COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 7, 2020

காஞ்சிபுரம் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி பற்றி ஒரு பார்வை

சூழல் புதிது. தலைமுறை புதிது.
தேவைகள் புதிது. எதிர்ப்பார்ப்புகள் புதிது.


காஞ்சிபுரம் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சியில் தோழர்கள் வித்யாசாகர், மஞ்சுளா உள்ளிட்டோர் பிப்ரவரி 16, 17 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சியில் பண்ருட்டி மற்றும் கண்டிகை கிராமங்கள் உள்ளன.

நகர்ப்புறமயமாதல் துரிதமாக நடந்து வரும் தமிழ்நாட்டில், முழுமையாக நகர்ப்புறமாகவும் மாறாமல், கிராமப்புறமாகவும் நீடிக்க முடியாமல், இரண்டு அம்சங்களின் பாதிப்புகளையும் தாங்கியதாக இருக்கிற பகுதிகளில் வறிய மக்களை அமைப்பாக்குவதில் முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றி திட்டமிட, இது போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களது விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், எதிர்காலத்துக்கான கனவுகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஆய்வு முற்பட்டது.
நகர்ப்புறத்தின் உள்கட்டுமான வசதிகளில் மிகவும் முக்கியமானதான மாநில நெடுஞ்சாலையில் இந்த கிராமங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் டெட்ராய்ட்டாக கருதப்படும் திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் என்ற பரந்த மண்டலம் தொழில் மய்யமாக மாற இந்த ஊராட்சி மக்கள் தங்கள் விவசாய நிலங்களை தந்துள்ளனர். அந்த விவசாய நிலங்களில் பண்ருட்டி ஊராட்சியில் பன்னாட்டு, உள்நாட்டு தொழில்நிறுவனங்கள் என 40க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
பண்ருட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர். உள்ளாட்சித் தேர்தல் வரக் காத்திருக்கிறார். பகுதியில் மக்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று சொல்கிறார். வேலை வாய்ப்புக்கு ஊராட்சி என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார். பகுதியில் ரவுடிகள் இருப்பதால் தொழில்நிறுவனங்களில் உள்ளூர்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்றார். குடிநீர் வசதி, சாலை வசதி, நலத்திட்டங்களை ஓரளவு பெறுவது என்பதாக அவரது ஊராட்சி மன்றத் தலைவர் பணி உள்ளது. ஊராட்சியில் மொத்தம் 240 குடும்பங்கள் உள்ளதாக அவர் சொல்கிறார்.
பண்ருட்டி கிராமத்தில் தலித் அல்லாதோர் குடியிருக்கும் பகுதி
இந்த ஊராட்சியில் தலித் மக்கள் வசிக்கும் பகுதி வெளியில் சாலை மீதும் பிற சாதியினர் வசிக்கும் தெருக்கள் உள்ளேயும் என தலைகீழாக உள்ளது. மொத்தமுள்ள 240 குடும்பங்களில் தலித்துகளும் மற்ற சாதியினரும் சமமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பூர்வீகமாக இங்கு இருப்பவர்கள். இவர்களுடன் வேறு இடங்களில் இருந்து வந்து இங்கு வாடகைக்கு இரண்டு தலைமுறைகளாக குடியிருப்பவர்கள் பிற மாநில, மாவட்ட தொழிலாளர்கள் வாடகை வீடுகளில் உள்ளனர்.
பண்ருட்டி கிராமத்தில் பிற சாதியினர் வசிக்கும் தெருக்கள், அந்த தெருக்களில் வசிக்கும் சாதியினரின் பெயர்களால் அமைந்துள்ளன. கம்மவார் தெரு, யாதவா தெரு, முத்தரையர் தெரு, அய்யர் தெரு என தெருக்களுக்கு பெயரிடப்பட்டு பெயர்ப் பலகைகளும் உள்ளன.
மேல்சாதியினர் தெருக்களில் பெரும்பாலான குடும்பங்களில் மூன்றாவது தலைமுறை சென்னைக்குள் சென்றுவிட்டது. இரண்டாவது தலைமுறையினர் விவசாயம் செய்கின்றனர். மூன்றாவது தலைமுறையில் எஞ்சியவர்கள் அருகமை நிறுவனங்களில் நிரந்தரமற்ற வேலைகள் செய்கின்றனர். ஒருவர் அந்த நிறுவனங்களுக்கு உணவு விநியோகம் செய்கிறார். யாதவ தெருக்காரர்கள் பால் வியாபாரம் செய்கின்றனர். ஒரே ஒருவரால் மட்டும் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் மொத்தமாக பால் விற்க முடிகிறது.
