COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 21, 2020

ரஞ்சன் கோகோய் வாழ்த்தி வரவேற்கப்படுவார்

எஸ்.குமாரசாமி


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார். அரசாட்சித் துறைக்கும் நீதித்துறைக்கும் ஒத்திசைவை மேம்படுத்த தனது புதிய பதவி உதவும் என்று அவர் சொல்கிறார்.

மத்திய அரசுக்கு ஒத்திசைவாக, நீதித்துறையை, மத்திய அரசின் சட்டத்துறை போல் அவர் ஏற்கனவே மாற்றிவிட்டிருந்தார். அரசு நினைப்பதை நீதித்துறை செய்யும் என, பாமரருக்கும் புரியும்விதம் செய்து காட்டினார்.
அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில்தான், அரசு விரும்பியபடி, மசூதியை இடித்தவர்களுக்கு மசூதி இடிக்கப்பட்ட இடம் ராமன் கோவில் கட்ட தரப்படும் என்ற தீர்ப்பு வந்தது. சட்டமும் சாட்சியங்களும் ஒரு பொருட்டல்ல, இந்து ராஷ்டிராவில் இந்து நம்பிக்கையும் இந்து விருப்பமும்தான் முக்கியம் என, அரசோடு ஒத்திசைந்து நீதித்துறை செயல்பட்டது.
அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில்தான், அம்பானி, அதானி கார்ப்பரேட் ராஜ்ஜியம் மேலானது, கார்ப்பரேட்டுகளே செல்வத்தை உருவாக்குபவர்கள், பெரிய மனிதர்கள் என்றால், பெரிய ஊழல்கள் சகஜம் என்று, ரஃபேல் விமான பேர ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கார்ப்பரேட் ஆதரவு அரசுடன், கார்ப்பரேட் சாய்வுடன் நீதித்துறை ஒத்திசைந்து செல்வதுதான் நாட்டுக்கு நல்லது என்று முடிவானது.
வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் எல்லாம் வெட்டிப் பேச்சு என மூடிய உறை நீதிபரிபாலன முறை கொண்டு வந்த கோகோய், உண்மை மக்களுக்கு எப்போதும் ஆரோக்கியமானதல்ல என்று கருதும் மோடியுடன் ஒத்திசைவை விரும்புவது எவ்வளவு பொருத்தமானது.
ரஞ்சன் கோகோய், மோடி - ஷா - ஆர்எஸ்எஸ் பாணி தேசபக்தர். இரும்பு மனிதர். அதனால்தான், அரசியல்சாசன அறம் என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம் என்ற புரிதலோடு, 370 ரத்து, அடிப்படை உரிமைகள் பறிப்பு என காஷ்மீர் மீது போர் தொடுக்கப்பட்டபோது, இது நல்ல போர் என்று அவர் அரசோடு ஒத்திசைந்து போனார். சபரிமலையில் பெண்கள் நுழைவை, அரசே நினைத்துப் பார்க்காத அளவுக்கு தள்ளிப் போட்டார்.
இப்போது அவர் நீதிபதி இல்லை. ஆனாலும் நீதித்துறை மீது தன் கருத்து செல்வாக்கு நீடிக்கும் என்று துணிந்து நம்புகிறார். மத்திய அரசை சங்கடப்படுத்தாத போப்டே, மோடி புகழ்பாடும் கலியுக பிரகடன அருண் மிஸ்ரா போன்றவர்கள், அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான ஒத்திசைவை உறுதி செய்வார்கள் என்று நம்புகிறார். நல்லெண்ண தூதுவரை, தறிகெட்டு ஓடப்பார்க்கும் நீதித்துறை என்ற முரட்டுக் காளையை அடக்கியவரை, வாழ்த்தி வரவேற்கிறது சங் பரிவார்.
நீதித்துறை சுதந்திரம் பற்றி ஓயாமல் குரல் எழுப்பும் சில நகர்ப்புற நக்சல்கள், தேசவிரோதிகள், துரோகிகள், கிரிமினல் பெண் ஊழியர் ஒருவர் எல்லாம் சேர்ந்துகொண்டு தன் மீது வீண்பழி சுமத்தியபோது, தாம் அஞ்சாமல் குரல் கொடுத்ததாகவும், மற்ற நீதிபதிகள் பயந்துபோய் வாய் மூடி இருக்கிறார்கள் என்றும் கோகோய் சொல்லியுள்ளார்.
ஹிட்லர், மோடி, ஷா, ஜெயலலிதா போன்றவர்கள் பொதுவாக பழிபாவத்துக்கு அஞ்சாத துணிச்சல்காரர்கள். அவர்கள் நினைத்ததை சாதிக்க துடித்தவர்கள். அந்த வரிசையில் எந்த களங்கம் பற்றியும், கூச்சப்படாத, கலங்காத ரஞ்சன் கோகோய், மோடியால் ஷாவால் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியவர்.

Search