COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 30, 2018

கூடாநட்பு முதலாளித்துவத்தில் 
சாதனைகள் படைக்கும் மோடி ஆட்சி

ஜெய் அமித் ஷா, சொந்தமாக தொழில் செய்து மிகக் குறுகிய காலத்தில் தனது சொத்து மதிப்பை பல நூறு மடங்கு பெருக்கியதாக செய்தி வெளியிட்ட இணைய பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்தவர்கள்,
பின் அமைதியாக இருந்து விட்டார்கள். ஜெய் அமித் ஷா, தான் பெற்ற உயர் கல்வியின் உதவியுடனும் தனது மதிநுட்பத்தாலும் தனது தொழிலைச் சிறப்பாக நடத்தினார் என்று சொன்னார்கள். இப்போது, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தனது சொத்து மதிப்பை ஆயிரம் மடங்கு அதிகரித்து விற்று செல்வம் சேர்த்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
ஜெய் அமித் ஷா, அய்சிஅய்சிஅய் வங்கி தலைமை அதிகாரி சந்தா கொச்சார் ஆகியோர் ஒரு நிறுவனம் துவங்கி, அதை விற்று, பிறகு அந்த நிறுவனத்தின் பேரில் கடன் வாங்கி, பிறகு அதை விற்று என சுற்றிச் சுற்றி பொருளாதார மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதுபோல் தான் பியுஷ் கோயல் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. ஜெய் அமித் ஷாவோ, சந்தா கொச்சாரோ, நேரடியாக அரசியல் அதிகாரத்தில் இல்லை. அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகமிக நெருக்கமானவர்கள். ஆனால், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் எந்த உறுத்தலும் இன்றி நேரடியாக மோசடி செய்துள்ளதாக அந்தச் செய்தி சொல்கிறது என சொல்ல முடியாதா?
பியுஷ் கோயல் மத்திய அமைச்சரான பிறகு, அவருக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான பிளாஷ்நெட் என்ற நிறுவனத்தின் எல்லா பங்கு களையும் ஆயிரம் மடங்கு கூடுதல் விலைக்கு பிரமல் குழுமத்துக்கு விற்றுள்ளார். இப்போது ரயில்வே அமைச்சராக இருக்கும் பியுஷ் கோயல் இந்த பரிமாற்றம் நடந்தபோது எரிசக்தி துறையின் தனிப் பொறுப்பு கொண்ட அமைச்சராக இருந்தார். பிரமல் நிறுவனம் எரிசக்தி துறை தொழிலும் செய்து வருகிறது. மத்திய அமைச்சரான பிறகு பிரதமர் அலுவலகத்துக்கு தனது சொத்து விவரங்களை சமர்ப்பித்தபோது, பியுஷ் இந்த பரிமாற்றம் பற்றி தெரிவிக்கவில்லை.
பியுஷும் அவரது மனைவியும் பியுஷ் அமைச்சராக பதவியேற்ற மே 26, 2014 வரை, பிளாஷ்நெட் இயக்குநர்களாக இருந்துள்ளனர். பதவியில் இருந்து விலகிய பிறகும் அவரும் அவரது மனைவியும் அந்த நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குதாரர்களாக இருந்தனர்.
2010ல் பியுஷ் மாநிலங்களவை உறுப்பினர் ஆனபோது, பிளாஷ்நெட் நிறுவனத்தில்தான் பங்குகள் வைத்திருப்பதை தெரிவித்திருந்தார். 2014லும் 2015லும் பிரதமர் அலுவலகத்துக்கு தனது சொத்து விவரங்கள் பற்றி தெரிவித்தபோது, பிளாஷ்நெட் பற்றி அவர் குறிப்பிடவில்லை. 2014 விவரங்களில் ரூ.1,03,000 மதிப்பில் பங்குகள் இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். அவரது பங்குகளும் அவரது மனைவியின் பங்குகளும் 2014 செப்டம்பரில் பிரமல் எஸ்டேட்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. 2015 மார்ச் 31 அன்று தனது சொத்து விவரங்கள் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு பியுஷ் தெரிவித்த போது, ரூ.1,03,000 மதிப்பில் பங்குகள் இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். 2016ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டபோது, சமர்ப்பித்த விண்ணப்பத்திலும் பிளாஷ்நெட் பற்றிய விவரங்கள், பங்குகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
2013ல் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி தொழில் துவங்கிய பிரமல் நிறுவனம் 2014 ஜுலையில், பியுஷ் அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, ஏபிஜி அசெட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்துடன் ரூ.6,500 கோடி அளவுக்கு எரிசக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டு மானத் திட்டங்களில் முதலீடு செய்கிறது. ஜுலை மாதமே எரிசக்தித் துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனத்துக்குத்தான் எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் செப்டம்பரில் வெறும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தனது பிளாஷ்நெட் பங்குகளை ஆயிரம் மடங்கு அதிக விலைக்கு, ரூ.50 கோடிக்கு விற்கிறார். நேரடியாகச் சொல்வதானால், பிரமல் நிறுவனத்திடம் ரூ.50 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளார்.
