பெட்ரோலும் டீசலும்
மோடி அரசுக்கு பொன் முட்டையிடும் வாத்து
மக்களுக்கோ அது பெருந்துயரம்
உமாமகேஸ்வரன்
ஜுன் 7 தொடங்கி தொடர்ந்து 15 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல் ரூ.7.62, டீசல் ரூ.8.28 உயர்ந்துள்ளது.
ஜுன் 24 அன்று பெட்ரோல் ரூ.86.54. டீசல் ரூ.78.22. இன்னும் உயரும் ஆபத்து உள்ளது. இதுவரை இல்லாத இந்த விலை உயர்வு இன்னும் புதிய உச்சத்தை எட்டக்கூடும்.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடையும் போது, இந்தியாவில் மட்டும் எப்படி விண்ணை தொடும் அளவு உயர்கிறது? ஜுன் 2013ல் அதிகபட்சமாக சர்வதேச சந்தையில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 108.56 அமெரிக்க டாலர். ஜுன் 3, 2020ல் 37.29 அமெரிக்க டாலர்.
உலகப் பொருளாதார மந்த நிலையால் கடந்த 2 வருடங்களாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவை குறைந்து வருவதால் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்துள்ள போதிலும் விலை வீழ்ச்சி தொடர்கின்றது.
2010ல் அன்றைய மன்மோகன் சிங் அரசு பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இதனால் விலையேற்றம் ஏற்பட்ட போதெல்லாம் எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டன. அன்றைய பிரதான எதிர்க்கட்சியான பாஜக பொது வேலை நிறுத்தம், நாடாளுமன்ற முடக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது.
டெல்லியில் 12.10.2012 அன்று பாஜக மகளிர் அணியால் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் பேசிய மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் காலஞ்சென்ற திரு.அருண் ஜேட்லி, 'மன்மோகன் சிங் அரசு மக்கள் படும் துன்பங்களை பற்றி கவலைப்படாத, இரக்கமற்ற இதயமற்ற அரசு. பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று மன்மோகன் சிங் சொல்கிறார். வாக்குகளும் மரத்தில் காய்ப்பதில்லை என்று மக்களும் நிச்சயம் உங்களுக்கு திருப்பிச் சொல்வார்கள். நீங்கள் ஆட்சியில் இருந்து இறங்கப் போகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை' என்றார்.
மே 23 2012ல் அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, பெட்ரோல் விலை உயர்வு காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக ஏற்பட்டது என்றும் இந்த விலை உயர்வுக்குக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சரியான கொள்கைகளை கடைபிடித்திருந்தால் தேவையான மானியங்கள் அளித்து விலை உயர்வை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் சொன்னார். மோடி ஆட்சிக்கு வந்த பின்னால் பெட்ரோல், டீசல் விலை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் (மே 2014ல் இருந்து செப்டம்பர் 2019 வரை) 12 முறை ஏற்றப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் கொள்கையில் மோடி அரசு 2017ல் மாற்றம் கொண்டு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு தக்கவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இந்தக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைந்து அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இந்தியாவில் இறுதியாக மிகச் சரியான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்றும் எனவே சந்தையின் முழு பலன்களும் பொது மக்களுக்கு போய்ச் சேரும் என்றும் சந்தைப் பொருளாதாரத்தை தூக்கிப் பிடிக்கும் பொருளாதார நிபுணர்களும் வலதுசாரி கட்சிகளும் சொன்னார்கள்.
ஆனால், பெட்ரோல், டீசல் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கோவிட் 19 காரணமாக மார்ச் 24ல் இருந்து 50 நாட்கள் ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தபோது மார்ச் 14 அன்று விற்பனை விலையில் மாற்றம் செய்யாமல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கலால் வரி ரூ.3 உயர்த்தப்பட்டது. மே 5 அன்றும் வரலாறு காணாத வகையில் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் கலால் வரி உயர்த் தப்பட்டது. பொது மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய இந்தப் பணம் மடை மாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு வரி வருவாயாக சுமார் ரூ.2 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
எண்ணெய் விற்பனை நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல், ஐபிசிஎல் ஆகியவை சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை சரிவை மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு வரியாக மாற்றி அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்து விட்டது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மூலம் மட்டும் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் 2018 - 2019ல் ரூ.2,42,000 கோடி, 2019 - 2020ல் ரூ.2,01,600 கோடி. 2020 - 2021ல் இது ரூ.2,58,000 கோடி என அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2014ல் ரூ.90,000 கோடியாக இருந்த வரி வருவாய் இன்று 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இரு பொருட்களின் மீதும் 100% கலால் வரி விதிக்கப்படுகிறது. வரிச் சீர்திருத்தம் என்ற பெயரில் 01.07.2017ல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இந்த இரண்டு பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு பழைய வரி முறையே தொடர்கிறது. ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி 18% ஆகும். ஆனால் இன்று இந்த இரு பொருட்களுக்கும் கிட்டதட்ட 100% வரி விதிக்கப்படுகிறது. மாநில அரசுகள், தொழில், போக்குவரத்துத் துறை மற்றும் பலதரப்பட்ட மக்கள் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு இன்று வரை இதை ஏற்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் வரி வருவாயை பெருக்க பல நியாயமான மாற்று வழிகள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட பல வரிகளை சென்ற நிதியாண்டில் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மத்திய அரசின் வரி விதிப்பு கொள்கையில் முற்போக்கான மக்கள் நலன் சார்ந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். கார்ப்பரேட் வருமான வரியை உயர்த்துவது, பெரும் பணக்காரர்களுக்கான செல்வ வரியை அதிகரிப்பது, மூலதன லாப வரியை உயர்த்துவது, வரி ஏய்ப்பை தடுப்பது, கள்ளப் பணம் மற்றும் ஊக வாணிபத்தை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு தனது வரி வருவாயை விரிவுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீது கொள்ளை வரி போட்டு நிதி திரட்டும் முறையை கைவிட வேண்டும். ஆனால் மோடி அரசு அப்படிச் செய்யாது; ஏனென்றால், மத்திய அரசுக்கு இது பொன் முட்டையிடும் வாத்து.
