COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 22, 2016

ஆற்றலை யதார்த்தமாக்குவது நோக்கி ஏஅய்சிசிடியு பயிலரங்கு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்க முன்னணிகள் கலந்து கொண்ட இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் திருபெரும்புதூரில் ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 100 தொழிலாளர் முன்னோடிகள் பங்கு பெற்றனர். திருபெரும்பு தூர் பகுதியின் புதிய இளம் தோழர்கள் பலர் முதன்முறையாக கலந்துகொண்டனர்.
முதல் நாள் நிகழ்வில் ஏஅய்சிசிடியு நடத்திய முன்னுதாரணமிக்க ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஜிம்கானா கிளப் தொழிலாளர்கள் போராட்ட அனுபவங்களை தோழர்கள் ராஜேஷ் மற்றும் ஜேம்ஸ் எடுத்துரைத்தார்கள். தீப்பொறி இதழில் வெளியான ‘ஒரு சட்டம் உயிர் பெற்றது’ கட்டுரை வாசிக்கப்பட்டது.
இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினார். சர்வதேச, தேசிய, மாநில வரலாறு, அரசியல், பொருளாதாரம், தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்கு தோழர்கள் 6 குழுக்களாக பிரிந்து கலந்துரையாடி விடையளித்தனர்.
1848ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி பேராசிரியர் முருகன் உரையாற்றினார். அவரது உயிரோட்டமான உரை தொழிலாளர்கள் இயல்பாக பற்றிக் கொள்ளும்படி இருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.ரமேஷ், தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதில் நீதிமன்றங்களுக்கு உள்ள எல்லைகளை சுட்டிக் காட்டினார். வலுவான தொழிலாளர் போராட்டங்களே உண்மையிலேயே உரிமைகளை உத்தரவாதம் செய்யும் என்றார். தொழிலாளர்களின் சட்டரீதியான பல்வேறு சந்தேகங்களுக்கு வழக்கறிஞர் கே.எம்.ரமேஷ் விளக்கமளித்தார். ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் ஒப்பந்த உணவு விடுதித் தொழிலாளர்களின் வழக்கு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், அடுத்த கட்ட வேலைகள் பற்றிய சித்திரத்தை முன்வைத்தார். வழக்கறிஞர்களின் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றிய தோழர் பாரதி பார் கவுன்சில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ஒட்டி ஒருமைப்பாடு பத்திரிகையில் வெளிவந்துள்ள அவரது பேட்டி வாசித்து விவாதிக்கப்பட்டது.
செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது பற்றியும் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக்குவது பற்றியும் பயிலரங்கில் கலந்துகொண்ட முன்னணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விவாதித்தனர். குழு பிரதிநிதிகள் இந்தக் கடமைகள் தொடர்பான தங்கள் விவாதங்களை தொகுத்து முன்வைத்தனர்.
ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி, தொழிலாளர் முன்னோடி களிடம் உள்ள ஆற்றலை யதார்த்தமாக்க என்ன செய்ய வேண்டும், எப்படி செயலாற்ற வேண்டும் என உரையாற்றினார். தீப்பொறி, ஒருமைப்பாடு பத்திரிகைகளின் அவசியம் பற்றியும் பேசினார்.
பயிற்சி முகாமின் முதல் நாள் இரவு, நியுமெக்சிகோ சுரங்கத் தொழிலாளர் போராட்டத்தில் அவர்கள் குடும்பத்து பெண்கள் பங்கு பற்றிய ‘சால்ட் ஆஃப் த எர்த்’ என்ற ஆங்கிலப் படம் திரையிடப்பட்டது. 
பயிலரங்க பங்கேற்பு தொடர்பான உணர்தல்கள் பற்றி பேசி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏசியன் பெயின்ட்ஸ் ஊழியர், சங்கத்தில் சேர்ந்ததற்காக தன்னை நிர்வாகத்தினர் கேலி பேசியதைக் குறிப்பிட்டு, தனது உடலில் தொழிலாளர் ரத்தம்தான் ஓடுகிறது என்று அவர்களுக்கு பதில் சொன்னதாகவும் சங்கத்தில் சேர்ந்ததற்காக தான் பெருமைப்படுவதாகவும் சொன்னார்.
கோவையை பொலிவுறு நகராக்கும் பணியில் 60 ஆண்டுகளுக்கு மேல் உழைக்கும் அருந்ததியர் மக்களுக்கு குடிமனைப் பட்டா கோரி இயக்கம்
கோவை மாநகராட்சி 21ஆவது வட்டம் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் குடும்பத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகிறார்கள். மாநகர பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள், சுத்திகரிப்பு பணிகள் போன்றவற்றில் பணியாற்றி வரும் இவர்களுக்கு குடிமனைப் பட்டா இல்லை. நகரக் கட்சியமைப்பும், புரட்சிகர இளைஞர் கழகமும் பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்தின.
