COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

கம்யூனிஸ்ட், ஜுலை 2020
தலையங்கம்


மக்கள் வாழ்வும் மாநில உரிமைகளும் பறிபோகும்போது
இறைவனிடம் கையேந்தும் முதலமைச்சர்


ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்து நாம் பார்த்ததில்லை.
நம் குறை போக்க வாய்த்த  முதலமைச்சர் பழனிச்சாமி, தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பரிதவிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க துரித நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு எங்கோ போய் ஏதோ கட்டிடம் திறக்கிறார். எட்டு வழிச்சாலை வேண்டும் என்று நீதிமன்றம் செல்கிறார். ஊர்ப் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடுகிறார். பிறகு அதை ரத்து செய்கிறார்.... கொரோனா தொற்று வேகம் பிடிக்கிறது.
மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் சொன்ன பிறகு, அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் அதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர். அரசாங்கம் எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறது, மருத்துவப் பணியாளர்கள் தம் உயிரை துச்சமென மதித்து பசி, தூக்கம் பாராமல் ஓய்வில்லாமல் பணியாற்றுகிறார்கள், அது உங்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள். அவர்கள் பணியாற்றுவதை அமைச்சர்களும் உயரதிகாரிகளும் பணியாற்றுவதாக, அரசு தொற்றுத் தடுப்பில் தீவிரமாக ஈடுபடுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் கொரோனா இல்லாத காலத்திலும் மிகவும் மோசமான பணி நிலைமைகளிலும் அப்படித்தான் பணியாற்றினார்கள். இப்போது கூடுதல் பணி. கூடுதல் ஆபத்து. குறைவான வசதிகள். அவர்களை காலம்காலமாக வஞ்சித்து வந்த அஇஅதிமுக ஆட்சியும் கட்சியும் அவர்கள் தி யாகத்தை தங்களது என்று சொந்தம் கொண்டாட முடியாது.
மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்வது மக்கள் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. கடுமையான ஊரடங்கு என்று சொல்லிக் கொண்டே, காவல் துறையினரின் நூதன தண்டனைகளுக்கு மத்தியில், டாஸ்மாக் திறக்கும் என்று ஆணையிட்டு, அந்தக் கடைகளை நடத்தியது அரசு. ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் டாஸ்மாக் கடைகளின் வாசல்களில் காற்றில் பறக்க, கட்டுப்பாடுகளை மீறச் செய்தது அரசு. தான் சொன்ன ஊரடங்கில் அரசே காட்டிய மெத்தனம் மக்களை கட்டுப்படுத்துவதில் நிச்சயம் உதவவில்லை. மக்கள் வேண்டுமென்றே வெளியேயும் வரவில்லை. மீன் சந்தைக்கு வந்தார்கள் என்றால், அது அவர்களுக்கு வாழ்வாதாரம். அந்த வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்திருந்தால் மீன் சந்தைக்கு வந்திருக்க மாட்டார்கள். கோயம்பேடு சந்தையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதை தவறவிட்டு அங்கு வந்த சில்லறை வியாபாரிகள் மீது பழி சொல்வது வஞ்சகம்.
எந்தப் பழியை யார் மீது போட்டாலும் எறிந்த பந்தைப் போல் திரும்பி வந்து கொண்டிருப்பதால், முதலமைச்சர் கடவுளிடம் தஞ்சம் புகுந்துவிட்டார். கொரோனா கட்டுப்பாட்டில் என்ன செய்வதென தனக்கு தெரியவில்லை என்று முதலமைச்சர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இது. அஇஅதிமுக ஆட்சியால், அது தாங்கிப் பிடிக்கும் முதலாளித்துவ கொள்கைளால் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியவில்லை என்பதற்கு சாட்சி.
