COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 7, 2020

தலைநகர் டில்லியில் சங்பரிவார் கூட்டம் நடத்தியுள்ள
மதவெறி வன்முறையும் ஆபத்தான புதிய சகஜ நிலையும்


எஸ்.குமாரசாமி

2002 குஜராத் பாணியில் 2020ல் டில்லியில் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் காவி கும்பல், காக்கிச் சட்டைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அல்லது காக்கிச் சட்டைகள் ஆதரவோடு, அல்லது காக்கிச் சட்டைகள் பங்கேற்போடு, இசுலாமிய வேட்டை நடத்தியதை ஊரறியும். உலகறியும்.
2002 அலைபேசி வந்த காலம். 2020 அறிதிறன்பேசிகள் இருந்ததால், இசுலாமிய வீடுகளும் மசூதியின் மாடங்களும் தகர்க்கப்பட்டதை, இசுலாமியர்கள் கூரிய நீண்ட வாள்களால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டதை, தேசிய கீதம் பாடு என்று காவி காலி ஒருவர் இசுலாமியர் ஒருவரை இரும்புத் தடியால் தாக்க, அவர் பாதி தேசிய கீதம் பாடும் போதே உயிரிழந்ததை நாடு பார்த்தது. நரேந்திரமோடியும் அமித் ஷாவும் பார்த்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பார்த்தார். நடந்ததை முடிந்ததாகக் கருதி இனி நம்பிக்கையுடன் இருக்கச் சொன்னார். இசுலாமியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, வருத்தம் தெரிவிக்காத, ஆறுதல் சொல்லாத, உண்மையில் அந்தத் தாக்குதல்களுக்குக் காரணமான மோடி ஷா இரட்டையர் சார்பில், கள நிலவரம் காண வந்த அஜித் தோவல், இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாட்டப்படி) என்று சொன்னது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.
ஆகாயத்துக்கும் பூமிக்கும் தாவும் ஆற்றல் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, டில்லியில் இசுலாமியர் மீது நடத்தப்பட்ட வன்முறை பற்றி மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸ் முறையிட்டபோது சொன்னது மிகுந்த கவலை தருவதாகும். ‘சம்பவம் நடந்த பிறகுதான் நீதிமன்றம் அந்த இடத்துக்கு வரும். அது போன்ற விசயங்களை நீதிமன்றங்களால் தடுக்க முடியாது. மக்கள் சாக வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இது போன்ற அழுத்தத்தை சமாளிக்கும் வசதி வாய்ப்புகள் எங்களுக்கு இல்லை. தடுக்கும் தன்மை வாய்ந்த நிவாரணங்களை எங்களால் வழங்க முடியாது. எங்கள் மீது ஓர் அழுத்தம் இருப்பதாக உணர்கிறோம். விசயம் நிகழ்ந்த பிறகுதான் சூழலை கையாள முடியும். எங்கள் மீதான அழுத்தத்தை எங்களால் கையாள முடியவில்லை. ஏதோ நீதிமன்றம்தான் பொறுப்பு என்பதுபோல் ஆகிறது’.
நாட்டு மக்களின் உயிர்களைக் காக்கும் கடமை, அழுத்தம் தருகிறது என்று தலைமை நீதிபதி கருதும்போது, சொந்த நாட்டு மக்கள் காவிக் கும்பல்களால் வேட்டையாடப்பட்டது, வேட்டையாடப்படுவது தொடர்பாக தம்மால் ஏதும் செய்ய முடியாது என்று சொல்லும்போது, அது அவர் பொறுப்பை துறப்பது (அப்டிகே ஷன் ஆஃப் ரெஸ்பான்சிபிலிடி) ஆகாதா? அரசியல் சாசன ஆட்சி போய், மனுதர்மம் கோலோச்சத் துவங்கிவிட்டதா?
தலைமை நீதிபதி இத்தகைய நிலை எடுக்கும்போது, உடனடி முற்றுப்புள்ளி தேவை என்று தினமணி நாளிதழ் தலையங்கம் எழுதி, ரஜினிகாந்த் சொன்னபடி இரும்புக்கரம் கொண்டு நசுக்கச் சொல்லி தலையங்கம் வெளியிடுவதில் வியப்படைய என்ன உள்ளது?