குடிமனைப் பட்டா கோரி தனித்தனியாக விண்ணப்பங்கள் தயாரித்து, 08.08.2016 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆட்சியரை சந்தித்து மனுக்கள் தரப்பட்டன. ஆட்சியர் இரண்டு தினங்கள் கழித்து நேரில் வந்து மீண்டும் சந்திக்கும்படி கூறினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் வேல்முருகன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்பிரமணியன், மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தாமோதரன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் நாராயணன், சுபா பிளாஸ்டிக் தோழர் ஜான், 21ஆவது வட்டச் செயல்வீரர்கள் தோழர்கள் மணிவண்ணன், விஜயன், நாகராஜ், ஸ்ரீதர், சரவணக்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ரயில்வே தொழிலாளர் கூட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய உணவு விடுதியில் 1983ல் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்த 60 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராடியபோது, ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், போராட்டத்தின் முன்னணியில் இருந்தார். பல கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் விடாப்பிடியாக நடந்த உறுதியான போராட்டங் களின் விளைவாக அவர்கள் 60 பேரும் ரயில்வே ஊழியர்களாக நிரந்தர அந்தஸ்து பெற்றார்கள். ஆகஸ்ட் 9 அன்று தோழர் எ.எஸ்.குமார் அந்தத் தொழிலாளர்கள் பெரம்பூர் ரயில் மேடையில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு, செப்டம்பர் 2 வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி உரையாற்றினார். தாங்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக இருப்பதற்கு தோழர் எ.எஸ்.குமார் மேற்கொண்ட முயற்சிகள் முக்கிய காரணம் என்று சொன்ன அந்தத் தோழர்கள், தோழர் எ.எஸ்.குமாரின் டர்பன் பயணத்துக்கு நிதி திரட்ட அந்தக் கூட்டத்தில் முடிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம், பேயங்கோயில் பகுதிகளில் 
சாலையை சீரமைக்க வலியுறுத்தி இகக(மாலெ) போராட்டம்
ராஜக்கமங்கலம் மேற்குக் கடற்கரை சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஜ÷லை 24 அன்று இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அய்யப்பன் தலைமையில் வாழைக்கன்றுகள் நடும் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மேரிஸ்டெல்லா, சுசீலா உட்பட கலந்து கொண்டனர்.
பேயங்கோயில் முத்தாரம்மன் வீதியிலும் குண்டும் குழியுமான பாதையை செப்பனிடக் கோரி 31.07.2016 அன்று ஆர்ப்பட்டம் நடைபெற்றது. தோழர் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அந்தோணிமுத்து, மேரிஸ்டெல்லா, சுசீலா, கணபதி, செல்வராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இகக(மாலெ) நடத்திய போராட்டங்களால் இப்போது சாலையை செப்பனிடும் பணி துவங்கி நடைபெறுகிறது.
விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் மரணம்: இகக(மாலெ) தலையீடு
ஆகஸ்ட் 6 அன்று மதுரை, கோச்சடையிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் அடைப்பை சுத்தம் செய்ய சென்ற தலித் தொழிலாளி சோலைநாதன் விஷவாயு தாக்கி மரணமடைந்தார். இளம் தொழிலாளியான அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இவரைப் பணிக்கமர்த்திய குடியிருப்பின் செயலாளர், போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரவில்லை. அதனாலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இகக(மாலெ)யின் தோழர் திவ்யபாரதி சம்பவ இடத்திற்குச் சென்று சோலையப்பனின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உதவி செய்தார். மனிதக் கழிவுகளை மனிதர் அள்ள தடை செய்யும் சட்டம் 2013 மற்றும் வன்கொடுமை திருத்தச் சட்ட விதிகள் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தோழர் திவ்யபாரதி உதவினார்.
ஆகஸ்ட் 7 அன்று அருந்ததிய மக்கள் குடியிருக்கும் மேலவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தோழர் சோலைநாதன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அவர் மனைவிக்கு அரசு வேலை என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வருவாய் கோட்டாட்சியரிடம் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ரூ.10லட்சம் இழப்பீடு வழங்க முடிவாகி உடனடியாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் இகக(மாலெ) உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளும் தமிழ்ப்புலிகள், ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் கலந்துகொண்டன. 
செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் நோக்கி அனைத்திந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்க ஊழியர் கூட்டங்கள்
செப்டம்பர் 2, வேலை நிறுத்தம் நோக்கிய தயாரிப்பின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 2 அன்று கந்தர்வகோட்டையில் மாவட்ட ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் அவிகிதொச அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாலசுந்தரம் கலந்து கொண்டார்.
ஆகஸ்ட் 9 அன்று கந்தர்வக்கோட்டை ஒன்றிய அளவிலான கூட்டம் தோழர் வளத்தான் தலைமையில் நடைபெற்றது. இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி உரையாற்றினார். செப்டம்பர் 2 வேலை நிறுத்த செய்தியை கிராமப்புறப் பகுதிகளில் திறம்பட எடுத்துச் செல்லவும், வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய அனைத்து நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூட்டம் முடிவு செய்தது.
பகத்சிங் அம்பேத்கர் வழிமரபு படிப்பு வட்ட கூட்டங்கள்
ஆகஸ்ட் 4 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலும், ஆகஸ்ட் 7 அன்று துவாரிலும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் பகத்சிங் அம்பேத்கர் வழி மரபு படிப்பு வட்டக் கூட்டங்கள் நடைபெற்றன. இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி விளக்கிப் பேசினார். நாகை மாவட்டம் திருமுல்லைவாசலில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்ட படிப்பு வட்டக் கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன் விளக்கிப் பேசினார். தோழர்கள் தேவேந்திரன், பாரதி, மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 2 2016 ஆகஸ்ட் 16 – 31)

Search