COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, August 22, 2016

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 
மக்கள் மீது மோடி அரசின் மற்றுமொரு தாக்குதல்
கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று மோடி அரசு கடுமையாக, விடாப்பிடியாக முயற்சி எடுக்கிறது என்றால், காங்கிரசும் அந்த முயற்சிக்கு முழுமையாக ஆதரவு அளிக்கிறது என்றால், பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டாடுகின்றன என்றால், அப்படி கொண்டு வரப்படும் ஒரு சட்டம் நிச்சயம் நாட்டின் வறிய மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டமாகத்தான் இருக்க முடியும்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) அது போன்ற ஒன்றுதான். சட்டமாகிவிட்ட ஜிஎஸ்டி பற்றிய சில விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
 மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக அஇஅதிமுக, திரிணாமூல், இடதுசாரி கட்சிகள் துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் தான் முன்வைக்கும் திருத்தங்கள் வேண்டும் என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்தது.
 இப்போது ஜிஎஸ்டி சட்டம் முதலில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு பிறகு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அஇஅதிமுக, இறுதியில் எதிர்த்து வாக்களிக்கவில்லை. மக்களவையிலும் மாநிலங்களவையி லும் நடந்த வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது.
 ஜிஎஸ்டி அமலானால் மாநில அரசின் வரி வருவாயில் ஆண்டுக்கு ரூ.9,000 கோடி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்பை முதல் அய்ந்து ஆண்டுகளுக்கு மட்டுமின்றி தொடர்ந்து மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டும் என்று தமிழக அரசு முன்வைத்த திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் பங்கு வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது.
 திரிணாமூல் கட்சி துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தபோதும் வாக்கெடுப்பில் முழுமையான ஆதரவு அளித்தது.
 இகக, இககமா கட்சிகளும் துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தபோதும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.
 1980களில் துவங்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியே ஜிஎஸ்டி.
 வரிவிதிப்பு அதிகாரம் முழுவதும் மாநிலங்கள் கையில் இருந்து பறிக்கப்படுவதால் அரசமைப்பு விதி 122ல் திருத்தமாக இந்த மசோதா முன்வைக்கப்பட்டது.
 இந்தியாவின் 29 மாநிலங்களில் குறைந்தபட்சம் 15 மாநிலங்களாவது மாநிலச் சட்டங்கள் இயற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டம் அமலுக்கு வரும். மாநில அளவிலான சட்டங்கள் தவிர மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டமும் ஒன்றுபட்ட சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டமும் இயற்றப்பட வேண்டும். அந்தச் சட்டங்களின்படி, பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மத்திய வரி அல்லது ஒன்றுபட்ட வரி + மாநில வரி விதிக்கப்படும்.
ஏப்ரல் 1, 2017 முதல் புதிய வரி விதிப்பு அமலாக வேண்டும்.
 ஜிஎஸ்டி சட்டத்தின் அதிகாரம் பெற்ற அமைப்பாக மத்திய கவுன்சில் இருக்கும். இதில் மத்திய அரசுக்கு 1/3 பங்கு ஓட்டுரிமை உண்டு. இதைக் குறைத்து டீ பங்கு ஆக்க வேண்டும் என மட்டுமே இகக(மா) கோரி வருகிறது.
 இனி சுங்கவரி, கலால்வரி, சேவை வரி, ஆக்ட்ராய், செஸ் கூடுதல் வரி என எதுவும் இருக்காது.
 பெட்ரோல், சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் இப்போதைக்கு ஜிஎஸ்டி வரம்புக்குள் வரவில்லை.
 மத்திய அரசாங்கமும், போட்டி போட்டுக் கொண்டு, மாநில அரசாங்கங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விலக்கும், வரி சலுகைகளும் அளித்துக் கொண்டிருக்கும்போது சாமான்ய மக்கள் தலை மீது ஜிஎஸ்டி சுமையாக வைக்கப்படுகிறது.
