COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 22, 2016

தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் மறுப்பு
சாதியாதிக்க சக்திகளுக்கு பல்லக்கு தூக்கும் தமிழக அரசு
பழ.ஆசைத்தம்பி, எஸ்.இளங்கோவன்
தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திரம் ஒரு கேடா என்று வெள்ளையன் அன்று கேட்டதாக பாரதி சொன்னான். தொண்டு செய்யும் அடிமை உனக்கு வழிபாடு ஒரு கேடா என்று இன்று ஆதிக்க சாதிகள் தலித் மக்களிடம் கேட்கின்றன.
குஜராத்தில் தலித் மக்கள் மீது நடந்தத் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் தலித் மக்கள் போராட்டங்களில் எழுந்துள்ள பின்னணியில், இந்தப் போராட்டத்தின் விளைவால், மாதிரி குஜராத் அரசின் முதலமைச்சர் பதவி இழந்துள்ள பின்னணியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தலித் மக்கள் தங்கள் வழிபாட்டு உரிமைகளுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நாகை மாவட்டத்தின் பழங்கள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் இந்தப் பிரச் சனையை இந்த முறை தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பழங்கள்ளிமேடு இந்துத்துவ சக்திகளை சற்று கலங்க வைத்தது. அவர்கள் கர் வாப்சி இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும்போது, பழங்கள்ளிமேடு தலித் மக்கள் இசுலாத்துக்கு மாறப் போவதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்கள். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை உடனடியாக புறப்பட்டுவிட்டார். அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும் என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டார். உனா கறையை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது தமிழிசை அவர்களே. பழங்கள்ளிமேடு பிரச்சனையையும் நீங்கள் அவ்வளவு எளிமையாக தீர்த்து வைத்துவிட முடியாது.
பழங்கள்ளிமேட்டு தலித் மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது, அதை ஒட்டி ஆடித் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது என்ற நிலைமைகளில் அங்குள்ள தலித் மக்கள் நிலைமைகளை நேரில் அறிந்து கொள்ளவும் உரிமை கோருகிற தலித் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் இககமாலெ குழு ஆகஸ்ட் 6 அன்று பழங்கள்ளிமேடு சென்றது.
மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி, இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் விஜயன், ரங்கசாமி ஆகியோர் கொண்ட இககமாலெ குழு கள்ளிமேட்டுக்கும் பழங்கள்ளிமேட்டுக்கும் சென்று பார்வையிட்டது. இவர்களுடன் கரம்பக்குடியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் யோகானந்தம் பங்கேற்றார்.
குழு முதலில் கள்ளிமேட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்றது. குழுவில் ஒருவர், கோயிலுக்குள் செல்ல பிரச்சனை ஏதும் இருப்பின் தவிர்த்துவிட முன்னேற்பாடாக வழிபாட்டுக்குச் செல்வதுபோல் பூ, பழம், கற்பூரம் போன்றவற்றை கையில் வைத்துக்கொண்டார். குழுவில் சென்ற தோழர்கள் இரண்டு பேர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். கோயிலில் இருந்த பிள்ளை சாதியைச் சேர்ந்த ஒருவர் யார் நீங்கள், என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்க, சாமி கும்பிட வந்தோம் என்று குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். கருப்புச் சட்டை போட்டிருக்கிறீர்கள், உங்களைப் பார்த்தால் சாமி கும்பிட வந்ததுபோல் தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார். பிறகு குழுவினர் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது போல் பூசாரியிடம் பேசினர். பூசாரி ஓரளவு விவரங்களை பகிர்ந்துகொண்டார்.
