காஷ்மீரிடம் இந்தியா என்ன சொல்ல வேண்டும்?
காஷ்மீர் விஷயத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

எஸ்.குமாரசாமி
காஷ்மீரிடம் இந்தியா என்ன சொல்லக் கூடாது என்பதற்கான மூன்று விஷயங்களை முதலில் பார்ப்பது நல்லது.
காஷ்மீரில் 56 பேர் கொல்லப்பட்ட பிறகு, 4,000 பேர் காயமடைந்த பிறகு, 3, 4 வயது குழந்தைகள் உட்பட 378 பேர் கண் பார்வை இழந்த பிறகு, கொந்தளிப்பு துவங்கி பல வாரங்கள் கடந்த பிறகுதான், இந்திய பிரதமர் காஷ்மீர் பற்றிப் பேசுகிறார். நாடாளுமன்ற அமர்வு இருக்கும் போதே, நாடாளுமன்றத்திற்கு வெளியில்தான் பேசுகிறார். வாஜ்பாய் வழியே தம் வழி என்றார் மோடி. மோடி சொன்னது, வெற்று வாய் வீச்சாக மட்டுமே இருந்தது. தட்டையான தேய்ந்துபோன ‘வளர்ச்சி’ முழக்கத்தைத் திரும்பவும் எழுப்பினார். லேப்டாப், கிரிக்கெட் பேட் பிடிக்க வேண்டிய இளைஞர்கள் கைகளில் கற்கள் தரப்பட்டுள்ளது, தமக்கு வலி தருவதாகச் சொல்கிறார்.
காஷ்மீர் மக்கள் தாமாகப் போராட வில்லை, யாரோ தூண்டிவிட்டு போராடுகிறார்கள் என்றும், உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாது என்றும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீர்வுக்கு நேர் எதிர்த் திசையில், பாகிஸ்தான் எதிர்ப்பு தேசபக்த உரை நிகழ்த்துகிறார்.
நாடாளுமன்ற மேலவையில் ஓர் அவல நாடகம், அஇஅதிமுக உறுப்பினரால் அரங்கேறியது. மக்கள் துன்பங்கள் பற்றிய, சொரணையற்ற கூருணர்வற்ற குற்றமயப் பண்புகளின் வெளிப்பாடாக, அந்த எம்பி, காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் ஒண்டர்ஃபுல் காஷ்மீர் என்ற எம்ஜிஆர் திரைப்படப் பாடலை அவையில் பாடுகிறார். காஷ்மீரின் பிரச்சனை எங்கு இருக்கிறது என்பதை அவையினர் கண்டறிய வேண்டும், அதுதான் தீர்வு என உளறுகிறார். இந்த அபத்தமான உரையை, அவையின் துணைத் தலைவர் குரியன் உணர்ச்சிபூர்வமான நாட்டுப்பற்று நிறைந்த உரை எனப் புகழ்ந்தார். இவற்றை எல்லாம் பார்க்கிற, கேட்கிற காஷ்மீர் மக்களுக்கு, காஷ்மீரின் இளம் போராளிகளுக்கு, இந்தியா பற்றி, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி என்ன நம்பிக்கை வரும்?
மோடி காஷ்மீர் பற்றி வாய் திறந்த அதே நாளில், இந்திய உச்சநீதிமன்றம், ‘காஷ்மீர் பிரச்சனை தொடர்பான ஒரு மனிதாபிமான அணுகுமுறை வேண்டும். அது இப்போது இல்லை. மக்கள் அன்போடும் பாசத்தோடும் நடத்தப்பட வேண்டும். அது இப்போது இல்லாததால், அரசாங்கம் அதனை உறுதி செய்ய வேண்டும்’ என, மொன்னையான அரசியலற்ற ஓர் அன்பான அணுகுமுறைக்காக வாதாடியது. காஷ்மீரின் மக்கள், நியாயம் கிடைக்காமல் அமைதி திரும்பாது என்கிறார்கள். வலி நிறைந்த வரலாற்றுத் துரோகங்கள் தொடர்வதை ஏற்க மறுக்கிறார்கள்.
வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது
1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாகப் பிரிந்தன. சுதந்திரத்தோடு, கொடிய பிரிவினையும் சேர்ந்தே வந்தது. ஜுனாகத், அய்தராபாத் சமஸ்தானங்கள், காஷ்மீர் ஆகியவையே, இந்தியாவுடன் செல்வதா, பாகிஸ்தானுடன் செல்வதா எனத் தீர்மானிக்காமல் இருந்தன. ஜுனாகத், குஜராத் எல்லைக்குள் இருந்தது. முஸ்லிம் மன்னர் இருந்தார். ஏகப்பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருந்தனர். மன்னர், பாகிஸ்தானோடு செல்ல விரும்பினார். வாக்கெடுப்பு நடந்தது. 91 பேர் மட்டுமே பாகிஸ்தானோடு இணைய விரும்பினர். ஏகப்பெரும்பான்மை மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்பினர். மக்கள் விருப்பம் நிறைவேறியது.
அய்தராபாத் சமஸ்தானத்தை ஆண்ட நிஜாம் மன்னர், சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, காட்டாட்சி நடத்தினார். கம்யூ னிஸ்ட்கள் தலைமையிலான வீரம் நிறைந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை ரத்த வெள்ளத்தின் மூழ்கடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். நிஜாமால் முடியாததை, சுதந்திர இந்திய அரசு செய்தது. போகிற போக்கில் அய்தராபாத் சமஸ்தானத்தை இணைத்துக் கொண்ட இந்திய அரசு, விவசாயிகள் எழுச்சியை கம்யூனிஸ்ட் புரட்சியை குறிவைத்து நசுக்கியது. இங்கேயும் முஸ்லிம் மன்னர், பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்ற நிலையே இருந்தது. இங்கு இந்தியாவுடன் இணைப்பு வித்தியாசமாக நடந்தது.
காஷ்மீரில் இந்து டோக்ரா மன்னர் ஹரி சிங் ஆண்டு கொண்டிருந்தார். பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்கள். ஷேக் அப்துல்லா, மக்கள் சார்பு மாற்றங்களுக்காக, மன்னர் ஆட்சியை அகற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார். இந்திய சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் பணியில் அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் படேலுடன் சேர்ந்து செயல்பட்ட, அரசு செயலர் வி.பி.மேனன், த ஸ்டோரி ஆப் த இண்டகிரேஷன் ஆப் இண்டியன் ஸ்டேட்ஸ் (இந்திய ராஜ்யங்கள் இணைந்த கதை) என்று ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அவர், 1947 ஆகஸ்ட் மாத நிலைமை பற்றிக் குறிப்பிடுகிறார். ‘நாங்கள் காஷ்மீரை இந்தியாவுடன் இணையச் சொல்லவில்லை. எங்களுக்குக் கை நிறைய வேலை இருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால், காஷ்மீரைப் பற்றி நினைக்க எனக்கு நேரம் இல்லை.’
ஜுன் 47ல், இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் ஆட்சித் தலைவர் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன், ‘பாகிஸ்தானோடு காஷ்மீர் சேர விரும்பினால், நான் அதனைத் தவறாகக் கருத மாட்டேன். இதற்கு படேலும் உறுதியான வாக்குறுதி தந்துள்ளார். மக்கள் கருத்தறிந்துதான் எதுவும் நடக்க வேண்டும்’ என்றார். உள் துறை அமைச்சர் வல்லபாய் படேல், பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங்கிற்கு 13.09.1947 அன்று எழுதிய கடிதத்தில், காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்தால், நாம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
அந்த காலகட்டத்தில், காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவுக்கு பாகிஸ்தான் மேல் நல்லெண்ணம் இல்லை. இந்தியா நோக்கிய சாய்வு இருந்தது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலிருந்த காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இருந்தனர். தேசப் பிரிவினையின் இரத்தச் சுவடுகள், காஷ்மீர் மீதும் அழுத்தமாய் விழுந்தன. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான களமாக, காஷ்மீர் மாறியது. பாகிஸ்தானிலிருந்து படையெடுத்து வந்த பழங்குடியினர், காஷ்மீருக்குள் நுழைந்து ஸ்ரீநகர் நோக்கி விரைந்தனர். இந்தப் பின்னணியில் காஷ்மீர் இந்தியாவுடன் சேரும் பத்திரத்தில் கையெழுத்திட்டது. விமானம் மூலம் இந்தியப் படைகள், காஷ்மீருக்கு விரைந்தன.
காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே, இந்தியா, காஷ்மீர் மீதான ஆக்ரமிப்பை முறியடிப் பதில் தலையிடும் என வி.பி.மேனன், மகாராஜா ஹரி சிங்கிடம் தெரிவித்தார். ஹரி சிங் 26.10.1947ல் இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து 7 படி, காஷ்மீர் மகாராஜா இந்தியாவின் வருங்கால அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்க வேண்டியதில்லை. ஷரத்து 8 படி, இணைப்பு ஒப்பந்தத்தின் எந்த ஷரத்தும், காஷ்மீரின் இறையாளுமையைப் பாதிக்காது. இந்த இணைப்பு ஒப்பந்த ஷரத்துக்களைக் கணக்கில் கொண்டே, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 370ஆவது ஷரத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்படி பாதுகாப்பு, நிதி, அயல்விவகாரம், தகவல் தொடர்பு தவிர மற்ற விஷயங்களில் இந்திய ஒன்றியம் போடும் எந்தச் சட்டமும், காஷ்மீர் சட்டமன்றம் ஒப்புதல் தந்தால் மட்டுமே, காஷ்மீருக்குப் பொருந்தும், இந்திய ஒன்றியம் போடும் சர்வதேச ஒப்பந்தங்கள், காஷ்மீருக்குப் பொருந்தாது. இந்திய தடுப்பு காவல் சட்டங்கள் காஷ்மீருக்குப் பொருந்தாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், காஷ்மீருக்குக் கூடுதல் அதிகாரங்கள் உண்டு.
அந்த ஆகஸ்ட் 1947 முதல் 1948 ஏப்ரல் வரையிலான காலத்தில் இந்தியா, பாகிஸ்தானோடு ஒரு முழுநிறைவான போரை விரும்ப வில்லை. காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவுடன் இருந்தது. மறுபகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் வந்த 21.04.1948 அய்நா தீர்மானத்தையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.
1. காஷ்மீர் இந்தியாவுடன் செல்லுமா பாகிஸ்தானோடு செல்லுமா என மக்கள் வாக்கெடுப்பு (பிளெபிசைட்) நடத்தப்படும்.
2. பாகிஸ்தான் படைகள், பாகிஸ்தான் வசம் இருந்த காஷ்மீரின் பகுதிகளிலிருந்து வெளியேறும்.
3. சட்டம் ஒழுங்கிற்கு தேவைப்படும் அளவுக்குப் போக, மீதமுள்ள இந்திய படையினரும் காஷ்மீரிலிருந்து வெளியேறுவார்கள்.
4. வாக்கெடுப்பு, இந்தியாவின் மேற்பார்வையில் நடக்கும்.
சங் பரிவார் கூட்டங்கள், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட, எப்போதுமே முயன்று வந்துள்ளன. நடைமுறையில், இந்திய ஒன்றியம், காஷ்மீரை ஆக்ரமிக்கப்பட்ட ஒரு பகுதி போலவும், காஷ்மீர் மக்களைப் பகைவர்கள் போலவுமே பல பத்தாண்டுகளாக நடத்தி வருகின்றது. ஆட்சிக் கலைப்பு, போலி தேர்தல்கள், போலி மோதல் கொலைகள், பல பத்தாண்டுகளாக ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை காஷ்மீருக்கு பொருத்தி, காஷ்மீரை இராணுவ பூட்ஸ் கால்களின் கீழ் வைத்திருந்தது ஆகியவையே யதார்த்தமாயின. சில பத்தாண்டுகள் இராணுவ ஆக்கிரமிப்பு என்றால், பல ஆயிரம் பேர் மரணம், சில ஆயிரம் பேர் காணாமல் போதல், மக்கள் திரள் புதைகுழிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, மக்களுக்கெதிரான பகையான வன்மம் ஆகியவை, கூடவே வரும் ஆபத்துக்களாகும். காஷ்மீருக்குத் தரப்பட்ட சிறப்பு அந்தஸ்து வாக்குறுதி, தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பு சுதந்திரம் என்பவற்றை எல்லாம் பறித்து, வஞ்சகம், ஒடுக்குமுறை ஆகியவற்றை மட்டுமே, காஷ்மீர் மக்களுக்கு வழங்கியதால்தான், காஷ்மீர் திரும்பத் திரும்ப கொந்தளிக்கிறது.
இன்றைய நிலை
இன்றைய காஷ்மீர் நிலையைப் புரிந்து கொள்ள, ஆல் இந்தியா செர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெற்று, இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய கல்வித்துறை இயக்குனராக உள்ள ஷா ஃபைசல் 19.07.2016 அன்று இண்டியன் எக்ஸ்பிரசில் எழுதியது காணத்தக்கதாகும்.
