COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

தொழிலாளர் ஆணையரிடம் நியாயம் கேட்டு போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுக் கூட்டம் அம்பத்தூரில் உள்ள பொத்தூரில் 05.06.2020 அன்று மாலை 5 மணியளவில் அலுவலகத்தில் நடைபெற்றது.
கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா மற்றும் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாநில அரசு ரூ.25,000 வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளப் பிடித்தம் செய்வதை கண்டித்தும் தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் நியாயம் கேட்டு கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்களில் சம்பளம் பிடித்தம், ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து எல்டியுசியின் சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது.
09.06.2020 அன்று உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் மோகன், ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளரும், எல்டியுசி மாநிலச் செயலாளருமான தோழர் கு.பாரதி  தலைமையில் காலை 10 மணி அளவில் தொழிலாளர் நல வாரியத்திற்கு எல்டியுசி தோழர்கள் சென்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி தொழில் நிறுவனங்கள் சம்பள பிடித்தம், ஆட்குறைப்பு செய்துள்ளதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைப்புசாரா, கட்டுமான, ஒப்பந்த, தினக் கூலி தொழிலாளர்களுக்கும், வறுமையில் உள்ள அனைவருக்கும் தமிழக அரசு ரூ.25,000 வழங்க வேண்டும், அரசு துறையில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப், மெட்ராஸ் கிளப், காந்தி நகர் கிளப், காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, இசபெல்லா மருத்துவமனை, அகர்வால் பவன்,  பெருங்குடியில் உள்ள ஏ.பாண்ட் ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர்களும் தோழர் வேணுகோபால் தலைமையில் அம்பத்தூர் பகுதியின் தொழிலாளர்களும் தோழர்கள் முனுசாமி, சுகுமார், வழக்கறிஞர்கள் சுரேஷ், வருண் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் நின்று தோழர்கள் முழக்கமிட்டனர்.
பாதுகாப்புப் பணியில் இருந்த தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் ஊரடங்கு நேரத்தில் இப்படி கூடுவது தவறு என்பதால் அனைவரும் வெளியேற வேண்டும் அல்லது அனைவரும் கைது செய்ய நேரும் என்றார்.
தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் பிடித்தம் செய்துள்ளன, இந்த பேரிடர் காலத்தில் தொழிலாளர்கள் எப்படி வாழ முடியும் என்று அவர்களிடம் கேள்வி எழுப்பிய தொழிலாளர்கள், நாங்கள் மனு கொடுக்கவே வந்துள்ளதாக சொன்ன பிறகு காவல் ஆய்வாளர் அமைதியானார்.
தொழிலாளர் பிரதிநிதிகள் நான்கு பேர் தொழிலாளர் ஆணையரைச் சந்தித்து மனு தர காவல்துறையினர் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தோழர்கள் கு.பாரதி, மோகன், முனுசாமி, ஜேம்ஸ் ஆகியோர் தொழிலாளர்கள் ஆணையரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களின் விவரங்களை எடுத்துரைத்தனர். சம்பளம் பிடித்தம் செய்த நிறுவனங்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோழர்கள் வலியுறுத்தியதையொட்டி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டார்.

Search