அந்த கடலோர கிராமத்தில் உள்ள 400 குடும்பங்களில் 180 தலித் குடும்பங்கள். பிரச்சனைக்குரிய பத்ரகாளியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. திருவிழா, ஊர்வலம், மண்டகப்படி எதுவும் இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. ஏழு நாட்கள் ஆடித் திருவிழாவில் அய்ந்து நாட்கள் மண்டகப்படி வழிபாடு நடக்கிறது. இதில் மூன்று நாட்கள் ஆதிக்க சாதியினர் (பிள்ளை) நடத்துகிறார்கள். இரண்டு நாட்கள் அறநிலையத் துறை நடத்துகிறது. இந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் தாங்கள் நடத்த வேண்டும் என்று பழங்கள்ளிமேட்டு தலித் மக்கள் கேட்கிறார்கள். சாமி ஊர்வலம் தங்கள் தெருவுக்குள்ளும் வர வேண்டும் என்றும் திருவிழா அழைப்பிதழில் தலித் பிரிவினர் பெயர்களும் இடம் பெற வேண்டும் என்றும் கோருகிறார்கள்.
தலித் மக்கள் குடியிருக்கும் பழங்கள்ளிமேட்டுக்கு தோழர்கள் சென்றபோது, ஊரே பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்களுடன் பேசத் துவங்கியபோது, அவர்களில் ஒருவர், ஊரில் உள்ள முன்னணிகளை அழைத்து வருவதாகவும் அவர்கள் அனைவருடனும் பேச வேண்டும் என்று சொல்லி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். 20 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அருகில் உள்ள செட்டிப்புலத்தில் உள்ள சிவன் கோயிலிலும் சில வருடங்களுக்கு முன் இதுபோன்ற பிரச்சனை இருந்தது. ஆதிக்க சாதியினர் வழிபாடு முடித்த பிறகு, தலித் மக்கள் வழிபாடு நடத்துவது என்ற நடைமுறை வந்தது.
நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையை ஒட்டி பழங்கள்ளிமேட்டில் கிராமக் கமிட்டி ஒன்று போடப்பட்டுள்ளது. அதன் தலைவர் ஆனந்தராஜ், யாரையும் மிரட்டுவதற்காக நாங்கள் மதம் மாறப் போவதாகச் சொல்லவில்லை, உண்மையிலேயே மதம் மாற வேண்டும் என்று கருதுகிறோம், எங்களுக்கு உரிய மரியாதை தராத, சிறுமைபடுத்துகிற மதத்தில் நாங்கள் இருக்க விரும்பவில்லை என்றார்.
திருவிழா தொடர்பாக எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும் தலித் மக்கள் தெருவுக்குள்ளும் சாமி ஊர்வலம் செல்ல வேண்டும் என்றும் 2015ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடவே, எதிர்த் தரப்பினர் கருத்தும் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.
பழங்கள்ளிமேட்டு தலித் மக்கள் தங்கள் மதமாற்ற முடிவை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அதன் பிறகே மாவட்ட நிர்வாகம் பிரச்சனையில் ஓரளவு கவனம் காட்டத் துவங்கியிருக்கிறது. இதற்கு முன்னரே தங்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
மதமாற்ற முடிவு அறிவிப்புக்குப் பிறகு, கள்ளிமேட்டில் உள்ள கோயிலில் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டனர். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமரவிக்குமார் ஆகியோரும் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கின்றனர். பேச்சுவார்த்தைகளில் ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் கோரிக்கையை ஏற்க உடன்படவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் ஊர்க்காரர்.
பகுதியில் உள்ள பாஜகவினரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் தலித்துகளுக்கு தனியாக கோயில் கட்டித் தருவதாகவும் தலித்துகள் அங்கு வழிபாடு நடத்தலாம் என்றும் சொல்லிப் பார்த்தனர். தலித் மக்கள் இந்த முன்வைப்பை ஏற்கவில்லை. கோயில் முதலில் பழங்கள்ளிமேட்டில்தான் இருந்தது என்றும் பிறகுதான் அது கள்ளிமேட்டுக்கு மாற்றப்பட்டது என்றும் தலித் மக்கள் சொல்கின்றனர். அதற்கான ஆதாரங்களும் அவர்கள் வைத்துள்ளனர். இந்த ஆதாரங்களைக் காட்டியே தங்கள் உரிமைகளைக் கேட்கின்றனர்.
திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் விழா நடத்த ஆதிக்க சாதியினர் தரப்பில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாக தலித் மக்கள் சொல்கின்றனர். பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
நடக்கிற பிரச்சனை வழிபாட்டு உரிமை தொடர்பானதாக மட்டுமே வெளியே தெரிகிறது. பொருளாதார காரணங்கள் வசதியாக பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இப்போது கோயிலுக்குச் சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் மீதான கட்டுப்பாடு முழுவதும் அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இருக்கிற ஆதிக்க சாதியினரிடம் உள்ளது. பழங்கள்ளி மேட்டு பெண்கள், அருகில் உள்ள ஆற்றில், நீர்வரத்து குறைந்து மீண்டும் அதிகரிப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் இறால் பிடிக்கிறார்கள். இதற்கும் ஆதிக்க சாதியினர் அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்று சொல்லி நாளொன்றுக்கு ஒருவருக்கு ரூ.30 வரை வசூல் செய்கிறார்கள். வழிபாட்டு உரிமை தரப்பட்டு விட்டால், சரிசமம் என்றாகிவிட்டால், நாளை வருமானத்திலும் கைவைப்பார்கள் என்பதும் ஆதிக்க சாதியினர் கணக்காக இருக்கிறது.
பழங்கள்ளிமேட்டின் ஆண்கள் மண் வெட்டுவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். இப்போதுதான் ஒருவர் மருத்துவப் படிப்புக்குச் செல்கிறார். நான்கு பேர் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இன்னும் சிலர் கலைக் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். பகுதியில் ஒரு துவக்கப் பள்ளி உள்ளது. அதற்கு மேல் வேதாரண்யத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்கிறார்கள். பேருந்து போக்குவரத்து சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கிராமத்தில் ஒருவர் வருவாய் ஆய்வாளராக இருக்கிறார். ஒருவர் நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் வேலை செய்கிறார். 20 பேர் வரை வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இதற்கு மேல் தலித் மக்கள் பொருளாதாரம் என்று சொல்ல ஏதுமில்லை. நிலமற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
பகுதியில் உள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் சிலர் இககமாவிலும் உள்ளனர். இரண்டு கட்சிகளும் இந்தப் பிரச்சனையில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் சொல்கின்றனர். முதியவர்கள் சிலர் அஇஅதிமுக மற்றும் திமுகவில் உள்ளனர்.
ஆடித் திருவிழாவில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்கான போராட்டம் பழங்கள்ளிமேட்டுடன் முடிந்துவிடவில்லை. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தலித் மக்கள் இந்தக் கோரிக்கையை எழுப்பி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் சென்ற ஆண்டு தீமிதி விழா நடந்தபோது, சாமி ஊர்வலம் தங்கள் தெருவுக்குள்ளும் வர வேண்டும் என்றும் தங்களுக்கும் மண்டகப்படி வழிபாட்டு உரிமை வேண்டும் என்றும் பகுதியின் தலித் மக்கள் கோரிக்கை எழுப்பினர். சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய அரசு நிர்வாகம் அடுத்த ஆண்டு தலித் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொல்லி, தலித் மக்களுக்கு உரிமைகள் இன்றி தீமிதி விழா மட்டும் நடத்த அனுமதித்து, ஊர்வலத்தை ரத்து செய்தது. தலித் மக்கள் சென்ற ஆண்டு தரப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்றக் கோருவார்கள் என்பதால் இந்த ஆண்டு ஜ÷ன் மாத வாக்கில் நடக்க வேண்டிய தீமிதி விழாவுக்கான ஏற்பாடுகளை பகுதியின் மேல்சாதியினர் துவங்கவே இல்லை. தலித் மக்களும் விழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கியவுடன் தங்கள் உரிமைகளைக் கோரக் காத்திருக்கிறார்கள். பிரச்சனை எதுவும் வெளிப்படையாக எழாததால் அரசு நிர்வாகமும் இது வரை தனது வாக்குறுதியை நிறை வேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பகுதியில் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக உள்ளது.
