COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 1, 2016

திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை 2016 - 2017

தலையங்கம்
திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை
கடன் எங்கே போகிறது...? கன்டெய்னரைத் தேடி....
மறுபடியும் மொதல்ல இருந்தா...? பொதுவாக நம்மை சிரிக்க வைக்கும் இந்த வசனம், 2016 - 2017 ஆண்டுக்கு தமிழக நிதியமைச்சர் முன்வைத்த திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களோடு சேர்த்துப் பார்க்கும்போது வேதனை தட்டுகிறது.
புதிய வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கை என்றும் புதிதாக விலை உயர்வுகள், கட்டண உயர்வுகள் இல்லாத நிதிநிலை அறிக்கை என்றும் சொல்லப்படுகிறது. இலக்குகள், ஒதுக்கீடுகள் சொல்லப்பட்டுள்ளன. அம்மா புகழ் பாடப்படுகிறது. அடுத்து என்ன?
கடந்த ஆட்சி அமைந்தவுடன் வெளியேற்றப்பட்டு கடந்த அய்ந்தாண்டுகளாக வேலை கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா? அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? முதல் படியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டன என்றால் அடுத்தடுத்த படிகள் என்ன, எப்போது, எப்படி? அந்தத் தொழிலாளர்கள் படிப்படியாக வேறு என்ன வேலைகளில் அமர்த்தப்படுவார்கள்? சிறுகுறு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்றால், விவசாயம் இல்லாததால் வேலை இல்லாமல் தவித்த விவசாயத் தொழிலாளர்களுக்கு என்ன வழி? கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்களுக்கு பொருளுள்ள கவுரவமான வேலை வாய்ப்புக்கு பொருளுள்ள திட்டம் உள்ளதா? கடந்த அய்ந்தாண்டுகளில் விடை தரப்படாத இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையும் விடை தரவில்லை. இன்னும் அய்ந்து ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னாலும் அந்தக் கேள்விகளுக்கு விடை தரும் அறிகுறி கூட ஏதும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. அடுத்து வரும் அய்ந்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சி தமிழக மக்களுக்கு ஏமாற்றமே தரும் என்றுதான் இந்த நிதிநிலை அறிக்கையில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
அளப்பரிய கருணைக்கும் மதிநுட்பத்துக்கும் உறைவிடமாக ஜெயலலிதா திகழ்வதாக அறிக்கை சொல்கிறது. அந்த மதி நுட்பத்தால் தமிழக அரசின் கடன்களை ஏன் திருப்பச் செலுத்த முடியவில்லை? மேலும் கடன் வாங்குவதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? ஏன் வட்டி மட்டுமே ஆண்டுக்கு ரூ.20,000 கோடிக்கும் மேல் தர வேண்டிய நிலை உள்ளது? அல்லது அப்படி கடன் வாங்குவதுதான் மதிநுட்பம் என்று அஇஅதிமுககாரர்கள் சொல்கிறார்களா? இதற்கு வாய்ப்பு இருப்பதாகத்தான் தெரிகிறது.
கடந்த அஇஅதிமுக ஆட்சி 2011 மே மாதம் அமைந்தது. 31.03.2011 அன்று தமிழக அரசின் மொத்த கடன் ரூ.1,01,349.45 கோடி. இந்த நிதிநிலை அறிக்கை முன்வைக்கப்பட்ட ஜுலை 21, 2016 அன்று தமிழக அரசின் மொத்த கடன் ரூ.2,52,431 கோடி. கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.1,51,082 கோடி கூடுதல் கடன் வாங்கப்பட்டு ரூ.66,704.31 கோடி அளவுக்கு வட்டி தரப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக் கையில் மானியம் மற்றும் உதவித் தொகைகளுக்காக, அதாவது சாமானிய மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.68,211.05 கோடி. ஆனால் அரசு வாங்கியுள்ள கடன்களுக்கு வட்டி செலுத்த ரூ.21,215.67 கோடி என மதிப்பிடப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுடனான திட்டங்கள். இன்னும் சில திட்டங்கள், நபார்டு மற்றும் சர்வதேச வங்கிகளின் கடன் பெற்று நடத்தப்படுபவை. இந்தக் கடன்கள் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் தொடர்பான திட்டங்களுக்குத்தான் வாங்கப்படுகின்றன. இந்த நிதிநிலை அறிக்கைப்படி இந்த நிதியாண்டுக்கு அரசு வாங்கவுள்ள கடன் ரூ.40,529 கோடி. நபார்டு வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஜெர்மன் வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்து இந்தக் கடன்கள் வாங்கப்படுகின்றன.
