COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 1, 2016

நெல்லையில் சாதிவெறி மதவெறி சக்திகளின் தாக்குதல். இகக மாலெயின் தோழர் மாரியப்பன் படுகொலை
“எனக்கு கட்சியும் சங்கமும் இருக்குன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. இப்போ அவர் செத்த பிறகு, இந்த மக்களுக்காக கட்சி இருக்குங்கிறதை அவர்கள் தெரிஞ்சுக்க வாய்ப்பா இருக்கட்டுமே... அவரை இன்னும் இரண்டு நாள் கழிச்சுகூட வாங்கிக்கலாம்...”
நெல்லை பாட்டப்பத்தில் இருபத்து நான்கே வயதான தோழர் மாரியப்பனைக் கொடூரமான முறையில் கொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை அவரின் உடலை வாங்க மறுத்து நடந்து கொண்டிருந்த போராட்டத்தினூடே தோழர் மாரியப்பனின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவி இசக்கியம்மாள் என்ற நித்யா கூறியது. தோழர் மாரியப்பனுக்கும் நித்யாவிற்கும் திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகின்றன.
தோழர் மாரியப்பன் சலவைத் தொழிலாளி. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உறுப்பினர். நெல்லை செண்பகம் பிள்ளைத் தெரு, பாட்டப்பத்துப் பகுதிகளில், திருநெல்வேலி மாநகராட்சி 43, 44ஆவது வார்டுகளில் 180 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள் 2006-2007ல் ஏஅய்சிசிடியு சங்கத்தில் சேர்ந்தார்கள்.  அவர்களில் 30 பேர் எம்எல் கட்சியில் சேர்ந்தார்கள். 
சலவைத் தொழிலாளர் சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சார்ந்தவர்கள் என்றபோதிலும் அவர்களையும் பட்டியலின மக்களைப் போல்தான் ஆதிக்கச் சாதியினர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பகுதியில் சலவைத் தொழிலாளர் சமுதாய மக்களையும் மற்றவர்களையும் அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்தி வந்த, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு பின்னர் திருநெல்வேலி மாநகரத் துணை மேயரான விஸ்வநாத பாண்டியன் குடும்பத்தாரின் கட்டளையையும் மீறி, கணிசமான சலவைத் தொழிலாளர்கள் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எம்எல் கட்சிக்கு வாக்களித்தார்கள்.
2011  உள்ளாட்சித் தேர்தல்களில் சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தோழர் வெங்கட்ராமன் எம்எல் கட்சியின் வேட்பாளராக 43ஆவது வார்டில் போட்டியிட்டார். அந்த வார்டில் விஸ்வநாதபாண்டியன் மகன் பொன்னையா பாண்டியன் திமுக சார்பில் போட்டியிட்டார். தோழர் மாரியப்பனின் தந்தை சங்கர் 44ஆவது வார்டு கட்சிக் கிளைச் செயலாளர். அந்த வார்டில் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த பொதுக் கழிப்பிடம், தாய் சேய் நல மருத்துவமனை போன்றவற்றைச் சீரமைக்க எம்எல் கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. 43ஆவது வார்டில் அடிப்படை வசதிகளுக்காக, கால்வாய் சீரமைப்பிற்காக எம்எல் கட்சி போராட்டங்கள் நடத்தியது. இதனால் இரண்டு வார்டுகளின் கவுன்சிலர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. அடிமைப்பட்டுக் கிடந்த சலவைத் தொழிலாளர்கள் அரசியல் சக்தியாக வளர ஆரம்பித்தார்கள்.
இந்தச் சூழலில் 2013ல் கோனார் சமுதாயத்தைச் சேர்ந்த, இந்து முன்னணியில் பொறுப்பில் இருந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள சுந்தர்ராஜன் என்பவர் வீட்டுத் திருமண நிகழ்ச்சி சுவரொட்டியில் சாணி அடித் திருந்தது தொடர்பாக சலவைத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தோழர் மாரியப்பன் இதற்கெதிராக கேள்வி எழுப்பியபோது அவரும் தாக்கப்பட்டார். அது தொடர்பாக தோழர் மாரியப்பன் நெல்லை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் சுந்தர்ராஜன் மற்றும் கூட்டாளிகள் சிறை சென்றனர்.