கடலூர் மாவட்டத்தின் பல்லவராயநத்தம் மாரியம்மன் கோயில் தேர் ஊர்வலம் அங்குள்ள தலித் காலனி வழியாக வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டுள்ளது. இன்று வரை தலித் காலனி வழியாக அந்த ஊர்வலம் வருவதில்லை. 12 நாட்கள் நடக்கும் ஆடித் திருவிழா மண்டகப்படி வழிபாட்டில் தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. மூன்றாவது நாள் ஊர்வலம் தலித் காலனி வழியாக வர வேண்டும். வருவதில்லை. வன்னியர் குடியிருப்பின் எல்லையில் தேர் நின்று விடும். தலித்துகள் எட்ட நின்று வழிபட்டுக் கொள்ள வேண்டும். 2010 வரை இப்படி நடந்து வந்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக திருவிழாவே நடப்பதில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த மறுக்கிறது.
கரூரில் நாகப்பள்ளி மகாசக்தி மாரியம்மன் கோயில் இந்து அறநிலையத் துறை நிதியுதவியுடன் 2009ல் தலித்துகளுக்கென தனியாக தலித்துகளால் கட்டப்பட்டது. இப்போது சிறீலங்காவில் இருந்து திரும்பியுள்ள ஆதிக்க சாதியினர் சிலர், தலித்துகள் சரியாக பூசைகள் நடத்துவதில்லை என்று சொல்லி அந்தக் கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். உள்ளூர் நிர்வாகம் தலித்துகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அறக்கட்டளையில் தலித் உறுப்பினர்கள் பெரும்பான்மை. ஆனால் தலித்துகள் இல்லாமல் திருவிழா நடத்த முயற்சிகள் நடக்கின்றன. தலித்துகளும் சாதி இந்துக்களும் சம எண்ணிக்கையில் உள்ளனர். இசுலாத்துக்கு மாற வேண்டும் என்கின்றனர். ஆறு குடும்பங்கள் ஏற்கனவே இசுலாத்துக்கு மாறி விட்டனர். ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரு கில் உள்ள சிலம்பூர் தெற்கு கிராமத்தில் வீரனாருக்கு மட்டும் தனிவழிபாடு தலித் மக்கள் கேட்கின்றனர். வன்னியர் மறுக்கின்றனர். வன்னியர்கள் அய்யனார், முனியனார் உட்பட மூன்று தெய்வங்களையும் வழிபடுகின்றனர். ஜ÷லை 30 அன்று கோயில் மூடப்பட்டுவிட்டது. காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலித்துகள் வீரனாருக்கு ஆடு வெட்டி வழிபட வேண்டும் என்கின்றனர். தாங்களே நேரடியாக அந்த வழிபாட்டை நடத்த வேண்டும் என்கின்றனர். சென்ற ஆண்டு செப்டம்பரில் கோயில் மூடப்பட்டது. 2016 ஜ÷லை 17 அன்று திறக்கப்பட்டது. தலித்துகள் உரிமை கோரியதும் மீண்டும் மூடப்பட்டுவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள மரவெட்டி கரிசல்குளம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் தலித்துகள் சம வழிபாட்டு உரிமை கேட்கிறார்கள். 13 விதமான பாகுபாடுகளை எதிர்கொள்வதாக அவர்கள் சொல்கிறார்கள். முளப்பாரி எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது. வீட்டுக்கு ரூ.1,300 நிதி தர அனுமதி மறுக்கப்படுகிறது. அன்னதானம், ஒயிலாட்டம், கும்மி போன் றவை நடத்த தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அன்னதானம் தயாரிக்கும் இடத்துக்கு அருகில் கூட செல்ல முடியாது. பரிமாற முடியாது. அன்னதானத்துக்கு பணமாக தரலாமே தவிர அரிசியோ பிற பொருட்களோ தர முடியாது. தலித் மக்களே கற்பூரம் ஏற்ற முடியாது. திரிசூலத்துக்கு மாலை அணிவிக்க முடியாது. கோயிலில் எந்த இடத்திலும் இருந்தும் அவர்களே திருநீறு எடுத்துக்கொள்ள முடியாது. இன்று வரை இதுபோன்ற அரசியல்சாசனத்துக்கு விரோதமான தீண்டாமை நடவடிக்கைகளை அந்த தலித் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியான பல போராட்டங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் தீச்சட்டி மற்றும் அங்கபிரதட்சணம் ஆகியவற்றுக்கு தலித் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு தனித்தனியாக வேறு வேறு தேதிகளில், இடங்களில் திருவிழா நடத்தலாம் என வருவாய் அலுவலர் சொல்கிறார். தலித் மக்கள் ஏற்க மறுக்கின்றனர். ஆதிக்க சாதியினர் தலித் மக்களுடன் சேர்ந்து வழிபாடு நடத்த மறுக்கின்றனர். பிரச்சனை தொடர்கிறது.