டில்லி வன்முறை முன்னரே நடந்திருக்க வேண்டியது, இப்போதுதான் நடக்கிறது என்று தினமணி, நியாயம் கற்பிக்கிறது. தினமணி தலையங்கம் அருவருக்கத்தக்க சில வாதங்களை முன்வைக்கிறது. (இந்த வாதங்களையும் அறிவுபூர்வமான, தர்க்கபூர்வமான வாதங்கள் என்று சொல்பவர்கள் இருப்பதுதான் இந்தியாவுக்கு நேர்ந்துள்ள பெரும் தீங்கு).
    எதிர்பாராதது ஒன்றும் நடக்கவில்லை.
    சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையும் ஆவேசமும் பெரும்பான்மை சமூகத்தின் அடிமனதில் அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    ட்ரம்ப் வந்திருந்தபோது, போராட்டம் நடந்திருக்கக் கூடாது.
    மாதக் கணக்கில் போராடக் கூடாது.
    பெரும்பான்மையினருடன் இணக்கம் கொண்டு வாழ்வது சிறுபான்மையினருக்கு கட்டாயம்.
    நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்க்கக் கூடாது. அந்தச் சட்டம் தவறு என்பவர்கள், வேண்டுமானால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டத்தை ரத்து செய்யட்டும்.
    ஒரு மதத்தினர் ஒருங்கிணைந்தால், மாற்று மதத்தினர் ஒன்று திரண்டு வன்முறையில் ஈடுபடத்தானே செய்வார்கள்?
    சட்டம் ஒழுங்கு மீறல், இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட வேண்டும்.
டில்லியில், காவிக் கும்பல், வன்முறை சூறையாடல் நடத்தும் முன்போ, நடத்தும்போதோ இசுலாமியர் ஆவேசம் காட்டவில்லை. எனது நாட்டில் எனக்கு இடமில்லை, எனக்கு சமத்துவமில்லை, எனக்கு உரிமை இல்லை, எனக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்ல நீங்கள் யார் என்ற அரசியல் சாசன அறம் சார்ந்த சீற்றம்தான் வெளிப்பட்டுள்ளது.
தினமணி, இந்து ராஷ்டிர பாசிசத்தை முன்னிறுத்துகிறது. சிறுபான்மைச் சமூகம் ஓரணியாய் திரளக் கூடாது, போராடக் கூடாது, தொடர்ந்து போராடக் கூடாது, இசுலாமியர் இந்துத்துவத்துக்கு அடங்கிப் போக வேண்டும், இசுலாமிய வேட்டை எதிர்ப்பார்த்ததுதான், பெரும்பான்மை வன்முறையில் ஈடுபட்டது நியாயம்தான் என்று சொல்வது, டில்லி வன்முறையை கண்டிக்காமல் நியாயப்படுத்துவது என்பவை, இந்து ராஷ்டிரம் உருவாக்குவதற்கு வழி அமைப்பதாகத்தானே ஆகும். இதுதானே பாசிசம்.
மக்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை, அடுத்து ஆட்சிக்கு வந்து மாற்று என்பது, சொத்தையான அடாவடி வாதமாகும். குடியுரிமை சட்டத் திருத்தம் தவறு என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, வீதியில் இறங்கிப் போராடுவது சரியா என்ற மேதாவித்தனமான கேள்விகளுக்கு, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பது காணத்தக்கது.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஜி. செவில்கர் மற்றும் டி.வி.நல்வாடே ஒரு தீர்ப்பில் எழுதியதாக ஊடகங்கள் சொல்கின்றன: ‘இந்தியா போன்ற ஜனநாயக குடியரசில், சட்டத்தின் ஆட்சிக்குத்தான் அரசியல்சாசனம், வழி சொல்கிறதே தவிர, பெரும்பான்மையினரின் ஆட்சிக்கு அல்ல. இசுலாமியர் போன்ற ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவும், ஒரு குறிப்பிட்ட சட்டம் தங்களது நலனுக்கு விரோதமானது என்று கருதினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்தப் பிரிவினருக்கு உரிமை உண்டு’.