இரண்டு மாதங்கள் கழித்து பிணையில் வந்த சுந்தர்ராஜன், தோழர் மாரியப்பனை புகார் கொடுத்ததற்காக மிரட்டினார். அது தொடர்பாக மாரியப்பன் தரப்பில் புகார் தரப்பட்டது. காவல் நிலையத்தில் புகாரை வாங்கிக் கொண்டு, சுந்தர்ராஜனிடம் பதில் புகார் வாங்கி தோழர் மாரியப்பன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2014 ஆகஸ்டு மாதம் சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த இசக்கி என்ற பெரியவரின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக நீர்மாலைக்கு சென்று வந்தபோது கோனார் சமூகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அவரது உறவினர் பேச்சிவேல் மற்றும் சிலர் சேர்ந்து, வண்ணா பயலுக இந்தப் பகுதியில் வரக்கூடாது என்று சொல்லி, நீர்மாலைக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்த சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு மாரியப்பனின் தொடையில் வெட்டினார்கள். அவர் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால்,  சுந்தர்ராஜனின் ஆட்டோவை அடித்து நொறுக்கினார்கள் என்று, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், எம்எல் கட்சியின் நெல்லை நகர உள்ளூர் கமிட்டிச் செயலாளர் தோழர் எம்.சுந்தர்ராஜ் உட்பட சலவைத் தொழிலாளர்கள் 6 பேர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்தனர்.  இந்தப் பொய் வழக்கு போடுவதற்கு இந்து முன்னணியின் பொறுப்பாளர்கள் சிலர் முக்கிய பங்காற்றினர். அவர்களின் தூண்டுதலின் பேரில், பல ஆண்டு காலமாக இருந்துவந்த வழக்கத்திற்கு மாறாக கோனார் சமுதாய மக்கள் வாழும் தெரு வழியாக சலவைத் தொழிலாளர்களின் இறுதியாத்திரை செல்லக் கூடாது என்று கோரிக்கை வைத்து புகார் கொடுத்தார்கள். அதற்கு எதிராக, வழக்கத்தை மாற்ற முடியாது என்று எம்எல் கட்சி போராடியது.
அந்தப் பகுதியில் நடக்கும் சாதி வெறி, மதவெறி சம்பவங்களுக்கு எதிராக, குறிப்பாக  சுந்தர்ராஜன் கும்பல்களின் அடாவடிச் செயல்களுக்கு எதிராக தோழர் மாரியப்பனோ மற்றவர்களோ புகார் கொடுக்கும் போதெல்லாம் புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர் காவல்துறையினர்.
பாட்டப்பத்துப் பகுதியில் இஸ்லாமிய மக்களும் வசிக்கிறார்கள். புதிய வழக்கமாக பாட்டப்பத்துப் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாரை வைத்து, அவர்களின் பள்ளிவாசல் வழியாக பிள்ளையாரைக் கொண்டு செல்வோம் என்று இந்து முன்னணி பாஜக கும்பல்கள் பிரச்சனை செய்தனர். ஆதிக்க சாதியினரைச் சேர்ந்த கிரிமினல்கள் எல்லாரும் அதற்கு ஆதரவு தந்தனர். சலவைத் தொழிலாளர்கள் எம்எல் கட்சி ஆதரவாளர்கள் என்பதால் இந்து முன்னணியினரின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
இந்த நிலைமைகளில், தோழர் மாரியப்பன் தன் மீதான வழக்குகளைச் சந்தித்துக் கொண்டே, தான் புகார் கொடுத்த எதிரிகள் சுந்தர்ராஜன், பேச்சிவேல், சண்முகசுந்தரம்  என்ற சிவா, ராமய்யா ஆகியோர் மீதான வழக்குகளில் தான் சாட்சி சொல்லியும் மற்ற சாட்சிகளை அழைத்துச் சென்று சாட்சி சொல்ல வைப்பதிலும் ஈடுபட்டிருந்தார்.
