காஷ்மீர்
ஒரு ‘தேசபக்தர்’ மற்றும் சில ‘தேச விரோதிகள்’ குரல்கள்
‘தேசபக்தரின்’ குரல் என்றால், அது, சங் பரிவார் குரல்தான் என்று தீப்பொறி வாசககர்களுக்கு நன்றாகவே தெரியும். காஷ்மீர் பிரச்சனை பற்றி, மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் கட்டுரையை 26.07.2016 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு பிரசுரம் செய்துள்ளது.
கட்டுரைக்கு, ‘காஷ்மீர் ஒரு நிழல் யுத்தம்’ என தலைப்பு தரப்பட்டுள்ளது. ‘பாகிஸ்தான் இந்தியாவை உடைக்கப் பார்க்கிறது. நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் நிற்க வேண்டும்’ என வெங்கய்யா நாயுடு தலைப்பு தந்துள்ளார்.
கட்டுரைக்கு, ‘காஷ்மீர் ஒரு நிழல் யுத்தம்’ என தலைப்பு தரப்பட்டுள்ளது. ‘பாகிஸ்தான் இந்தியாவை உடைக்கப் பார்க்கிறது. நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் நிற்க வேண்டும்’ என வெங்கய்யா நாயுடு தலைப்பு தந்துள்ளார்.
கட்டுரையில் அவரது முக்கிய வாதங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:
அறிவாளிகளின் ஊடகத்தினரின் ஒரு பிரிவினர் பயங்கரவாதிகளுக்குப் பரிந்து பேசுகின்றனர். அரசாங்கத்தையும் படையினரையும் அவதூறாய் தாக்குகின்றனர்.
பாகிஸ்தான் தொடுத்துள்ள நிழல் யுத்தத்தால்தான் காஷ்மீர் பிரச்சனை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.
நாட்டின் ஒற்றுமைக்கு, ஓர்மைக்கு ஆபத்து வந்திருக்கும்போது, பயங்கரவாதிகள் விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்வது பற்றி விவாதிப்பதே தவறு, கூடாது.
இராணுவம், துணை இராணுவத்தைச் சேர்ந்த படையினரின் தியாகம் வீரம் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மறந்து விடலாமா? படையினர் தரப்பில் உடல் உறுப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் நடக்கும்போது, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவாளிகள் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்.
வெங்கய்யா நாயுடு போகிற போக்கில் சர்வதேச பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகிறார். அப்படி எழுதும்போது, நேரடியாக இல்லாமலே, காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் மற்றும் இசுலாமிய பயங்கரவாதத்தைத் தொடர்புப்படுத்தி விடுகிறார்.
‘காஷ்மீர் இந்தியாவில் இணைந்தபோது காஷ்மீர் மக்களுக்கு இந்தியா அளித்த மகத்தான வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்’ என முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருப்பது, பொறுப்பற்ற அதிர்ச்சி தரும் செயல் எனச் சாடிய வெங்கய்யா நாயுடு, சிதம்பரம் கட்சி ஆட்சியில் இருந்தபோது அதை ஏன் செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.
கட்டுரையில் இறுதியாக, இந்தியராய், காஷ்மீரைத் துண்டாடப்பார்க்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்குமாறு, ‘தேச பக்த’ அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் தொடர்பான ‘திடீர் தேச விரோதிகள்’ என்ற முத்திரைக்கு ஆளாகக் கூடிய, சில மாறுபட்ட குரல்களையும், இகக (மாலெ)யின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் வினோத் மிஸ்ராவின் குரலையும் தீப்பொறி வாசகர்களின், கவனத்துக்குக் கொண்டு வருவோம்.
