COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 7, 2020

மோடி அரசின் தீய நோக்கத்தில் இருந்து எல்அய்சியைக் காப்போம்

உமாமகேஸ்வரன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்த நிதிநிலை அறிக்கை (2020 - 2021)ல் எல்அய்சி என்று அழைக்கப்படுகின்ற இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் அரசின் முடிவை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணித் துளிகளில் நாடு முழுவதும் உள்ள 2.85 லட்சம் எல்அய்சி ஊழியர்கள் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது உணர்வுபூர்வமான கண்டனத்தை உடனடியாக வெளிப்படுத்தினர்.
கடந்த 25 ஆண்டுகளாக மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வாஜ்பாய் அரசு பொதுத்துறை பங்கு விலக்கல் துறையை ஏற்படுத்தி அதற்கு அருண் சோரியை காபினெட் அமைச்சராக நியமித்தது நினைவிருக்கலாம். விஎஸ்என்எல், சென்டூர் ஹோட்டல் போன்ற நிறுவனங்களின் 100% பங்குகளையும் விற்றது. இந்தியாவின் வங்கிகள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்து தருவது இன்றும் தொடர்கின்றது. இந்தப் பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்தவும் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் உபயோகப்படுத்திக் கொள்வோம் என்று முதலில் சொன்னாலும், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை சரிக்கட்டவே இந்தப் பணம் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றது.
2020 - 2021 நிதியாண்டில் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிசிஎல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளையும் விற்கப் போகிறார்கள். இந்த பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ.2.11 லட்சம் கோடி அளவுக்கு நிதி திரட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரு நாயைக் கொல்வதற்கு முன் அதற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நியாயம் கற்பிப்பது போல, லாபகரமான பொதுத் துறையையும் திட்டமிட்டு சீரழித்து நஷ்டப் டுத்தி பின்னர் அதை தனியாருக்கு விற்கும் நடைமுறைதான் இது. ஏர் இந்தியாவைப் பொருத்தவரை, 100% பங்குகள், அதாவது மொத்தமாக தனியாருக்கு விற்றுவிட ஏற்கனவே கொள்கை முடிவு எடுத்து அதற்கான டென்டர் கோரப்பட்டுள்ளது.
எல்அய்சி இன்றுவரை 100% அரசு நிறுவனமாக இருந்து வருகிறது. இந்திய மக்கள் உழைப்பில் உருவான எல்அய்சி பிரம்மிக்க வைக்கும் ஒரு நிறுவனம்.
 எல்அய்சி சட்டம் 1956 மூலம் எல்அய்சி நிறுவப்பட்டது. இது ஒரு சட்டபூர்வமான அமைப்பு. 1956 வரை இயங்கி வந்த பல நிறுவனங்கள் திவாலாகிப் போன நிலையில், நாடு முழுவதும் இயங்கி வந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புதான் எல்அய்சி.
வெறும் ரூ.5 கோடி அரசு மூலதனத்தில் துவங்கப்பட்ட எல்அய்சி தன் 63 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்த்தி இருக்கும் சாதனைகள் உலக நிதிநிறுவன வரலாற்றில் ஒரு மைல் கல். இந்தியாவின் பொன் முட்டையிடும் வாத்து என்றும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்றும் பொருளாதார வல்லுனர்களால் வர்ணிக்கப்படும் எல்அய்சி, அரசுக்கு அதன் பங்குக்கான ஈவுத்தொகை (டிவிடென்ட்) மட்டும் வருடத்திற்கு ரூ.2,600 கோடி தருகிறது.
எல்அய்சி, டிரஸ்ட் (அறக்கட்டளை) போன்ற அமைப்பு. எல்அய்சி சட்டம் 1956, பிரிவு 28ன் படி, அதன் லாபத்தில் 5% மட்டுமே அரசுக்கு ஈவுத்தொகையாக அளிக்க முடியும். மீதமுள்ள 95% பாலிசிதாரர்களுக்கு போனஸôக அளிக்க வேண்டும். இது போன்ற ஒரு நடைமுறை வேறு எந்த நிறுவனத்திலும் கிடையாது.