ஜுலை 20 அன்று சாட்சி விசாரணைக்காகச் சென்றிருந்தபோது நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன், தோழர் மாரியப்பனைப் பார்த்து சாட்சியையா அழைத்து வருகிறாய், உன் கழுத்தை அறுத்துவிடுகிறேன் பார் என்று மிரட்டியுள்ளார். சாட்சி விசாரணை முடிந்து மாலை வீட்டிற்கு வந்தவர் இந்த விவரங்களை தன் பெற்றோரிடமும் மனைவியிடமும் சொல்லி விட்டு, வெளியே சென்று விட்டு வந்து விடுகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பவே இல்லை.
இரவு இரண்டு முறை மாரியப்பனின் தந்தை தோழர் சங்கர் காவல்நிலையத்தில் சென்று புகார் செய்துள்ளார். அன்று இரவே காவல்துறையினர் அந்த நான்கு நபர்களையும் சந்தேகத்தின் பேரில் தேடியுள்ளனர். யாரும் வீட்டில் இல்லை. மறுநாள் ஜுலை 21 காலை பாட்டப்பத்து வயல்காட்டில் வாய்க்கால் கரையோரம் தோழர் மாரியப்பனின் உடல் தலையில்லாமல் கிடந்தது.
மோப்ப நாய் வந்தது. தலையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. குற்றவாளிகளைப் பிடித்தால்தான் தலையைக் கண்டுபிடிக்க முடியும் என்கிற நிலை. எம்எல் கட்சியின் தலைமையில் சலவைத் தொழிலாளர்கள் திரண்டனர். முதலில் பேச்சிவேல் பிடிபட்டார். ஜுலை 21 அன்று 5 கி.மீ தொலைவில் உள்ள குன்னத்தூர் குன்றில் தலை கண்டெடுக்கப்பட்டது. ஜுலை 22 அன்று குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த சிலரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆனால், முக்கியக் குற்றவாளியான சுந்தர் ராஜனை கைது செய்யாமல் தோழர் மாரியப்பனின் உடலை வாங்கி அடக்கம் செய்யச் சொன்னார்கள் காவல்துறை அதிகாரிகள். முக்கிய குற்றவாளியான சுந்தர்ராஜனைக் கைது செய்தால்தான் உடலைப் பெறுவோம் என்று சொல்லி 300க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள் பாட்டப்பத்தில் பந்தல் அமைத்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் நயந்து பேசினார்கள். பின்னர் மிரட்டினார்கள். நள்ளிரவில் தோழர் மாரியப்பன் வீட்டிற்குச் சென்று தோழர் சங்கர் மற்றும் குடும்பத்தாரை, முக்கிய குற்றவாளியைக் கைது செய்துவிட்டோம், கையெழுத்து போடுங்கள், உடலை வாங்குங்கள் என்று மிரட்டினார்கள். 
ஜுலை 23 மாஞ்சோலைத் தியாகிகள் நினைவு நாள். எல்லா கட்சித் தலைவர்களும் நெல்லைக்கு வருவார்கள். அதனால், முக்கிய குற்றவாளியைக் கைது செய்தால்தான் உடலைப் பெறுவோம் என்று போராட்டத்தில் இருப்பவர்களை எப்படியாவது கலைத்து விட்டு, அவனை நீதிமன்றத்தில் சரணடையச் செய்து விடச் செய்யலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக பெண்களைத் தரக்குறை வாகப் பேசினார்கள். பொட்டு வச்சு, பவுடர் போட்டுட்டு வர்றீங்க. இழவு வீட்டுக்கு வர்ற மாதிரி தெரியலையே என்று கீழ்த்தரமாகப் பேசினார்கள் சில காவல் அதிகாரிகள்.
