COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 16, 2018

ஏப்ரல் 12...
மோடியும், தமிழக அரசும் 
மக்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நாள்

இந்தியா துணை மேலாதிக்க கனவு கொண்ட அணு வல்லரசு. மிகவும் நவீன ஆயுதங்கள், முப்படை கொண்ட நாடு.
அதன் படைகளும் பிரும்மாண்டமானவை. மோடி, அணு ஆயுத பொத்தானை அழுத்தி பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ள உலகத் தலைவர்களில் ஒருவர். ஆனால், ஏப்ரல் 12 அன்று சேர சோழ பாண்டியர்கள் இல்லாமல், எந்த ஆயுதங்களும் இல்லாமல், தமிழ்நாட்டு மக்கள் மோடியே திரும்பிப் போ எனக் கருங்கோபத்துடன் முழங்கியபோது, மோடி அஞ்சி நடுங்கினார். எடுபிடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் அரசு, மோடியை ஏப்ரல் 12 அன்று, பொத்திப் பொத்திப் பாதுகாத்து அழைத்துச் சென்றது. மோடியால் தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்க முடியவில்லை. அஞ்சுவது அஞ்சாமை பேதமை என அவர்களுக்குப் புரிந்தது.
தமிழ்ச் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் மோடியே திரும்பிப் போ போராட்டத்தில் கலந்து கொண்டனர். எல்லாத் தடைகளையும் மீறி அய்அய்டி மாணவர்கள் நேரடியாக வெளிப்படுத்திய எதிர்ப்பை மோடி நேரில் காண நேர்ந் தது. மொத்த சமூகமும் கொதித்துக் கொண்டிருந்தபோது, காவல்துறை லத்திகள் கொண்டு அய்பிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தே தீரும் என இந்திய கிரிக்கெட் வாரியமும் தமிழ்நாடு அரசும் ஆழம் தெரியாமல் காலை விட்டார்கள். ஆனால் மக்கள் எதிர்ப்பால் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடினார்கள்.
பாஜக - ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஊதுகுழலாக ஒரு குரல், காவல்துறை மீதான தாக்குதல்களை கண்டிப்பதாகச் சொல்லி, காவல்துறையின் அப்பட்டமான அன்றாடம் நிகழும் மக்களுக்கு எதிரான வன்முறைக்கு வக்காலத்து வாங்கியது.
எதனால் இத்தனை சீற்றம்?
அளவு மாற்றம் பண்பு மாற்றமாகும். சீற்றம் ஒரு புள்ளியில் ஒரு விவகாரத்தில் வெளிப்பட் டாலும், அந்த சீற்றத்திற்கு பல காரணங்கள் உண்டு. காங்கிரசோ, பாஜகவோதான் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். அவர்கள் இருவர்க்கும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஆகவேதான், தேர்தல் ஆதாயம் கருதி, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படியான காவிரி மேலாளுமை வாரியமோ, மேற்பார்வைக் குழுவோ அமைக்கவில்லை எனத் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்தனர். மத்திய அரசு, உச்சி முதல் உள்ளங்கால் வரை தங்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பதாகவும், தங்கள் சொத்துக் குவிப்பைக் காக்க, தமிழக அரசு அவற்றுக்குத் துணை போவதாகவும், மக்கள் கருதுகிறார்கள். மொழித் திணிப்பு நடக்கிறது, கீழடி உள்ளிட்ட பண்பாட்டு அழிப்பு நடக்கிறது, நீராதார உரிமை மறுக்கப்படுகிறது, உயர்கல்வி உயர் ஆட்சிப் பதவிகள் தமிழ் மக்களுக்கு இனி இல்லை, இந்த மாநிலத்தை மத்திய அரசு சிறுமைப்படுத்துகிறது எனத் தமிழ்நாட்டு மக்களின் கூட்டு உணர்வு சொல்கிறது. மூவர் தூக்கு, ஜல்லிக்கட்டு, காவிரி மேலாளுமை வாரியம் அமைக்காமல் இழுத்தடிப்பது ஆகிய நிகழ்வுகள், காய்ந்த வெடிமருந்தை வெடிக்க வைக்கப் போதுமான விஷயங்களாக அமைந்தன.
சீற்றத்தின் அடிப்படை என்ன?