இவர்கள் சொந்த நிலத்திலும் அந்த கிராமத்திலேயே உள்ளவர்களிடம் குத்தகை எடுத்த நிலத்திலும் விவசாயம் செய்கின்றனர். 2 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை விவசாயம் செய்கின்றனர். விவசாயம், ஆடு, மாடு என கிராமப்புற பொருளாதார அம்சங்களை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டு இரண்டு குடும்பங்கள் உள்ளன. பெரிய செழிப்பும் இல்லை. வறுமையும் இல்லை. கிராமத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மேலான வாழ் நிலைமைகள் உள்ளன.
அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த வீடுகள் உள்ளன. பிற மாநில, மாவட்டத் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வீடுகள் விடுவது வருமானத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. கழிப்பறைகள் அய்ம்பது சத வீடுகளில்தான் உள்ளன. பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை.
அய்யர் தெருவில்தான் கூடுதல் எண்ணிக்கையில் ஓட்டு வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் மட்டும் உரிமையாளர் இருக்கிறார். மற்ற வீடுகள் வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
பிற மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்த பிறகு சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது என்கிறார் ஒருவர். ஆலைகள் வந்ததால், ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் சிலர் சொல்கின்றனர். பலர் இது தொடர்பான கேள்வியை பதிலளிக்காமல் கடந்துவிடுகின்றனர். அந்தக் கேள்வி அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. ரேசன் கடை கம்மவார் தெருவில் உள்ளது. வாரச் சந்தையில் எல்லாம் கிடைத்து விடுவதால் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தெருக்களை விட இங்கு தெருக்கள் அகலமாக உள்ளன. தலித் மக்கள் வீடுகளுடன் ஒப்பிடுகையில் பிற சாதியினர் வசிக்கும் வீடுகள் பெரியவை.
இவர்களில் சிலர் விவசாய நிலத்தடி நீரை எடுத்து விற்றுப் பிழைக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஊரறிந்த ரகசியமாக அது இருக்கிறது. குடிநீருக்கு பாதிப்பு உள்ளதா, வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என்று கேட்கும்போது பதட்டத்துடன் பதில் சொல்லும் சிலர் இது போன்ற தொழில் செய்கிறார்கள் என்று நாம் யூகிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது. தெருவுக்குள் ஆங் காங்கே சில லாரிகள், ட்ராக்டர்கள் நிற்கின்றன. ட்ராக்டர் விவசாயத்துக்கு, லாரி லோடு ஏற்றிச் செல்ல என்று சொல்கிறார்கள்.
தலித் மக்கள் குடியிருப்பு
நெடுஞ்சாலை நோக்கிய அடுத்த நான்கு தெருக்களில் தலித் மக்கள் வசிப்பிடம் உள்ளது. நேராக அமைந்துள்ள நான்கு தெருக்களில் எல்லா வீடுகளும் தலித் மக்களின் சொந்த வீடுகள். எல்லா வீடுகளுக்கும் குடிநீர் குழாய் வசதி செய்து தரப்பட்டுள்ளது. சில வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. இங்குதான் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீடு உள்ளது. அடுத்த தெருவில் ஊராட்சி மன்ற எழுத்தர் வீடு உள்ளது.
சுற்றிச்சுற்றி பன்னாட்டு உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் வேலை வாய்ப்பின்மைதான் முக்கிய பிரச்சனை என்று பகுதி மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சொல்கின்றனர்.
கண்டிகை
தொழிற்சாலைகள் அமைந்ததால், நெடுஞ்சாலை உருவானதால் கூடவே உருவான பொருளாதாரம், இந்த மக்கள் வாழ்வில் பெரிய சாதகமான மாற்றம் எதையும் உருவாக்கியதாகத் தெரியவில்லை. கண்டிகை தெருவாழ் மக்கள் ஆய்வுக் குழுவிடம் தெரிவித்த விசயங்களிலிருந்து இதை தெரிந்து கொள்ள முடிகிறது.
