COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 7, 2020

நீதித்துறையும் ஆட்சி அதிகாரத்துறையும்
ஒன்றுகலப்பது நாட்டுக்கு நல்லதல்ல


எஸ்.குமாரசாமி

அனைத்து நாடுகளின் நீதிபதிகள் சமீபத்தில் டெல்லியில் கூடியபோது, இந்திய ஒன்றிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, உச்சநீதிமன்றத்தின் மூன்றாம் நிலையில் உள்ள நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொழில் மூலதனமும் வங்கி மூலதனமும் ஒன்றுகலப்பது நிதி மூலதனமாக உருமாறுகிறது என்றார் லெனின். ஏகாதிபத்தியம் என்பதே ஏகபோக நிதி மூலதன சகாப்தம் என்றார்.
நீதிபதிகள் கூட்டத்தில், நமது நாட்டின் ஆட்சி அதிகாரமும் நீதித்துறையும் ஈருடல் ஓரூயிராக இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது, மிகுந்த கவலை தருகிறது. நீதித் துறையும் ஆட்சி அதிகாரத்துறையும் ஒன்று கலப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
130 கோடி இந்தியர்களும் ஏற்கும் முக்கிய தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்துள்ளதாக அந்த கூட்டத்தில் மோடி பாராட்டிப் பேசினார். அவர் முக்கியமாக, மசூதியை இடித்த கூட்டத்திடம் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை ஒப்படைத்த, ராமன் கோவில் கட்ட வழி தந்த தீர்ப்பை பாராட்டுகிறார் என்றுதான் கருத முடியும். 1992ல் மசூதியை இடித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிலரை, 2020ல், கோவில் கட்டுவதற்கான கமிட்டியில், மோடி நியமித்துள்ளார். மோடி அரசு இதன் மூலம் மசூதியை இடித்தது சரிதான், அது குற்றமல்ல எனச் செய்தி சொல்கிறது. இப்போது, இடித்தவர்களுக்கு இடித்த இடத்தை பரிசாகத் தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை, மோடி பாராட்டியுள்ளார்.
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்றம் வக்காலத்து எதுவும் தராமலே, அந்தக் கூட்டத்தில் நீதித்துறை சார்பாக ஆஜராகி, நீதிபதிகளின், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் விமர்சிக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தார். மோடி 130 கோடி மக்களும் பாராட்டுகிறார்கள் என்று சொன்னபோது, ரவி சங்கர் பிரசாத், தீர்ப்புகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாவதைக் கண்டு மனம் நொந்து போய், மாற்றுக் கருத்துகளின் கழுத்தை நெறிக்க பச்சைக் கொடி காட்டி உள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, அரசியல்சாசன அடிப்படையில் உரிமைகளைக் காப்பாற்றவதில் முன்கை எடுத்திருந்தால், உச்சநீதிமன்றத்தின் புகழ் ஓங்கி உயர்ந்திருக்கும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21, 14 ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய உச்சநீதிமன்றம், மதச்சார்பின்மை என்ற அரசியல் சாசன அடிப்படை கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டிய உச்சநீதிமன்றம், காஷ்மீரில் 370 பிரிவு நீக்கம், காஷ்மீரில் பிரிவு 21க்குப் புறம்பான தடுப்புக் காவல், குடியுரிமை திருத்தச் சட்டம், இந்துத்துவா வன்முறை வெறுப்பு பேச்சுகள் விஷயத்தில், அடிப்படை உரிமைகள் பக்கம் நிற்கவில்லை. குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் பாதுகாக்க வேண்டிய தலைமை நீதிபதி, குடிமக்க ளின் அடிப்படைக் கடமைகளே இன்றைய தேவை என்கிறார். குடிமக்களே, நீங்கள் ஒழுங்காக உங்கள் அடிப்படை கடமைகளை நிறைவேற்றுங்கள், உங்கள் உரிமைகள் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருக்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்.