இப்படி கொந்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைத்தான் ஜெயலலிதா அமைதிப் பூங்கா என்கிறார்; தமிழக மக்களுக்கு வசந்தம் வந்துவிட்டது என்கிறார். இன்று பிரச்சனைக்குரிய கோயில்களாக மாறியிருக்கிற இந்தக் கோயில்கள் அனைத்தும் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இந்தக் கோயில்களில் அனைவருக்கும் அரசியல்சாசனப்படி வழிபாட்டு உரிமைகளை உறுதி செய்வது தமிழக அரசின் கடமை. தனது எந்தக் கடமையையும் நிறைவேற்றாத தமிழக அரசு இந்தக் கடமையையும் நிறைவேற்றத் தவறுகிறது. கடலூர் மாவட்டத்தின் பல்லவராயநத்தம் மாரியம்மன் கோயிலில் கடந்த ஆறு ஆண்டுகளாக தங்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக தலித் மக்கள் சொல்கிறார்கள் என்றால், இந்த விசயத்தில் அஇஅதிமுக அரசு கடந்த அய்ந்து ஆண்டுகளும் தொடர்ந்து தனது கடமையில் தவறியிருக்கிறது என்று பொருள்.
இப்போதும் மாவட்ட நிர்வாகம் எடுக்கிற நடவடிக்கைகள் தலித் மக்களின் அரசியல்சாசன உரிமைகளை உறுதி செய்யும் நோக்கம் கொண்டவையாக இல்லை. பழங்கள்ளிமேட்டில் தலித் மக்கள் மதமாற்ற அறிவிப்புக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை இரு தரப்பினரிடையே எழக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்யவே அமைதி பேச்சுவார்த்தை நடந்ததாகக் குறிப்பிடுகிறார். மொத்த பிரச்சனையும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது என்று சுருக்கப்படுவது ஒரு மாவட்ட ஆட்சியரின் பார்வைக் கோளாறில் இருந்து மட்டும் நடந்துவிடவில்லை. தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியர்கள் சுதந்திரமாக செயல்படுகிற சூழல் இங்கு இல்லை. இந்தப் பிரச்சனையில் அரசின் பார்வையே, அணுகுமுறையே சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகத்தான் இருக்கிறதே தவிர, தலித் மக்களின் அரசியல் சாசன உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இல்லை.
எனவேதான், பழங்கள்ளிமேடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கோயில்கள் மூடப்படுவது, திருவிழாக்கள் தடை செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆதிக்க சாதியினர், திருவிழாவே நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வழிபாட்டில் தலித்துகளுக்கு சமஉரிமை, அரசியல்சாசன உரிமை தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தின் அணுகுமுறையும் நடவடிக்கைகளும் ஆதிக்க சாதியினர் விருப்பத்துக்கு ஏற்பவே அமைந்துள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் பரமக்குடி முதல் உடுமலை வரை தலித் மக்கள் மீதான பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை, சம்பவங்களை தமிழ்நாடு பார்த்துள்ளது. இந்தச் சம்பவங்கள் எதிலும் இன்று வரை பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அடுத்து வரும் காலங்களும் அப்படியே தொடர்ந்துவிடும் என ஜெயலலிதா எதிர்ப்பார்க்கலாம். ஆனால், குஜராத்தில் வீசும் தலித் போராட்டக் காற்று தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பாது என்று சொல்லிவிடவும் முடியாது. இன்றைய நிலைமைகளில் தலித் மக்களும் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிடும் பழைய மனநிலையில் இல்லை.
