COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 22, 2016

கல்வியை காவிமயமாக்கும், வணிகமயமாக்கும் 
கார்ப்பரேட் நலன்களுக்கான புதிய பாசிச கல்விக் கொள்கை
ஆர்.வித்யாசாகர்
எல்மிலியோ பவுலேலோ என்பவர் 1946ல் இத்தாலிய முசோலினியின் பாசிச கல்விக் கொள்கை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
தனது பாசிசக் கொள்கைகளை அனைத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கொண்டு செல்லும் வண்ணம் ஒரே மாதிரியான பாடத்திட்டம், கட்டாயமாக்கப்பட்ட மத போதனை, மய்யப்படுத்தப்பட்ட நிர்வாகம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சலுகைகள், கத்தோலிக்க மத நம்பிக்கைகளும், நடைமுறை களும் கட்டாயப் பாடம், பள்ளிகளிலும், மேல்கல்வி மய்யங்களிலும் தொழிற்கல்விக்கும், தொழில்நுட்பக் கல்விக்கும் முக்கியத்துவம் என்ற வகையில் முசோலினி தனது பாசிச கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார் என எல்மிலியோ குறிப்பிட்டிருக்கிறார். முசோலினியை பொறுத்தவரை பள்ளிகள், கல்விக் கூடங்கள் அனைத்திலும் பாசிச உணர்ச்சி எழுச்சி பெற வேண்டும். குழந்தைகள் அனைவரும் ‘அரசின்’ கட்டுப்பாட்டுக்குள் உள்ள உயிரினங்களாக மாற வேண்டும் (Schools taught children to be state creatures).
இப்போது மோடி அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை இந்த பாசிச அம்சங்கள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. கல்வியை காவிமயமாக்கி, வணிகமயமாக்கி, நாட்டின் பன்முகத்தன்மையை புறம்தள்ளி, ஒற்றைத் தன்மையுடையதாக கல்வியை மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
புதிய கல்விக் கொள்கை உருவான கதை
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. இந்த விவாதத் தலைப்புகளே கல்வியின் அடிப்படைத் தன்மையையும் நோக்கத்தையும் மாற்ற முயலுவதை உணர முடிந்தது. இந்திய அரசு கல்வியை வணிகப் பொருளாக மாற்றக் கூடாது, ஒற்றைப் பண்பாட்டைக் கட்டமைக்க கல்வித்துறையை பயன்படுத்தக் கூடாது என்று பல நூறு கருத் துக்கள் மனிதவள மேம்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்ட தாகவும் வலைத் தளம் வாயிலாக 29,000க்கும் மேற்பட்டோரிடமிருந்து கருத்துக்கள் பெறப் பட்டதாகவும் அதைத் தொகுத்து அறிக்கை தர ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்தக் கருத்துக்கள் என்ன, இவை எவ்வாறு தொகுக்கப்பட்டன என்பவை பற்றி விவாதமோ வெளிப்படைத் தன்மையோ இல்லை.
5 பேர்களைக் கொண்ட அந்தக் குழுவில் நால்வர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள். ஒருவர் மட்டுமே கல்வி மேலாளுமையோடு தொடர்புடையவர். இந்தக் குழுவிற்கு முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப் பிரமணியன் தலைமை வகித்தார். கல்விக் கொள்கைகளுக்கும் அவருக்கும் தொடர்பு மிகக் குறைவு. இத்தகையோர் அடங்கிய குழு தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கான அறிக்கையை எவ்வாறு தர இயலும்? மிகக் குறுகிய காலத்தில் இந்தக் குழு அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால் அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட அமைச்சகம் மறுத்துவிட்டது. அதையும் மீறி கிடைத்த ஆவணம் கல்விக்கு நிகழவுள்ள பெரும் ஆபத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நிர்ப்பந்தத்தின் காரணமாக ‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்’ என்ற தலைப்பில் 43 பக்கங்கள் கொண்ட ஆவணம் 2016 ஜ÷ன் 30 அன்று வெளியிடப்பட்டு ஜ÷லை 31க்குள் பொது மக்கள் அதன் மீது தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ஆகஸ்ட் 16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வரைவு கூறுவதென்ன?
