COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 30, 2018

கொரியாவில் அமைதி திரும்புவது 
உலகத்துக்கு நல்லது

எஸ்.குமாரசாமி

அய்க்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய அமைச்சரவையை, போர் அமைச்சரவை என்று சுலபமாகச் சொல்ல முடியும்
. வெறி நாய் (மேட் டாக்) மாட்டிஸ், அய்க்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர். உளவு நிறுவனமான சிஅய்ஏயின் முன்னாள்  தலைவர் பாம்பியோ, இப்போதைய அயல்விவகாரத் துறை அமைச்சர். ஜான் போல்டன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். இவர் நியூயார்க் டைம்சில், இரான் குண்டு தயாரிக்காமல் இருக்க இரான் மீது குண்டு போட வேண்டும் என்றவர். இஸ்ரேல், சவுதி அரேபியா  விரும்புவது போல், இரான் பாலைவனத்தில் அணுகுண்டு வீசி அவர்களுக்கு புத்தி வரவழைக்க வேண்டும் என விடாமல் வலியுறுத்தியவர். இவர், பிப்ரவரி 28, 2018ல் வால்ஸ்ட்ரீட் ஜர்னலில், ‘வடகொரியா மீது முதலில் நாம் அணுகுண்டு போடுவதற்கான நியாயங்கள்’ என எழுதியவர்.
டிரம்ப், நான் அசராதவன் அடங்காதவன், வட கொரியா மீது அணுகுண்டு வீச அஞ்சாதவன் எனச் சமூக ஊடகங்களில் 2017ல் விடா மல் பதிவுகள் செய்தார். டிரம்ப் பேச, வட கொரிய தலைவர் கிம் சூடாகப் பதில் சொல்ல உலகம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளுக்கும் மேல், கூடுதலான பெரிய பாதிப்புகளைச் சந்திக்கும் நிலை உருவானது. டிரம்ப்பின் அரசியல் முடிவுகள், அவரது மனநிலை பற்றிய அய்க்கிய அமெரிக்க மக்களின் கவலைகளைக் கணக்கில் கொண்டு, ‘ஷால் வி கில் த பிரசிடென்ட்?’, ‘நாம் அதிபரைக் கொன்று விடலாமா?’ என சுவாரசியமான ஒரு கதையும் எழுதப்பட்டது.
கொரிய தீபகற்பத்தில் வெடிக்கும் நிலை ஏன் வந்தது?
இரண்டாம் உலகப் போரில் பெரிய பாதிப்புகளைச் சந்தித்த ஜப்பான், ஆசியாவில் பெரும் பாதிப்புகளையும் உருவாக்கியது. ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்பு போர் தொடுத்தது. போர் நெடுக, தனது போர் வீரர்களுக்காக கொரியாவிலிருந்து ஆறுதல் அணங்குகளை ஏற்பாடு செய்தது. ஆசியா நெடுக கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டது. ஆனால் அநீதியின் உறைவிட மான அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம், போரில் வெற்றி பெற்ற பிறகு, ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் தோற்ற பிறகு, ஜப்பானின் ஹரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியது. இரண்டாம் உலகப் போர் முடியும் போது சீனாவில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் புரட்சி வென்றது. முதல் உலகப் போரில் சோச லிச சோவியத் ஒன்றியக் குடியரசு உருவான தென்றால், இரண்டாம் உலகப் போரில் சீனா கிழக்கு அய்ரோப்பிய நாடுகள், கொரியா சோசலிசம் நோக்கித் திரும்பின. இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான புரட்சி ரத்த வெள்ளத்தில் நசுக்கப்பட்டது. 1950 முதல் 1953 வரை கொரியாவைத் துண்டாடும் போரில் அய்க்கிய அமெரிக்கா ஈடுபட்டது. இந்தப் போரில் சீனாவோடும் அய்க்கிய அமெரிக்கா மோதியது. ஒரு கட்டத்தில் போர் முறைப்படி முடியாமலே, ஒரு போர் நிறுத்தம் மட்டும் 1953ல் ஏற்பட்டது. சியோல் நகரைத் தலைநகராகக் கொண்டு தென் கொரியாவும் பியாங்யாங் நகரைத் தலைநகராகக் கொண்டு வடகொரியாவும் உருவாயின.
