COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 1, 2016

ஒரு சட்டத் திருத்தம் உயிர் பெற்றது
எஸ்.குமாரசாமி
எட்டு ஆண்டுகளுக்கு முன்,  தமிழ்நாட்டின் சட்டமன்றம், 14.05.2008 அன்று சட்டத் திருத்த மசோதா எண்.47/2008அய், ஏகமனதாக நிறைவேற்றியது.
ஏப்ரல் 2011 வரை அந்தத் திருத்தத்திற்கு, அந்தத் திருத்தத்தை கொண்டு வந்த திமுக அரசால், மத்திய அரசின் ஒப்புதல் பெற முடியவில்லை. 2011 முதல் 2016 வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக அரசாலும், அந்தத் திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை. இப்போது 26.06.2016 அன்று குடியரசுத் தலைவர், அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்துள்ளார். 04.07.2016 அன்று தமிழக அரசு அரசாணை எண்.163 மூலம் இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
திருத்தச் சட்டம் எதற்காக வந்தது?
1946 முதலே இந்தியா முழுவதற்குமான தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம் அமலில் உள்ளது. தொழிலகங்களின் வேலை செய்பவர்களின் பணி நிலைமைகள் இந்தச் சட்டத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின் பிரிவு 2ஜி, நிலையாணைகள் என்பதற்கு, அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பான விதிகள் என்று விளக்கம் சொல்கிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 3(2) படி, அட்டவணையில் உள்ள ஒவ்வொரு விஷயம் தொடர்பாகவும் நிலை ஆணைகள் வகுக்கப்பட வேண்டும். அட்டவணையில் தலைப்பு பின்வருமாறு உள்ளது: ‘இந்தச் சட்டப்படியான நிலையாணைகளில் இடம் பெற வேண்டிய விஷயங்கள்.’ ஆக, அட்டவணையில் உள்ள விஷயங்கள் தொடர்பாக மட்டுமே நிலையாணைகள் கொண்டு வர முடியும்.
14.05.2008 தேதிய திருத்த மசோதா 47/2008, அட்டவணையில் ஏற்கனவே உள்ள விஷயங்கள் போக 10ஏ 10பி என்ற அயிட்டங்கள் மூலம் புது விஷயங்களைக் கொண்டு வந்தது.
10 ஏ: பயிற்சியாளர்கள், தகுதிகாண் பருவ நிலையினர் அல்லது பதிலிகள் அல்லது தற்காலிக அல்லது தற்செயல் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் மறு வேலைவாய்ப்பு மற்றும் அவர்களது பணி நிலைமைகள்.
10பி: நிறுவனத்தில் வேலை பார்க்கும் மொத்த தொழிலாளர்களில் பயிற்சியாளர்கள், தற்காலிக/தற்செயல் தொழிலாளர்கள், தகுதி காண் பருவ நிலையினர், பதிலிகள் எத்தனை சதவீதம் இருக்கலாம் என நிர்ணயிப்பது.
சட்டம் கொண்டு வரப்பட்டு 62 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தச் சட்டம் வந்தது. தொழிலாளர் தொடர்பான விஷயங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பட்டியலில் (கன்கரன்ட் லிஸ்டில்) இருக்கிறது என்பதால், இந்தச் சட்டங்களில் மாநில அரசுகள் திருத்தங்கள் கொண்டு வரலாம். அந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு 14.05.2008 இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவந்தது.
திருத்தச் சட்டம் ஏன் வந்தது?
சட்டத் திருத்த மசோதா 47/2008 ஏன் கொண்டு வரப்படுகிறது என்பதற்கான காரணங்களை, அப்போதைய தொழிலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் எம்.செல்வராஜ், மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் என்ற பகுதியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
  1. பல தொழிலகங்கள் மூன்றாண்டுகளுக்குப் பலரைப் பயிற்சியாளர்கள் எனப் பணியில் அமர்த்தும் விசயம் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பயிற்சியாளர் முறை என்பது, முறையான வேலையில் ஈடுபடுத்தும் முன்பு புதியவர்கள் வேலையைக் கற்க பயிற்சி தருவதுதான் என இருந்தாலும், பயிற்சியாளர் என்ற போர்வையில் இவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத் தப்படுகிறார்கள். இவர்களுக்குக் குறைந்த சம்பளம் தரப்படுகிறது. தொழிலாளர் சட்டப் பயன்கள் மறுக்கப்படுகின்றன. குறிப்பாக, பல ஜவுளி மில்களில் திருமணமாகாத இளம்பெண்கள் பயிற்சியாளர்களாக அமர்த்தப்படுகின்றனர். மூன்றாண்டுகள் பயிற்சிக் காலம் முடிந்த பிறகு, இவர்கள் வேலையில் வைக்கப்படுவதில்லை. புதிய நபர்கள், பயிற்சியாளர்களாக அமர்த்தப்படுகிறார்கள். ஜவுளித் தொழிலில் பரவலாக உள்ள இந்த நடைமுறை, மற்ற தொழில்களுக்கும் பரவி உள்ளது.