‘இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின் சமத்துவ பிரிவான பிரிவு 14க்கு விரோதமானது எனச் சொல்லும் உரிமை, அரசியல்சாசனப் பிரிவு 19ன் கீழ் அவர்களுக்கு உண்டு’.
‘இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை, துரோகிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்த முடியாது’.
‘இந்தச் சட்டத்துக்கு எதிராக, கிளர்ச்சி செய்ய, போராட அவர்களுக்கு உரிமை உண்டா என நீதிமன்றம் காண வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களது அடிப்படை உரிமை என நீதிமன்றம் முடிவுக்கு வந்தால், அதன் பிறகு, நீதிமன்றம் மூலம், இந்த உரிமையை செயல்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருமா என்ற கேள்விக்குள் நுழைய வேண்டியதில்லை. இது போன்ற வழக்குகளில், அரசாங்கம் இத்தகையவர்களை அணுகி, அவர்களோடு பேசி, அவர்களை இணங்க வைக்க முயற்சி செய்ய  வேண்டும்.’
ஷாஹின்பாக் போராட்டக்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்ற வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் என்ற இருவரும் சொன்னார்கள்: ‘வேறு வேறு கருத்துகள் அடிப்படையில்தான் ஜனநாயகம் செயல்படுகிறது. இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறீர்கள். அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான, உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்புக்குக் காத்திராமல், அந்தச் சட்டத்துக்கு எதிராக சமூக அழுத்தத்தை கட்டமைக்கப் பார்க்கிறீர்கள். அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. இத்தகைய ஆயிரம் போராட்டக் களங்கள் உருவாவதிலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. எங்களது கவலை, நீங்கள் பொது வழியைத் தடுக்காமல் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்ற வரம்புக்கு உட்பட்டது மட்டுமே’. இப்படிச் சொன்ன நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர்களை அனுப்பினார்கள். அவர்கள் அறிக்கையைப் பெற்றுக் கொண்டு வழக்கை மார்ச் 23 வரை ஒத்தி வைத்துள்ளார்கள்.
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேசன் ஏற்பாடு செய்த ‘மாற்றுக் கருத்தும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி  தீபக் குப்தா சொன்னார்: ‘அரசு அதிகாரத் துறை, அதிகார வர்க்கம், ராணுவம் ஆகியவற்றை விமர்சிப்பது, தேசத் துரோகம் ஆகாது. பெரும்பான்மை பெற்றவர்கள் ஆட்சி அமைப்பது என்பது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆனால் பெரும்பான்மைவாதம் ஜனநாயக விரோதமானதாகும். 51 சத வாக்கு பெற்றவர்கள் ஆள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும், அவர்களுக்கு வாக்களிக்காத 49 சதம் பேர் அடுத்த அய்ந்து ஆண்டுகள் அரசு சொல்வதை எதிர்க்கக் கூடாது என்று சொன்னால், அது தவறு தவறு என உரத்தக் குரலில் சொல்வேன்’.
ரஜினிகாந்த், தினமணி, ஷா, மோடி ஆகியோருக்கு இந்திய அரசியல்சாசனம் கசக்கும். அதன்படியான தீர்ப்புகள் அவர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள்ளாகவே இருக்கும்.