‘புர்ஹான் வானி கொல்லப்பட்ட மறுநாள், என் அலுவலகத்திற்கு, நான் மாறு வேடத்தில் ஒரு விவசாயி போல் பைஜாமா குர்தா அணிந்து சென்றேன். திருடனைப் போல், ஒவ்வொரு சோதனைச் சாவடியையும் தாண்டிச் சென்றேன். சீற்றமுற்ற இளைஞர்கள் என்னை அடையாளம் கண்டால், என் கதி அவ்வளவுதான். அந்த முக்கிய தருணத்தில், காஷ்மீரி எதிர் இந்தியன் என்ற இரட்டை நிலையில், தப்பான பக்கத்தில் மாட்டிக் கொண்டிருப்பேன். ஸ்ரீநகரின் பதின்பருவத்து இளைஞர்களைக் கேட்டால், இந்தியா, இவ்வளவு காலமாக, எப்படி மோசடி தேர்தல்கள் நடத்துவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைத்தல், போலி மோதல்கள் மற்றும் ஊழல் மூலம்தான் காஷ்மீரிகளோடு தொடர்பு கொண்டுள்ளது என்பதைச் சொல்வார்கள். இந்தியா என்றால், இராணுவ முகாம், போலீஸ் வண்டி, தொலைக்காட்சி விவாதங்களில் முதன்மை நேரத்தில் காஷ்மீருக்கு எதிராக கூப்பாடு போடுபவர்கள் என்று பொருளாகி உள்ளதை, உங்களுக்குச் சொல்வார்கள். இவையே இந்தியா பற்றிய கருத்துக்களாக இருக்கும்போது, காஷ்மீரி இதயங்களை எப்படி வெல்ல முடியும்?’
திரும்பவும் திரும்பிப் பார்த்தால்
திரும்பவும், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவும், காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் நடத்தி காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஒன்று மத்தியில் வருவதை உறுதி செய்யப் பாடுபட்டவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனும், காஷ்மீர் பற்றிச் சொன்ன விஷயங்களைப் பார்த்து விட்டு, காஷ்மீரிடம் இந்தியா என்ன சொல்ல வேண்டும், காஷ்மீர் விஷயத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.
காஷ்மீர் இந்தியாவில் இணையும் பத்திரம் 26.10.1947 அன்று கையெழுத்தானது. 25.10.1947 அன்று நேரு சொன்னார்: ‘நெருக்கடியான சூழலில், காஷ்மீருக்கு உதவுவது, காஷ்மீரை இந்தியாவில் இணைய வைக்கும் நோக்கம் கொண்டதல்ல. சர்ச்சைக்குரிய எந்தப் பகுதியையோ, மாநிலத்தையோ, இந்தியாவில் இணைப்பது என்பது மக்கள் விருப்பங்களுக்கேற்ப முடிவு செய்யப்பட வேண்டும்.’
01.05.1956ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நேருவுக்கு எழுதினார்: ‘என்னிடம் உள்ள தகவல்படி, காஷ்மீரி முஸ்லிம்களில் 95% பேர் இந்தியாவின் குடிமக்களாக இருப்பதை விரும்பவில்லை. நம்மோடு இருக்க விரும்பாதவர்களை ‘பலாத்காரமாக’ நம்மோடு இருக்க வைப்பது சரி அல்ல. பலாத்காரமாய் இருக்க வைப்பது, உடனடி கொள்கைக்கும், மக்களைத் திருப்திப்படுத்தவும் பொருத்தமாய் இருக்கலாம். ஆனால், அது நீண்டகால அரசியல் விளைவுகள் கொண்டிருக்கும்.’ ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இந்தக் கடிதம், போலித் தேசியப் பெருமிதம், தேசபக்தி ஆகியவற்றின் பெயரால், காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்திருப்பது பயனில்லை என்கிறது. ஜெபி நிறுவ உதவிய மத்திய ஜனதா அரசில், சங்பரிவாரின் வாஜ்பாயியும் அத்வானியும் இடம் பெற்றதை, நரேந்திர மோடி துவங்கி பாஜகவின் சில்லறை தலைவர்கள் வரை, அறிவார்கள். ஜெபியின் தேச பக்தியை கேள்வி கேட்க மாட்டார்கள்.