  2. இந்த நீண்டகால பயிற்சி முறையையும் தொழிலாளர் விரோத அநியாய நடவடிக்கையையும் முறியடிக்க, மாதிரி நிலையாணைகளை, இந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழிலகங்களுக்கும் பொருத்த, அரசாங்கம், தொழிலக நிலையாணைகள் சட்டம் 1946 பொருந்தும் தொழிலகங்களில் பணி புரியும் பயிற்சியாளர்கள், தகுதிகாண் பருவ நிலையினர் அல்லது பதிலிகள் அல்லது தற்காலிக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, மறுவேலை வாய்ப்பு, மொத்தத் தொழிலாளர்களில் இவர்கள் எத்தனை சதம் என நிர்ணயம் செய்வது தொடர்பான சரத்துக்களை, விதிகள் மூலம், மாதிரி நிலையாணைகளில் உள்ளடக்க வழிவகை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தமிழகத்திற்குப் பொருந்தும் வகையில், இந்தச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
3.மேலே சொல்லப்பட்ட முடிவை அமலாக்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
இந்த மசோதாவின்படிதான் தொழிலக நிலையாணைகள் சட்டத்தில் தமிழக சட்டமன்றம் அயிட்டம் 10ஏ மற்றும் அயிட்டம் 10பி என்பவற்றைக் கொண்டு வந்தது. மாநிலம் கொண்டு வந்த திருத்தச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, அதன் அடிப்படையில், மாநில அரசு அறிவிப்பாணை வெளியிட்டால் மட்டுமே சட்டமாகும்.
சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுத்த மத்திய அரசு
அய்முகூ அரசில் திமுக அங்கம் வகித்தபோதும், மத்திய அரசு மாநில திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை. அதேபோல், அய்முகூ அரசாங்கத்தில் அமைச்சரவைப் பதவிகளைச் சண்டையிட்டு வாங்கிக் கொண்ட திமுக, தான் இயற்றிய திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரவில்லை. 2011ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தது. புதிய மாநில அரசு 16.06.2011, 20.07.2011, 15.09.2011, 26.12.2011, 24.01.2012, 28.02.2012, 15.10.2012, 26.11.2012, 18.01.2013 மற்றும் 13.02.2013 தேதிகளில் மத்திய அரசிடம் திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல்தர நினைவூட்டுக் கடிதங்கள் எழுதியது. மத்திய அரசு விளக்கம் கோரி 27.02.2012 எழுதிய கடிதத்திற்கு 14.08.2012 அன்று ஒரு பதிலும் தந்தது.
மத்திய அரசு, மூன்று விஷயங்களில் எதிர்ப்பு தெரிவித்தது.
  1. திருத்தச் சட்டத்தில் பயிற்சியாளர்களைச் சேர்ப்பது சரியல்ல.
  2. நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையில் எவ்வளவு சதவீதம் வரை நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இருக்கலாம் என வரையறை செய்வது, முதலீட்டாளர்களை முதலீடு செய்ய விடாமல் விரட்டும்.
  3. திருத்தச் சட்டத்திற்கு முன், இயற்கை நீதிக் கோட்பாடுகள்படி, திருத்தம் கொண்டு வரலாமா வேண்டாமா எனக் கருத்து சொல்ல வேலையளிப்பவர் தரப்பிற்கு வாய்ப்பு தரப்படவில்லை.