இந்தப் பின்னணியில் சமூக நீதியை உறுதிப்படுத்தும் இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என உச்சநீதிமன்றம் சொல்வதையும், காஷ்மீரின் முதலமைச்சர்களாக இருந்த ஒமர் அப்துல்லா போன்றோரின் நீண்ட தடுப்புக் காவலில் ஏதும் செய்ய முன்வராததையும், சர்ச்சைக்குரியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அதுவே கூட, கலவரத்துக்கு வழிவகுக்கும் என்பது மும்பை கலவரத்தின்போது, சிவசேனை தலைவர்கள் மீது, வழக்கு போடப்பட்டதையடுத்து நடந்த பெரும் வெடிப்புகளில் இருந்து தெளிவாக தெரிந்தது என்று சொன்னதையும் காண வேண்டியுள்ளது.
திருவாளர் அருண் மிஸ்ரா, மாட்சிமை மிகுந்த உச்சநீதிமன்ற நீதிபதி. தலைமை நீதிபதி போப்டே முதலிடம், நீதிபதி ரமணா இரண்டாம் இடம், நீதிபதி அருண் மிஸ்ரா மூன்றாம் இடம் என பணி மூப்பில் உள்ளனர். நீதிபதிகள் செல்லமேஸ்வர், கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றி ஊடகங்களிடம் புகார் சொன்னபோது, அவர், அரசுக்கு ஆதரவாக அன்று பணிமூப்பில் 10ஆம் நிலையில் இருந்த நீதிபதி அருண் மிஸ்ராவிடம் முக்கிய வழக்குகளை ஒப்படைக்கிறார் என்றுதான், குற்றம் சுமத்தினர். அதே திருவாளர் அருண் மிஸ்ராதான், பின்னாளில் ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாகி பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோது, அவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு பொரிந்து தள்ளினார். பெரிய சதி, விடமாட்டேன், அடி ஆழம் வரை சென்று ஆராய்ந்து விசாரிப்போம் என்றார். மலையைப் பிடிப்பேன் என்று வீரம் பேசியவர் களால் செத்த எலியைக் கூட கொண்டுவர முடியவில்லை.
இந்த திருவாளர் அருண் மிஸ்ராதான், நரேந்திர மோடி, பல்திறன் உள்ள அதிஉயர்ந்த அறிவாளி, உலகளாவிய அளவில் சிந்தித்து உள்ளூர் அளவில் செயல்படக் கூடியவர், தொலை நோக்கு பார்வை கொண்ட தீர்க்கதரிசி என்று பிரதமரை நீதிபதிகளின் சர்வதேச கூட்டத்தில் புகழ்ந்து தள்ளினார்.
1992ல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் சேர்ந்து (ஊமகக இஞமதப), பாரபட்சமற்ற நீதி நிர்வாகத்திற்கு வலுவான சுதந்திரமான மரியாதைக்குறிய நீதித்துறைக்கு, முன்நிபந்தனையான ஒரு சாசனத்தை உருவாக்கினார்கள். அதன் 6ஆவது பிரிவு, ஒரு நீதிபதி அவர் வகிக்கும் பதவிக்கேற்ப, அதற்கு பொருத்தமான முறையில், விட்டு விலகி நிற்க வேண்டும் என்கிறது. அதன் 16ஆவது பிரிவு, ஒவ்வொரு  நீதிபதியும் எல்லா நேரமும், தான் பொது மக்களின் பார்வையில் உள்ளோம் எனக் கவனமாக இருக்க வேண்டும், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பது, செய்யக் கூடாததைச் செய்வது என்பவை அவரது உயர்பதவிக்கும் அந்த பதவி மீது பொதுமக்கள் கொண்டுள்ள மரியாதைக்கும் பொருந்தாதது ஆகும் என்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு 1992ல் உச்சநீதிமன்றம் உருவாக்கிய நன்னடத்தை சாசனம் பொருந்தாது போலும்.
நீதித்துறையும் ஆட்சி அதிகாரத்துறையும் ஒன்று கலப்பது, நீதித்துறை சுதந்திரத்திற்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. 

Search