தமிழ்நாட்டில் நகர்மயமாதல், தொழில்மயமாதல் தொடர்ந்து  நடந்து  வந்தாலும், ஆகக் கூடுதல் மக்கள், கிராமங்களில் வசிக்கின்றனர். அவர்கள் விவசாயம் உள்ளிட்ட கிராமப் பொருளாதாரத்தையே சார்ந்துள்ளனர். ஆனால், பறித்தெடுத்தல் மூலம் மூலதனத் திரட்சி  நடக்கும்போது, தமிழ்நாட்டின் விவசாய நிலங்களும், கிராமம், கிராமமாக நீடிப்பதற்கான நிலங்களும், பயிர் விளையும் நிலங்கள் மட்டும்  அல்லாமல், பூமிக்குக் கீழே உள்ள வளங்களும், மாநிலம் எங்கும் உள்ள மண்வளம், இயற்கை ஆதாரங்கள், நீர் ஆதாரங்களும் பறி போவதை மக்கள் காண்கிறார் கள். உழுது பிழைக்கவும் வாழவும் தேவையான நிலம் சார்ந்த பொருளாதாரமும் சமூகமும் அதன் கூடவே, தமது, சந்ததியினரது வருங்காலம் உணவுப் பாதுகாப்பு எல்லாமே, கண் முன்னால் அழிவதை  மக்கள் பார்க்கிறார்கள். நிலமற்ற விவசாயத் தொழிலாளி, கிராமப் புறத் தொழிலாளி, ஏழை சிறு குறு விளிம்பு நிலை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள் வரை பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து நகரம் வந்துள்ள, பயிற்சியாளர், நிரந்தரமற்ற தொழிலாளி, கணினித் துறையினர், கலை இலக்கியத் துறையினர், படிக்கிற, வேலை தேடுகிற மாணவ இளைஞர்கள் மத்தியில், இருந்த ஒன்றை இழந்துவிட்டோம் என்ற ஏக்கம் உள்ளது. கிராமம் இனி நமது வாழ்விடமாக இருக்காதோ என்ற சோகமும் ஏக்கமும் சீற்றமாகிறது. ஒன்றை இழந்தோம், வேறொன்றையாவது பெற்றோம் என்றும் சொல்ல முடியாத நிலை, சீற்றத்தைத் தீவிரப்படுத்துகிறது. நகரங்கள், தாங்கள் வீசி எறியப்படும் குப்பைக் கூடங்கள், தம்மை இந்த சமூகம் உபரியாக்கி உள்ளது, சகமனிதர்களோடு வேலைக்கு வருமானத்திற்கு வசதிகளுக்குப் போட்டி  போட்டு, நம்மிடம் மிச்சம் மீதமுள்ள மானுடத் தன்மையையும் பறிக்கிறார்களே என்ற கோபம் மக்களுக்கு உள்ளது. ஊதிப் பெருகும் நகரங்களும் சுருங்கும் வசதிகளும், மாயமாகும் கைக்குச் சிக்காத வேலை வாய்ப்புகளும், கண் முன்னால், ஸ்மார்ட் போன் தொடுதிரையில் பிரும்மாண்டமாய் குவிந்துள்ள செல்வமும் வருமானமும், சினம் கொள்ளச் செய்கிறது.  இன்றைய தலைமுறை யினருக்கு காதலிக்க, திருமணம் செய்ய, பிள்ளைகள் பெற்று குடும்பம் நடத்த கூட தயக்கமாய் உள்ள சூழல், கொதிக்க வைக்கிறது.
சீற்றத்தின் இலக்கு
முதன்மை இலக்கு மத்திய அரசு. மாநில அரசு அடுத்த இலக்கு. மக்கள் உரிமைகளை கவுரவத்தை வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு பறிக்கிறது, மத வெறியை சாதி ஆதிக்கத்தை ஆணாதிக்கத்தை திணிக்கிறது, உழைப்பவர்கள் வாழ்க்கையை நாசமாக்குகிறது என்பதால் மத்திய அரசே, தமிழ்நாட்டு மக்கள் சீற்றத்தின் முதன்மை இலக்காக உள்ளது.
மாநில அரசு சூறையாடுகிறது. பழனி முருகன் கோவிலில் இருந்து பல கோயில்களில் போலி சிலை வைத்த, பத்ம விருது பெற்ற கணபதி ஸ்தபதி வீட்டில் மட்டும் ரூ.200 கோடி சொத்து குவிந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது என்றால், தமிழக ஆட்சியாளர்கள் எவ்வளவு குவித்திருப்பார்கள் என மக்கள் யோசிக்கிறார்கள். கூடங்குளம், ஸ்டெர் லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அனல் மின்நிலையம் என, தொகுத்துச் சொன்னால் வளர்ச்சி என்று பேசி, நம் வாழ்வாதாரங்களை விலை கொடுக்கிற ஆட்சி எனக் கருதுகிறார்கள்.