ஒப்புதல் தந்தாக வேண்டும் என எடுக்கப்பட்ட முயற்சிகள்
திருத்தச் சட்டம் 47/2008, பல லட்சக் கணக்கான பயிற்சியாளர்கள் மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் நலன் காப்பது என்பதால், ஏஅய்சிசிடியு 2008 முதல் அயராமல் இயக்கரீதியாகவும், மத்திய மாநில அரசுகளை அணுகுவதன் மூலமும், மற்றவர் உதவியை நாடியும், இந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற முயற்சிகள் எடுத்தது. மத்திய மற்றும் மாநிலத் தொழிலாளர் துறை அதிகாரிகளைச் சந்தித்தது. கடிதங்கள் எழுதியது. சம்பந்தப்பட்ட கோப்பின் நடமாட்டத்தை விடாப்பிடியாய்ப் பின் தொடர்ந்தது. முத்தரப்பு கூட்டங்களில் வலியுறுத்தியது. தனது மாநிலம் தழுவிய பிரச்சாரப் பயணங்களில் கையெழுத்து இயக்கங்களில் இந்தப் பிரச்ச னையை எழுப்பியது. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றம் செய்ததாகத் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி இறந்த பிறகு, அவரது மரண தண்டனை தொடர்பான கருணை மனுவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், உயிருள்ள, பல லட்சம் உழைக்கும் மக்கள் விஷயத்தில் கையெழுத்திடாமல் இழுத் தடிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியது.
மத்திய அரசு எழுப்பிய மூன்று எதிர்ப்புக்களுக்கும், தமிழக அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகள் பதில் எழுதி இருப்பார்கள் எனத் தெரிகிறது. ஏஅய்சிசிடியு தன் பங்கிற்கு மத்திய அரசு எழுப்பிய 3 எதிர்ப்புக்களுக்கும் திரும்பத் திரும்ப பதில் எழுதியது.
  1. பயிற்சியாளர்களை திருத்தச் சட்ட அட்டவணையின் 10 ஏவில் கெண்டு வந்தது சரி எனச் சுட்டிக்காட்டியது. தமிழ்நாட்டில் பயிற்சியாளர்கள் நேரடியாய் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது சாதாரண நிகழ்வு என்றும், பயிற்சியாளர் பயிற்சி தருதல் என்பது மோசடியே என அரசே ஒப்புக் கொண்டுள்ளதையும், அதற்கு ஆதாரமாக வெவ்வேறு அரசு அதிகாரிகளின் அறிக்கைகள் இருப்பதையும், இந்தப் பிரச்சனையில் தமிழக அரசைத் தலையிட நீதிமன்றம் வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியது.
பயிற்சியாளர் சுரண்டல் முறை தீவிரமாக இருக்கும் ஜவுளித் தொழிலில் அவர்களுக்குக் குறைந்தபட்ச  சம்பளம் நிர்ணயிக்க முதல்படி யாக, குறைந்தபட்ச சம்பளச் சட்ட அட்டவணையின் பகுதி 1ல் அயிட்டம் 88ஆக ஜவுளித் தொழிலை 03.01.2007 அன்று தமிழக அரசு சேர்த்ததையும், அரசாணை எண். (2டி) 61 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, நாள் 07.11.2008 மூலம் குறைந்தபட்சச் சம்பளம் நிர்ணயம் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டியது.
