இககமாவின் வங்க வழி என்ற தற்கொலை பாதை பற்றிய பிரதிபலிப்புகள்
அரசியல் பார்வையாளர்
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1962 இந்திய - சீனப் போர், நேருவின் மறைவு, 60களின் நடுப்பகுதியில் இருந்த கடுமையான பொருளாதார நெருக்கடி என்ற பின்னணியில் இந்தியா முழுவதும், காங்கிரஸ் அதன் முதல் பெரிய சரிவை சந்தித்தபோது, மேற்குவங்கத்தில் காங்கிரசில் இருந்து பிரிந்த வங்க காங் கிரஸ், மேற்குவங்கத்தில் இககமாவின் தற்காலிக செயல்தந்திர கூட்டாளியானது.
மேற்கு வங்கத்தில், முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தபோது, வங்க காங்கிரஸ் தலைவர் அஜய் முகர்ஜி தலைமையிலான மாநில அரசாங்கத்தில் ஜோதி பாசு துணை முதலமைச்சரானார். அப்போது வளர்ந்து வந்துகொண்டிருந்த இககமா, காங்கிரசில் இருந்து பிரிந்த கட்சியுடன் மேற்கொண்ட செயல்தந்திர கூட்டால் ஆதாயம் அடைந்தது; இது பத்து ஆண்டுகள் கழித்து ஜோதி பாசுவை முதலமைச்சராகக் கொண்ட இககமா தலைமையிலான ஆட்சி உருவாகவும் பின்னர் உறுதிப்படவும் இட்டுச் சென்றது; வரலாற்றின் விந்தையான அதிர்வில், முப்பது ஆண்டுகள் கழித்து, காங்கிரசில் இருந்து பிரிந்த மற்றொரு கட்சியால் இககமா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.
மேற்கு வங்கத்தில், முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தபோது, வங்க காங்கிரஸ் தலைவர் அஜய் முகர்ஜி தலைமையிலான மாநில அரசாங்கத்தில் ஜோதி பாசு துணை முதலமைச்சரானார். அப்போது வளர்ந்து வந்துகொண்டிருந்த இககமா, காங்கிரசில் இருந்து பிரிந்த கட்சியுடன் மேற்கொண்ட செயல்தந்திர கூட்டால் ஆதாயம் அடைந்தது; இது பத்து ஆண்டுகள் கழித்து ஜோதி பாசுவை முதலமைச்சராகக் கொண்ட இககமா தலைமையிலான ஆட்சி உருவாகவும் பின்னர் உறுதிப்படவும் இட்டுச் சென்றது; வரலாற்றின் விந்தையான அதிர்வில், முப்பது ஆண்டுகள் கழித்து, காங்கிரசில் இருந்து பிரிந்த மற்றொரு கட்சியால் இககமா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.
இந்த காலகட்டத்தில் இககமாவில் நடந்த மாற்றங்கள் மேலும் குறிப்பிடத்தக்க தன்மை கொண்டவை. பல பத்தாண்டுகால தொடர்ச்சியான ஆட்சி, மக்களவையிலும் மாநிலங்களவை யிலும் உறுப்பினர்கள், பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் கொண்ட கட்சி அமைப்பின் வெகுமக்கள் அமைப்புகளின் மிகப்பரந்த வலைப்பின்னல் ஆகியவை கொண்ட மேற்குவங்க இககமா, இககமாவின் பிற மாநில அமைப்புகளை விடப் பெரியதானதாக, அவற்றின் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கொண்டதாக இருந்தது; ஆட்சி அதிகாரத்தை மய்யமாகக் கொண்ட ‘வங்க வழியின்’ காரியசாத்தியவாதமும் சந்தர்ப்பவாதமும் மொத்த கட்சி மீதும் நிழலாகப் படர்ந்தது. ஆயினும் வங்க வழியை மாற்ற கட்சிக்கு அவ்வப்போது வலுவான தருணங்களும் உருவாயின; மத்தியில் காங்கிரஸ் ஆதரவு கொண்ட அய்க்கிய முன்னணியில் ஜோதி பாசு பிரதமராக வந்த வாய்ப்பு இககமாவின் மத்திய கமிட்டியால் நிராகரிக்கப்பட்டதும் அதற்குப் பிறகு அய்முகூவின் முதல் ஆட்சி காலத்தில் இந்திய அய்க்கிய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை அடுத்து, அதற்கு அளிக்கப்பட்ட ஆதரவை விலக்கிக் கொண்டதும் இககமாவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சோம்நாத் சேட்டர்ஜி, கட்சியின் முடிவுக்கேற்ப அவைத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதும் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் உருவான அது போன்ற குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகள் ஆகும்.