ஆளுநர் ஆட்டம் போடுவது, வேறு மாநில துணை வேந்தர் நியமனம் என எடுபிடி மிதியடி சுயமரியாதை இல்லாத அரசு எனக் கருதுகிறார்கள். ஆனால், சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் ஒடுக்குமுறை ஏவுகிற, உரிமைகளைப் பறிக்கிற அரசு என தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
சீற்றமும் அரசியல் மாற்றமும்
மக்களின் சீற்றம் பாஜக மேல், காங்கிரஸ் மேல், கழங்களின் மேல் நிச்சயம் உள்ளது. பாஜகவை வெறுக்கும் மக்கள் காங்கிரசை நேசிப்பதாக, எடப்பாடி - ஓபிஎஸ் இரட்டையரை எதிர்க்கும் மக்கள் திமுகவை விரும்புவதாக, நிச்சயம் ஆகாது.
திமுகவும் ஸ்டாலினும் முதன்மை எதிர்க்கட்சியாக முயற்சி எடுக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இகக, மதிமுக போன்றோர் திமுகவை மிகவும் நெருங்கிச் செல்கிறார்கள். இகக(மா)வும், ‘போலச் செய்யும்’ கட்டாயத்தை எதிர்கொள்கிறது.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டு மக்களின் எல்லா எதிர்ப்பு ஆறுகளையும், பாசிசத்தை மூழ்கடித்து மக்கள் இந்தியாவைப் படைக்கும் கடலில் சேர்க்க வேண்டிய கடமை, நமக்கு உள்ளது.
2019 தேர்தல் 2019ல்தான் வரும். பாஜக, பாஜக எடுபிடிகளுக்கு எதிரான வாக்குகளை ஒன்றுகுவிப்பது பற்றி அப்போது யோசிக்கலாம்.
இப்போது, பரவிப் படரும் பாசிச ஆபத்தை உணர்ந்து செயல்பட, அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களின் வீச்சை, வீரியத்தை நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.
மோடி தேர்தல்களில் வெல்லப்பட முடியாதவர் அல்ல என கோரக்பூர், ஃபுல்பூர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளன. பத்திரிகையாளர்களை விசாரணையின்றி தண்டிக்க, கருத்து சுதந்திரம் பறிக்க, ஸ்மிருதி இரானி எடுத்த முடிவு, பிரதமர் அலுவலகத்தால் 24 மணி நேரத்தில் ரத்து செய்யப்படுகிறது. கதுவா, உன்னாவ் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கெதிரான சீற்றம் நிறைந்த எதிர்ப்பு, மோடியை வாய் பேச வைத்துள்ளது. நியாயம் நிச்சயம் உண்டு என்கிறார் மோடி. உச்சநீதிமன்றம், தலித் பழங்குடியினர்க்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போக வைக்க, தகவல் தந்து துணை நின்ற மத்திய அரசு, இப்போது அப்படிச் செய்ய உச்சநீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்லும், மறுசீராய்வு மனுவை நீதிமன்றத்தில் பகிரங்கமாக விசாரிக்கச் சொல்கிறது. தலித் மக்கள் சீற்றத்தைப் புறந்தள்ள முடியவில்லை.
இந்தியா எங்கும் குறிப்பாக தமிழ்நாட்டில், மக்கள் முக்கிய எதிர்க்கட்சிகள் தலைமை இல்லாமலே நகரங்களில் கிராமங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இது பல வருடங்களாக நடக்கிறது. இவை ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதிகளே.
இடதுசாரிகள், மக்கள் மீதும் எதிர்காலத்தின் மீதும் மாற்றத்தின் மீதும் நம்பிக்கையுடன், உழுது பிழைக்க, விவசாயம் தழைக்க நீர்ப்பாசன வசதி உள்ளிட்ட வசதிகளுடன் நிலம் வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் வேண்டும், பாதுகாப்பான, கவுரவமான வேலைகள் வேண்டும், வாழ்வாதார ஜனநாயக உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற மக்களுக்கான நிகழ்ச்சிநிரலுடன் மக்கள் போராட்டங்களைக் கட்ட மைப்பது மட்டுமே, மாற்றத்திற்கான அடிப்படையான வழியாகும். அந்த முயற்சிகளைத் தளராமல் தொடரும் போதே, அவற்றை கற்பனைவளத்துடன் திறன் வாய்ந்தவையாக பொருளுள்ளவையாக மாற்றிக் கொள்ளும்போதே, மக்களுடைய அனைத்து ஆதிக்க எதிர்ப்பு, அநீதி எதிர்ப்பு போராட்டங்களோடும் ஒன்றுபட வேண்டும்.
இடதுசாரிகளின் துணிச்சலான சுதந்திரமான முன்முயற்சிகளும் பரந்த மனதுடனும் துடிப்புடனுமான ஒருமைப்பாட்டு தலையீடுகளும் உறுதியாகக் கட்டமைக்கப்பட்ட அமைப் புரீதியான  நடவடிக்கைகளுமே நாளைய மாற்றத்திற்கான இன்றைய தேவைகளாகும்.

Search