பிரபல பத்தி எழுத்தாளர் ஷோபா டே:
காஷ்மீர் பற்றி எரிகிறது. சீற்றத்தின் உணர்வுகளின் ஊழித் தீ கனன்று எரிகிறது. வெற்று வார்த்தைகளால், தோட்டாக்களால், இந்தத் தீயை அணைக்க முடியாது. நம் கண்களை மூடி மறைப்பவற்றை அகற்றி, நாம் படுமோசமாகத் தோற்றுப் போனûதை ஒப்புக் கொள்வோம். புர்ஹான் வானியின் மரணம் நிச்சயம் ஒரு திருப்பு முனை.
புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கில் ஆயிரம் ஆயிரமாய்க் கலந்து கொண்டனர். நாம் அவருக்கு என்ன முத்திரை குத்தினாலும், நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் கொந்தளிப்பின் அடையாளச் சின்னம், புர்ஹான் வானி. அவரையும் அவர் ஆதரவாளர்களையும் நாம் கண்டனம் செய்வதன் மூலம், கொந்தளிப்பு மறையாது. மக்கள், புர்ஹான் வானியை மறந்துவிட மாட்டார்கள்.
நாம் நம் மனங்களையும் கண்களையும் மூடிக் கொண்டுவிட்டோம். சில பத்தாண்டுகள் முன்பு எடுக்கப்பட்ட அரசியல் முடிவால் வதைபடும் காஷ்மீரின் துயரத்தை, அம்மணமான யதார்த்தத்தை, நாம் காண்பதற்கு மறுக்கிறோம். கேட்பதற்கு மறுக்கிறோம். காஷ்மீர் மக்களிடம், ‘உங்களுக்கு என்னதான் வேண்டும்?’ என்று கேட்க யாரும் தயாராக இல்லை.
போதுமான தார்மீகத் துணிச்சலை வளர்த்துக் கொண்டு, நாம் ஏன் பேசக் கூடாது? சாகடிக்கும் தோட்டாக்களுக்குப் பதில், அறிவுபூர்வமாய் முடிவெடுப்போம். தற்போதைய அரசாங்கத்துக்கு, காஷ்மீர் பிரச்சனையை என்றென்றைக்குமாய்த் தீர்க்கும்விதம் பொது வாக்கெடுப்பு நடத்தும் துணிச்சல் இருக்கிறதா எனக் காண்போம். நீடிக்கும் வலி நீங்க, காஷ்மீர் மக்களுக்கு பாத்தியதைப்பட்ட அமைதி, கவுரவம், மற்றும் இணக்கத்துடன் அவர்களை வாழ விடுவோம்.
சர்வதேச பொது மன்னிப்பு கழகத்தின் ஆகர் படேல் எழுதிய விஷயங்களிலிருந்து:
காஷ்மீரில் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நாம் எவ்வளவு சுலபமாக ஜீரணம் செய்து கொண்டோம், எவ்வளவு சுலபமாக அது பற்றி ஊடகங்களில் குறிப்பிடாமலே கடந்து சென்றோம் என்பது என்னை உலுக்கி எடுக்கிறது. பிசினஸ் ஸ்டேன்டர்ட் சொல்வதன்படி, ‘மாநில காவல்துறை, பத்திரிகைகளின் பிரிண்டிங் பிளேட்டுக்களைக் கைப்பற்றிச் சென்றுவிட்டனர். அதற்கு, எந்த சட்டபூர்வ ஆவணமும் கிடையாது. காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பிரதிகளை கைப்பற்ற எந்த காரணமும் சொல்லவில்லை.’
மும்பையில் பெங்களூருவில் இதுபோன்ற ஒரு செயலை ஏற்போமா? எந்த ஆவணமும் இல்லாமல், அரசு பிரதிநிதிகள் பத்திரிகைகளை இழுத்து மூட முடியுமா? முடியாது. இல்லை, இல்லை, அதனை முடியும் என மாற்றிக் கொள்ளுங்கள். அந்த நகரங்களில், எப்போதும் ராணுவத்தினர், எதிர்ப்பாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வார்கள், உடல் ஊனப்படுத்துவார்கள் என்றால், அப்போது, பிரசுரிக்காதே என்று கட்டளைகள் வந்தால், பத்திரிகையாளர்கள், மீறமாட்டார்கள்.