இந்தியாவின் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு சந்தைப் பொருளாதாரமே எனக் கூறும் பாஜக, காங்கிரஸ் மற்றும் வலதுசாரி சிந்தனையாளர்கள், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தையும் சுதந்திரமான சந்தையின் தீர்மானத்திற்கு விட்டதன் விளைவை நாடு சந்திக்கிறது.
சர்வரோக நிவாரணியான சந்தை, விலையை தீர்மானித்தால் பொது மக்களுக்கு குறைந்த விலையில் சர்வதேச ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பயன் கிடைக்கும் என்றனர். இன்று சந்தை விலை நிர்ணயம் சந்தி சிரிக்கிறது. சர்வதேச சந்தையில் 42 அமெரிக்க டாலருக்கு கச்சா எண்ணெய் விற்கும்போது பெட்ரோல் ரூ.87 டீசல் ரூ.78 விலைக்கு விற்கிறது. உண்மையில் சந்தை விலைப்படி இன்று அது பாதி விலைக்குத்தான் விற்க வேண்டும். சந்தைப் பொருளாதார தோல்விக்கு இது ஓர் உயிருள்ள சாட்சி. சந்தை சுதந்திரமானது அல்ல. அது பெருமுதலாளிகள், பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றது. சந்தை என்பது அராஜகம் என்று மார்க்ஸ் சொன்னார். அது எப்போதும் புதிய உச்சத்தை தொட்டபின் சிறிது இறக்கம் காணும். பின் அது அடுத்த உச்சத்தை நோக்கி நகரும். எனவே சந்தை வெகுமக்களுக்கானதல்ல.
இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 70% இறக்குமதி செய்கிறது. சந்தையின் ஏற்றஇறக்க அலைகழிப்புக்கு ஆளாகாமல் பெட்ரோல், டீசல் ஆகிய மிகவும் அத்தியாவசியமான பொருட்களின் விலை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். அரசு நியாயமான கட்டுப்படியாகக்கூடிய விலையில், தேவையான மானியத்துடன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும்.
கோவிட் 19 பெருந்தொற்று நோயால் நாடே முடக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீரழிந்து பல லட்சக்கணக்கான மக்கள் வருமானம் இன்றி செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கும்போது, பொது போக்குவரத்து முற்றிலுமாக செயலிழந்து இருக்கும்போது, மக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் இந்தச் சுமையை ஏற்றுவது அநியாயம்; இரக்கமற்ற கொடுஞ்செயல்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வரிச் சலுகை, வாராக் கடன் என்கிற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் தள்ளுபடி, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு வரிச் சலுகைகள் என இந்த கோவிட் 19 காலத்திலும் அறிவிக்கின்ற மோடி அரசு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு 100% கலால் வரி விதித்திருப்பது அராஜகத்தின் உச்சம்.
கொரானா அச்சம் சூழ்ந்திருக்கின்ற இந்த வேளையில் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கி போட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது, ஊதியம் மற்றும் சலுகைகளை குறைப்பது, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திருத்துவது, பாதுகாப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற மக்கள் விரோத செயல்களை தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் துவங்கி உள்ளன. இந்தப் போராட்டங்கள் வலுப் பெறுவது தவிர்க்க முடியாதது. மக்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் மூலமாக மட்டுமே இந்த அராஜகமான விலையேற்றத்தை தடுக்க முடியும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மோடி அரசின் கையாலாகாத்தனத்தையும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை முற்றிலுமாக தோல்வி அடைந்ததையுமே காட்டுகிறது.
மோடி அரசே, பெட்ரோல், டீசல் ஆகிய வற்றின் அராஜகமான விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறு, பெட்ரோல், டீசல் ஆகிய வற்றையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்குள் கொண்டு வா, முடியாவிட்டால் சிம்மாசனத்தை காலி செய் என வெகுமக்கள் வெகுண்டெழுந்து வருகிறார்கள் எனச் சொல்லும் காலம் வந்துவிட்டது.