COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 16, 2018

நீதித்துறை சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் 
ஆபத்து வந்துள்ளதா?

எஸ்.குமாரசாமி

உச்சநீதிமன்றத்துக்குள் இருந்து
அபாய அறிவிப்புகள்
நாக்பூரில், ஏப்ரல் 14, 2018 அன்று, உச்சநீதிமன்றத்தின் இரண்டாம் நிலையில் உள்ள, நீதிபதி செல்லமேஸ்வர் பேசிய விஷயம், கேள்விகள் எழுப்புகிறது.
‘நான் இங்கு எவரையும் குறை கூற வரவில்லை.
ஆனால் நான் என் பேரக்குழந்தைகளுக்காகக் கவலைப்படுகிறேன். அவர்கள், இந்த நாட்டில் கவுரவத்துடன் வாழ வேண்டும் என்றால், நான், நீதித்துறையை பாதுகாத்து நீடிக்க வைத்து பலப்படுத்த வேண்டும். நீதித் துறை, வலுவானதாக சுதந்திரமானதாக, திறன் வாய்ந்ததாக, சமூகத்தின் பிரச்சனைகளுக்குப் பொறுப்பேற்பதாக அமையாவிட்டால், இந்த நாட்டில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது’.
‘மனிதர்கள் ஆண் பெண் எவரானாலும், எந்த நாட்டவர் ஆனாலும், அவர்களை அதிகாரம் நிச்சயம் ஊழல்படுத்துகிறது என மானுட வரலாறு காட்டுகிறது. ஊழல் என்பது பணம் தொடர்பானது மட்டும் அல்ல. மானுடப் பிரச்சனைகள், துயரங்கள் தொடர்பாக கூருணர்வு இல்லாமல் இருப்பதும் ஊழல் ஆகும். இத் கையவர்களைக் கட்டுப்படுத்த, மக்களுக்கு கவுரவமான வாழ்க்கையையும் உரிமைகளையும் உறுதி செய்ய, ஒரு வலுவான சுதந்திரமான நீதித்துறையே ஒரே சாத்தியமான பொறியமைவாகும்’. நீதிபதி செல்லமேஸ்வர், நீதித்துறை சுதந்திரத்துக்கு ஆபத்து, அந்த வகையில் ஜனநாயகத்துக்கு ஆபத்து என, எச்சரிக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், அவரது பணி மூப்புப்படி, தலைமை நீதிபதியாக விடாமல் தடுத்து விடுவார்களோ என்ற சந்தேகமும், நீதித்துறை சுதந்திரம் பற்றி கவலைப்படுகிற நீதிபதி செல்லமேஸ்வருக்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற முதல் நிலை அய்ந்து நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப், நீதித்துறையின் வாழ்வுக்கு, இருத்தலுக்கு சுதந்திரத்துக்கு ஆபத்து என்கிறார். தலையிடாவிட்டால், வரலாறு தம்மை மன்னிக்காது என்கிறார். நீதித் துறை இந்த அமைப்பு முறையை குரைக்கவும் கடிக்கவும் தெரிகிற காவல் நாயாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப் கவலைக்கு என்ன காரணம்?
நவம்பர் 2017லும், 11.04.2018 அன்றும் உச்சநீதிமன்றம், நீதிபதிகளின் அமர்வங்களை அமைப்பது, அமர்வங்களுக்கு வழக்குகளை ஒதுக்குவது என்பவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சிறப்புரிமை எனச் சொல்லி இருந்தபோதும், தலைமை நீதிபதி தம் சம்பந்தப்பட்ட வழக்கில் தாமே தீர்ப்பு வழங்கி, தாமே மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் எனப் பிரகடனம்  செய்த பிறகும், முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன், தலைமை நீதிபதியிடம், அமர் வங்களை அமைக்கும், வழக்குகளை ஒதுக்கும் முழுமுற்றூடான வரம்பற்ற அதிகாரம் தந்து விடாமல், வழக்குகளை ஒதுக்குவது, அமர்வங்களை அமைப்பது தொடர்பாக, ஏதாவது நடைமுறை வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என, நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வம் முன் ஒரு வழக்கைக் கொண்டு வர முயன்றார். தாம் இந்த வம்பில் நுழைய விரும்பவில்லை, ஏற்கனவே தம் உத்தரவு 24 மணி நேரத்தில் வேகவேகமாக மாற்றப்பட்ட அனுபவத்தைத் தாம் மறக்கவில்லை, தமக்கு எதிராக உள்நோக்கத்துடன் ஒரு பிரச்சாரம் நடக்கிறது என வருத்தப்பட்ட செல்லமேஸ்வர்  வழக்கை  விசாரிக்க மறுத்தார். தலைமை நீதிபதி அமர்வ முடிவுப்படி, சாந்தி பூஷன்  வழக்கு, நீதிபதிகள் எ.எம்.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் போப்டே, சந்திரசூட், ரமணா, லலித் ஆகிய அடுத்த தலைமை நீதிபதிகளாக வாய்ப்புள்ள நான்கு நீதிபதிகளும் நீதிபதி சிக்ரியும் சமரச தீர்வு காண முயற்சிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (சமரசப் பேச்சுவார்த்தை விவரங்களை, தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது என சங் ஊடகவியலாளர் அர்ணாப் கோஸ்வாமி போன்றோர் கேட்பார்களா?) நீதிபதி செல்லமேஸ்வர், தாம் ஓய்வு பெற்ற பிறகு, அரசு தயவில் எந்த பதவியும் பெற மாட்டேன் எனச் சொல்லி உள்ளார். வரவேற்கத்தக்க நல்ல முடிவு! (இனியாவது சதாசிவம் போன்றவர்கள் தங்கள் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வார்களா?)