எம்எல் கட்சித் தோழர்களும் பெண்களும் இதற்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். இதுபோல் பேசும் அதிகாரிகள் அவ்விடத்தை விட்டுச் செல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராகவும் கோரிக்கை வைத்து அது நிறைவேறும் வரை நாங்கள் தோழர் மாரியப்பனின் உடலை வாங்க மாட்டோம் என எச்சரிக்கை செய்தனர். அதனைத் தொடர்ந்து அது போன்ற அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர்.
இதற்கிடையே, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், இசக்கியம்மாளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாரியப்பன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியரிடம் தோழர் மாரியப்பன் மனைவி இசக்கியம்மாளும் எம்எல் கட்சியும் மனு கொடுக்கச் சென்றபோது மாவட்ட ஆட்சியர் இல்லை. அவரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவர் நான் உங்கள் கோரிக்கைகளை ஆட்சியர் மூலம் அரசுக்குப் பரிந்துரைக்கிறேன், நீங்கள் மாரியப்பன் உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். மாரியப்பன் மனைவி இசக்கியம்மாள், ‘அவனை மட்டுமல்ல, அவன் பெண்டாட்டி வயிற்றில் இருக்கும் குழந்தையையும் அழிப்பேன், இல்லையென்றால், அந்த வண்ணாப் பய பிறந்து என்னை எதிர்ப்பான் என்று அந்தக் குற்றவாளி மிரட்டியுள்ளான், எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும், அவனை நீங்கள் கைது செய்தால்தான் எங்களுக்குப் பாதுகாப்பு’ என்று கூறினார்.
அதன் பின்னர் பந்தலுக்கு வந்த காவல் துறை உயர்அதிகாரிகளிடமும் மிகவும் தெளிவாக, முதல் குற்றவாளி சுந்தர்ராஜன் கைது செய்யப்பட வேண்டும், நாங்கள் தாழ்ந்த சாதியில் பிறந்து விட்டதால், அவனால் என் கணவரும் மற்றவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள், ஏய் வண்ணாப்பயலே நீங்கெல்லாம் என்னல வெள்ள சட்டை போடுறீங்க என்று காரித்துப்பி தரக்குறைவாகப் பேசியுள்ளான், மிரட்டியுள்ளான், நீங்க அவனை அரஸ்ட் செய்யுங்க, நான் உடனேயே என் கணவரைப் பெற்றுக் கொள்கிறேன் என்று மிகத் தெளிவாகக் கூறினார். அந்த உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தினால் காவல்துறை அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்தது.
அதன் பின்னர் ஜுலை 23 மாலை தோழர் மாரியப்பனின் உடல் பெறப்பட்டு, எவ்வித சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் வீர முழக்கத்துடன் அடக்கம் செய்யப்பட்டது.
தோழர் மாரியப்பன் எந்தச் சூழ்நிலையிலும் நான் கட்சியோடுதான் இருப்பேன் என்றவர். அவரின் திருமணத்தின் போது ரூ.2000, அவர் தங்கையின் திருமணத்தின்போது ரூ.3000 தீப்பொறி பத்திரிகைக்கு நன்கொடை அளித்து கம்யூனிஸ்ட் கட்சி கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் அவர்கள் குடும்பத்தார். தோழர் மாரியப்பன் மதவெறி, சாதியாதிக்க வெறி, குற்றக்கும்பல்களுக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டவர். அதன் காரணமாகவே சாதியாதிக்க வெறி கொண்டு, மதவெறிச் சக்திகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சமூக விரோத சக்திகளால் இன்று கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அரசும் காவல்துறையும் இந்த சமூக விரோதக் குற்றக்கும்பல்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப் பட்ட மக்கள் புகார் கொடுக்கும்போது புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்து காவல்நிலையம் பக்கம் போவதற்கே அஞ்சும் அளவு செய்து விடுகின்றனர். இப்போதும் அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும் கட்சியின் பிரமுகர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகத் தெளிவாக சமூக விரோத, மதவெறி, சாதியாதிக்கக் குற்றக்கும்பல்களை ஊட்டி வளர்க்கிறார்கள். இதற்கு எதிராக இடதுசாரி ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவரச அவசியத் தேவையாகும்.