வன்னியர்களும் நாயுடுக்களும் வசிக்கும் கண்டிகையில் 140 முதல் 150 வீடுகள் உள்ளன. இவற்றில் 16 வீடுகள் ஓட்டு வீடுகள். குடிசை வீடுகள் இல்லை. அய்ம்பது சத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. பகுதியின் பெரும்பாலான வீடுகளில் பிற மாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்கு வீடுகள் எடுத்துத் தங்கியுள்ளனர். கிராமத்தின் இரண்டு தெருக்களிலும் அவர்களது நடமாட்டம் கணிசமானது. இவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. சொச்சு பாரத்துக்கு மிக தொலைவில் கண்டிகை உள்ளது. கழிப்பறை கட்டுவதற்கான மானியம், ஆடு, மாடு போன்ற நலத் திட்டங்கள், வீட்டு வசதிக்கான மத்திய, மாநில அரசுக் கடன்கள், முதியோர் ஓய்வூதியம் ஆகியவை சொற்பமானோருக்கு (திட்டங்கள் விநியோகம் மீது உள்ளூர் கட்டுப்பாடு கொண்டவர்கள் விருப்பத்துக்கேற்ப) சென்று சேர்ந்துள்ளன என்று சொல்லப்படுகிறது.
வேலை உறுதித் திட்ட வேலைகளுக்கு பெண்கள் செல்கின்றனர். 90 நாட்கள் வரை வேலை தரப்பட்டதாகவும் நாளொன்றில் 100 முதல் 130 வரை கூலி என எழுதப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டுக்கான கூலி இன்னும் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆறு பேர் சொந்தமாக வைத்துள்ள லாரி மற்றும் ட்ராக்டர் மூலம் தண்ணீர் மற்றும் மணல் தொழில் செய்கின்றனர். இவர்களது பெற்றோர் விவசாயத்தை கவனித்துக் கொள்கின்றனர். சகோதரர் ஒருவரின் இணையர் பகுதியின் அங்கன்வாடிப் பணியாளர்.
வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளில் 12க்கு 12 அறையில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை கீழ், ரூ.4000 வாடகை தந்து பிற மாநிலத் தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இவர்கள் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனம் அருகிலேயே உள்ளது. பிற மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வீடுகளின் நிலைமை இதுதான். அவர்களில் ஒருவர், எங்கள் மோசமான நிலைமைகளுக்கு மோடிதான் காரணம். இதை அவரிடம் சொல்லுங்கள் என்றார்.
ரேசன் கடை பணியாளர் ஒருவர் தனது கணவருக்கு சரியான வேலை இல்லை என்றும் கணவரின் பெற்றோர் விவசாயம் பார்ப்பதாகவும் சொன்னார். வாழ்க்கையில் முன்னேற்றம் என்று சொல்லிக் கொள்ள பெரிதாக எதுவும் இல்லை என்றும் இந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் நிரந்தர வேலை ஏதாவது கிடைத்தால் மாற்றம் வரலாம் என்றும் சொன்னார். அவரது குழந்தைகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். அவரது வீட்டில் இருந்து 100 மீ தொலைவில் அரசுப் பள்ளி உள்ளது.
இரண்டு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் இருந்த ஒரு சிறிய கடை வாசலில் ஆண்களும் பெண்களுமாய் மூத்தவர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசத் துவங்கியபோது அங்கு வந்த ஒருவர் சொன்ன விசயங்கள் அந்த கிராமத்தைப் பற்றிய ஒட்டு மொத்த பார்வை தருவதாக அமைந்திருந்தது.
முன்பு இருந்ததுபோன்ற வறுமை இப்போது இல்லை. ஆனால் நாங்கள் செல்வந்தர்களாகவும் ஆகிவிடவில்லை. வறுமை என்றால் என்ன? முன்புபோல் உண்ண உணவு கூட கிடைக்காமல் இருக்க வேண்டுமா? அப்படி ஒரு நிலைமை இன்று இல்லை. முன்பு வாரத்தில் ஒரு நாளில், பண்டிகை நாட்களில் இட்லி, வடை கிடைக்கும். இன்று தினமும் கிடைக்கும். இதனால் வறுமை போய்விட்டது என்று சொல்ல முடியுமா?
இங்கு பெரிய பெரிய தொழிற்சாலைகள் வந்துள்ளன. எங்கள் நிலங்களில்தான் அவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்று நாங்கள் அந்த நிலங்களுக்குள் செல்ல முடிவதில்லை. அங்கு அமைக்கப்பட்டு பல ஆயிரம் பேர் பணியாற்றும் ஆலைகளில் நிலம் கொடுத்த எங்கள் ஊர் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை. உள்ளூர்காரர்கள் என்று தெரிந்தவுடனேயே வேலை இல்லை என்று சொல்லிவிடுகின்றனர். வேலைதானே மிகவும் அவசியம். அது எங்களுக்கு கிடைப்பதில்லை.