ஆனால், மேற்கு வங்கத்தில் மேலும் பலவீனமடைந்துள்ள இககமா, பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த கட்சியின் வலுவான இருத்தலின் மங்கிய நிழலாக மட்டுமே இருக்கும் இககமா, இன்னும் வினோதமாக, கட்சியின் மய்ய அரசியல் வழி மீதும் அதன் அமலாக்கம் மீதும், கூடுதல் அழுத்தம் தர முடிகிறது. காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது மட்டுமின்றி, மத்திய கமிட்டியில் தேர்தலுக்குப் பின்பு நடந்த விவாதங்களையும் சீர்குலைக்க மேற்குவங்கத் தலைமையால் முடிகிறது. மேற்குவங்க தேர்தல் கூட்டணி மய்ய வழியின், முடிவின் மீறல் என்று கண்ணுக்குத் தெரிந்ததைச் சொன்னதற்காக, ஒரு மத்திய கமிட்டி உறுப்பினர் கட்சியில் இருந்து வெளியேற நேர்ந்தது. ‘வங்க வழியின்’ மேலாதிக்கம் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது.
மேற்குவங்கத்தில் கட்சியின் தொடரும் வழித்தடமாக இந்த வங்கவழியை மத்திய கமிட்டி முழுவதுமாக அங்கீகரிக்க வேண்டும் என, துணிவு பெற்ற மேற்குவங்க மாநிலக் கமிட்டி சொல்கிறது. இககமாவின் பிரபலமான அறிவாளிப் பிரிவினர் வங்க தாழ்வாரத்தைப் பாதுகாக்க ஒன்று சேர்ந்துகொண்டு, வங்க வழியை நாடு தழுவிய வழியாக கட்சி திறன்மிக்க விதத்தில் பின்பற்ற வேண்டும் என்கின்றனர். பாஜகவை, அதன் இந்துத்துவ பாசிச தாக்குதலை எதிர்கொள்வது என்ற பெயரில், நவதாராளவாதத்தை அதன் குறிப் பிட்ட ஆதரவாளர்களிடம், முகவர்களிடம் இருந்து பிரித்து நிறுத்துவது என்ற பெயரில், நவதாராளவாதத்துக்கு எதிரான போராட்டத்தை, மக்கள் மீது நவதாராளவாதக் கொள்கைகளைத் திணிக்கும் குறிப்பிட்ட அரசாங்கங்களுக்கு எதிரான, கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்றும், முதலில், பிரபாத் பட்நாயக் சொன்னார். இப்போது இர்பான் ஹபீப், காங்கிரசுடன் பாசிச எதிர்ப்பு கூட்டணி அமைக்க பரிந்துரை செய்கிறார்; மேற்குவங்கத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணி பாஜகவை விட, திரிணாமூலுக்கு எதிரானது என்பதையும், அது மேற்குவங்கத்தில் பாஜகவின் அரசியல் வெளியை விரிவாக்கியிருக்கிறது என்பதையும் பேரானந்தமாக மறந்துவிட்டார்.
மேற்குவங்கத்தில் நவதாராளவாதக் கொள்கைகள் முன் கட்சி சரணடைந்ததை கேள்விக்குள்ளாக்கத் தவறி, மறுத்தபோதே, சிங்கூர் - நந்திகிராம் வெடிப்புக்குப் பிறகும் அமைதி காத்தபோதே, இககமா அறிவாளிகள் பலரது நெருக்கடி துவங்கிவிட்டது. அப்போது இககமா வலுவானதாகவே இருந்தது; மத்தியில் பாஜக அப்போதுதான் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருந்தது; குஜராத் மனிதப் படுகொலையில் மய்யப் பாத்திரமாற்றியதற்காக மோடி பரவலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். உண்மையில் இந்தக் கட்டத்தில் தலையிட இககமா மய்யத் தலைமை தவறியதுதான், அறிவாளிகள் உருவாக்கியதை விடக் கூடுதல் சேதத்தை உருவாக்கியது. மேற்குவங்கத்தில் கட்சி ஆட்சியில் இருந்ததால், இககமாவின் மய்யத் தலைமை இதைக் காணத் தவறியது; அல்லது, வர்க்கப் போராட்டத்தின் சமகால மாதிரியாக நவதாராளவாத ‘வளர்ச்சியை’ முன்னிறுத்தியது; சிங்கூர் மாதிரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை லுட்டைட்டுகள் என்றும் வளர்ச்சியின் எதிரிகள் என்றும் பழி சொன்னது. மவுனம் காத்த, உடந்தையாக இருந்த அந்தத் தருணத்தில் இருந்து, சரணாகதி அடைந்த தருணம் வரை, அனைத்தும் ஒரு சீரான தர்க்கரீதியான முன்னேறும் தொடர்நிகழ்வாக இருந்தன.