தமிழக அரசு சாதியாதிக்க சக்திகளுக்கு பல்லக்கு தூக்குவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாடு முழுவதும் தலித்துகளுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படும் நிகழ்வுகளில் உடனடியாக தலையிட்டு அவர்கள் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், தலித் மக்களின் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பாகுபாடு காட்டப்படக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுகள் உள்ள இடங்களில் அந்த உத்தரவுகள் அமலாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்கு குறுக்கே நிற்கும் சாதியாதிக்க சக்திகள் மீது நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இகக மாலெ வலியுறுத்துகிறது.
தமிழக அரசின் குற்றமய அலட்சியத்துக்கு 
மீண்டும் ஒரு தலித் பெண் பலி
(ஆகஸ்ட் 6 அன்று பழங்கள்ளிமேட்டு தலித் மக்களைச் சந்தித்த இககமாலெ குழு அன்று மாலை சாலியமங்கலம் சென்று கலைச்செல்வியின் குடும்பத்தினரையும் சந்தித்தது. அன்று காலையில் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கன்னையன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் மனோகரன் ஆகியோரும் கலைச்செல்வி குடும்பத்தினரைச் சந்தித்து இகக மாலெயின் ஆதரவை தெரிவித்தனர்).
கோடிகோடியாய் பணத்தைக் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஆளாளுக்கு துடப்பக் கட்டை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள். தூய்மை இந்தியா என்று சொல்லி நிதி ஒதுக்குகிறார்கள். வரி போடுகிறார்கள். கழிப்பறை கட்ட வேண்டும் என்று விளம்பரம் வெளியாகிறது. தமிழக அரசும் இந்தத் தூய்மை விளம்பரத்துடன் சேர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விளம்பரங்களுக்கு செய்த செலவில் ஒரு சிறு பகுதியில், தஞ்சை மாவட்டத்தின் சாலிய மங்கலத்தில் சாலையோரம் உள்ள வீடுகளில் வாழும் எட்டுக் குடும்பங்களுக்கு கழிப்பறைக் கட்டித் தந்திருந்தால் கலைச்செல்விக்கு அந்தக் கொடூரமான முடிவு நேர்ந்திருக்காது.
தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் கலைச்செல்வி, கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். அங்கு எட்டு குடும்பங்கள் உள்ளன. திடக்கழிவு மேலாளுமைத் திட்ட வேலை நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிற நடைமுறையில் இவர்கள் அந்த வேலை செய்கின்றனர். ஊரை சுத்தமாக்கும் வேலை செய்யும் இந்த எட்டு குடும்பங்களுக்கு மின்இணைப்பு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. சாலையோர அரசு புறம்போக்கு நிலத்தில் இவர் கள் வாழ்கிறார்கள். சாலையோர நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ள ஆதிக்க சாதியினருக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. அருகில் உள்ள கடைகளுக்கு மின்இணைப்பு தரப்பட்டுள்ளது. இவர்கள் பல முறை கேட்டும் இவர்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
ஜுலை 31 அன்று மாலை உடல்உபாதை கழிக்க வழக்கம்போல் வீட்டுக்குப் பின்னால் இருக்கிற காட்டுக்குள் சென்ற கலைச்செல்வி வீடு திரும்பவில்லை. நேரமாகியும் கலைச்செல்வி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரைத் தேடத் துவங்கியிருக்கின்றனர். இரவு முழுவதும் தேடியும் அவர் எங்கே என்று தெரியவில்லை. மறுநாள் காலை காட்டுக்குள் சென்ற அவரது உறவினர், கொடூரமாகச் சிதைக்கப்பட்ட கலைச்செல்வியின் உடலைப் பார்த்து அலறியிருக்கிறார்.