இந்தப் பகுதியில் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், நிரந்தரத் தொழிலாளி என்று ஒருவர் கூட இல்லை. எல்லோருமே ஏதோ ஓர் ஒப்பந்த வேலைக்குத்தான் செல்கிறோம். நான் கூட இங்கு பக்கத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் காண்ட்ராக்ட் தொழிலாளிதான். இந்த நிறுவனங்களில் பெரிய எண்ணிக்கையில் பிற மாநில தொழிலாளர்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் வாடகைக்குத் தருவதில் 1000, 2000, 3000 என்று வருவது ஒரு வருமானமாக இருக்கிறது. பிற மாநில தொழிலாளர்களைத்தான் இந்த நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகிறார்கள். எங்களை வேலைக்கு எடுப்பதில்லை. எங்களுக்கு இந்த நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை வேண்டும்.
விவசாயம் கட்டுப்படியாவதில்லை. அதனால் கடன்தான் ஏறுகிறது. விவசாயத்தில் 40000 செலவு செய்து நான்கு மாதங்கள் உழைத்து பிறகு 10000 ரூபாய் பார்ப்பதை விட பக்கத்தில் இருக்கும் ஏதாவது நிறுவனத்தில் அதே நான்கு மாதங்கள் வேலை செய்தால் 40000 வந்துவிடும். அதனால் இங்கு விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் என்று யாரும் இல்லை. விவசாயமும் நடக்கிறது. விவசாயத்தால் பெரிய வருமானம் எதுவும் இல்லை. இங்கு சுற்றியுள்ள கிராமங்களான ஒரகடம், வடக்குப்பட்டு, எழுச்சூர் என பரந்த பகுதிகளில் ஆலைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தப் பகுதியில் நாங்கள் அனைவருமே கடன்காரர்கள்தான். வட்டி கட்டுகிறோம். வட்டிக்கு கடன் தருபவர்கள் சிலர் கூடுதல் வட்டி, வட்டிக்கு வட்டி என்று வசூல் செய்கின்றனர். குழந்தைகளின் படிப்பு பொறுத்தவரை, ஆங்கிலம் கற்றால், பிற்காலத்தில் பயன் என்பதால் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். இங்கு பக்கத்திலேயே அரசுப் பள்ளி உள்ளது. அங்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் எங்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில்தான் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். தனியார் பள்ளியில் சேர்ப்பதை கவுரவம் என்று பெற்றோர் கருதுகிறார்கள். அதிலும், ஒருவர் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்த்தால் பக்கத்து வீட்டில் இருப்பவர் அதையே செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இல்லை என்றால் அது கவுரவப் பிரச்சனையாகி விடுகிறது. இதற்கெல்லாம் நாங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. சரியான வேலையோ, வருமானமோ இல்லாததால் வீட்டு விசேசங்கள் நடத்த கடன்தான் வாங்குகிறோம். வட்டி கட்டுகிறோம். நிரந்தர வேலை இருந்தால்தான் எந்தப் பிரச்சனைக்கும் ஏதாவது தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் துன்பம்தான்.
அருகில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்றில் காண்ட்ராக்ட் சூபர்வைசராக வேலை செய்யும் ஒருவர் காண்ட்ராக்ட் இருக்கும் வரை வேலை இருக்கும் என்பதற்கு மேல் வேலை நிலைமைகளில் சொல்லிக் கொள்ளவோ உத்தரவாதமான எதிர்காலத்துக்கோ எதுவும் இல்லை என்றார். நட்டம் தரும் விவசாயத்தில் தமது பெற்றோர் ஈடுபடுவதாகவும் விவசாயத்தை நம்பி இருக்க முடியாது என்றும் சொன்னார். இணையர் வேலை எதுவும் செல்லவில்லை என்றும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவே சரியாக இருக்கும் என்றும் சொன்னார். இரண்டு குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார். தனது குழந்தைகள் ஆங்கிலம் படித்தால் முன்னேறி விடலாம் என்று நம்புகிறார்.
அருகில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் ஒருவர், என்ன கூட்டுறது, தொடைக்கறது, கழுவுறதுதான் என் வேலை. கம்பெனியில யாரும் மதிக்க மாட்டாங்க. கேவலமாத்தான் பேசுவாங்க என்றார். மகன்கள் இரண்டு பேருக்கு நல்ல வேலை இல்லை என்றார். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஒரு குவார்ட்டர் அடிப்பேன். மற்ற நாட்களிலும் குவார்ட்டர் அடிக்கும் அளவுக்கு காசில்லை. ஞாயிற்றுக் கிழமை கூட 7 மணிக்குதான் கடைக்குப் போவேன். காலையிலேயே குடித்தால் அடுத்தடுத்து குடிக்கத் தோன்றும். மாலையில் குடித்தால் அப்படியே தூங்கி விடலாம். மறுநாள் காலை வேலைக்குப் போய்விடலாம்.