இந்த நிதிநிலை அறிக்கையில் பின்வரும் திட்டங்கள் கடன் வாங்கி செயல்படுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு அறிவிப்பு பற்றியும் கேள்விகள் எழுகின்றன. (கேள்விகள் அடைப்புக் குறிக்குள்).
             வறுமை ஒழிப்புக்கான தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் ரூ.900 கோடி செலவில் 120 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. (இது எப்படி சாத்தியம்?)
             பன்னாட்டு நிதிநிறுவனங்களிடம் இருந்து கடனுதவி பெறும் திட்டங்களின் வாயிலாக, மாநிலத்தில் உள்ள மின்கடவுப் பாதைகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ஜெர்மன் வங்கி உதவியுடன் பசுமை ஆற்றல் மின்தொடர் திட்டம் ரூ.1,593 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.5,014 கோடி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் தமிழ்நாடு மின் தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ.1,738 கோடி ஒதுக்கப் படுகிறது. (மின்பகிர்மானக் கழகத்தின் கடன்களை அரசு ஏற்றுக்கொண்டதற்கு ஒதுக்கீடு என்று தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. மின் வழங்கலின் இந்த அடிப்படைப் பணிகள் கடன் வாங்கித்தான் நடக்கிறது. இதில் அஇஅதிமுக அரசின் சாதனை என்ன இருக்கிறது?)
             அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் தொலை தொடர்பு வசதி, உயர்அதிர்வெண் தொடர்பு சாதனங்கள் வாங்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.62.14 கோடி செலவிடப்பட உள்ளது. (இனிதான் இந்த அடிப்படை விசயம் கூட நடக்கப் போகிறதா?)
             ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் பல்லுயிரினப் பாதுகாப்பு பசுமைத் திட்டத்துக்கு ரூ.109.51 கோடி ஒதுக்கப்படுகிறது. (வன வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க பொருளுள்ள நடவடிக்கைகள் எடுக்காமல் பல்லுயிரினத்தை எப்படி பாதுகாப்பது?)
             ரூ.745.49 கோடி உலக வங்கி உதவியுடன் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் 105 அணைகள் புனரமைக்கப்பட வேண்டும். 66 அணைகளில் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு ரூ.258.46 கோடி இதற்கு செலவிடப்படும்.
ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் பருவநிலை மாற்றத் தழுவல் திட்டம் ரூ.279 கோடியில் நடக்கின்றன. எஞ்சியுள்ள பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும். நீர்வள, நிலவளத் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் கட்டம் உலக வங்கி உதவியுடன் ரூ.2,950 கோடி செலவில் நடக்கும். (முதல் கட்டத்தில் எவ்வளவு கடன் வாங்கப்பட்டது? என்னதான் நடந்தது? நீர்வளம், நிலவளம் இரண்டும் விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு அல்லவா விரட்டுகின்றன?)
             சாலைகள், மேம்பாலங்கள் மேம்படுத்த இந்த ஆண்டுக்கு நபார்டு வங்கிக் கடன் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
146 கி.மீ நீளமுள்ள மூன்று மாநில நெடுஞ்சாலைகள் அரசு - தனியார் பங்களிப்பு முறை யில் உலக வங்கி உதவியுடன் ரூ.1,541 கோடி செலவில் நான்கு வழிச்சாலைகளாகும். இந்த ஆண்டு இதற்கு ஒதுக்கீடு ரூ.1,220.28 கோடி. (ஒப்பந்ததாரர் யார்?)
             கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நபார்டு வங்கி உதவியுடன் ரூ.140 கோடி செலவில் இந்த ஆண்டில் வடிகால்கள் அகலப்படுத்துதல், வாய்க்கால் வரப்புகளை, நதிக்கரைகளைப் பலப்படுத்துதல் ஆகியவை செய்யப்படும்.