பல பத்தாண்டுகளாக இந்தியா காஷ்மீரிகளை, நினைத்த மாத்திரத்தில் தாக்கியது போல் தம்மைச் செய்யாது என்ற, துணிச்சலில் இருந்து, பத்திரிகையாளர்களின் துணிச்சலும், சுதந்திரங்களைப் பாதுகாப்பது பற்றிய வாய் வீச்சுக்களும் வருகின்றன.
அச்சு மின்னணு ஊடக ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து ஸ்ரீநகரில் ஒரு தர்ணா நடத்த வேண்டும். நம் ஒருமைப்பாட்டை, இதயத்து நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம், இப்போதுள்ள மேலோங்கிய பொய்யான பிரச்சாரத்தில் நாம் ஈடுபடாமல் இருந்தாலே நல்லது.
ஜிஹாதி, பாகிஸ்தான் ஆதரவாளர், பயங்கரவாதி, பிரிவினைவாதி என்று முத்திரை குத்தி நீங்கள் எவ்வளவு தூரம் அவதூறு செய்தாலும், இந்தியப் படையினர் குழந்தைகளைக் கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நீண்ட காலமாக, நம் இந்திய அரசு, காஷ்மீரில், வடகிழக்கில், பழங்குடியினர் பகுதிகளில் நடந்து கொள்ளும் விதம் பற்றி மவுனமாய் இருந்துள்ளோம். இப்போது 2016 நடக்கிறது. இது பற்றி, இனி எனக்கு நானே பொய் சொல்லிக் கொள்வது மிகவும் தர்மசங்கடமானது.
பிரபலமான வரலாற்றாசிரியர் பார்த்தா சேட்டர்ஜி டெலிகிராப் பத்திரிகையில் எழுதியது:
காஷ்மீரில் ஜனநாயக தேசியத்திற்கு ஓர் உண்மையான வாய்ப்பு தரப்பட வேண்டும். மக்கள் திரள் சீற்றம், உயர்ந்து கொண்டே போகும் சாவு எண்ணிக்கை ஆகியவற்றைச் சந்திக்கும் ஆட்சியாளர்கள், மீண்டும் ஒரு முறை, எதிர்பார்த்தபடியே, பாகிஸ்தானைக் குறை சொல்கிறார்கள். புதுடெல்லியின் அதிகாரத் தாழ்வாரங்களில் ஒரு காலனிய மனோநிலை உள்ளது. அதன்படி காஷ்மீர் மக்களுக்கு அறிவுபூர்வமாய் முடிவு எடுக்கும் முதிர்ச்சி கிடையாது, சிறு குழந்தைகள் போல் விஷயம் தெரியாதவர்கள் அல்லது பித்துப் பிடித்தவர்கள் எனவும், பாகிஸ்தான் குழாயைத் திறந்து மூடுவது போல், அவர்களைக் கொந்தளிக்க வைக்க முடியும், பிறகு சும்மா இருக்க வைக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.
புர்ஹான் உயிரோடு இருந்தபோது கொண்டிருந்த மக்களைத் திரட்டும் ஆற்றலை விட, தியாகியான பிறகு, பல மடங்கு திரட்டும் ஆற்றல் கிடைத்துள்ளது.
1908ல், நாட்டு விடுதலைப் போராட்ட நேரத்தில் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்.
