COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 7, 2020

NO CAA - NRC - NPR

தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

பத்து நாட்களைக் கடந்து
காலவரையற்ற பட்டினிப் போராட்டம்


குடியுரிமை சட்டத் திருத்தம் வேண்டாம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம், தேசிய மக்கள் தொகை பதிவேடு வேண்டாம் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எல்டியுசி நடத்தும் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் பத்து நாட்களைக் கடந்துவிட்டது.

கேட்காத அனுமதியை மறுத்து கடிதம் கொடுத்த அயனாவரம் காவல்நிலையத்தினர் பிறகு போராட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை பரபரப்பின்றி நிறைவேற்றி வருகின்றனர். கழகங்கள் பெரிய பெரிய பேனர்கள் வைக்கும்போது பார்த்துக் கொண்டிருந்தவர்கள் செங்கொடிகள் கட்டக் கூடாது என்று சொல்லி, பகுதியின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் கடமையை நிறைவேற்றினர்.
பட்டினிப் போராட்டம் தொடர்ந்த நான்காம் நாளிலேயே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கும் குடியுரிமை பிரச்சனை பால் அரசின் கவனத்தை ஈர்க்க நடக்கும் பட்டினிப் போராட்டத்துக்கு செவிமடுக்க வலியுறுத்தியும் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அதற்கு பதில் எதுவும் வரவில்லை. எனவே பட்டினிப் போராட்டம் தொடர்ந்தது.
எச்.ராஜா, ரஜினிகாந்த், தினமணி என பல தரப்பில் இருந்தும் போராட்டங்களுக்கு அச்சு றுத்தல் வந்தபோது, உயர்நீதிமன்றம் திருப்பூர் ஷாஹின்பாக் போராட்டத்தை கலைக்குமாறும் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தக் கூடாது என்றும் மார்ச் 5 அன்று உத்தரவிட்டது. அடுத்த நாளே, பட்டினிப் போராட்டத்தின் பத்தாவது நாளில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத் தோழர்கள், உயர்நீதிமன்றத்தின் முன்,  முதலமைச்சரைச் சந்தித்து மனு தர சட்டமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல மாநில அமைப்பாளர் தோழர் பாரதி தலைமையில் அணிதிரண்டனர். கம்யூனிஸ்ட் கட்சி, எல்டியுசி, மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர் அமைப்புகளின் தோழர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவர்களுடன் அணிதிரண்டனர்.
அவர்கள் சட்டமன்றம் நோக்கிச் செல்வது காவல்துறையினரால் தடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தோழர்கள் ராயபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். வழக்கத்துக்கு மாறாக, காவல்துறை அன்று அவர்களுக்கு தரமான, சுவையான மதிய உணவு தந்தது. தோழர்கள் ஜானகிராமன், ராமன் ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், முதலமைச்சரை சந்திக்க முடியாததால், அவரது தனிப்பிரிவு செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். அவரும் மனுவைப் பெற்றுக் கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்தார். கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த இதழ் அச்சுக்குச் செல்லும்போது காலவரையற்ற பட்டினிப் போராட்டம் பத்து நாட்களைக் கடந்துவிட்டது.
தோழர்கள் ஜெயபிரகாஷ்நாராயணன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் 11ஆவது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் தோழர்கள் க.ராமன், ஜேம்ஸ், புகழ்வேந்தன் ஆகியோர் 26 பிப்ரவரி அன்று பட்டினிப் போராட்டத்தை துவங்கினர்.
சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பார்வேந்தன் பட்டினிப் போரட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ் தேச மக்கள் முன்னணியின் தோழர் பாலன், இளம்தமிழகத்தின் தோழர் செந்தில், தமிழ்நாடு பெண்கள் அமைப்பின் தோழர் பரிமளா ஆகியோர் பட்டினிப் போராட்டத்தைத் துவக்கிய தோழர்களுக்கு துண்டு அணிவித்து வாழ்த்துரையாற்றினர். தோழர்கள் பாலன், செந்தில், பரிமளா ஆகியோர் பட்டினிப் போராட்டத்தின் ஒன்பதாவது நாளிலும் தோழர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் தோழர்கள் ரமணி மற்றும் சதீஷ் ஆகியோரும் வாழ்த்துரையாற்றினர்.
போராட்டத்தின் இரண்டாவது நாளில் வண்ணாரப்பேட்டை பள்ளிவாசல் ஜமாஅத் கூட்டமைப்பு குழுவின் தலைவர் லத்தீப், உறுப்பினர் எ.அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் அப்துல் ரஹ்மான், அயனாவரம் ஜமாஅத் இசுலாமிய நண்பர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களைச் சந்தித்து ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
உழைக்கும் மக்கள் தொழிற் சங்க மாமன்றத்தின் தோழர் சம்பத் பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தார். எப்அய்டியு தேசியத் தலைவரும் வெல்பேர் கட்சியைச் சேர்ந்தவருமான தோழர் சுப்ரமணி ஆதரவு தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் பாண்டியன், தமிழ்தேச மக்கள் விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, இகக மாலெ ரெட்ஸ்டார் மத்திய குழு உறுப்பினர் தோழர் மனோகரன் ஆகியோர் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களைச் சந்தித்து வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தனர். இககவின் அயனாவரம் பகுதி தோழர்கள் இரண்டு நாட்கள் வந்திருந்து ஆதரவு தெரிவித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி, அம்பத்தூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பசுபதி அய்ந்து நாட்கள், நிப்பான் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி தோழர் முருகன் நான்கு நாட்கள், மெட்ராஸ் போட் கிளப் தோழர் பழனி மூன்று நாட்கள், மக்களுக்கான மாணவர் அமைப்பின் தோழர் சுகுமார் மூன்று நாட்கள், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் சீதா, சரண்யா இரண்டு நாட்கள், கம்யூனிஸ்ட் கட்சி, கோவை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் இரண்டு நாட்கள், ஓஎல்ஜியின் தோழர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.