சென்னை போன்ற எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய கடலோர மாவட்டங்களுக்கு விரிவான வெள்ளப் பாதுகாப்புத் திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது. இந்தத் திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் வெள்ளத் தடுப்பு மற்றும் நீராதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.445.19 கோடி ஒதுக்கப்படுகிறது. (வெள்ள நிவாரண நிதிக்காக மத்திய அரசு ஒதுக்கியதும் பொது மக்கள் கொடுத்ததும் என்ன ஆயிற்று?)
             கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பேரூரில் ரூ.3,227.84 கோடியிலும் நெம்மேலியில் ரூ.1,258.88 கோடியிலும் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று நடந்து வருகிறது. (இந்தத் திட்டம் அமலாகிறது என்றால் அம்மா குடிநீர் எதற்கு?)
             நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிக்கூட வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் போன்ற வசதிகளுக்கு ரூ.333.61 கோடி ஒதுக்கப்படுகிறது.
ரூ.12 கோடி நபார்டு வங்கி உதவியுடன் வனத்துறையால் நடத்தப்படும் பழங்குடியினர்க்கான பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். (பள்ளிகளில் குறைந்தபட்ச வசதிகள் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையே).
             ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தளங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இதுவரை ரூ.33.62 கோடி செலவிடப்பட்டுள்ளது. (சுத்தமான கழிப்பறைகளைக் காண முடிவதில்லை. குடிநீர் வசதி கூட இருப்பதில்லை).
இவை தவிர மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்துக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.3,770 கோடி கடன் தர ஒப்புதல் தந்துள்ளது. தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.1,560 கோடி கடன் வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புக்கொண்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் இதே தலைப்புகளில் கடன்கள் வாங்கப்பட்டு செலவு செய்யப்பட்ட தாகக் காட்டப்படுகின்றன. செலவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், மக்கள் வாழ்வில் காணப்படும் மாற்றத்தில் வெளிப்பட வேண்டும். கணக்கு கணக்காகவே இருந்துவிடுவதுதான் தெரிகிறது. ஆக, கடனாக வாங்கப்பட்டு மக்கள் தலையில் வட்டியாகவும் சேர்த்து சுமத்தப்படும் சுமையில் பெரும்பகுதி தமிழ்நாட்டில் எங்கு போய்ச் சேருகிறது? கடன் அதிகரிப்பது பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பும் கருணாநிதியும் ராமதாசும் அந்தக் கடன் எங்கு போய்ச் சேருகிறது, எப்படி பயன்படுத்தப்பட்டது என கேள்வி எழுப்புவதில்லை. மக்கள் பெயரால் வாங்கப்படும் இந்தக் கடன்கள் மூலம் பெரும் சூறையாடல் நடக்கிறதா என்ற கேள்வியையே ஒதுக்கீடுகளும் திட்டங்களும் எழுப்புகின்றன. ஒருவேளை இங்குதான் ஜெயலலிதாவின் மதிநுட்பம் நின்று பேசுகிறதா? இந்த ஒதுக்கீடுகள், திட்டங்கள் அமலாக்கம், பற்றி வெள்ளையறிக்கையும் முன்வைக்க மதிநுட்பம் இடம் தருமா?
இது போன்ற அறிவிப்புகளுடன் இன்னும் சில வழக்கமான அறிவிப்புகள் கொண்டதையே நிதிநிலை அறிக்கையாக பன்னீர்செல்வம் முன் வைத்துள்ளார். அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டதால், இனி மக்கள் பிரச்சனைகள் பற்றிய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற முடிவுக்கு அஇஅதிமுக அரசு வந்துவிட்டதை அறிக்கை காட்டுகிறது.