நீதிபதி செல்லமேஸ்வர், உச்சநீதிமன்றத்தின் 24 நீதிபதிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். சட்டப்படி (நீதிபதிகளே உருவாக்கிய சட்டப்படி), உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை, உச்சநீதிமன்ற முதல் நிலை 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியமே பரிந்துரைக்க முடியும், அதனை அரசு ஏற்றாக வேண்டும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1. கர்நாடகத்தின் மாவட்ட அமர்வ நீதிபதி கிருஷ்ண பட் என்பவரை, உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்கலாம் என உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தபோது, மத்திய அரசு, அந்த நீதிபதி மீது ஒரு பெண் நீதிபதி புகார் தந்துள்ளதால் அவரை நீதிபதியாக்க முடியாது எனச் சொன்னது; 2. பின்னர், உச்சநீதிமன்ற கொலீஜியம் வழிகாட்டுதல்படி நடந்த விசாரணையில், நீதிபதி கிருஷ்ண பட் மீதான புகார்கள் ஆதாரமற்றவை எனத் தெரிய வந்ததால், திரும்பவும், அவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க, உச்சநீதிமன்ற கொலீஜியம் அரசுக்கு பரிந்துரைத்தது; 3. பரிந்துரையை ஏற்காமல், மத்திய அரசு, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, கிருஷ்ண பட் மீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என்கிறது. மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை சட்டை செய்யாமல் உயர்நீதிமன்றத்தை அணுகுகிறது. தினேஷ் மகேஷ்வரி திரும்பவும், விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இந்த நடவடிக்கைகள் தவறு, இவற்றால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து என செல்லமேஸ்வர், தமது சக நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கும் இளைய நீதிபதிகளிடமே ஒப்படைக்கப்பட்டதையும் ஜெயலலிதா இறந்த பிறகுதான் அந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டதையும் நீதிபதி செல்லமேஸ்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் காலியிடங்கள் உள்ளதால், அடுத்தடுத்து இடங்கள் காலியாக உள்ளதால், உச்சநீதிமன்ற கொலீஜியம், உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தர்கன்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க, ஜனவரி 10 அன்று பரிந்துரைத்தது. மத்திய அரசுக்கு எதிராக நீதிபதி கே.எம்.ஜோசப், உத்தர்கன்ட் மாநில ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியதால், இப்போது மத்திய அரசு, இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு குறுக்கே நிற்கிறது. இந்த நடவடிக்கை நீதித் துறையின் கீழ் மட்டம் வரை உள்ளோர்க்கு தவறான செய்தி சொல்கிறது எனச் சாடுகிறார் குரியன் ஜோசப். உரத்த குரலில் தெளிவாக, அரசின் விருப்பத்துக்கு மாறாகச் செயல்படுபவர்கள், பாதிப்புக்கு உள்ளாவீர்கள் எனச் சொல்வது, நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இல்லையா என, குரியன் ஜோசப் கேட்கிறார். அவர், 24 நீதிபதிகளின் கூட்டம் நடத்தி, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வம் அமைத்து, இந்தப் பிரச்சனையை வழக்காக்கி விசாரிக்க வேண்டும் என்கிறார். அவரது புகார்படி, அடுத்தடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் நடக்காமல் இருப்பதற்கு, காலியிடங்கள் நீடிப்பதற்கு, வழக்குகள் தேங்குவதற்கு, மத்திய அரசு காரணம் என்றாகாதா? (வழக்கறிஞர்களைப் பற்றி, தொழிலாளர்களைப் பற்றி போராட்டங்கள் பற்றி எப்போதும் கவலைப்படுகிற, செல்லத்தகாத தீர்ப்பு எழுதுகிற கனவான்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள்போல் சுயபரிசோதனை செய்து கொள்வார்களா? ஜனநாயகம் பற்றி சிறிதேனும் புரிந்துகொண்டு கவலைப்படுவார்களா?)