இந்த அரசாணை செல்லாது என முதலாளிகள் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள், 30.04.2009 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அரசாணைக்கு எதிரான ரிட் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது என்பதையும், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டையும் தள்ளுபடி செய்துவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டியது. (மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட விவரம், 2010 என்எல்என் பாகம் 3 பக்கம் 837ல் பிரசுரமாகி உள்ளது). சம்பளம் என்ற பணி நிலைமையை அரசாங்கம் பயிற்சியாளர்கள் விஷயத்தில், சட்டப்படி நிர்ணயம் செய்ய முடியும் என்றால், வேலை, மறு வேலை உள்ளிட்ட இதர பணி நிலைமை களையும் நிர்ணயிக்க முடியும் என்பது தர்க்கரீதியாகவும், சட்டப்படியும் உறுதியாகிறது எனச் சுட்டிக் காட்டப்பட்டது. (01.04.2016 முதல் 31.03.2017 வரை ஜவுளி மில் பயிற்சியாளரின் ஒரு நாள் குறைந்தபட்சச் சம்பளம் ரூ.325.30)
  1. பயிற்சியாளர் மற்றும் பிற நிரந்தரமற்ற தொழிலாளர் எண்ணிக்கையை வரையறுப்பது, முதலீட்டை விரட்டும், தொழில் நடத்தும் உரிமையில் குறுக்கிடுவதாக அமையும் என்ற வாதத்திற்கும் பதில் சொல்லப்பட்டது. தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் அத்தியாயம் 5 பி, முந்தைய ஆண்டில் சராசரியாய் 100 பேருக்கும் மேல் பணியாற்றியுள்ள நிறுவனங்களில், அரசு முன் அனுமதி பெறாமல், லே ஆஃப், ஆட்குறைப்பு, ஆலை மூடல் செய்யக் கூடாது என்கிறது. இது தங்கள் தொழில் நடத்தும் உரிமையில் குறுக்கிடுவது என முதலாளிகள் வழக்காடியபோது, உச்சநீதிமன்றம், மீனாட்சி மில்ஸ் வழக்கில், சமூகத்தின் நலன் கருதி, முதலாளிகளின் தொழில் நடத்தும் உரிமையில் சில வரையறைகள்/வரம்புகள் நிர்ணயிக்க அரசுக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளதால், வரைமுறையில்லாமல், நிரந்தரமற்ற தொழிலாளர் எண்ணிக்கையை பிரம்மாண்டமாய் அதிகரிக்கும் முதலாளிகளின் சுதந்திரத்தில் குறுக்கிடுவது, சமூக நலனுக்கு உகந்தது, சட்டப்படி செல்லும் எனச் சுட்டிக் காட்டினோம்.
  2. திருத்தச் சட்டம் இயற்றுவதற்கு முன்பு முதலாளிகளுக்கு வாய்ப்பு தரப்பட்டதா என்ற பிரச்சனையைப் பொறுத்தவரை, திருத்தச் சட்டம் அரசின் இறையாளுமை அதிகாரத்திற்கு இயற்கை நீதிக் கோட்பாடுகள் பொருந்தாது என்பதையும், விவரங்கள் அடிப்படையில், திருத்தச் சட்ட விவகாரம், முதலாளிகளும் உறுப்பினர்களாய் இருக்கும் மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் முன் வைக்கப்பட்ட விஷயத்தைச் சுட்டிக் காட்டினோம். (பிரிக்கால் வழக்கில் மாநில அரசு தொழில் தகராறு சட்டம் 1947ன் 10பி பிரிவின் கீழ் சமூக நலன், அவசரம் கருதி முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது சில நிபந்தனைகளைப் போடும் போது, அங்கு இயற்கை நீதிக் கோட்பாடுகள் பொருந்தாது, முதலாளிகளுக்கு வாய்ப்பு தர வேண்டியதில்லை என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இப்போது இறுதியாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தத் தீர்ப்பும், இரட்டை ஆயுள் தண்டனை வழக்கு ஜோடிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
இதுபோக, தமிழக சட்ட அமைச்சர் ஒருவர் ஒரு கட்டத்தில், இந்தக் கோப்பின் மீது ‘பேசுக’ என எழுதி ஏறி அமர்ந்த விஷயத்தையும் சுட்டிக்காட்டினோம்.
திருத்த மசோதா 47/2008க்கு ஒப்புதல் பெறுவதில் தொமுச பேரவையின் பொதுச் செயலாளர் திரு.சண்முகம் எடுத்த முயற்சிகளையும் நாம் நினைவுகூருகிறோம். ஒரு கட்டத்தில் வலுவான தலையீடுகள் செய்த ஜவுளி முதலாளிகள் தரப்பு, மத்தியில் உள்ள ஆட்சி நமது ஆட்சி என்ற மிதப்பில், ஏதும் செய்யாமல் இருந்தது. நமது விடாப்பிடியான முயற்சிகளால் நகர்ந்த கோப்பில் மத்திய அரசும் கையொப்பமிட்டுவிட்டது. (தெரியாமல் செய்து விட்டார்கள்!). அதன் பின், மாநில அரசு, அறிவிப்பாணை தந்து சட்டமாக்குவது கட்டாயமாகிவிட்டது.
