COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, September 16, 2014

சொற்கொல்லர் உரைகளில் பின்னுக்குத் தள்ளப்படும் பிரச்சனைகள்

முதலாளித்துவம் தன்னைப் போன்ற ஒரு உலகைப் படைத்திடுகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்லப்படுகிறது. சுற்றி இருக்கும் எதுவும் அதிலிருந்து தப்பித்துவிட முடிவதில்லை. முதலாளித்துவத்தைத் தாங்கிப் பிடிப்பவர்கள், சுற்றியிருக்கும் அனைத்தும் தன்னைப் பற்றியே பேச வேண்டும், எங்கும் தன் குரலே கேட்க வேண்டும் என்ற இயல்பு உடையவர்களாக இருக்கக் கூடும். ஹிட்லர் அப்படி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று நாம் அந்த இயல்பை மோடியில் காண முடிகிறது. நார்சிசம் என்று ஆங்கிலத்தில் சொல் வார்கள். தமிழில் தற்காதல் என்று சொல்லலாம்.

ஹிட்லர், மோடி என அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுத்தவரை இது வெறும் குண இயல்பு மட்டுமல்ல. ஆளுகை முறை. தனது கருத்துப் பரப்பல் கடமையில் சற்றும் தளராமல், இடைவெளி விடாமல் ஈடுபடும் இயல்பு. இந்த இயல்பில் இருந்து, எதிர்கால இந்தியாவிடம் தன் கருத்தை விற்கும் அல்லது திணிக்கும் முயற்சியில் 2014 ஆசிரியர் தினத்தை தன் தினம் ஆக்கிக்கொண்டார் மோடி.

பள்ளிகளுக்கு மோடி உரையை ஒளி, ஒலி பரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எங்கும் மோடி. எதிலும் மோடி. இது, திணிப்பு என்ற எதிர்ப்புக்கள் எழுந்த பிறகு, பள்ளிக்கூடங்கள் முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. நடைமுறையில் திணிப்பு இருந்தது. ராஞ்சியில் அரசுப் பள்ளி ஒன்றின் வாயிற் கதவுகளை மூடிவிட்டார்களாம். மூன்று மணிக்குத் துவங்கிய ஒன்றரை மணி நேர மோடி உரை முடிந்த பிறகே கதவுகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்களாம். 18 லட்சம் பள்ளிகளின் 1.2 கோடி மாணவர்கள் மோடி பேசியதை கேட்டனர் என சொல்லப்படுகிறது.

கற்பித்தல் வாழ்க்கை முறை, கற்றல், ஜப்பானிய கல்வி முறை என பிரசங்கம் (பிரச்சாரம்?) செய்து மோடி ஆசிரியர் தினத்தை ஆக்கிரமித்தார்.

 சொற்கொல்லர் (சொற்களால் கொல்பவரா?) புறப்பட்டுவிட்டதாக, மோடி ஆதரவு ஊடகங்கள் வழக்கம் போல் ஊதிப் பெருக்கிக் காட்டின.

சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மோடி தலையிடப் பார்க்கிறார். மக்கள் பிரச்சனைகளில் பிரதமர் தலையிட வேண்டும்தான். தலையீடு எந்த அரங்கில் நடக்கிறது, எப்படிப்பட்டது, என்ன நோக்கம் கொண்டது என்பது கேள்வி.

தனது ஒன்றரை மணி நேர ஆசிரியர் தின உரையில் ஆசிரியர்கள் பற்றிப் பேசுவதை விட மாணவர்களைப் பற்றியே கூடுதலாக மோடி பேசினார். மாணவர்கள் பற்றி பேசியதிலும் கல்வி வர்த்தகமயத்தின் நாசகர விளைவுகளால் அவர்கள் மதிப்பெண் பெறுகிற எந்திரங்களாகி விட்டிருப்பதைப் பற்றியோ, காசுக்கு மட்டும் கல்வி என்றானதால், கல்வி கற்க முடியாமல் போய்விடும் பெரும்பான்மை குழந்தைகள் பற்றியோ அவர் பேசவில்லை. அதிகபட்சம் பெண் கல்வி, அதை உறுதிப்படுத்த பள்ளிகள் தோறும் கழிப்பறைகள் பற்றி பேசினார். பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவது கழிப்பறை இல்லாததால்தான் என்று நம்மை நம்பச் சொல்கிறார். நிஜக் காரணமான கல்வி தனியார்மயத்தை தப்பிக்கச் செய்கிறார்.

ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் பற்றி பேசுவதில் அவருக்கு, அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள தடைகள் உள்ளன. ஆசிரியர்கள் பற்றி பேசினால், நாடு முழுவதும் மிகக் குறை வான சம்பளத்தில் கற்றல் பணியில் இருக்கிற பல லட்சக்கணக்கான துணை ஆசிரியர்கள், அவர்கள் பணிநிலைமைகள், வாழ்நிலைமைகள் பற்றி அவர் பேச வேண்டியிருக்கும்.

மாதக் கணக்கில் சம்பளமே கிடைக்காமல், ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துணை ஆசிரி யர்களாக பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகம். அதனால், ஆசிரியர்கள் பற்றிப் பேசு வதையே தவிர்த்துவிட்டதோடு, ஆசிரியர் பணிக்கு தன்னார்வலர்கள் வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கற்பித்தல் தேச நிர்மாணத் துக்கு தேவையான மக்கள் இயக்கமாக மாற, பொறியாளர்கள், மருத்துவர்கள் என கற்றோர் அனைவரும் வகுப்புகள் நடத்த வேண்டும், ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று பாடம் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

(நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே உட்கார்ந்திருப்பதில்லை. வாழ வழிதேடுவதில் குறைந்தது 14 மணி நேரமாவது வீட்டுக்கு வெளியில்தான் செலவு செய்கிறார்கள். வீடு திரும்பி உண்டு, உறங்கி, பின் எழுந்து மீண்டும் பிழைப்பு தேடி வெளியே செல்லத்தான் அவர் களுக்கு நேரமிருக்கிறது. இன்னும் கூடுதல் சுமை தாளாது). துணை ஆசிரியர்களுக்கு, அந்தக் குறைவான சம்பளம் கூட ஏன் தர வேண்டும், அவர்களை ஒரேயடியாக விரட்டி விடலாம் என மோடி கருதுகிறார்.

ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்கிறார் மோடி. நல்லது. ஆசிரியர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள். தங்கள் பணியில் பெருமிதம் கொள்கிற ஆசிரியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். கற்றல் பணியோடு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல்கள் நடத்துவது என வேறுவேறு வேலைகள் காலம் காலமாக அவர்கள் மீது சுமத்தப்பட்டும் அந்த கடமைகளையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டு, கூடவே கற்றல் பணியையும் விடாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவசத் திட்டங்கள் அனைத்தும் ஆசிரியர்கள் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. அக்கம்பக்கமாக அதே பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வேறு விதமான சம்பளம் பெறுவதைப் பார்க்கும் துணை ஆசிரி யர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றத்தான் செய்கிறார்கள். மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெறும்போது, ஆசிரியர்களை குற்றம் சொல்ல முந்திக்கொண்டு வருபவர்கள், ஆசிரியர்கள் மீது கற்பித்தல் அல்லாத பணிகள் அளவற்று திணிக்கப்படுவது பற்றி ஒருபோதும் வாய்திறப்பதில்லை. காணுமிடமெங்கும் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஆட்சியாளர்கள்தானே தவிர, ஆசிரியர்கள் அல்ல.

ஜப்பானில் மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பாரம்பரியம் இருப்பதாக மோடி சொன்னார். அதுபோல், ஏன் இந்தியாவிலும் நாம் ஏன் செய்யக் கூடாது என்று கேட்டார். இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் வகுப்பறைகளும் கழிப்பறைகளும் இல்லை. தனியார் பள்ளிகளில் கூட கழிப்பறை பிரச்சனைதான். இருந்தால் சுத்தம் செய்ய வேண்டும்தான்.

கழிப்பறைகள் இருக்கிற சில அரசுப் பள்ளிகளில் அவற்றை சுத்தம் செய்ய தலித் மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதற்கு இட்டுச் சென்றுள்ள இந்திய, இந்துத்துவ பாரம்பரியம் பற்றி பெருமை கொண்டவர்தானே மோடி? மாணவர்களும், இருக்கிற வேலைகளுக்கும் கூடுதலாக ஆசிரியர் களும் துப்புரவுப் பணிகளும் செய்து கொள்ளுங் கள் என்கிறார் மோடி.