அடுத்த வீட்டு வாசலில் இருந்த ஒருவர், உள்ளூர்காரர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் வேலை தர வேண்டும் என்றார். உள்ளூர்காரர்களுக்கு வேலை தந்தால் அவர்கள் என்ன செய்துவிடுவார்கள்? அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று கருதுவது முட்டாள்தனம். அவர்களும் வேலைக்குப் போவார்கள். வேலை செய்வார்கள். வருவார்கள். அவ்வளவுதானே. ஏன் உள்ளூர்காரர்கள் என்றால் பயப்பட வேண்டும்? இதனால் வட மாநிலத் தொழிலாளர்கள்தான் இங்கு பெரும்பாலும் வேலை செய்கிறார்கள். அவர்கள் எங்கள் வேலைகளை எடுத்துக் கொண்டார்கள் என்பதை விட எங்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதே சரி. விவசாயம் செய்கிறேன். கட்டுப்படியாகவில்லை. கடன்தான் மிஞ்சுகிறது. இப்படியே வாழ்ந்து முடித்துவிடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. கஷ்டமாகத்தான் இருக்கிறது. தொழில்நிறுவனங்கள் இங்கு வந்ததால் எங்களுக்கு பெரிய பயன் இல்லை. எங்கள் விவசாய நிலங்களை வாங்கிக் கொண்டார்கள். விவசாயம் கட்டுப் படியாகாமல் போனதால்தான் விவசாய நிலங்களையும் கொடுத்து விட்டோம். இப்போது விவசாயத்தை நம்பிப் பயனில்லை. இரண்டு மகன்களுக்கு நல்ல வேலை கிடைத்தால் போதும். இப்போது வேலை எதுவும் இல்லை. டிப்ளமோ படித்திருக்கிறார்கள். வேலை தேடுகிறார்கள். காண்ட்ராக்ட் வேலை எதாவது கிடைத்தால் செய்கிறார்கள். காண்ட்ராக்ட் இருந்தால் வேலை. இல்லையென்றால் இல்லை.
விவசாயம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு நான்கு மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்ய நிலத்தை விற்றிருக்கிறார்கள். ஆளுக்கு 25 சவரன் தங்கம், மற்ற சீர்களுடன் இரு சக்கர வாகனம் வாங்கித் தந்திருக்கிறார்கள். மற்ற இரண்டு மகள்களுக்கும் அதே போல் செய்ய வேண்டுமாம். மீண்டும் நிலம் விற்றுதான் இதையும் செய்வார்களாம். இப்போது தரை வாடகையில், அதாவது விவசாய நிலத்தை தொழில்நிறுவனங்களுக்கு வாடகைக்குத் தந்து வரும் வருமானத்தில் குடும்பம் நகர்கிறது. விவசாயம் செய்தால் நட்டம்தான், தரை வாடகையாவது உறுதியாக வரும், அதனால் நாங்கள் விவசாயம் செய்யவில்லை என்கிறார். இதில் எட்டு பேருக்கு பங்கு என்பதால் பெரிய வருமானம் இல்லை என்கிறார். நூறு நாள் வேலைத் திட்டத்தில் 95 நாட்கள் வேலை செய்ததாகவும் நாளொன்றில் 100 முதல் 130 வரை கூலி என்று சொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் கூலி வங்கிக்கு வரவில்லை என்றும் சொன்னார். பிற மாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்கு இருப்பதால் கிராமம் நாசமாகி விட்டது என்கிறார்.
கண்டிகையில் ட்ராக்டர் வைத்திருக்கும் ஒருவர், விவசாயம் நட்டம்தான், விவசாயத்துக்கு ட்ராக்டரை பயன்படுத்துவதில்லை, தண்ணீர் விற்பனைக்கே பயன்படுத்துகிறேன் என்றார்.
நெடுஞ்சாலை ஓரத்தில் தகர கொட்டகைகளில் பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். அப்போல்லோ டயர்ஸ் நிறுவனம் அவர்களை அங்கு தங்க வைத்துள்ளது. தரை வாடகைக்கு எடுக்கப்பட்ட விவசாய நிலம் அது. தகர கொட்டகைகள் தவிர வேறு எந்த அடிப்படை வசதியும் இல்லை. தகர கூரை கீழ் மண் தரை உள்ளது. தூசு பறந்துகொண்டே இருக்கிறது. அதில் வாசம் செய்கிறார்கள். ஓராண்டுக்கும் மேல் அங்கு குடியிருக்கிறார்களாம். சிலர் குடும்பங்களுடன் தங்கியிருக்கிறார்கள். பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று அவர்கள் பார்வை கேட் கிறது. தகரக் கொட்டகைகளுக்கு அருகில் உள்ள சிறுகடை ஒன்றை நடத்தும் பெண் சொன்ன தகவல்கள் இவை. அந்தப் பெண் கண்டிகையைச் சேர்ந்தவர். அய்ந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். சொந்தமாக இந்த வியாபாரம் செய்கிறார். பிற மாநில தொழிலாளர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால் தொழில் நடத்தும் அளவுக்கு இந்தி கற்றுக் கொண்டுவிட்டார். யாரும் திணிக்கவில்லை.
