COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 3, 2018

மக்கள் நலன் காக்க, மக்கள் விருப்பங்கள் தேவைகள் மீதான நிகழ்ச்சிநிரலுடன் போராட்ட களங்களில் இடதுசாரி ஒற்றுமையை கட்டமைப்போம்

தோழர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பஞ்சாபின் மான்சாவில் எங்கள் கட்சியின் பத்தாவது காங்கிரஸ் மார்ச் 23 - 28 தேதிகளில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உங்கள் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள இயலவில்லை.
திரிபுரா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சங்பரிவார் கும்பல்கள், லெனின் சிலையை தகர்த்தனர்; அம்பேத்கர் சிலையை உடைத்தனர்; பெரியார் சிலையையும் சிதைத்தனர். வழக்கம்போல, இனி வடகிழக்கில் சிவப்பு சூரியன் இல்லை, காவி சூரியன்தான் என மோடி வசனம் பேசினார். சில நாட்களிலேயே சங் பரிவாருக்கு உத்தரபிரதேச மக்கள் பலத்த அடி கொடுத்தனர். சில பத்தாண்டுகளாக பாஜக வசம் இருக்கிற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் மக்களவை தொகுதியில், துணை முதலமைச்சர் மவுரியாவின் தொகுதியில், பாஜக 2014ல் பெற்றதைக் காட்டிலும் 3 லட்சம் வாக்குகளுக்கும் மேல் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளது.
திரிபுராவில் இடதுமுன்னணி தோல்வியும் உத்தரபிரதேசத்தில் பாஜக தோல்வியும் கவனிக்கத் தக்கவைதான். ஆனபோதும், இந்தத் தேர்தல்களை எல்லாம் தாண்டி, கார்ப்பரேட்டுகளின் பேராதரவு பெற்ற, கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குகிற, பாஜகவின் பின்னால் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. காக்கிச் சட்டை, அரசப் படைகள், சீருடையினர் வன்முறை என்ற சர்வாதிகார ஆட்சிகளின் வன்முறை தாண்டி, தண்டனை பற்றிய கவலை இல்லாத காவிப் படையினரின், கும்பல் வன்முறை அரங்கேறுகிறது. மத்தியில் ஆட்சியைப் பிடித்தவர்கள், ஓரிரு மாநிலங்கள் தவிர எல்லா மாநிலங்களையும் பிடித்துள்ளனர். எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றி இழுத்த இழுப்புக்கு வளைக்கின்றனர். இதிகாசத்தையும் புராணத்தையும் வரலாறு என திணிக்கின்றனர். ஆர்எஸ்எஸ்சின் நூற்றாண்டு 2025ல் வரும்போது, இந்தியாவை இந்து ராஷ்ட்ரா ஆக்கிவிட முயற்சி செய்கின்றனர். சமத்துவத்தை வெறுக்கிற இந்தக் கூட்டம், உழைப்பின் மீது எள்ளளவும் மரியாதை இல்லாத இந்தக் கூட்டம், சமூக அமைப்பு மேல் கீழ் என எப்போதும் தொடர வேண்டும் என விரும்புகிற இந்தக் கூட்டத்தை, காவி பாசிஸ்டுகளை இங்கேயே இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்.
பாசிசத்தை முறியடிக்க, மக்கள் இந்தியா படைக்க மக்கள் தேவைகள், கோரிக்கைகள் மீதான மக்கள் போராட்டங்களே முன்னிபந்தனை ஆகும். எல்லா தளங்களிலும் களங்களிலும் பாசிசத்தை முறியடிக்க வேண்டிய நாம் தேர்தல் களத்தில் பாசிசத்தை 2019ல் தப்பிக்க விட்டுவிட்டால் நிகழ்காலமும் வருங்காலமும் நம்மை மன்னிக்காது. பாசிசத்துக்கு இடம் கொடுத்தவர்கள் காங்கிரசும் சமூக நீதி முகாமும் திராவிட கட்சிகளுமே.கொள்கை தளத்தில் மாற்று அரசியல் கருத்தியலோடு பாசிசத்தை எதிர்கொள்ளும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்டவர்கள் இடதுசாரிகள் மட்டுமே. அந்த வகையில் பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு அச்சாணியாக இடதுசாரி ஒற்றுமையை உருவாக்குவோம்.
தமிழ்நாட்டில் மோடிக்கு பயந்து பணிந்து பழனிச்சாமி - பன்னீர்செல்வம் ரிமோட் கண்ட்ரோல் இரட்டையரின் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. மொழி, நீராதாரம், நிலவளம், உணவுப் பாதுகாப்பு, பண்பாடு, வருவாய், மாநில உரிமைகள் ஆகிய அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு காலில் போட்டு மிதிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு, விவசாயிகளுக்கு காவிரி என்பதைக் காட்டிலும் நரேந்திர மோடிக்கு கர்நாடகா தேர்தல் வெற்றியே முதன்மையானதாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பப்படி காவிரி மேலாளுமை வாரியத்தை அமைக்க மறுக்கிறார்.
தமிழ்நாட்டில் கழகங்கள் திராவிட இயக்கத்தின் முற்போக்கு விழுமியங்கள் அனைத்தையும் தொலைத்து இன்று நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அவை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில் சாதியாதிக்கத்துக்கு அனுசரித்துப் போவதில் பெண்ணடிமைத் தனத்துக்கு ஒத்துழைப்பு தருவதில் போட்டிப் போட்டுக் கொள்கின்றன.
தமிழ்நாட்டில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இருந்தே இடதுசாரிகளுக்கு ஒரு போராட்ட வரலாறு இருந்துள்ளது. தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார அரசியலில் நேர்ந்து வரும் கடைசலில் வலதுசாரி சக்திகள் செல்வாக்கு பெற கடுமையாக முயற்சி செய்கிறார்கள். இடதுசாரி அரசியலுக்கு மக்கள் போராட்ட நிகழ்ச்சிநிரலுக்கு தமிழகத்தில் நிச்சயமாக இடமும் வாய்ப்பும் களமும் உள்ளது. பாஜகவுக்கு அதன் கூட்டாளிகளுக்கு எதிரான நமது விழிப்புணர்வை சற்றும் தளர்த்தாமல் பார்த்துக் கொள்ளுகிற அதே நேரத்தில், சுதந்திரமான இடதுசாரி அரசியலை வலுப்படுத்த வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. மக்கள் நலன் காக்க, மக்கள் விருப்பங்கள் தேவைகள் மீதான ஒரு நிகழ்ச்சிநிரலுடன் போராட்ட களங்களில் இடதுசாரி ஒற்றுமையைக் கட்டமைப்போம்.
உங்களது மார்ச் 28 - 31, 2018ல் மன்னார்குடியில் நடைபெறும் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு வெற்றி பெற இககமாலெ சார்பாக வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்

எஸ்.குமாரசாமி
(இகக மாநில மாநாட்டில் கட்சியின் மாநில துணைச் செயலாளர்
தோழர் மு.வீரபாண்டியன் இந்தச் செய்தியை வாசித்தார்)

Search