(மாணவர்களும் ஆசிரியர்களும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுவிட்டால், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துப்புரவு தொழி லாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டியிருக்காது). பாஜக அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அவர் பெருமைப்பட்டுக்கொண்ட அந்த ஜப்பானிய முறையை அவர் முதலில் அமல்படுத்த வேண்டும்.

உலகெங்கும் ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கிறது, நாம் ஆசிரியர்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார். இன்றைய நிலைமைகளிலேயே, 12 லட்சம் ஆசிரியர்கள் இந்தியாவி லேயே தேவை. அதற்கு உருப்படியாக என்னத் திட்டம் வைத்திருக்கிறார் என்று மோடி தனது உரையில் சொல்லவில்லை. ஆசிரியர் பணிக்கு யாரும் முன்வருவதில்லை என்று மோடி ஒப்புக் கொள்கிறார் என்றால், அவர்கள் நிலைமைகள் மோசமாக உள்ளது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். கல்வி சிறந்த தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை மைகள் திருப்தி தருவதாக இல்லை. ஒப்பீட்டுரீதியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் இது நிலைமை என்றால் மற்ற மாநிலங்கள் இந்த விசயத்தில் இன்னும் பின்தங்கி இருக்கத் தான் வாய்ப்பு உள்ளது.

மோடியின் ஆசிரியர் தின உரை, கல்வி பற்றி, இன்றைய சமூகத்தில் மேலோங்கியுள்ள குட்டி முதலாளித்துவ கருத்துக்களின் கோர்வை யான தொகுப்பு. இந்தக் கருத்துக்களில் ஒளிந்து கொண்டு, கல்வி பற்றிய தனது பொறுப்பில் இருந்து நழுவி விட மோடி முயற்சி செய்கிறார்.
எப்படியாயினும், 2024ல் பிரதமர் பதவி யில் அவர் இருக்க மாட்டார் என்று மோடி உறுதியாகச் சொன்னார். அவர் அய்க்கிய அமெ ரிக்க நாடாளுமன்ற முறையுடன் ஒப்பிட்டு அப்படிச் சொல்லியிருக்கலாம். அவ்வளவு காலம் இந்திய மக்கள் விட்டுவைக்க மாட் டார்கள். தங்கள் கற்பித்தல் பணியில் குறை வைக்காமல் மோடி கற்க வேண்டிய பாடத்தை அவருக்கு கற்பிப்பார்கள்.

சட்டிஸ்கரின் பஸ்தாரில் உள்ள ஒரு பள்ளியின் மாணவி, மோடியுடனான ‘நேரடி ஊடாடலில்’ கேட்ட ஒரு கேள்வி, பாஜக முதலமைச்சர் ராமன் சிங்கை புகழ மோடிக்கு ஒரு வாய்ப்பு அளித்தது. ‘கல்வி பற்றிய கேள்வியா? அதுவும் மாவோயிஸ்டுகளால் ஏராளமாக ரத்தம் ஓடும் பூமியில் இருந்தா?’ என்று கேட்டு மோடி அந்த மாணவியை பாராட்டினார். பழங்குடி மக்களின் அறுவடை கால விழாக்களின் மீது மத்திய ரிசர்வ் படை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்கள் சிந்திய ரத்தம் பற்றி மோடி பேசவில்லை. 2012ல் சர்சேகுடாவில் நடந்த படுகொலையில், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த 15 வயது காகா ராகுல் மற்றும் மத்கம் ராம்விலாஸ் என்ற இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் ‘மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரைக் குத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். 12 வயதே ஆன காகா சரஸ்வதியும் கொல்லப்பட்டார். அதே பகுதியில், அரசால் நடத்தப் படும் பள்ளிகளில் பழங்குடி மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டபோது, ‘நட்சத்திரங்கள் சரியில்லாததால்’ அது நடந்தது என்று சட்டிஸ்கர் உள்துறை அமைச்சர் சொன்னார். இந்த பாலியல் வன்முறை பற்றியும் மோடி பேசவில்லை. எம்எல் அப்டேட், 2014 செப்டம்பர் 09 – 15

Search