COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 30, 2018

புதுகைச் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த, கல்குவாரியில் வேலை செய்யும் பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய், ஏப்ரல் 21 முதல் காணவில்லை.
வுமன் மிஸ்ஸிங், பெண் காணவில்லை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் பதிவு செய்ததும் இககமாலெ தோழர்கள் தலையிட்டதாலும் வலியுறுத்தியதாலும்தான் நடந்தது.
முத்தரையர் பிரிவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான அந்தப் பெண் வேறு வேலை கிடைக்காததால் அருகில் இருக்கும் கல்குவாரிக்கு வேலைக்குச் செல்கிறார். அவர் வேலை செய்யும் அதே கல்குவாரியில் உள்ள ஆதிக்கசாதிப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல்ரீதியாக வன்முறை செய்துள்ளார். அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது ஆதிக்க சாதிக்காரர் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று மிரட்டத் துவங்கியிருக்கிறார். அவரது மிரட்டல் அத்துமீறியபோது அந்தப் பெண்ணும் அவரது கணவரும் மாலெ கட்சித் தோழர்களை அணுகி பிரச்சனையின் தீவிரத்தை தெரியப்படுத்தினர். மாலெ கட்சித் தோழர்கள் தலையிட்ட பிறகு காவல்துறை ஆதிக்கசாதிக்காரரிடம் பேசி பிரச்சனையை தற்காலிகமாக தீர்த்து வைத்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 21 அன்று காலை 6.30 மணி முதல் வீட்டில் இருந்த அந்தப் பெண்ணை காணவில்லை. இது பற்றி புகார் தரச் சென்றபோது, காவல்துறை உடனடியாக புகார் பதிவு செய்ய மறுத்தது. மாலெ கட்சித் தோழர்கள் தலையிட்ட பிறகே ஏப்ரல் 22 அன்று வுமன் மிஸ்ஸிங் புகார் பதிவு செய்யப்பட்டது. புகார் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகும் காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த மாலெ கட்சித் தோழர்கள் வலியுறுத்தியதால், அன்னவாசல் காவல் துறையினர் தேடுதல் நடவடிக்கையை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன பெண்ணை தேடுவதில் அன்னவாசல் காவல்துறையிடம் காணப்படும் மெத்தனத்தைக் கண்டித்து இகக மாலெ தோழர்கள் சுவரொட்டி வெளியிட்டுள்ளனர். இதனால், இது போன்ற பிரச்சனைகளில் காவல்துறையினர் வழக்கமாகச் சொல்வதுபோல், அந்தப் பெண்ணை பாலியல்ரீதியாக மிரட்டி வந்த ஆதிக்கசாதிக்காரரும் பகுதியில் இல்லை என்பதால், அந்தப் பெண்ணே விருப்பப்பட்டு சென்றிருக்கலாம் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அந்தப் பெண்ணை மிரட்டி வந்தவரும் காணவில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்கு ஆபத்து ஏதும் நேர்ந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கிற அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அப்படியே இருந்தாலும், அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கொண்டு வந்த பிறகு அந்தப் பெண் சொன்னால், ஒப்புக்கொள்வதாக காவல்துறையினருக்குச் சொல்லியுள்ளனர். காவல்துறை தரப்பில் அந்தப் பெண்ணை தேடுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய தோழர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஏப்ரல் 22, கட்சி நிறுவன தினத்தன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, கந்தர்வகோட்டை மற்றும் கீரனூர் மய்யங்களில் கிளைச் செயலாளர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஏப்ரல் 22, மத்திய கமிட்டி அறைகூவல் வாசிக்கப்பட்டது. இந்தக் கூட்டங்களில் மாவட்ட கட்சியின் 52 கிளைகளின் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் என 60 பேர் கலந்துகொண்டனர்.
கந்தர்வகோட்டையில் உள்ள அரசு எண்ணெய் வித்துப் பண்ணையில் 600க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவர்களின் கூலி, நீண்ட நாட்களாக மாற்றியமைக்கப்படாமல் ரூ.251 என இருக்கிறது. தஞ்சை அரசு எண்ணெய் வித்துப் பண்ணை தொழிலாளர்களுக்கு ரூ.400 வரை கூலி தரப்படுகிறது. கந்தர்வகோட்டை தொழிலாளர்களுக்கும் கூலி மாற்றியமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மாலெ கட்சித் தோழர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆட்சியர் தொழிலாளர் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொல்லியுள்ளார்.

Search