ஆபத்தான புதிய சகஜ நிலை
வெறுப்பு, அச்சம், கொலை ஆகியவை சங் பரிவார் கூசாமல் கையில் எடுக்கும் ஆயுதங்கள். இவை குஜராத்தை நிறுத்திக் கொள்வதில், மய்ய அரசை பிடிப்பதில் வெற்றி தேடித் தந்தன. டில்லி இனப்படுகொலைகளுக்குப் பிறகு, டில்லி ராஜீவ் சவுக் மெட்ரோவில், டில்லியில் நடந்த சங் ஆதரவாளர்கள் நடத்திய அமைதிப் பேரணியில், கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியில் ‘கோலி மாரோ’, ‘சுட்டுக் கொல்லுங்கள்’, ‘தேச விரோதிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ என காவி காலிகள் முழக்கம் எழுப்பியுள்ளனர். அச்சு, மின்னணு ஊடகம் மீது சங் பரிவார் பெரும் செல்வாக்கு கொண்டுள்ள அதே நேரம், சமூக ஊடகம் அதன் ஆதரவாளர்களால் நிரம்பியுள்ளது. இசுலாமியர் வேட்டையாடப்பட்டதை, இசுலாமியர் படுகொலை செய்யப்பட்டதை சங் பரிவார் தயங்காமல்  கொண்டாடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்துகிறது. பொய்ச் செய்திகளைப் பரப்புகிறது. அது படுகொலை செய்யப்பட்டவர்களையே அவர்களது விதிக்குப் பொறுப்பாக்குகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என நாடெங்கும் அனைத்து வகை ஊடகங்களும் குரல் எழுப்பியிருக்க வேண்டிய நேரத்தில், இது பற்றி எந்தப் பேச்சும் இல்லாமல், நியாயமான இந்த கோரிக்கையை கடந்திருப்பதும் இந்த புதிய சகஜ நிலையின் ஓர் ஆபத்தான பகுதியாகும்.
இது ஒடுக்குமுறையாளர்கள் ஏற்படுத்தியுள்ள புதிய சகஜ நிலை என்றால், மக்கள் தரப்பில் இருந்தும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜெர்மனியில் முதல் உலகப் போரில் காயப்பட்ட தேசிய கவுரவமும் தீவிரமடைந்த முதலாளித்துவ நெருக்கடியும் இடதுசாரி ஆபத்தை எதிர்கொள்ளும் வலதுசாரி பதில் வினையாக பாசிசம் உருவாக வழி வகுத்தன. பாசிசம் யூதர்களில் பல பத்து லட்சம் பேரை தனிமைப்படுத்தி சிறுமைப்படுத்தி பின் வதை முகாம்களுக்கு அனுப்பி படுகொலை செய்தது. யூதர்களால் மக்கள் திரள் போராட்டங்களை கட்டமைக்க முடியவில்லை. அதே நேரம் ஜெர்மானிய மக்களும் ஹிட்லரின் இந்த நடவடிக்கைகளை தடுக்கவில்லை, தடுக்க முடியவில்லை என்பதாகத்தான் வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இந்து ராஷ்டிர முயற்சிகள் துவங்கின. நாம் இந்துக்கள், நம் நாடு இந்து நாடு, பல நூற்றாண்டுகளாக முகலாய, இசுலாமிய, ஆங்கிலேய, கிறித்துவ அந்நியர் நம்மை ஆக்கிரமித்து ஆண்டுள்ளனர் என்று பேசி வந்த சங் பரிவார், அரசியல் தளத்தில் சோவியத் சரிவுக்குப் பிறகு பலம் பெறத் துவங்கியது. மசூதி இடிப்பதில் துவங்கி குஜராத் இனப்படுகொலை ஊடாக இழந்த இந்து பெருமிதத்தை மீட்க வந்த இந்து போர் வீர அவதாரமாக மோடி நிறுத்தப்பட்டார். அம்பானி, அதானிகளும் மோடி பாணி தலைமைக்கு ஆதரவு தந்தனர்.
அடக்குமுறை மற்றும் அச்சத்தின் ராஜ்ஜியத்தை பாஜக நிறுவிக் கொண்டிருக்கும் போதே, இப்போதே, இங்கேயே, இதோ, இந்து ராஷ்டிரா என 2020லேயே சொல்லத் துவங்கிய காலத்தில், பேரதிசயங்களும் நிகழத் துவங்கிவிட்டன. ஏறத்தாழ 20 கோடி பேர் வரை உள்ள இந்திய இசுலாமியர்கள், இனி பொறுப்பதில்லை என பொது வெளிக்கு வந்துவிட்டனர். கிட்டத்தட்ட ராணுவ துணை ராணுவ ஆக்கிரமிப்பு நிலை உள்ள காஷ்மீர் உத்தரபிரதேசம் நீங்கலாக, இசுலாமியர்கள் குறிப்பாக பெண்கள் பல்லாயிரங்களில் லட்சங்களில் வீதிக்கு வந்து நாடெங்கும் போராடு கிறார்கள். ஷாஹின்பாகுகளை முடிவுக்கு கொண்டு வர நிறைய ஜாலியன் வாலாபாகுகள் நிகழ்ந்தாக வேண்டும். அறிதிறன் கைப்பேசி காலத்தில் சர்வதேச கவனம் மத்தியில், சங் கூட்டத்துக்கு இப்படிச் செய்வது மிகவும் சிரமம். உள்நாட்டுப் போர் போன்ற ஒரு சூழலை, தடுமாறும் இந்திய முதலாளித்துவமும் விரும்ப வாய்ப்பில்லை.