இதிலுள்ள அனைத்து முன்வைப்புகளும் கல்வியை காவிமயமாக்கி, வணிகமயமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் மாணவர்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் புதிதாகப் பொறுப் பேற்றுள்ள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சங்பரிவாரங்களுடன் புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதே அவர் நோக்கம். வித்யாபாரதி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ராஷ்ட்ரிய சிக்ஷக் மகாசங், பாரதிய சிக்ஷான் மண்டல், சமஸ்கிருத பாரதி, சிக்ஷா பச்சாவ் அந்தோலன், விக்ஞான்பாரதி மற்றும் இதிகாஸ் சங்கலன் யோஜனா ஆகிய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ்ஸின் துணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபாலும், பாஜகவின் தலைவர் அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் அகில பாரதிய சம்ப்ரக் பிரமுக் ஆகிய அனிருத்தா தேஷ்பாண்டேயும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய தேசத்தின் தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும் பெருமையையும், தொன்மையான விழுமியங்களையும் மீட்டு வருவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என ஜவடேகர் கூறியுள்ளார்.
ஏற்கனவே உயர்கல்விக் கூடங்களில் காவி அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நியமிப்பது, ரோஹித் வெமுலா நிறுவனரீதியாக படுகொலை செய்யப்பட்டது, ஜேஎன்யு மாணவர் கிளர்ச்சி, சமீபத்தில் பாண்டிச்சேரி பல்கலை கழகத்தில் மாணவர் மலரை தடை செய்யக் கோரி எபிவிபியும் பாஜகவும் நடத்திய அத்துமீறல்கள் என பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் காவி பாசிச பயங்கரவாத செயல்கள் அனைத்தும் நாட்டை காவிமயாக்குவதில் அவர்கள் எடுக்கும் தீவிரமான முயற்சிகளையே காட்டுகின்றன. இப்போது எல்லாவற்றிற்கும் அடிப்படையான கல்விமுறையை காவிமயமாக மாற்றம் செய்வதன் மூலம் தங்கள் நிகழ்ச்சிநிரலை முழுமையாக்கப் பார்க்கிறார்கள். இந்துத்துவா கொள்கைகளுக்கேற்ப இந்துமதப் பாரம்பரிய விஷயங்களை கல்வியில் புகுத்துவது, வேதக் கல்வி போன்றவற்றை திணிப்பது, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்ற வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணமாக, சமஸ்கிருத மொழியைப் பற்றி கூறும்போது கல்வியில் மொழியும் பண்பாடும் என்ற தலைப்பின் கீழ், ‘இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினை கருத்திற் கொண்டும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பினைக் கருதியும் பள்ளிக் கூடங்களில் அதனைக் கற்பிப்பதற்கு வசதி செய்யப்படும். பல்கலைக் கழக நிலையில் அம்மொழியைக் கற்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் வழங்கப்படும்’ என்று சொல்லப்படுகிறது.
வழக்கொழிந்த பார்ப்பனிய இந்துத்துவா சமஸ்கிருத மொழிக்கு, வேறு எந்த மொழிக்கும் இல்லாத பிரத்தியேக முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதுமே சமஸ்கிருதம் திணிக்கப்படும்.
பார்ப்பனிய வருணாசிர தர்மத்திற்கு புத்துயிர்
சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகளுக்குப் பின் வாராது வந்த மாமணி போல் கல்வியை 14 வயது வரை அடிப்படை உரிமையாக்கி 2009ல் சட்டம் வந்தது. புதிய கல்விக் கொள்கையில் இந்த கல்வி உரிமைச் சட்டத்திற்கு சாவு மணியடிக்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட பல பிரிவினரை கல்வியை விட்டு வெளியேற்றி அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு உழைப்பு தருபவர்களாக, அறைகுறைத் திறன் உடையவர்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது 8 வயது வரை இடைநிற்றல் இல்லாமல் தொடர்வது என்பது பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
‘தற்போது நடைமுறையிலிருக்கும் இடைநிற்றல் இல்லாக் கொள்கை மாணவர்களின் படிப்பு செயல்திறத்தை பெரிதும் பாதிப்பதால் அது திருத்தப்படும். இடைநிற்றல் இல்லாத கொள்கை அய்ந்தாம் வகுப்பு வரை பின்பற்றப்படும். உயர், தொடக்க வகுப்புகளில் இடைநிற்றல் பின்பற்றப்படும்’.