மக்கள் வாழ்வு மேம்பட அவசியத் தேவை வேலைவாய்ப்பு. 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு என்பது எந்த வகையிலும் கவுரவமான வேலைவாய்ப்பை உறுதி செய்யாது என்பதை கடந்த அய்ந்தாண்டுகளாகப் பார்க்கிறோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு ரூ.23,258 கோடி முதலீடு செய்யப்பட்டு, 48,145 வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது. 2023ல் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற லட்சியத்துக்கு வெகு தூரத்தில் இந்த எண்ணிக்கை உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அளிக்கும் பயிற்சிக்கு மொத்தமாக ரூ.30 கோடி, இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு மட்டும் ரூ.15 கோடி என்று சொல்லப்படுகிறது. வெள்ள நிவாரணம் என்று வந்த பல ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என்று நமக்கு மீண்டும் கேள்வி எழுகிறது.
ஒன்பது தென்மாவட்டங்களில் 19,000 ஏக்கர் நிலப்பரப்புடன் நில வங்கி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டம், 1 லட்சம் வேலை வாய்ப்புகளை ரூ.25,000 கோடி முதலீட்டை ஈர்த்து உருவாக்க உதவும் என்றும் அறிக்கை சொல்கிறது. அந்த மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாதுகாத்துக் கொள்ள, தங்கள் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.
ஓரளவு தொட்டுணரத்தக்க பயன் தரும் அறிவிப்பு என்றால், அது சிறு குறு விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்படு கிற ரூ.1,680.73 கோடி. 5 ஆண்டுகளில் மொத்தம் 8,35,360 குறு விவசாயிகள், 8,58,785 சிறு விவசாயிகள் பயனடைவார்கள். இந்தப் பயனாளிகள் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பொது அரங்குக்கு வந்துவிட்டது.
முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 2011 - 2012  முதல் 2015 - 2016 வரை 37.67 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,039 கோடி தரப்பட்டுள்ளது. அய்ந்து ஆண்டுகளில் சராசரியாக ஒருவருக்கு ரூ.8,000 கொடுத்தது சாதனை அல்ல. வேதனை. ஆடு, மாடு, மகப்பேறு உதவி, மடிக்கணினி, நோட்டு புத்தகம், பசுமை வீடுகள் என அஇஅதிமுகவினர் பெருமை பேசும் திட்டங்களில் இதே போல் சொற்பத் தொகைதான் மக்களுக்குச் சென்று சேருகிறது.
கண்துடைப்பு, மேம்போக்கு அறிவிப்புகள், திட்டங்களுக்கு அப்பால், மோடி அரசுடனான இசைவான போக்கு தூய்மை தமிழகத்திற்கான இயக்கத்தில் வெளிப்படுகிறது. இந்த இயக்கம் 2023 தொலைநோக்குத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இலக்குகளை எட்டும் அய்ந்து இயக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக 9,000 கிராம ஊராட்சிகளில்  ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாளுமைத் திட்டம் நூறு நாள் வேலைத் திட்டத்துடன் இணைக்கப்பட்டு நடக்கிறது. இந்த ஆண்டில் மீதமுள்ள ஊராட்சிகளில் இந்தத் திட்டம் அமலாகும். உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ரூ.150 கோடி இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும். மோடியின் தூய்மை இயக்கம் இசுலாமியர்களும் தலித்துகளும் இல்லாத இந்தியாவை உருவாக்கும் என்றால் ஜெயலலிதாவின் தூய்மை இயக்கம் மாநிலத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் துடைத்து எடுத்துத் தூய்மையாக்கும்.
கடந்த அய்ந்து ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பு தொடர்பான விவரங்கள் இருந்தன. இந்த நிதிநிலை அறிக்கையில் அது தரப்படவில்லை. குறித்த நேரத்தில் தேவையான விவரங்கள் வரவில்லையா? அல்லது இந்த விவரம் வெளியிட்டால், எங்கள் உழைப்பில் உருவானதில் எங்களுக்கு மிகச் சொற்பமே கிடைத்துள்ளது என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பக் கூடும் என்று தவிர்த்துவிட்டார்களா? மக்கள் உருவாக்கிய செல்வம் கண்முன் இருக்கிறது. அதை மறைக்க முடியாது. தமிழக மக்கள் அஇஅதிமுக ஆட்சிக்கு சங்கடம் தருகிற, நெருக்கடி தருகிற கேள்விகளை நிச்சயம் எழுப்புவார்கள்.

Search