட்ட வாழ்க்கை பற்றிய ஆவணப் படம் போட ஏற்பாடுகள் செய்தனர். சென்னை, காஞ்சி, புதுக்கோட்டை தோழர்கள் பயிற்சி முகாமை ஒட்டி பிரச்சாரமும் நிதி வசூலும் செய்தனர். கட்சி மாநிலச் செயலாளர் சென்னை, காஞ்சி தோழர்களுடன் சேர்ந்து வந்திருந்தார்.
ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தோழர்கள் ராஜகுருவும் பாரதியும் கட்சியின் சென்னை அம்பத்தூர் அலுவலகத்தில் தங்கள் பாடக் குறிப்புக்களை தோழர் குமாரசாமியுடன் விவாதித்திருந்தனர். தோழர் ராஜகுரு இரண்டு பகுதிகளாக, தோழர் பாரதி ஒரே பகுதியாக வகுப்பின் பெரும் பகுதியை நடத்தி முடித்தனர். தோழர் பெரோஸ் பாபு வராததால், அவர் எடுப்பார் எனத் திட்டமிட்டிருந்த பகுதியை, தோழர் ராஜசங்கர் பாடமாக எடுப்பது என அவசரமாக முடிவானது. தோழர்கள் வெளியீட்டிலிருந்து படித்துச் சொன்னது போக, சரளமாக, சுலபமாக புரிந்து கொள்ளும் விதம், அதே நேரம் சாரத்தையும் விட்டுவிடாமல் நம்பிக்கையோடு வகுப்புகள் எடுத்தனர். 1905, 1917 மார்ச் நவம்பர் புரட்சிகள், சமூக பொருளாதார பின்னணி, வெற்றிக்கான காரணங்கள், அந்தப் புரட்சிகளின் இயல்பு, ஜான் ரீடின் உலகைக் குலுக்கிய 10 நாட்கள் வர்ணனை, சோசலிச முகாம் சரிவதற்கான காரணங்கள், 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். தோழர்கள் பாடம் எடுத்து முடித்தபின் உரையாடல் நடந்தது. உரையாடலுக்குப் பின், ரஷ்ய புரட்சியிலிருந்து இந்தியப் புரட்சி எப்படி தொடர்ச்சியையும் மாற்றங்களையும் கொண்டிருக்கும், சோசலிசம் கம்யூனிசம், 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் ஆகியவை பற்றி தோழர் குமாரசாமி விளக்கினார்.
பவானி ஏஅய்ஒய்எஃபிலிருந்து புரட்சிகர இளைஞர் கழகத்தில் இணைந்த தோழர்கள் முருகேசனும் மோகன்ராஜ÷ம் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் பார்வையாளராக கலந்துகொண்டார். கட்சி மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரமும் நிகழ்ச்சிகளைக் காண வந்திருந்தது தோழர்களை உற்சாகப்படுத்தியது. சில பத்து இளம் தோழர்கள், ரஷ்ய, இந்திய புரட்சிகள் பற்றி ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பல மணி நேரம் படித்ததும் விவாதித்ததும் மிக நல்ல விஷயமாகும்.
மறுநாள் காலை திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கியது. ஒரே அமர்வில் முடித்துவிடலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. மாலெ தீப்பொறியில் வெளியான ‘நக்சல்பாரி மரபைப் போற்றுவோம்’ கட்டுரை படித்து விவாதித்து விளக்கப்பட்டது. வேலை வாய்ப்பு என்ற பிரச்சனையை மய்யங்கொண்டு, நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க, புதிய மாதிரி நிலையாணைகள் வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு நிலையாணை திருத்தம் நீக்கப்பட வேண்டும் என ஏஅய்சிசிடியுவுடன் இணைந்து ஜ÷லை/ஆகஸ்ட் மாதத்தில் சிறை செல்லும் போராட்டம் நடத்த முடிவானது.
2018 செப்டம்பர் மாதத்துக்குள் சென்னை, ஈரோடு, நெல்லை, தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் மாவட்ட மாநாடுகள் நடத்த கடுமையான முயற்சிகள் எடுக்க முடிவானது. மாநில மாநாட்டோடு பெரிய பேரணியையும் நடத்துவது எனவும், பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பேரணி நடத்துவது எனவும் முடிவானது. புரட்சிகர இளைஞர் கழகம், மந்தமாக இருக்கக் கூடாது எப்போதும் துடிப்போடும் துணிச்சலோடும் இருக்க வேண்டும் எனவும் அநீதிகளுக்கு எதிராய் உடனடியாய்க் களம் காண வேண்டும் எனவும், அவிகிதொச டிசம்பர் மாநாட்டை ஒட்டி 500 மனித மணி நாட்கள் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்வது எனவும், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள் உரிமைக ளுக்கான போராட்டத்தில் ஈடுபடுவதோடு கூடவே, மாநில மக்களின் மொழி, பண்பாடு, நீர் ஆதராங்கள், வரி வருவாய், அதிகாரங்கள் என எல்லாவற்றையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்ப்பது எனவும் முடிவானது. நகர கிராம உழைக்கும் மக்கள் ஒற்றுமைக்குப் பாலமாக அமையும் புரட்சிகர இளைஞர் கழகம், அடுத்து நடக்க உள்ள கட்சியின் மத்திய குழு, மாநில குழு கூட்ட முடிவுகளையும் கவனத்தில் கொண்டு தனது வருங்காலப் பணிகளைக்  கட்டமைக்கும்.

Search