நடைபாதை வியாபார அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தோழர்கள் சையது ஹாரூன், புகழ்வேந்தன், ஜானகிராமன் (கோவை), வித்யாசாகர் (எம்பிசி), தாமஸ், சுரேஷ்பாபு, மணிகண்டன், எல்டியுசி மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ், கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் புகழேந்தி, நாமக்கல் மாவட்டத் தோழர்கள் என்.பழனிச்சாமி, என்.கோவிந்தராஜ், மெட்ராஸ் போட் கிளப் தோழர்கள் இளையராஜா, கமலகண்னன், கலாநேசன், தனசேகர், சரவணன், கலையரசன் ஆகியோர் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.
பிரிக்கால், மதர்சன், டிஅய் டைமன்ட் செயின், ஆன்லோடு கியர்ஸ், சாய்மிர்ரா, ட்ரில்ஜிக் புஷ், ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், அடையார் போட் கிளப், பாரத் புட்ஸ், அகர்வால் பவன், காஞ்சி காமகோடி மருத்துவமனை, பின்ஸ்டார், ஏசியன் பெயின்ட்ஸ், ஹ÷ண்டாய், சான்மினா ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர்கள், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை ஆட்டோ ஓட்டுநர்கள், அம்பத்தூர் நகராட்சி மலேரியா ஒழிப்பு பணியில் இருக்கும் தொழிலாளர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சியின் உழைப்போர் உரிமை இயக்கத் தோழர்கள், செங்கல்பட்டு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், மங்களபுரம் கிளை தோழர்கள் ஆகியோர் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களைச் சந்தித்து ஒருமைப்பாடு தெரிவித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தோழர் எஸ்.குமாரசாமி, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், வித்யாசாகர், உமாமகேஸ்வரன், ராதாகிருஷ்ணன், மஞ்சுளா, மாநில அமைப்புக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், பழனிவேல், முனுசாமி, சேகர் ஆகியோர் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு தார்மீகரீதியில் பலம் தரும் விதம் உடனிருந்தனர்.
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் முடிந்த பிறகு அது பற்றிய செய்தியையும் சேர்த்து கம்யூனிஸ்ட் இதழில் வெளியிடுவது என்று காத்திருப்பு வீணானது. அயனாவரம் காவல்துறையினர் பட்டினிப் போராட்டம் நடக்கும் தலைமையகத்துக்கு தினமும் வந்து நிலைமையை அறிந்து செல்வது என்பதற்கு மேல் போராட்டத்தை முடித்து வைக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பட்டினிப் போராட்டத்தின் பத்தாவது நாள், அது வரையிலான செய்திகளுடன் பத்திரிகை அச்சுக்குச் செல்கிறது.
போராட்டத்தின் இரண்டாம் நாளிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ராஜேஷ÷க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பிரிக்கால் தோழர்களுக்கான காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் மூன்று நாட்கள் இருந்த தோழர் ராஜேஷ÷க்கு இரண்டாவது நாள் இப்படித்தான் இருக்கும் என்ற முன்அனுபவம் இருந்தது. இரண்டாவது நாள் போராட்டத்தை சிரமத்துடன் கடந்த தோழர் ராஜேஷ் பத்து நாட்களை கடந்து பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். நாட்கள் கடந்தாலும் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்ற உறுதி அவரிடம் காணப்படுகிறது. உடல்நலத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற அவரது மனநிலையை அவரது உறுதியில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
பிரிக்கால் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் எல்டியுசி மாநிலச் செயலாளரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஏற்கனவே பதினைந்து நாட்கள் பட்டினிப் போராட்டத்தில் இருந்தவர். அவருக்கு இன்னும் மேலான போராட்ட அனுபவம் இருந்ததால், உடல்நலக் குறைவை சற்றும் வெளிப்படுத்தாமல் என்றென்றும் புன்னகை, முடிவிலாப் புன்னகை என்ற திரைப்படப் பாடலுக்கு ஏற்றவராக காட்சியளிக்கிறார். பிரிக்கால் முதலாளியின் விதவிதமான வதைகளுக்கு ஆளாக்கப் படும்போதும் பிரிக்கால் முதலாளிக்கு எதிரான போராட்டத்தை உறுதியாக தொடர்கிற நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் ஒருவரான தோழர் ஜெயபிரகாஷ்நாராயணனுக்கு பட்டினி கிடப்பதால் ஏற்படும் துன்பம் துச்சமானதாக தெரியக் கூடும்.
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடர்கிறது. தோழர்களின் உறுதி குறையாவிட்டாலும் உடல்நலம் குன்றுகிறது. தமிழ்நாடெங்கும் ஷாஹின்பாக் போராட்டங்கள் தொடர்கின்றன. வலுக்கின்றன. உயர்நீதிமன்றம் பின்வாங்க நேர்ந்துள்ளது. தமிழக அரசும் பின்வாங்க நேரும். போராட்டங்கள் இல்லாமல் பொழுதுகள் விடியாது. போராட்டத்தின் முன்னாலே யாராட்டமும் செல்லாது.

Search