பாஜகவால் எழுந்துள்ள பாசிச ஆபத்தையும் எல்லா விதங்களிலும் அதை எதிர்கொண்டு வீழ்த்தும் தேவையையும் இர்பான் ஹபீப் முன்னிறுத்துவதில் நிச்சயம் தவறேதும் இல்லை. ஆனால், ஒரு பாசிச எதிர்ப்பு மகாகூட்டணியின் நங்கூரமாக காங்கிரஸ் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை நிச்சயம் தவறானது. காங்கிரசின் அரசியல் வர்க்க இயல்பை சற்று விலக்கிவிட்டு பார்த்தால் கூட, கடந்த முப்பது ஆண்டுகளில் பாஜகவின் மோசமான காவியை விட சற்று சாயம் குறைந்ததாகவே இருந்தது; 1984 நவம்பரில் நடந்த மக்களவை தேர்தல் களில் முதல் முதலாக போட்டியிட்டு, மிகவும் பலவீனமாக இருந்தநிலையிலும், இந்த கால கட்டத்தில் பாஜக தனது செல்வாக்கை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருந்தது; உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது; காங்கிரசின் அமைப்பு பலத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலும், காங்கிரஸ்தான் பாஜகவின் ஆகஎளிதான இலக்காக இருந்தது என்பதை மிக எளிதாகப் பார்க்க முடியும். மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் மீது மக்கள் கொண்டிருந்த எதிர்ப்பின், சீற்றத்தின் ஆழத்தை பயன்படுத்திக் கொள்ள, தனது அரசியல் இலக்கு ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று கூட பாஜக அறிவிக்க முடிந்தது. 2014க்கு முன்பு நடந்த தேர்தல்களில், ராஜஸ்தானில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது; குஜராத், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது; இந்த வெற்றிகள், காங்கிரசுக்கு எதிரான வெற்றிகரமான 2014 பிரச்சாரத்தில் பாஜகவின் வெற்றிக்கு வித்திட்டன; அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சமீபத்தில் அசாம் என 2014க்குப் பின் பாஜக பெற்ற வெற்றிகள் காங்கிரசைத் தோற்கடித்துத்தான் கிடைத்தன. டில்லியில் ஆம் ஆத்மி கட்சி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், மேற்குவங்கத்தில் திரிணாமூல், கேரளாவில் இடது முன்னணி என, சக்திவாய்ந்த காங்கிரஸ் அல்லாத கட்சிகள் அல்லது கூட்டணிகள்தான், பாஜக ஆட்சியைப் பிடிப்பதில் இருந்து, அரசியல்ரீதியாக மேலும் வளர்வதில் இருந்து அதைத் தடுத்து நிறுத்தின.
இந்திய சமூகத்தின் பெரும்பிரிவு, இந்துத்துவ பாசிச தாக்குதலை எதிர்க்கிறார்கள்; பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற முனைகிறார்கள்; இந்த நிலையில், இந்தியா போன்ற ஒரு பரந்த, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் அரசியலை, பாஜகவுக்கு எதிராக மட்டும் போராடுவது என்ற ஒற்றை அம்ச நிகழ்ச்சிநிரலாக சுருக்கிவிட முடியாது. பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் பல் வேறு மாநில அரசாங்கங்களை எதிர்கொள்வ தும், பல்வேறு பாஜக அல்லாத கட்சிகள் மத்தியில் நடந்துகொண்டிருக்கும் கருத்தியல், அரசியல் போட்டி என்ற பின்னணியில் தனது சொந்த பலத்தை அதிகரித்துக் கொள்வதும் இடதுசாரிகள் முன் உள்ள சவாலாகும். இககமாவின் அனுபவமே இதைத் தெளிவாகக் காட்டுகிறது; கேரளாவில் அது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்ட ணிக்கு எதிராகவும் மேற்குவங்கத்தில் திரிணா மூலுக்கு எதிராகவும் நிற்கிறது. (மேற்கு வங்கத்தில் இககமா காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது, அசாமில் பாஜக வெற்றி பெற்றது என்ற பின்னணியில், திரிபுராவிலும் நிலைமைகள் மாறத் துவங்கிவிட்டன; அங்கு இககமா தலைமையிலான இடது முன்னணியின் பிரதான அரசியல் எதிரிகளாக திரிணாமூலும் பாஜகவும் எழுகிற நிலைமைகள் உள்ளன). 2019க்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காலம் இருக்கிறது; நடந்துகொண்டிருக்கிற அரசியல் போட்டி, சக்திகளின் மறு அணி சேர்க்கை என்ற பின்னணயில், நம்பகத்தன்மை மற்றும் இருத்தல் ஆகியவற்றில் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரசுடன் கூட்டு சேர்வது, இடதுசாரிகளை பலவீனப்படுத்தவே செய்யும்.