பண்ருட்டி கிராமம்
பண்ருட்டி கிராமம் நெடுஞ்சாலையோரத்தில் உள்ளது. தலித்துகள் இங்கு குடியிருக்கிறார்கள். கிராமத்தின் இன்னொரு பகுதி அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் வரை நீள்கிறது. 
ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் வாக்காளர் ஒருவருக்கு ரூ.10,000 தர வேட்பாளர்கள் தயாராம்.
இங்குள்ள விவசாய நிலங்களில் விவசாயத்துக்கு கிடைக்கும் கட்டணமில்லா மின்சா ரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வியாபாரம் செய்வதாக உள்ளூர் இளைஞர்கள் சொல்கின்றனர். பகுதியில் ட்ராக்டர்கள், லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த வியாபாரம் தவிர, ஊராட்சிக்குள் அடுக்ககம் கட்டியிருக்கும் அருண் எக்சல்லோ நிறுவனம், அங்கு ஆழ்குழாய் கிணறு தோண்டி, மாத்தூர் ஊராட்சியில் இருக்கும் தனது மற்றொரு பெரிய அடுக்ககத்தின் அனைத்து பயன்பாடுகளுக்கும், நிலத்தடியில் எட்டு அங்குல குழாய் பதித்து தண்ணீர் எடுத்துச் செல்கிறது. நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதாகவும் 60 அடி ஆழத்திலேயே தண்ணீர் வந்த இடத்தில் 300 அடிக்கு மேல் ஆழ்குழாய் போட்டால்தான் தண்ணீர் வருகிறது என்றும் இளைஞர்கள் சொல்கின்றனர். ஊராட்சி முடிவுறுகிற இடத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆலைக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாகவும் சட்டவிரோதமாக எரிக்கப்படுவதாகவும் அதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதாகவும் இளைஞர்கள் சிலர் சொல்கின்றனர். கழிவுகள் கொட்டப்படும் இடம், விவசாய நிலத்தில் இருந்து விற்பனைக்காக தண்ணீர் எடுக்கப்படும் இடங்கள், அடுக்ககத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் இடம் ஆகியவற்றை ஆய்வுக் குழு பார்வையிட்டது.
2 ஏக்கர், 3 ஏக்கர் என 50 ஏக்கர் அளவுக்கு விவசாயம் நடக்கிறது. அது பிரதான வருமானத்துக்கு உத்தரவாதம் தருவதில்லை. நட்டம்தான் ஏற்படுகிறது. அருகில் உள்ள தொழில் நிறுவனங்களில் நிரந்தரமற்ற வேலை செய்கிறார்கள். கண்டிகை போலவே இங்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புதான் முக்கிய பிரச்சனையாக பகுதி மக்கள் கருதுகின்றனர். குப்பை கொட்டுவது, எரிப்பது, தண்ணீர் எடுப்பது ஆகியவற்றை மக்கள் இன்னும் பிரச்சனைகளாக உணரவில்லை. அருகில் உள்ள தொழில்நிறுவனங்களில் நிரந்தர மற்ற பணிகளில் இருக்கிற, விழிப்புணர்வு பெற்ற இளைஞர்கள் சிலர்தான் இந்த நடைமுறைகளின் ஆபத்தை உணர்ந்துள்ளனர். அவர்கள் தலையீடு செய்ய முயற்சி செய்கின்றனர். உள்ளூர் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர். மற்றவர்கள் ஆபத்தை உணர்ந்தாலும் அதை பெரிய பிரச்சனையாக கருதவில்லை. உள்ளூர் சக்திகளே அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவற்றுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு பிரிவினரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகளும் வேலை வாய்ப்பும்தான் பெரிய பிரச்சனைகளாக அவர்கள் உணர்கிறார்கள். எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம், வேலை வாய்ப்பு இருந்தால், நாங்களே அவற்றை வாங்கிக் கொள்வோம் என்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் உள்ளன. சொச்சு பாரத் கழிப்பறைகள் சில வீடுகளில் உள்ளன. கழிப்பறைகள் இல்லாத வீடுகள் உள்ளன. நீர்தொட்டிகள் கட்டி நீர் நிரப்பி, சமையலறை, கழிப்பறைகள் குழாய்கள் மூலம் தண்ணீர் பயன்படுத்தும் கட்டுமானம் கொண்ட வீடுகள் இல்லாததால், வீட்டுக்கு வீடு குழாய் இணைப்பு இருந்தும், குழாயில் பிடித்து பயன்படுத்தும் நிலை உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை என்ற