அடுத்து 15.09.1964ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஹிந்துஸ்தான் டைம்சில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளைக் காண்போம்: ‘காஷ்மீர் நமது மதச்சார்பின்மைக்கு உதாரணமாகக் காட்டப்பட வேண்டும் என்பதால், காஷ்மீருக்கு மகத்தான மதிப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. மதச்சார்பின்மை பற்றி இப்படிப் பேசுபவர்களுக்கு, தற்போதைய சூழ்நிலையில் உள்ள விந்தைமுரண் புரிகிறதா எனத் தெரியவில்லை. இந்திய மதச்சார்பின்மையின் உதாரணமாய்க் காட்டப்படும் காஷ்மீரில், இப்போது மோசமான இந்துமதவாத எழுச்சி உள்ளது. இந்தப் போக்கைச் சுலபமாகக் காண முடிகிறது. இது தேசியவாதம் என்ற முகமூடியுடன் செயல்படுகிறது. இந்தியா ஓர் இந்து பெரும்பான்மை நாடாக இருப்பதால், இந்திய தேசியவாதம் என்ற போர்வையில் இந்துமதவாதம் செயல்படுவது மிகச் சுலபமானது.’ ‘காஷ்மீர் இந்திய மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு என்று சொல்வதற்கு என்ன பொருள்? காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இசுலாமிய பாகிஸ்தானோடு இணையாமல், இந்துப் பெரும்பான்மையுடைய மதச்சார்பற்ற இந்தியாவில் வாழ சுதந்திரமாக முடிவு எடுத்துள்ளது, இந்திய மக்களின் மதச்சார்பற்ற அணுகுமுறையைக் காட்டும் என்று சொல்லப் பார்க்கிறோம். ஆனால், நாம் காஷ்மீர் முஸ்லிம்களை பலாத்காரமாக வைத்திருந்தால், அதுவும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு உதாரணம் ஆகுமா? இந்தக் கேள் வியே, இந்த விஷயத்தின் அபத்தத்தை உணர்த்தும். நம் நாட்டின் மதச்சார்பின்மையைக் காட்ட, காஷ்மீரை பலாத்காரமான விதத்திலாவது இந்திய ஒன்றியத்திற்குள் வைத்திருப்பதற்கான ஒரு மனோநிலை பரவலாக உள்ளது.’
ஜெ.பி. மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டுச் சாடுகிறார்.
1. நேரு, இந்தியா பாகிஸ்தானை விட மேலானது, இந்தியா மதச்சார்பற்ற நாடு, பார் பார், காஷ்மீர் பாகிஸ்தானில் இல்லாமல் இந்தியாவில் இருக்கிறது எனக் காட்ட விரும்பினார்.
2. இந்துத்துவா சக்திகள், இந்திய தேசம், தேசியவாதம் என்ற முகமூடியில் காஷ்மீரை ஆக்கிரமித்து வைக்க விரும்புகிறார்கள்.
3. இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே, காஷ்மீர் மக்களின் விருப்பங்களைக் கணக்கில் கொள்ளாமல், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி அவர்களை பலாத்காரமாக இந்தியாவில் வைத்திருப்பதற்கே இட்டுச் சென்றுள்ளன.
காஷ்மீருக்கு இந்தியா என்ன சொல்ல வேண்டும்? காஷ்மீர் விஷயத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
காஷ்மீரில் அமைதி திரும்ப, காஷ்மீர் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.
மேலும் மேலும் படையினரை காஷ்மீருக்கு அனுப்புவதற்குப் பதிலாக, காஷ்மீரில் இருந்து ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தையும், படையினரையும் திரும்பப் பெற வேண்டும்.
போலி மோதல் கொலைகள், பாலியல் வன்முறை குற்றங்கள் அனைத்தும் விசாரணைக் குட்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும்.
காஷ்மீர் மக்களின் சுயஅறிவையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில், பாகிஸ்தான் மீது பழி சுமத்துவது என்பதை நிறுத்திக் கொண்டு, பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை, வாக்கெடுப்பு கோருவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த முறை பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்வு காண ஒப்புக்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் நியாயத்திற்காக காத்திருக்கிறது. இந்திய மக்கள் சார்பாக, அவர்களின் வரலாற்றையும் வலியையும் உணர்ந்து, அவர்களோடு பேசி, விரைந்து அரசியல் தீர்வு காண்பது, காஷ்மீருக்கு, இந்தியாவுக்கு, இந்த துணைக் கண்டத்துக்கு, அமைதிக்கு, நல்லது.