 கார்ப்பரேட் வரி, வருமான வரி போன்ற நேரடி வரிகள் போல் அல்லாமல் இந்த ஜிஎஸ்டி பணக்காரர்கள், ஏழைகள் என வித்தியாசமில்லாமல் அனைவருக்குமான ஒரே மாதிரியான வரி விதிப்பாகும். சமமற்றவர்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள். இதனால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகமாகும். இன்றைய நிலைமைகளிலேயே நேரடி வரியைவிட மறைமுக வரி மூலம்தான் அரசாங்கம் பெரும்வருவாய் பெறுகிறது. நேரடி வரி செலுத்துபவர்கள் மிகச் சிலரே. நாட்டின் மிகப்பெரிய மக்கள் தொகை மறைமுக வரி செலுத்திக் கொண்டிருக்கிறது. 2015 - 2016க்கான வருவாயில் மறைமுக வரி மூலம் ரூ.7.11 லட்சம் கோடியும் நேரடி வரி மூலம் ரூ.7.48 லட்சம் கோடியும் வருவாய் வந்துள்ளது.
இது அரசு மதிப்பிட்ட வரி வருவாயை விட ரூ.5,000 கோடி கூடுதல். ஆனால், நேர்முக வரி வருவாயில் அரசு மதிப்பீடு ரூ.7.97 லட்சம் கோடி. வந்திருப்பது மதிப்பிடப்பட்டதை விடக் குறைவு. மறைமுக வரியில் அரசு மதிப்பீடு ரூ.6.47 லட்சம் கோடி. வந்திருப்பது கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி கூடுதல். இந்த கூடுதல் வரியை கட்டியிருப்பவர்கள் நாட்டில் உள்ள 120 கோடி பேர். நேர்முக வரி கட்டுபவர்கள் 5 கோடி பேர்தான். இவர்கள் தவிர கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி கட்டுகின்றன. புதிய வரி விதிப்பின்படி, 120 கோடி பேர் மேலும் கூடுதல் வரி கட்டிக்கொண்டிருப்பார்கள்.
 வரி வருவாய் கூடும் என்றும் பொருட்களின் விலை குறையும் என்றும் அரசு சொல்வது முரண்பாடாக உள்ளது. ஏற்றப்பட்ட மறைமுகவரி எதுவானாலும் அதை கடைசியில் நுகர்வோரே செலுத்துகின்றனர்.
 இதனால் நுகர்வு குறையும். பணவீக்கம் அதிகரிக்கும்.
 ஜிஎஸ்டி, அரசமைப்புச் சட்டப்படியான கூட்டாட்சி முறைக்கு பெரும்அடியாக அமையும். மாநில உரிமை பற்றிப் பேசும் பெரும்பாலான கட்சிகள் கார்ப்பரேட் அடிமை சேவகம் செய்வதால் அமைதி காக்கின்றன; அல்லது வாக்குகளை குறி வைத்து ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
 ஜிஎஸ்டியை கையாள்வதற்கு, கணினி மற்றும் இதர கூட்டமைப்பு வசதிகளை நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும். இல்லாதவை தொழில் நடத்த முடியாத சூழல் வரும். சிறு, குறு நிறுவனங்கள் தொழில் செய்ய முடியாமல் வெளியேற வேண்டியிருக்கும். சந்தை சொல்மிக்க மந்திரமில்லை என எல்லாவற்றையும் சந்தை ஆட்டுவிக்கும்.
 ஜிஎஸ்டி 18%க்கு மிகக் கூடாது என்று காங்கிரஸ் சொல்கிறது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் இறுதி முடிவாகவில்லை.
 முதலில் விலைவாசி உயர்ந்தாலும் பிறகு ஸ்திரப்படும் என முதலாளித்துவ அறிஞர்கள் எப்போதும் போலவே புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 ஜிஎஸ்டியை நிர்வகிக்க சரக்கு மற்றும் சேவை வரிக்கான நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. அய்சி அய்சிஅய் வங்கியும், எச்டிஎஃப்சி வங்கியும் ஜிஎஸ்டிஎன்னின் முக்கிய பங்குதாரர்கள்.
 சந்தேகத்திற்கிடமில்லாமல் அய்எம்எஃப், உலக வங்கியின் மேற்பார்வை இதன் மீது இருக்கும். இந்தியாவின் நிதி இறையாளுகை நிச்சயமாக அரித்துப் போகும்.
 மாநிலங்கள் தங்கள் சமூக பொருளாதார சூழலுக்கு தகுந்த வரிவிதிப்பை இனி செய்ய முடியாது. மக்களிடமிருந்து வசூல் செய்யப்ப டும் பெருந்தொகையிலிருந்து மக்களுக்கு எதுவும் திருப்பித் தரமாட்டாது. பெருந்தொழில் குழும சேவையே இதன் நோக்கம்.
நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளால் ஊழல் ஒழியும், கருப்புப் பணம் வெளியில் வரும் எனச் சொல்லப்பட்டது போல இப்போது வரி ஏய்ப்பு ஒழிக்கப்படும், அனைவரும் தாமாக முன்வந்து வரி கட்டுவார்கள், அதனால் பொருளாதாரம் முன்னேறி வேலைவாய்ப்பு அதிகரிக்கும், விலைவாசி கட் டுக்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வரிச் சுமை மட்டுமே மக்கள் தலையில் ஏறும் என்பதுதான் இது வரை கண்ணுக்குத் தெரியும் விளைவாக இருக்கிறது.
தொகுப்பு: தேசிகன்

(மாலெ தீப்பொறி தொகுதி 15 இதழ் 2 2016 ஆகஸ்ட் 16 – 31)

Search