நிலை அவர்களைப் பொறுத்தவரை இல்லை. மாநகரப் பேருந்து ஓட்டுநராக இருக்கும் ஒருவர், உள்ளூர் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்கிறார். ஆனால், விளையாட்டுத் திடல், பேருந்து நிறுத்தம் வர ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார். அவரது சகோதரர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். மீண்டும் போட்டியிட உள்ளார். தண்ணீர் எடுப்பது இங்கு பிழைப்புக்காக செய்கிறார்கள், அவர்கள் நிலத்தில் அவர்கள் எடுக்கிறார்கள், விவசாயத்தால் பயனில்லை எனும்போது வேறு என்ன செய்வது என்கிறார். அவரைப் பொறுத்தவரை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஒரு பெரிய பிரச்சனை. அதற்கு மேல் அவருக்குப் பிரச்சனையாகப்படுவது பகுதியில் அங்காங்கே ஓடுகிற சிறுசிறு சாக்கடைகள். இதற்கு பகுதி மக்கள்தான் காரணம் என்கிறார். 
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து இந்தப் பகுதியில் உள்ள ஆலைகளில் வேலை செய்யும் பெண்கள் சிலர் பண்ருட்டியில் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். ஞாயிறு என்பதால் ஒருவரும் வீட்டில் இல்லை. சொந்த ஊர், சந்தை என வெளியே சென்றிருந்தனர்.
ஊராட்சி மக்கள் சொல்லியுள்ள விசயங்களில் இருந்து பின்வரும் முடிவுகளுக்கு வர முடியும்.
கட்டுப்படியாகும் விவசாயத்துக்கு வழி செய்ய வேண்டும், நிலம் வேண்டும் என்று பகுதி மக்கள் மத்தியில் இருந்து எந்தக் கருத்தும் வரவில்லை. மாறாக, வேலை நிரந்தரமாக வேண்டும், அருகமை தொழில் நிறுவனங்களில் வேலை வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். நிலத்தின் மீது பற்று, விவசாயத்தின் மீது பற்று, நட்டமானாலும் விவசாயம் என்ற விவசாய சமூகத்தின் மனநிலை போய், நகர்ப்புற எதிர்ப்பார்ப்புகள் வந்துவிட்டதை தெரிந்துகொள்ள முடிந்தது.
நூறு நாள் வேலைத் திட்டம் கல்வியறிவு இல்லாத பெண்களுக்கான வேலை என்பதாக இருக்கிறது. குறைந்தபட்ச கூலி பற்றிய விழிப்புணர்வு இல்லை. கூடுதல் நாட்கள் வேலை, கூடுதல் கூலி கிடைத்தால் நல்லது என்று மட்டும் சொல்கிறார்கள். நூறு நாள் வேலை பிரச்சனை, கிட்டத்தட்ட பெண்கள், முதியோர் பிரச்சனை என்பதாக உள்ளது. பெரிய கவனம் பெறும் பிரச்சனையாக இல்லை.
மிகவும் மோசமான வாழ்நிலைமைகளில் ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் வாழப் பழகிவிடுவதாக எங்கல்ஸ் சொன்னார்.
பண்ருட்டி ஊராட்சி மக்களுக்கு சொந்த வீடுகள் உள்ளன. தலித்துகளுக்கு தொகுப்பு வீடுகள், பிற சாதியினருக்கு சொந்த வீடுகள் உள்ளன. மின்வசதி, குடிநீர் வசதி உள்ளது. இதற்கு மேல் வேலை வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
தொலைக்காட்சி, அறிதிறன்பேசி எங்கும் நிறைந்துள்ளன. துவக்கப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீடு தவிர மற்ற எல்லா வீடுகளிலும் இருசக்கர வாகனங்கள் உள்ளன. வசதி குறைவான வீடுகள், வடிகால் குழாய்கள் இல்லாததால், சாக்கடை தேங்கும் சிமென்ட் சாலைகள், வீட்டுக்கு வெளியில் இருக்கும் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று பயன்படுத்துவது, கழிப்பறையின்மை என்ற நிலைமைகளில் அவர்கள் வாழப் பழகி விட்டுள்ளதாகத் தெரிகிறது. நூறு நாள் வேலைத் திட்ட குறை கூலி, வேலையின்மை ஆகியவையும் பிரச்சனை என்று அவர்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது. அருகமை தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு நிரந்தரமாகி விட்டால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
நூறு நாள் வேலை திட்ட உரிமைகளை முன் நிறுத்தி பெண்களை அமைப்பாக்க முயற்சி செய்யலாம். இதற்கும் உள்ளூர் மட்டத்திலேயே எதிர்ப்புகள் வர வாய்ப்புள்ளது.