மேலும் புதிய வரைவின்படி, செயல்திறன்மிக்க மாணவர்கள் செயல்திறனற்றவர்கள் என்று இரு பிரிவாகப் பிரித்து செயல்திறன் அற்றவர்கள் என்று கருதப்படுபவர்கள் தொழிற்கல்வி கற்க அனுப்பப்படுவர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது சமூகத்தில் நிறைந்திருக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினரே. அவர்களின் செயல்திறனை வளர்ப்பதற்குப் பதிலாக அவர்களை திறன்குறைவான தொழில்களில் தள்ள, கூலிப் பட்டாளத்தை உருவாக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இது குலக்கல்வி முறையை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்யும் என்று பலதரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்குப் பிறகும் விடுமுறை நாட்களிலும் குடும்பத் தொழில்களில் வேலை செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த 30 சதவீதம் குழந்தைகள் திறமையாக கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கை இதற்கு மேலும் வலு சேர்க்கும். கல்வி உரிமைச் சட்டம் யதார்த்தத்தில் அடித்து நொறுக்கப்படும்.
வணிகமயமாகும் கல்வி
வணிகமயமாக்கத்திற்கு புதிய கல்விக் கொள்கை தரும் விளக்கம்:
‘எழுச்சியுறும் உலகமயமாதலின் அறை கூவலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக ஆக்கத் திறன்மிக்க வாழ்க்கையை மேற்கொண்டு தேச மேம்பாட்டுச் செயல்களில் ஈடுபடுவதற்கு வழிகாட்டவல்ல கல்வி ஏற்பாடு, நிறுவன வழி
காட்டல், மேலாளுமை ஆகியன தொடர்பான சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்துதல்.’
‘மேலான தரம் கொண்டதாகக் கருதப்படும் 200 பல்கலைக் கழகங்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் இந்தியப் பல்கலைக் கழகங்களோடு இணைந்து அவை இந்தியாவில் நிறுவப்பட ஊக்குவிக்கப்படும்.’
‘பன்னாட்டுமயமாக்கல் இருவழி செயல்பாடாதலால் இந்திய பல்கலைக் கழகங்களின் வளாகங்கள் தேவைப்படின் பொருத்தமான சட்டம்/சட்டத்திருத்தம்/விதிமுறைகளால் வெளிநாடுகளிலும் அமைக்கப்படும்.’
வெளிநாட்டு, குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் பல்கலைக் கழகங்களை இங்கு அனுமதிப்பதன் மூலம் கல்வி முற்றாக வணிக மயமாகி, சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாகும்.
மாணவர் அரசியலில் இடம் பெறுவதைத் தடுக்க ‘கல்வி நிறுவன வளாகங்களில் இடையூறுகள் ஏற்படுத்தும் செயல்களிலும் இணக்கமற்ற சூழலை ஏற்படுத்துவதிலும் வெளியாட்கள், தாங்கள் சேர்ந்திருக்கும் படிப்புக்குரிய காலத்திற்கு அதிகமான ஆண்டுகள் படித்துக் கொண்டிருப்போர் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டு கல்விச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை யும் அவர்கள் மாணவர்கள் விடுதிகளில் தங்கிக் கொண்டு நிறுவன வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.’
உண்மையில் காவிப் பாசிசக் கூட்டங்கள்தான் பல பல்கலைக் கழகங்களில் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தி ஜனநாயகக் குரல் வளையை நசுக்குகின்றன. புதிய கல்விக் கொள்கையின் நோக்கம், வளாகங்களை குற்றமயமாக்கும் இவர்களைப் பற்றி பேச மறுக்கிறது. காவிமயமாக்கும் அரசியலை எதிர்த்து பல ஜனநாயக, இடதுசாரி அமைப்புகள் பல்கலைக் கழகங்களில் போராடுவதைத் தடுப்பது பற்றி பேசுகிறது.
மொத்தத்தில் சாமான்ய மக்களின் கல்வி உரிமையைப் பறித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளை கூலிப்பட்டாளமாக மாற்றி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கல்விக் கொள்கையை கொண்டுவந்து, நாட்டின் பன்முகத்தன்மையையும் மாநிலங்களின் அதிகாரங்களையும் காலில் போட்டு மிதிக்கும், இதுவரை இடஒதுக்கீடு முறையில் உள்ள சமூகநீதிக்கும் சவக்குழி தோண்ட நினைக்கும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்க்க வேண்டும். சமூக நீதி, தாய்மொழி, மதச்சார்பின்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் காவிப் பாசிச, கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை முறியடிப்போம்.
(மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 2 2016 ஆகஸ்ட் 16 – 31)

Search