பேரதிசயங்களின் காலத்தை இப்போதைய போராட்டங்கள் உருவாக்கும்போது இந்தியாவெங்கும் தேசக் கொடிகளுடன் காந்தி அம்பேத்கர் படங்களுடன் இசுலாமியர் திரள்கின்றனர். பல பெரிய கட்சிகளும் முனைப்புடன் எதிர்ப்புக் காட்டாத நேரம், துரோகிகள், தேசவிரோதிகள், நகர்ப்புற நக்சல்கள் முத்திரை குத்துபவர்களுக்கு அஞ்சாமல், அனைத்துவகை இடதுசாரிகளும் தாராளவாத சிந்தனைப் போக்கு உள்ளோரும் பாசிச இந்து ராஷ்டிரா உருவாவதை விடாப்பிடியாக எதிர்க்கிறார்கள். கண்ணுக்கு எதிரில் தொட்டு விடும் தூரத்தில் இந்து ராஷ்டிரா, எழுகிற போராட்டங்களின் படைப்பாற்றல் மிக்க கற்பனையுடன் ஒரு புதிய இந்தியா, என்பதாக இந்த காலம் உள்ளது. இந்தியாவின் பன்மைத்துவம் புதிய கனவை நனவாக்க உதவும். துவங்கிய அரசியல் போராட்டம், திருப்பங்கள், திருகல்கள் நிறைந்ததாக பரபரப்பானதாக நிச்சயம் இருக்கும். இந்தியாவின் பன்மைத்துவம் கொண்டு புதிய கனவை நனவாக்க கரம் கோர்ப்போம்.

29.02.2020  மற்றும் 01.03.2020 தேதிகளில்  ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில அமைப்பாளர் தோழர் கு.பாரதி தலைமையிலான குழுவில் தோழர் குருசாமி (கம்யூனிஸ்ட் கட்சி), தோழர் நடராஜன் (எல்டியுசி), தோழர் ராமசந்திரன் (மக்களுக்கான இளைஞர்கள்), தோழர் மணிகண்டன் (கம்யூனிஸ்ட் கட்சி), தோழர் ராஜா (மக்களுக்கான இளைஞர்கள்) ஆகியோர் கோவை, திருப்பூர், சேலம் ஷாஹின்பாக் போராட்டங்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். தோழர் பாரதி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நமது வெகுஜன அமைப்புக்கள் சார்பாக உரையாற்றினார். மூன்று கூட்டங்களிலும் பேசுவதற்கு தோழர் பெரோஸ் பாபு (இகக மாலெ) உதவி செய்தார். திருப்பூரில் பேச எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா உதவி செய்தார். கோவை ஷாஹின்பாக் போராட்டத்தில் முன்னரே கோவை கட்சியின் சார்பாக தோழர் மணிகண்டன் உரையாற்றி ஒருமைப்பாடு நிதியும் வழங்கினார்.
வண்ணாரப்பேட்டை ஷாஹின்பாகில் மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் சார்பாக தோழர் சீதா நான்கு முறை சென்று உரையாற்றினார். ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில அமைப்பாளர் தோழர் கு.பாரதி, கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மோகன், முனுசாமி, பொன்ராஜ், பசுபதி ஆகியோர் அடுத்தடுத்து வண்ணாரப்பேட்டை போராட்ட களத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எல்டியுசி மாநிலத் தலைவருமான தோழர் எ.எஸ்.குமார் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

Search