அவர்களது உடனடி கோரிக்கையான வேலை வாய்ப்பு பொறுத்தவரை, மோடி அரசு மனது வைக்க வேண்டும்; அல்லது மோடி அரசு மாற வேண்டும்.
சாதி தாண்டி இளைஞர்கள் இணைந்து அமைப்பாகி மக்கள் பிரச்சனைகளில் தலையீடு செய்கிறார்கள்.
இந்த ஊராட்சியின் எதிர்கால நம்பிக்கை இந்த இளைஞர்களாக இருக்கக் கூடும்.

ஊராட்சி மக்கள் தந்த விவசாய நிலத்தில் 45 தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளதாக பகுதி மக்கள் சொல்கின்றனர். அவர்கள் தந்த பட்டியல். (சில நிறுவனங்களின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை).
நோக்கியா சீமென்ஸ்
டானா இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஏஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்
மெக்கின்ஸ் பிரைவேட் லிமிடெட்
பெர்பக்ட் எக்விப்மென்ட்ஸ் (2 யூனிட்டுகள்)
ஆனந்த் என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் யூனிட் 2
சேன்டெக்ஸ்
சேம்சங் மேனுபேக்சரிங் பிரைவேட் லிமிடெட்
ஏர் ஃப்ளோ இந்தியா பிரைவேட் லிமிடெட்
சித்திக் பிளாஸ்டிக்ஸ்
சொராரியா கம்பெனி
ஜிகே பேக்கேஜிங்
எஸ்பி இன்டஸ்ட்ரீஸ்
நிப்பான் வேர்ஹவுஸ்
டிஇஎஸ்(எம்)
பிஒய்டி
அலிசான்
கொமாட்சு
மேக்னம் குளோதிங்
புல்லட் லாஜிஸ்டிக்ஸ்
இன்டோஸ்பேஸ் லாஜிஸ்டிக்ஸ் பார்க் (இதற்குள் ரெனோ நிசான், ராயல் என்பீல்டு, ஹுண்டாய், அலிசான், அப்போல்லோ உள்ளிட்ட 18 நிறுவனங்களின் கிட்டங்கி கள் உள்ளன).
தங்கள் விவசாய நிலங்களில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஊராட்சி மக்கள் வேலை செய்கின்றனர். 19 பெண்கள் உட்பட 113 பேர் இந்த நிறுவனங்களில் இது போன்ற வேலைகளில் உள்ளனர். நிர்வாகப் பணியாளர்களாக 7 பேரும் நிரந்தரப் பணியாளர்களாக 4 பேரும் உள்ளனர்.

எங்களுக்கு லீவு வேண்டும்

கண்டிகையில் தெருவின் கடைசியில் உள்ள பெருமாள் கோவிலுக்குப் பின்புறம் உள்ள காய்ந்து போன புல்வெளியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். 11 பேருக்கும் குறைவான வர்கள் எப்படி விளையாடுவீர்கள் என்று கேட்க, அவன் போலிங் போடுவான் நான் அடிப்பேன், அப்புறம் மாற்றி அடிப்போம் என்று ஒரு சிறுவன் சொன்னான். அங்கிருந்த எட்டு பேரில் ஒரு சிறுவன் தவிர மற்ற அனைவரும் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனும் அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளியில் சேர்ந்து விடுவானாம். தனியார் பள்ளி பிடித்துள்ளதா என்று கேட்டபோது, எங்களை அதில்தான் சேர்த்து விட்டார்கள், படிக்கிறோம், எங்களுக்கு லீவு வேண்டும், லீவே விட மாட்டேன் என்கிறார்கள், சனிக்கிழமை கூட லீவு இல்லை, ஞாயிற்றுக் கிழமை கூட வரச் சொல்கிறார்கள், இன்று கூட எங்களுக்கு பள்ளி உள்ளது, நாங்கள்தான் போகவில்லை என்றார்கள்.

Search