திருத்தச் சட்டத்தின் உடனடி அவசியம்
ஜுலை 26, 2016ல் தமிழக சட்டமன்றத் தில் வேலைவாய்ப்பு பிரச்சனை தொடர்பாகக் கூட பேசி உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி, விளம்பரங்கள் தந்து, வேலை வாய்ப்பகங்கள் மூலமே ஆளெடுப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் 8,500 பேர், குரூப் 4 தேர்வு மூலம் 15,481 பேர், குரூப் 1 மூலம் 131 பேர், குரூப் 2 மூலம் 1,207 பேர் எனப் பல்வேறு பணிகளுக்கு 58,190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்தார். அமைச்சர் சொன்ன 8500+15481+131+1207 கூட்டினால் 25,319தான் வருகிறது.
பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 32,871 பேர் பற்றி விவரம் தர முடியாமல் தடுமாறுகிறார். அல்லது மறைக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் தந்த விவரங்களையும் உள்ளடக்கி தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் ஒரு பதில் தந்துள்ளார். ‘வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ள 85 லட்சம் பேரில் 60% பேர் 10 ஆம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்கள். அவர்கள் தற்போது உயர்கல்வி படித்து வருகின்றனர்.’ அமைச்சர் வாதப்படி பதிவு செய்தவர்களில் 51 லட்சம் பேர் வேலை வாய்ப்பை தற்சமயம் வற்புறுத்தாமல் உயர் கல்வி பெறுகின்றனர். 34 லட்சம் பேருக்கே வேலை தேவைப்படுகிறது. (தமது இந்தக் கூற்றுக்கு அமைச்சர் எந்தச் சான்றுகளும் ஆதாரமும் தரவில்லை)
2011 - 2016 வரை, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 86,696, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 56,328, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 32,997, தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 114 பேர் உட்பட மொத்தம் 5,01,874 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. திரும்பவும் ஒன்றைப் பார்ப்போம். 86,696+56,328+32,997+42,114 கூட்டினால் 3,18,135தான் வருகிறது. 1,83,739 வேலைகள் தொடர்பாக விவரம் இல்லை.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 1,42,114 வேலைகள் என்ற தன் கூற்றையும் அதே நாளில் அமைச்சர் பின்வரும் தன் கூற்றின் மூலம் மறுத்துள்ளார். ‘சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்கள் 15 மாவட்டங்களில் நடைபெற்றன. இதில் 3,530 நிறுவனங்கள் பங்கேற்றன. பங்கேற்ற 4,47,496 பேரில், 59,232 பேர் பணி வாய்ப்பு பெற்றனர். 53,440 மாணவர்களுக்கு திறன் பயிற்சி தரப்படுகிறது.’ அமைச்சர் நிலோபர் கபில் வாதப்படியே, 34 லட்சம் பேரில் 5 லட்சம் பேர் போக 29 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை.
தனியார் வேலை வாய்ப்பு மூலம் வேலை கிடைத்தவர்களுக்கு ரூ.10,000, ரூ.12000 சம்பளம் தாண்டாது என்பதும், சராசரி சம்பளம் ரூ.8,000 என்பதும் ஏற்கனவே வந்த தீப்பொறி கட்டுரைகளில் சுட்டிக் காட்டி உள்ளோம். தமிழக அரசு காவல் துறையில் மட்டும் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால் அங்கும் தொகுப்பூதிய சிறப்பு காவலர் முறை புகுத்தப்பட்டுவிட்டது.
இந்த விவரங்கள் அனைத்தும் பகிரங்கமாகச் சொல்லாமல் ஒரு விஷயத்தை மறைக்கின்றன. தமிழகத்தின் பெரும்பான்மை நகர்ப்புற, கிராமப்புற மக்கள், குறை கூலி, பாதுகாப்பற்ற, நிச்சயமற்ற வேலைகளில் உள்ளனர். வேலையே கிடைக்காமல் இருப்பவர்களும், சில நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கப் பெற்றவர்களும் உண்டு. வேலை வாய்ப்பு உள்ள தொழிலகங்களில், தொழில்களில், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில், ஏகப்பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வகைப்பட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்களே. பயிற்சி மற்றும் நிரந்தரமற்ற வேலைகளில் பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றவர்கள், சமீப காலங்களில் சேருகின்றனர்.