இப்போது இடதுசாரிகள் முன்உள்ள சவால், ஏதோ குறுங்குழுவாத, வறட்டுவாத இயல்புகள் என்று சொல்லப்படுபவற்றைக் களைவது அல்ல. இடதுசாரிகளின் பெரும்பாலான பிரிவினருக்கு இது உண்மையில் ஒரு கவனச் சிதறலே. இடதுசாரி இயக்கத்தை அதன் எல்லா பரிமாணங்களிலும், அதன் வலுவான எல்லா தளங்களிலும் புதுப்பிப்பதும் புத்துயிரூட்டுவதுமே தேவை. காங்கிரசால் உருவான அரசியல் வெற்றிடத்தால் ஆதாயம் பெற்று, காங்கிரசின் தவறான ஆட்சிக்கு பாஜக தன்னைப் பதிலாக நிறுத்திக் கொள்ளும் யதார்த்தத்தை காணத் தவறக் கூடாது. தனது சொந்த பலத்தில் ஒரு நம்பகத்தன்மை கொண்ட அரசியல் மாற்றாக அல்லாமல், நம்பகத்தன்மையை இழந்துவிட்ட காங்கிரசின் இளைய கூட்டாளியாக இடதுசாரிகள் காணப்படுவது, இந்தக் கட்டத்தில் இடதுசாரிகளின் பதில்வினையை பலவீனப்படுத்திவிடும்; முனை மழுங்கச் செய்துவிடும். மதவெறி மற்றும் நவதாராளவாதத்தின் வெறித்தனமான வலதுசாரி சேர்க்கையை இந்துத்துவ பாசிச சக்திகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது; இந்த நிலையில், இடதுசாரிகளின் சக்திவாய்ந்த புத்தெழுச்சி இல்லாமல், இடதுசாரிகள் மட்டுமே முன்வைக்கக் கூடிய அமைப்பாக்கப்பட்ட வெகுமக்கள் போராட்டங்களும் கூர்மையான கருத்தியல் எதிர்ப்பும் இல்லாமல், இந்த விஷச்சேர்க்கையை தீர்மானகரமாக வெற்றி கொள்ள முடியாது.
நாட்டு விடுதலைப் போராட்ட காலத்தில் இடதுசாரிகள் காங்கிரசுடன் கொண்டிருந்த இரட்டைத்தன்மை கொண்ட உறவு பல முக்கியமான பாடங்களை தந்துள்ளது; எனவே மதவெறி வலதுசாரி சக்திகளின் மறுஎழுச்சிக்கு பதில்வினையாக இன்னொரு சுற்று, காங்கிரஸ் - இடதுசாரி கூட்டை உருவாக்கி வரலாற்றை மீண்டும் நிகழ்த்த வேண்டியதில்லை. பல்வேறு பிராந்திய கட்சிகளிடம், சமூக நீதி முகாம் என்று அழைக்கப்படுவதன் கட்சிகளிடம், காங்கிரஸ் தனது இடத்தை தொடர்ந்து இழந்துவருகிறது; இப்போது ஆம் ஆத்மி கட்சி என்ற புதிதாகப் பிறந்த கட்சியிடமும் தனது இடத்தை இழந்துள்ளது; காங்கிரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு எந்த விதத்திலும் அதற்கு நாடு தழுவிய அளவில் பயன் தரப் போவதில்லை என்பதை மேற்குவங்க அனுபவம் நமக்கு நிறைவாகச் சொல்லியுள்ளது; இககமா தலைமையிலான இடது முன்னணி காங்கிரசுடன் கூட்டு வைத்ததற்கு தனது சொந்த பலத்தையும் நம்பகத்தன்மையையும் தியாகம் செய்துள்ளது. மேற்குவங்கத்தில் இடது சாரிகளின் புத்தெழுச்சியைக் காண விரும்பும் அனைவரும் இககமாவின் மேற்குவங்கத் தலைமையால் திணிக்கப்படும், முன்னகர்த்தப்படும் தற்கொலைப் பாதையை உறுதியாக எதிர்க்க வேண்டும்; மாநிலத்தில் உள்ள எதேச்சதிகார திரிணாமூல் ஆட்சிக்கு எதிராகவும் மத்தியில் உள்ள மதவெறி பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களின், ஜனநாயக விருப்பங்களின் உண்மையான மேடையாக இடதுசாரிகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.