பாசிச ஆட்சியாளர்கள், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுத்துகிறார்கள்;  அதற்கு நீதித்துறையில் இருந்தே உதவுகிறார்கள். அதனால்தான் நீதிபதிகள் செல்லமேஸ்வர்  குரியன் ஜோசப் போன்றோர், நாட்டினுடைய, வரலாற்றினுடைய துணையை நாடுகிறார்கள்.
கதுவா,  உன்னாவ் அநீதிகள்
கதுவாவில், 8 வயது இசுலாமிய சிறுமி கோயிலுக்குள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார். காவல் துறையினர் மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் மீது, மாநில காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது. வழக்கு கூடாது என, சங் பரிவார் ஊளையிட, ஆமாம் இதற்கெல்லாம் வழக்கா என, பாஜக ஜம்மு காஷ்மீர் அமைச்சர்கள், கேட்கிறார்கள். ஜம்முவின் வழக்கறிஞர் சங்கம், பாதிக்கப்பட்ட வருக்கு ஆதரவாக, யாரும் வழக்காடக் கூடாது எனத் தீர்மானம் போடுகிறது, மிரட்டுகிறது. அகில இந்திய பார் கவுன்சில், இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்கிறது? சும்மா இருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது, ஒரு மைனர் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார், கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணின் தந்தை மரணத்துக்கு காரணம் ஆனார் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளும், அட்வகேட் ஜெனரலும், குற்றம் சுமத்தப்பட்டவர் சாட்சியங்களைக் கலைக்க, சாட்சிகளை மிரட்ட துணை போவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் சொல்கிறது. அட்வகேட் ஜெனரல், முதல் தகவல் அறிக்கை போட்டால் மட்டும் போதாது, 161 பிரிவின் கீழ் சாட்சிகளிடம் ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் ஸ்டேட்மென்ட் வாங்க வேண்டும், விசாரிக்க வேண்டும், பிறகு சாட்சியம் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் என நீட்டி முழக்குகிறார். உத்தரபிர தேசத்தில் எல்லா குற்றவியல் வழக்குகளிலும் இப்படித்தான் கைது செய்கிறீகளா என்ற தனது கேள்விக்கு, அட்வகேட் ஜெனரல் பதில் எதுவும் தரவில்லை என்கிறது நீதிமன்றம். நீதிபரிபாலன முறையின் வேறு வேறு பிரிவினரால் ஜனநாயகத்துக்கு ஆபத்து நேர்கிறது.
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் முடிவுகள் எண்ணுவதில்  ஜனநாயக மறுப்பு
50,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்தலில், திருவாளர்கள் அக்பர் அலி, தமிழ்வாணன் என்ற இரண்டு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக உள்ள தேர்தலில், தமிழ்நாட்டவரை வைத்தே வாக்குகளை எண்ணலாம் என்ற தேர்தல் அதிகாரிகளின் பரிந்துரைகளை, அகில இந்திய பார் கவுன்சில் நிராகரித்துள்ளது. கேரளாவில், கேரளத்தவர்களைக் கொண்டே வாக்குகளை எண்ணலாம் என விதிவிலக்களித்த அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாட்டில் அந்த விதிவிலக்கைத் தர மறுக்கிறது.
சங் பரிவார் குற்றக் கும்பல் வழக்கறிஞர்கள் சிலர் டில்லி உயர்நீதிமன்றத்தில், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் போராளிகளைத் தாக்கிய போது, அந்த காட்சி நேரடி ஒளிபரப்பானபோது, சுட்டுவிரலைக் கூட அசைக்காத அகில இந்திய பார் கவுன்சில், நீதித் துறையை சுத்தப்படுத்த போராடிய தமிழ்நாட்டு வழக்கறிஞர்களைத் தண்டிக்க, பழி வாங்க, ஆனதெல்லாம் செய்தது, இப்போதும் அதைத்தான் தொடர்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் தமக்கு எதிரான மோடியையே விரட்டி ஓடவைக்க முடியும் என்றால், ஜனநாயக விரோத அகில இந்திய பார் கவுன்சிலை, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் முறியடிக்காமலா விடுவார்கள்?
நீதிபரிபாலன முறையில் நீதிபதிகள், வழக்கறிஞர் அமைப்புகள், அரசு வழக்கறிஞர்கள், பார் கவுன்சில்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் பிரிக்க முடியாத பகுதிகள். இந்த எல்லா அங்கங்களின் மீதும் பாசிச ஆபத்து பரவிப் படரும்போது, வழக்கறிஞர் அமைப்புகள், அரசு வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் ஆகியோர் ஒடுக்குமுறைகளுக்கு துணைபோகும்போது, நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத் துக்கும் ஆபத்துதானே? இந்த ஆபத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்களோடு, நீதிபதிகளோடு நாடெங்குமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள் கரம் கோர்க்க வேண்டும்.

Search