ஆகவே, பயிற்சியாளர் உள்ளிட்ட நிரந்தர மற்ற தொழிலாளர் வேலை, மறு வேலை மற்றும் பணி நிலைமைகளும், இவர்கள் மொத்த தொழிலாளர்களில் எவ்வளவு சதவீதம் வரை இருப்பார்கள் என்பதும், தொழிலாளர் இயக்கத்தின் அடிப்படைப் பிரச்சனைகளாகும்.
அடுத்து செய்ய வேண்டியது என்ன?
அட்டவணை 10ஏ, 10பி அயிட்டங்களுக்குப் பொருத்தமான சட்டப் பிரிவுகள் நிலையாணைகளில் சேர்க்கப்பட வேண்டும். மகாராஷ்டிரா மாநில அரசு, நிலையாணைகள் சட்ட அட்டவணையில், தகுதிகாண் பருவ நிலை தொழிலாளர்கள், தற்காலிக தற்செயல் தொழிலாளர்கள், பதிலிகள், வேலை மறு வேலை மற்றும் பணி நிலைமைகள் சேர்க்க திருத்தம் கொண்டுவந்து உடனடியாய் ஒப்புதலும் பெற்று விட்டது. (தமிழ்நாட்டில் 10ஏ பயிற்சியாளர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளது). அதற்குப் பிறகு 17.11.1977 அன்று மாதிரி நிலையாணைகளில் இந்தத் தொழிலாளர் நலன் காக்க 4ஏ 4பி 4சி 4டி என்ற புதிய ஷரத்துக் களைச் சேர்த்தது. 4சி பிரிவு ஒரு வருடத்தில் 240 நாட்கள் பணியாற்றிய நிரந்தரமற்ற தொழிலாளியை நிரந்தரமாக்கச் சொல்கிறது. 4டி பிரிவு நிரந்தரமற்ற தொழிலாளர்களின் காத்திருப்போர் பட்டியல் ஒன்றை பராமரித்து, அதன்படி மட்டுமே நிரந்தரமற்ற தொழிலாளர் நியமனம் நடக்க வேண்டும் என்கிறது. அதாவது பழைய நிரந்தரமற்ற தொழிலாளரை வெளியேற்றி விட்டு திரும்பவும் அவர்களுக்கு வேலை தராமல், புதிது புதிதாக வேலைக்கு நிரந்தரமற்ற தொழிலாளியை எடுப்பதைத் தடுக்கிறது. 1977ல் மகாராஷ்டிரா கொண்டு வந்த திருத்தத்தை, 40 ஆண்டுகள் கழித்துக்கூட, தமிழக அரசு கொண்டு வராமல் இருக்க முடியுமா?
தமிழகம் கொண்டு வந்துள்ள அயிட்டம் 10பி உண்மையிலேயே முன் மாதிரியானதுதான். இதன்படி மாதிரி நிலையாணைகளிலும், நிரந்தரமற்ற தொழிலாளர்கள் ஒரு தொழிலகத்தில், தொழிலில், கடையில், வர்த்தக நிறுவனத்தில், 5% பேருக்கு மேல் இருக்கக் கூடாது எனக் கொண்டு வருவது, அவசர அவசியமாகும். திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய தொழிலாளர் இணை ஆணையர் ஒருவர் மூலம் நகர்ந்த கோப்புப்படி, முதல்வரே இந்த சதவீதம் 5% இருக்கலாமா அல்லது 10% இருக்கலாமா என்று பரிசீலித்ததாக தொழிற்சங்க வட்டாரங்களில் கேள்விப்பட முடிந்தது. ‘முதலிட முதல்வர்’ அட்டவணை அயிட்டம் 10பிக்கு ஏற்ப, மாதிரி  நிலையாணைகளில், நிரந்தரமற்ற தொழிலாளர் எண்ணிக்கை ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 5% தாண்டக் கூடாது என்ற திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
இந்த திசையில், தமிழக தொழிற்சங்க இயக்கத்தை வரும் காலங்களில் செலுத்த வேண்டும். ஹுண்டாயிலிருந்து கோவை பிரிக்கால் வரை உள்ள பல லட்சம் நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்கும் இந்த மாற்றங்களுக்காக போராட, இடதுசாரி தொழிற்சங்கங்கள் முன்னணிப் பங்கு வகிக்க வேண்டும். இடதுசாரி நிகழ்ச்சிநிரல் அடிப்படையிலான, சுதந்திரமான இடதுசாரி அரசியல் காலத்தின் கட்டாயம்.

Search