எல்அய்சி நிறுவனம் அதன் 63 ஆண்டுகால வரலாற்றில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிவரும் சேவை அளப்பரியது. நீண்ட காலம் பிடிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் அரசுக்கு எல்அய்சி கடன் வழங்கி வருகிறது.
மத்திய அரசு பொதுத்துறையில் எல்அய்சி செய்திருக்கும் மொத்த முதலீடு 2014 வரை மட்டும் ரூ.11.90 லட்சம் கோடி. 2014 - 2019 அய்ந்தாண்டுகளில் மட்டும் ரூ.10.7 லட்சம் கோடி. ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 31 மார்ச் 2019 வரை எல்அய்சி ரூ.22.6 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது.
எல்அய்சியின் மொத்த சொத்தின் புத்தக மதிப்பு ரூ.31 லட்சம் கோடி. உண்மையான நிகழ் மதிப்பு இதைப் போன்று குறைந்தது 10 மடங்காவது இருக்கும்.
எல்அய்சியின் 42 கோடி பாலிசிகளில் 30 கோடி பாலிசிகள் தனிநபர் பாலிசிகள். எஞ்சிய 12 கோடி குழு பாலிசிகள்.
இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட மொத்தம் செலுத்தப்படும் பாலிசி தொகையில் 70% எல்அய்சிக்குக் கிடைக்கிறது. மொத்த காப்பீட்டு பாலிசிதாரர்களில் 75% பேர் எல்அய்சி பாலிசிதாரர்கள்.
இத்தனை தனித்துவம் வாய்ந்த ஒரு நிறுவ னம் உலகத்தில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தைத்தான் மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கத் துடிக்கின்றது. அனுமதிக்கப் போகிறோமா இந்த அரசின் நடவடிக்கையை? 2.85 லட்சம் எல்அய்சி ஊழியர்கள் இந்த நிறுவனத்தைக் காக்க போராட்டக்களத்தில் உள்ளனர்.
பட்ஜெட்க்குப் பிந்தைய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசும் நிதிச்செயலாளர் இவ்வாறு சொன்னார்.
‘இது ஒரு சட்டபூர்வமான, அமைப்பாக்கப்பட்ட நிறுவனம். ஆதலால் அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டியதிருக்கலாம். எல்அய்சி பங்குகளை விற்பதற்கு முன் அதை ஒரு பொதுத்துறை நிறுவனமாக (டநம) மாற்ற வேண்டியிருக்கும். நாங்கள் எல்அய்சி பங்குகளை விற்க வேண்டும் என்று கொள்கை முடிவுதான் எடுத்திருக்கிறோம். அமைச்சர் குழு அமைத்து இது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ற வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும். எத்தனை சதவீத பங்குகள் விற்கப்பட வேண்டும் என்பதும் இனிதான் முடிவு செய்ய வேண்டும். சுமார் 6% முதல் 7% பங்குகளை விற்கலாம். அதுவும் நேரடியாக மக்களுக்கு பங்குகள் விற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.90,000 கோடி வருவாய் கிடைக்கும்’.
எல்அய்சி பொன் முட்டையிடும் வாத்து. இதைக் கொல்வதன் மூலம் இந்த காப்பீட்டுத் தொழிலில் தற்போது இருக்கும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த பிரம்மாண்டமான வர்த்தகத்தை மடை மாற்றம் செய்து விடலாம் என்று மோடி அரசு கருதுகிறது.
இந்திய மக்களின் வரிப்பணத்தில் துவங் கிய எல்அய்சி நிறுவனம். 2.65 லட்சம் ஊழியர்களின் உழைப்பாலும், 12 லட்சம் முகவர்களின் பல்லாண்டு கால பணியாலும் உலகத்தின் அரிதான நிதி நிறுவனமாக கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. மேற்கு உலகத்தில் பொருளாதார வல்லுனர்களும், நிதி மேலாளுமையாளர்களும், முதலாளித்துவவாதிகளும் ஒரு கருத்தை மிக அழுத்தமாகச் சொல்லி வந்தார்கள். பிரம்மாண்டங்கள் எப்போதும் தோற்றதில்லை. ஆனால், மாறாக லேமேன் பிரதர்ஸ் மற்றும் சிட்டி பேங்க் ஆகிய நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் 2008 பொருளாதார நெருக்கடி யில் திவாலாகின.
அதனால் நாம் சொல்கிறோம், நல்லவை எப்போதும் தோற்பதில்லை. எல்அய்சி பங்கு விற்பனையை அனுமதியோம். இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாபெரும் நிறுவனத்தை மோடி அரசின் தீய நோக்கத்திலிருந்து காப்போம்.

Search