தோழர் மாரியப்பன் படுகொலையைக் கண்டித்து நெல்லையில் இகக மாலெ கண்டன ஆர்ப்பாட்டம்
சமூக விரோத, மதவெறி, சாதியாதிக்கக் கும்பல்களின் வன்முறைச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், படுகொலை செய்யப்பட்ட மாரியப்பன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வேண்டும், மாரியப்பனின் மனைவி இசக்கியம்மாளுக்கு அரசு வேலை வேண்டும், மாரியப்பன் குடும்பத்திற்கும் மிகவும் பின்தங்கிய சமூகமான சலவைத் தொழிலாளர் மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும், நெல்லை நகர காவல் நிலையத்தில் மாரியப்பன் குடும்பத்தினர் மற்றும் அவர் சார்ந்த சமுதாய மக்கள், சிபிஅய்எம்எல் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜுலை 29 அன்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நெல்லை நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் பாலசுந்தரம், வீ.சங்கர், நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், அகில இந்திய மக்கள் மேடை தேசியக் கவுன்சில் உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் கரிசல் மு.சுரேஷ், தமிழ்நாடு வண்ணார் பேரவை பொதுச் செயலாளர் கே.பி.மணிபாபா, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் நா.கதிர்வேல், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ராஜேஷ், ஏஅய்சிசிடியு நெல்லை மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கே.கணேசன், அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் திவ்யா மற்றும் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர். நெல்லை நகரக் கமிட்டிச் செயலாளர் தோழர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
தோழர் மாரியப்பன் படுகொலைக்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் இகக மாலெ எதிர்ப்புப் போராட்டங்கள்
சமூக விரோத, மதவெறி, சாதியாதிக்கக் கும்பல்களின் வன்முறைச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், படுகொலை செய்யப்பட்ட மாரியப்பன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வேண்டும், மாரியப்பனின் மனைவி இசக்கியம்மாளுக்கு அரசு வேலை வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 21 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முதலில் சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜுலை 22 முதல் 25 வரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் இணைந்து புழலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. கோவையில் பிரிக்கால் பிளான்ட 1 மற்றும் 3 ஆலை வாயில்களிலும் சாந்தி கியர்ஸ் ஆலை வாயில்களிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இகக மாலெ பதாகையில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை, விழுப்புரம், நாமக்கல், தஞ்சை, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அகில இந்திய மக்கள் மேடையின் உண்மை அறியும் குழு
தோழர் மாரியப்பன், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இதன் பின்னுள்ள உண்மை விவரங்களைக் கண்டறிய அகில இந்திய மக்கள் மேடையின் உண்மை அறியும் குழு 26.07.2016 அன்று திருநெல்வேலிக்கு வந்தது. மக்கள் மேடையின் தமிழ்நாடு பிரச்சாரக்குழு உறுப்பினரும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில உதவித் தலைவருமான முனைவர் இரா.முரளி தலைமையில் வந்த உண்மையறியும் குழுவில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கர்நாடக மாநிலத் தலைவர் டாக்டர் வி.லட்சுமிநாராயணன், மக்கள் மேடையின் தேசியக் கவுன்சில் உறுப்பினர் ஜி.ரமேஷ், மக்கள் மேடையின் மாநிலப் பிரச்சாரக்குழு உறுப்பினர் ஆர்.வித்யாசாகர்,  மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில இணைச் செயலாளர் முனைவர் பாத்திமா பாபு, மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொருளாளர் பி.கண்மணி, அகில இந்திய மாணவர் கழக கர்நாடக மாநிலச் செயலாளர் டி.பிரசாத் மற்றும் இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Search