2010 வரை பியுஷ் இயக்குநராக இருந்து, 2013 வரை பங்குகள் வைத்திருந்த ஷீர்டி என்ற நிறுவனம், 2014ல் தனது வர்த்தகத்தை முடித்துக் கொண்டபோது, ரூ.650 கோடி கடன் நிலுவை வைத்திருந்தது. இந்தக் கடனின் பெரும்பகுதி பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் 60% கடன் கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்துக்கும் தனக்கும் இப்போது எந்தத் தொடர்பும் இல்லை என்று பியுஷ் சொல்கிறார். ஷீர்டி குழுமத்தின் இன்னொரு நிறுவனத்திலும் சஜ்ஜல் பினான்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பியுஷ் பங்குகள் வைத்திருக்கிறார். அந்த நிறுவனமும் திவாலானது. அந்த நிறுவனத்திடம் இருந்து பியுஷின் மனைவி அடமானம் இல்லா கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனின் தற்போதைய மதிப்பு ரூ.1.59 கோடி. வேறு விதமாகச் சொல்வதென்றால், இந்த ரூ.1.59 கோடி பியுஷ் மனைவி பெயரில் வாங்கப்பட்டுள்ள லஞ்சம் என சொல்ல முடியாதா?
வழக்கம்போல், இந்த விவரங்கள் எல்லாம் பொய், பியுஷ் மீது எந்தத் தவறும் இல்லை, அவர் அமைச்சரான பிறகு பரிசுத்த ஆத்மா என பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. பியுஷ் மீதுதான் கேள்வி எழுப்பப்படும்போது, பிரமல் நிறுவனம் முந்தி வந்து பதில் சொல்கிறது. நமக்கு நமது அப்பன் குதிருக்குள் இல்லை நினைவுக்கு வருகிறது. ஷீர்டி நிறுவனத்தின் கடன் தள்ளுபடி பற்றி பாஜகவினர் விளக்கம் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள். நாளை இன்னும் யாராவது ஒரு வியாபார காந்தம் நாட்டை விட்டு ஓடிப்போகும்போது, நாட்டுக்கு விவரம் தெரிய வரலாம். பிரமல் நிறுவனத்துக்கும் கடன் தள்ளுபடி, சலுகைகள், விலக்குகள் எல்லாம் தாராளமாகக் கிடைக்க, கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்புகள் கூடுதல்.
நீரவ் மோடி ஓடிப்போன பிறகும், மோடி ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக மோடி பக்தர்கள் சொல்கிறார்கள். மக்கள் பணத்தை ஒன்று குவித்து, தனியார் தொழிலுக்கு நிதி ஏற்பாடு செய்வதுதான் வங்கிகள் தேசிய மயமாக்கத்தின் நோக்கம். அந்த வங்கிகளையே துடைத்து எடுத்துவிடுவது இன்றைய ஆட்சியாளர்களின் நடைமுறை. தூய்மை இந்தியா திட்டம் நாட்டில் வேறெங்கும் செயல்படுத்தப்படுகிறதோ இல்லையோ, வங்கிகளை துடைத்தெடுப்பதில் பல்வேறு வழிகள் மூலம் படைப்பாற்றலுடன் செயல்படுத்தப்படுகிறது. மோடி ஆட்சியின் சாதனைகளில் இந்த தூய்மை வங்கித் திட்டம் நிச்சயம் இடம் பெறும்.
இப்போது ரொக்கப் பற்றாக்குறை நிலவுகிறது. ஏடிஎம்களில் பணம் இல்லை. ரூ.70,000 கோடி அல்லது ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை என செய்திகள் சொல்கின்றன. 2017 மார்ச் முதல் 2018 பிப்ரவரி வரை நாட்டில் 1,695 ஏடிஎம்கள் குறைந்துவிட்டன. 2016 நவம்பர் 8, நாட்டு மக்களை இன்னும் மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
மார்ச் 2017ல் ரூ.150.09 லட்சம் கோடி என்ற மதிப்பில் இருந்த மின்னணு பணபரிமாற்றம், பிப்ரவரி 2018ல் ரூ.114.12 லட்சம் கோடி என குறைந்துள்ளது. ஆயினும், மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு 2018 - 2019 நிதியாண்டுக்கு மோடி அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்கு சென்ற ஆண்டு இலக்கை விட 50% கூடுதல். 2017 - 2018ல் அது ரூ.2,500 கோடி. அதில் ரூ.2,000 கோடிதான் எட்டப்பட்டது. இந்த ஆண்டு அது ரூ.3,000 கோடி என வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் இந்த முட்டாள் பிடிவாதம் தவிர, பணம் பதுக்கப்படுகிறது, கர்நாடகா தேர்தல்களுக்கு பணம் சென்றுள்ளது என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.
முன்னாள் பாஜக நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர், பணமதிப்பகற்ற நடவடிக்கை நாட்டில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியபோது, மோடி அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைத்த யஷ்வந்த் சின்ஹா, பாஜகவில் இருந்து விலகுவதாகவும் வேறெந்த கட்சியிலும் தாம் சேரவில்லை என்றும் அறிவித்துள்ளார். பாஜக தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அய்ந்து பேர் பேசியதுபோல் மற்றவர்களும் இப்போதாவது பேச வேண்டும் என்று தனது ஏப்ரல் 17, 2018 தேதிய திறந்த மடல் ஒன்றில் சொல்லியுள்ளார். பணமதிப்பகற்றத்துக்குப் பிறகு எவ்வளவு பணம் வங்கிகளுக்கு திரும்பியது என்பது பற்றி இறுதி விவரங்களை ரிசர்வ் வங்கி ஏன் இன்னும் தரவில்லை என்று யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்புகிறார்.
ஏர் இந்தியா விற்பனையை 2019 தேர்தல்களுக்குப் பிறகு தள்ளிப் போட வேண்டும் என்று சுப்ரமணியம் சுவாமி சொல்கிறார். விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை (யஷ்வந்த் சின்ஹாவின் மகன்) பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார். ஜெய் அமித் ஷா பற்றியோ, பியுஷ் கோயல் பற்றியோ மோடியும் சங்பரிவாரும் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லவில்லை என்றாலும் ஆர்எஸ்எஸ்காரர்களே எழுப்பும் கேள்விகளுக்காவது பதில் சொல்வார்களா?

Search