கலைச்செல்வியின் வீட்டின் எதிரில் உள்ள கடையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் ராஜா, அவரது நண்பர் குமார் சேர்ந்து கலைச்செல்வியைத் தாக்கி பாலியல் வன்முறை செய்து பிறகு கொலையும் செய்ததை ஒப்புக்கொண்டனர். குற்றத்தைச் செய்துவிட்டு, ராஜா எதுவும் நடக்காததுபோல், கடையில் இருந்திருக்கிறார். அனைவரும் சேர்ந்து கலைச்செல்வியை தேடத் துவங்கியபோதும், காவல்துறையினர் விசாரிக்க வந்தபோதும், கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருக்கிறார். கலைச்செல்வியின் பிரேதத்தை மோப்பம் பிடித்த காவல்துறை நாய் கூட்டத்தில் இருந்த ராஜாவைக் கவ்வியிருக்கிறது. அதன் பிறகே அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இந்தப் பிரச்சனைக்குப் பிறகும் அந்த 8 வீடுகளுக்கும் பட்டா வழங்குவது, பிற வசதிகள் செய்து தருவது பற்றி பேச்சுக்கள் நிர்வாகத் தரப்பில் இல்லை. இரண்டு கழிப்பறைகள் மட்டும் கலைச்செல்வி வீட்டின் அருகில் கட்டப்படுகின்றன. இதற்காக ஓர் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது.
கலைச்செல்வியின் தந்தை ராஜேந்திரன், பன்னி, நாய், எலி செத்தா எங்களை வந்து கூப்புடறாங்க... எங்க பொண்ணு செத்து போச்சு... ஒருத்தரும் இந்தப் பக்கம் வந்து என்னன்னு விசாரிக்கலை என்றார். இந்த மொத்த பகுதியும் சுத்தமாக இருக்க நாங்கள் வேலை செய்கிறோம். ஊராட்சித் தலைவர், திகவைச் சேர்ந்தவர், அவர் கூட கலைச்செல்வி கொலை செய்யப்பட்ட பிறகு, வந்து பார்க்கவில்லை என்று ராஜேந்திரன் சொல்கிறார்.
ஸ்வாதி, நவீனா கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ராமதாஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார். கலைச்செல்வி கொலைக்கும் அவர் நீதி கேட்பாரா? ஸ்வாதி படுகொலைக்காக நியாயம் கேட்டு கொதித்தெழுந்த தமிழிசையின் இசையும் கலைச்செல்வி கொலையில் கேட்கவில்லை.
உனாவில் தலித்துகள் மேல் தாக்குதல் நடந்தபோது மோடி வாய் திறக்கவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா கலைச்செல்வி கொல்லப்பட்டபோது, இன்று வரையிலும் வாய் திறக்கவில்லை. குஜராத் தலித் மக்கள் செத்த பசுவை அகற்றப் போவதில்லை என்று முடிவு செய்ததுபோல், ராஜேந்திரனும் அவரைப் போன்றவர்களும் செய்தால் தமிழக அரசுக்கு புத்தி வரலாம்.
ராஜேந்திரனுக்கு இன்னும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணமாகி இருக்கிறது. இன்னொருவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கிறார். கலைச்செல்வி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இகக மாலெ குழு வலியுறுத்துகிறது.
தலித்துகள், பெண்கள், சிறுபான்மை மக்களின் அரசியல் சட்ட உரிமைகளைப் பாதுகாப்போம் கருத்தரங்கம்
ஆகஸ்ட் 7 அன்று விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் புரட்சிகர இளைஞர் கழகம் மறறும் அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கம் இணைந்து தலித்துகள், பெண்கள், சிறுபான்மை மக்களின் அரசியல்சட்ட உரிமைகைளப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தின. அவிகிதொச மாவட்டச் செயலாளர் தோழர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவிகிதொச அகில இந்தியத் துணைத் தலைவர் தோழர் பாலசுந்தரம், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், புரட்சிகர இளைஞர் கழக மாநிலச் செயலாளர் தோழர் தனவேல், இகக (மாலெ) ஒன்றியச் செயலாளர் ஜான்பாட்ஷா ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் வெற்றிவேல், கொளஞ்சிநாதன், கலியமூர்த்தி, ஜெய்ஹிந்த், மணிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 2 2016 ஆகஸ்ட் 16 – 31)

Search