வங்கத்தில், அரவிந்த் கோஷ் அவரது சகோதரர் பாரின் உள்ளிட்ட ஜீகாந்தர் என்ற புரட்சிகர குழுவின் மீது அலிப்பூர் சதி வழக்கு ஏவப்பட்டது. அவர்கள் மீது பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போர் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. சிந்திக்காமலேயே 11/9 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகுதான் பயங்கரவாதம் துவங்கியது என நினைக்கும், நம்மில் பலருக்குச் சொல்ல வேண்டி உள்ளது. அன்று தேசிய புரட்சியாளர்களை, பிரிட்டிஷார், ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் அழைத் தனர். குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான நரேன் கோகைன் அப்ரூவராக மாறி, தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் எதிராகச் சாட்சி சொல்லத் தயாரானார். கனாய் தத்தா என்ற தோழர் சிறைக்குள் எப்படியோ ஒரு கைத்துப்பாக்கியைக் கடத்திக் கொண்டுவந்து, அலிபூர் சிறையில் நரேனைக் கொன்றார். தப்பிக்க எந்த வாய்ப்பும் கிடையாது. விசாரணை நடந்து கனாய் 10.11.1908ல் தூக்கிலிடப்பட்டார். அவர் உடல், குடும்பத்திடம் தரப்பட்டது.
அதன்பின் நடந்ததைப்பற்றி பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கை, பின்வருமாறு சொல்கிறது: ‘கனாய் எரியூட்டப்பட்ட போது நடந்தது அசாதாரணமானது. காலிகட்டில், எரியூட்டப்படுவதைக் காண பெரும் கூட்டம் திரண்டது. உடலைத் தொட கூட்டம் முட்டி மோதி முயன்றது. மிக உயர்ந்த கவுரவமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கதறி அழுது கொண்டே உடலைப் பின் தொடர்ந்தனர். ஆண்களும் சிறுவர்களும் ‘கனாய் வாழ்க’ என முழக்கமிட்டபடியே பின் தொடர்ந்தனர்.’ கனாயின் சாம்பல் ஓர் அவுன்ஸ் ரூ.5 என விற்கப்பட்டது. உண்மையான சாம்பல் அளவைக் காட்டிலும் 50 மடங்கு அதிகம் விற்றது.
பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கனாய் உடல் பின் ஏன் அவ்வளவு பிரும்மாண்டமான கூட்டம் திரண்டது என்று காரணம் புரியவில்லை. மக்களுக்கு வன்முறையின் இயல்பு, காரணம், திறன் பற்றி எல்லாம் யோசனை இல்லை. லாப நஷ்ட கணக்கு பார்க்காத புரட்சியாளர்களின் தியாகம்தான், அவர்களை மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாக மாற்றியது. எந்த லட்சியமும் இல்லாத, பணத்தாசை, பதவி சுகம், அதிகார போதை கொண்ட அரசியல்வாதிகளைக் காணும் மக்களுக்கு, புரட்சியாளர்கள் மீது ஏற்படும் அன்பும் மரியாதையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
‘ஆசாதி’, சுதந்திரம் என காஷ்மீரில் எதிரொலிக்கும் முழக்கம், காஷ்மீரின் வருங்கால அரசியல் அரசுக்கான வரைபடம் அல்ல. அது, இந்தியாவின் ஆயுதம் தாங்கிய ஆக்கிரமிப்பை நிராகரிப்பதாகும். அது, தமது எதிர்காலத்தை காஷ்மீர் மக்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையின் பிரகடனமே ஆகும்.
அடுத்து 11.04.1994 அன்று நிறப்பிரிகை பத்திரிகைக்காக பிரபல அறிஞர்களான எஸ்.வி.ராஜதுரை மற்றும் வ.கீதா தோழர் வினோத் மிஸ்ராவிடம் காஷ்மீர் பற்றிக் கேட்டபோது, அவர் சொன்ன விரிவான பதிலைக் காண்போம்.
‘காஷ்மீர் மக்கள் முன் கீழ்க்காணும் மூன்று தீர்வுகள் உள்ளன.
- பாகிஸ்தானுடன் இணைவது;
- சுதந்திர அரசாக இருப்பது;
- இந்தியாவின் பகுதியாக இருப்பது.
காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன். பாகிஸ்தானுடன் இணைவது காஷ்மீரிலுள்ள ஜனநாயக இயக்கத் திற்கு ஒரு உந்துதல் தரும் என்று நான் கருதவில்லை. காஷ்மீர் சுதந்திர அரசாக இருப்பது சந்தேகத்துக்குரியது. பாகிஸ்தானோ, இந்தியாவோ காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதை விரும்பாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுக்கிடையே உள்ள பலாபலங்கள், பிரிவினை என்ற பிரச்சனையை கம்யூனிஸ்டுகள் ஆய்வு செய்யும்போது நாம் இந்த இரு அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை மட்டுமின்றி, அதைவிடப் பெரிய பகுதியின் ஒரு பிராந்தியம் முழுவதன் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முழு விசயத்தையும் பரிசீலிக்கும் போது, சுதந்திர காஷ்மீர் என்பது ஒப்பேறக் கூடிய தீர்வு என்று நாங்கள் கருதவில்லை. பாகிஸ்தானுடன் இணைவதும் கூட ஒப்பேறக் கூடிய தீர்வு அல்ல. காஷ்மீரின் வரலாற்றைப் பார்த்தோமேயானால், தேசிய மாநாடு (நேஷனல் கான்பரன்ஸ்) ஒரு முக்கியமான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதைக் காணலாம். காஷ்மீர் மன்னனான ஹரிசிங்கை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அந்த அமைப்பு உருவாயிற்று. தேசிய மாநாடு, இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தது. இந்தியாவுடன் இணைவதில் காஷ்மீர் மக்களுக்கு விருப்பம் இருந்தது. தமது தனித்தன்மையை, காஷ்மீரிகள் என்ற சிறப்பு அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்வதுதான் அவர்களது திட்டவட்டமான விருப்பமாக இருந்தது. அவர்களது தனித்தன்மை காப்பாற்றப்படும் என்ற வாக்குறுதி முதலில் தரப்பட்டு பின்னர் கைவிடப்பட்டுவிட்டது. துவக்கத்தில், காஷ்மீர் முதலமைச்சர் பிரதமர் என்றே அழைக்கப்பட்டார். ஆளுநர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோன்ற பல விசயங்கள் இருந்தன. ஆனால் இந்திராகாந்தி காஷ்மீரின் சிறப்புத் தன்மையை உடைத்தெறிந்தார். காஷ்மீர் போராளிகளுடன், நிபந்தனையற்ற வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் நடத்தி, 1950களில் இருந்த நிலைமைக்குத் திரும்பிச் சென்று, காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோமேயானால் காஷ்மீரை இந்திய ஒன்றியத்திற்குள் வைத்திருக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும், என்று நினைக்கின்றேன். ஒரு இந்தியன் என்ற வகையிலும் ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் இதுதான் விரும்பத்தக்க தீர்வு என்று நான் கருதுகிறேன். ஆனால் காலப்போக்கில் நிலைமையில் வேறுவிதமான மாற்றம் ஏற்படுமானால் நாங்கள் எங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்வோம். இந்த விசயங்களில் எதுவுமே நிரந்தரமானதோ அல்லது முழுமுற்றானதோ அல்ல. ஒரு கட்டத்தில் இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிந்து செல்வதோ அல்லது பாகிஸ்தானில் ஒரு ஜனநாயகப் புரட்சி நடந்து பாகிஸ்தான் இந்தியாவைவிட சிறந்த ஜனநாயக நாடாக மாறுமேயானால், காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர்வது, சிறந்த தீர்வாக இருக்கக் கூடும்’.
காஷ்மீர் என்ற பூகோளரீதியிலான நிலப்பரப்பு வேண்டும், ஆனால், காஷ்மீரிகள், நாட்டின் விரோதிகள் என்ற அணுகுமுறைதான் பாசிச அணுகுமுறை. தேவை, காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஓர் அரசியல் தீர்வு.