வட கொரியா, சீனாவுடனும் சோவியத் ஒன்றியத்துடனும் நட்பு கொண்டது. தென் கொரியாவுக்கு அய்க்கிய அமெரிக்கா முட்டு கொடுத்தது. தென்கொரியாவில் அய்க்கிய அமெரிக்கா அதிநவீன இராணுவ தளங்கள் கொண்டுள்ளது. சீனத்திற்கு எதிரான தாட் என்ற உயர்தொழில்நுட்ப படைக்கலன்களை நிறுத்தி உள்ளது. இராக், லிபியா போல் ஆட்சி மாற்றம் உருவாக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் அய்க்கிய அமெரிக்கா வடகொரியாவைக் கொண்டிருந்தது. வடகொரியா, அணு ஆயுதம் தயாரித்தது மட்டுமல்லாமல், தனது ஏவுகணைகளை ஏவியும் அணுகுண்டுகளை சோதனை முறையில் வெடித்தும் காட்டியது. அய்க்கிய அமெரிக்கா மனம்போன போக்கில், ‘போக்கிரி’ (ரோக்) நாடு எனத் தன்னை அழைத்து அணு குண்டு வீசினால், தன்னாலும் சுலபமாகப் பல அய்க்கிய அமெரிக்க நகரங்களையும் அணு குண்டு வீசித் தாக்க முடியும் என வடகொரியா சொன்னது.
‘சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்’ என ரோசா எழுதியதைக் கணக்கில் கொண்டும் அணு ஆயுத உலகு, போர் ஆபத்து ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும், இஸ்ட்வான் மெஸ்ட்ரியோஸ், ‘சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்’ என எழுதினார். 2017 இறுதியில் அழிவின் விளிம்பில் இருந்த உலகம், 2018 ஏப்ரல் இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
அணு ஆயுதப் போரின் விளிம்பிலிருந்து அமைதி நோக்கி......
தென் கொரியா அய்க்கிய அமெரிக்காவின் செல்வாக்கில் இருந்தாலும், கொரிய மக்களிடம் அமைதிக்கான ஒற்றுமைக்கான தாகம் இருந்தது. அதிபர் தேர்தலில் வென்ற மூன், வட கொரியாவோடு சமாதானம் நல்உறவு என்ற வாக்குறுதி தந்தார். டிரம்ப், அவர் நாட்டின் போர் வெறியர்கள் எல்லோரையும் தாண்டி, கொரிய மக்கள் விருப்பம் செயல்படத் துவங்கியது. குளிர்கால ஒலிம்பிக்கில் தென் கொரியாவும் வட கொரியாவும் ஒரே நாடாகக் கலந்துகொண்டன. தென்கொரியாவின் மூன், பியாங்யாங் போய் கிம்மைச் சந்தித்தார். கிம், சீனா சென்று சீன ஜி ஜிங்பிங்கைச் சந்தித்தார்.
வடகொரியா 1,20,540 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட, 2 கோடியே 55 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு. தென்கொரியா 97,480 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புடன், 5 கோடியே 9 லட்சம் மக்கள் தொகை உள்ள  நாடு. தென்கொரியாவில் 100 பேர் 121 அலை பேசி கொண்டுள்ளனர் என்றால் வடகொரியா வில் 100 பேரிடம் 14 அலைபேசிகளே உள்ளன.
இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களும் 27.04.2018 அன்று சந்தித்து பான்முன்ஜாம் பிரகடனம் வெளியிட்டனர். வடகொரிய கிம், தென்கொரிய பூமியில் கால் அடி எடுத்து  வைத்தார். தென்கொரிய மூனுடன் கை குலுக்கினார். அவர் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் தோளில் கை போட்டு, அவரை ஆரத் தழுவி, வடகொரிய பூமிக்கு அழைத்துச் சென்றார். மீண்டும் தென்கொரிய பூமிக்கு வர, குழந்தைகள் மலர்கள் தந்தனர். ஆயுதங்கள் போர் வெறுப்பு என்றால், மலர்கள் அன்பையும் அமைதியையும் குறிக்கும்தானே! அதன் பின்னரே பான்முன்ஜாம் பிரகடனம் வந்தது.
பான்முன்ஜாம் பிரகடனம்: வரவேற்பும் எச்சரிக்கையும்
பான்முன்ஜாம் பிரகடனம் போர் நிறுத்தம் பற்றிப் பேசுகிறது.
பான்முன்ஜாம் பிரகடனம் அமைதியின் ராஜ்ஜியம் வேண்டும் என்கிறது.
கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆபத்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என பான்முன்ஜாம் பிரகடனம் சொல்கிறது.
பியாங்யாங்கில் அடுத்த சந்திப்பு நடக்கும் எனவும் அய்க்கிய அமெரிக்காவோடு சீனாவோடு தொடர்ந்து பேசுவோம் என்றும் அந்தத் தலைவர்கள் சொல்கின்றனர்.
கிம்மும் மூனும் என்ன எதிர்ப்பு வந்தாலும், கடந்த காலம் போல் இல்லாமல், விடாமல் பேசி அமைதி கொண்டு வரப்படும், எந்த நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணிய மாட்டோம் எனச் சொல்லி உள்ளனர். பரஸ்பர நம்பிக்கை பலப்படுத்தப்படும், கொரிய தீபகற்பத்தை ஒன்று படுத்துவதை நோக்கிய சாதகமான உந்து விசையைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். பான்முன்ஜாம் கிராமம், இதயத்தைப் பிசையும் பிரிவினையின் சின்னமாக இருந்த நிலை மாறி, அமைதியின் சின்னமாகும் என்று கிம் சொன்னார். ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே ரத்தம், நாம் ஒன்றுபடுவோம் என கிம் உணர்ச்சிமயமாய் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பானிய பிரதமர் ஷிண்டே அபே, அய்நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டெரஸ், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கொரிய மக்களின் அமைதிப் பிரகடனத்தை வரவேற்றுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் பற்றி டிரம்ப் இரண்டு விஷயங்களை இரண்டு வேறு குரல்களில் பேசி உள்ளார். ‘எனது நல்ல நண்பர் சீனாவின் தலைவர் ஜி வழங்கிய மகத்தான உதவியை மறந்து விடாதீர்கள். அவர் இல்லாவிட்டால் இது இன்னமும் நீண்ட கடினமான இயக்கப் போக்காக இருந்திருக்கும்’ என்றும்  ‘வடகொரிய தலைவர் கிம் நம்மிடம் விளையாட்டு காட்ட விடமாட்டோம். ஒப்பந்தம் முடிப்போம். இல்லையெனில் அறையை விட்டு வெளியேறி விடுவோம்’ என்றும் சொல்கிறார்.
பூனைகள் தாமாக அப்பத்தை பங்கு போட்டுக் கொண்டால் குரங்குக்கு பிடிக்காது. கிம்மும் மூனும், வடகொரியாவும் தென்கொரியாவும் சமாதானமானால், அய்க்கிய அமெரிக்கா கொரிய மண்ணிலிருந்து தனது படைகளை தளங்களை, கொரிய  கடல்களிலிருந்து தனது அணுஆயுதக் கப்பல்களை வெளியேற்ற நேரிடும். சீனாவுக்கு எதிரான ஏவுதளமாக தென்கொரியா இருக்காது. எது உலகத்துக்கு நல்லதோ, அது அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆகாது. அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எது வேண்டுமோ, எது நல்லதோ, அது உலகத்துக்கு ஆகாது.
கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டும்.
கொரிய மக்கள், கொரிய தேச ஒற்றுமை வேண்டும்.
உலகில் போர் வேண்டாம். அமைதியே வேண்டும்.

Search