பணக்காரர்களுக்குத்தான் வரும், இன்னும் மூன்று நாட்களில் சரியாகிவிடும், நியுசிலாந்து போல் ஆகிவிடுவோம் என்று ஜுன் 9 வரை சொன்ன முதலமைச்சர், சென்னையில் தொற்று கதகளி ஆடும்போது, சென்னையில் தங்காமல் சுற்றுப் பயணம் புறப்பட்டுவிட்டார். இப்போது மற்ற மாவட்டங்களிலும் தொற்றுப் பரவல் அதிகரிக்கிறது. மதுரையில் முழுஊரடங்கு என சொல்ல வேண்டியிருக்கிறது.
மொத்தத்தில் என்ன நடக்கிறது, தொற்று கட்டுப்படுத்துவது தொடர்பாக என்ன நடக்கிறது, தொற்று எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை என்ன என்று தெளிவாக மக்களுக்கு சொல்லப்படுவதில்லை. நியுசிலாந்து கனவு காண்கிறார் முதலமைச்சர். நியுசிலாந்து பிரதமர் மக்களுக்கு எல்லா விசயங்களையும் வெளிப்படையாகச் சொன்னது, மக்கள் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்தது போன்றவை மக்கள் முழு ஒத்துழைப்பு தர காரணம் என்பதையும் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பரிசோதனைக் கருவி கொள்முதலில் இருந்து கே.பி.அன்பழகனுக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பது வரை எல்லாம் திரைக்குப் பின்னால் என்று அஇஅதிமுக அரசாங்கம் சொல்கிறது.
கொரோனா கட்டுப்பாட்டு நிதியாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.510 கோடி ஒதுக்கியது. இந்த நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியில் மாநில அரசுகளிடம் இருக்கும்  இந்த நிதியில் 75% மத்திய அரசும் மீதியை மாநில அரசும் தருகின்றன. இந்த நிதி வந்து சேர்ந்ததா என்று நமக்கு சொல்ல வேண்டும். 2019 - 2020 நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி பங்கு ரூ.2,400 கோடி வர வேண்டும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயகுமார், சொல்லியிருக்கிறார். கேட்டு வாங்கி விட்டீர்களா? இப்படி கேள்விகள் எழும்போது கொரோனா காலத்தில் அரசியல் செய்யாதீர்கள் என்று அரைத்த மாவை அரைக்கிறார்கள்.
தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை ஒப்புக்கொண்டால்தான், சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுத்து, வரும் நாட்களிலாவது விட்டதை பிடிக்க முடியும். ஆனால், அஇஅதிமுக ஆட்சியாளர்கள் அதற்கு தயாராக இல்லை. மந்திரியானால் அதிகாரம் கிடைக்கும், வீடு, கார் தருவார்கள்,  காவல்துறையினர் முதல் அனைவரும் சலாம் போடுவார்கள், உறவினர்களுக்கு டென்டர் தரலாம், பிள்ளைகளுக்கு பதவிகள் பெறலாம், தீவுகள் வாங்கலாம் என்றுதான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மந்திரி பொறுப்பென்றால் மாநிலத்தின் எல்லாவிதமான போக்குவரத்துகளையும் நிர்வகித்து மக்கள் சேவை செய்வது என்பது பழக்கப்படவில்லை.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குளறுபடியும் குழப்பமும் நிறைந்தவையாக தொடரும்போது, கொரோனா காலத்தில் மத்திய அரசின் மாநில உரிமைகள் பறிப்பு நடவடிக்கைகள் அடுத்தடுத்த அரங்கங்களுக்கு விரிவடைகின்றன. மாநில உரிமைகளுக்கான குரல் எழுப்புவதில் முன்னோடியாக கருதப்படும் தமிழ்நாடு, பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போது, மாநில உரிமைகளை விடாப்படியாக விட்டுக் கொடுக்கும் மாநிலமாக மாறியுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை களில் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிற மத்திய அரசு, நிதி, வரி விதிப்பு, மின்சார விநியோகம் மற்றும் விலை நிர்ணயம், அத்தியாவசியப் பொருட்கள் வகைப்படுத்துதல் என எல்லாம் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று புதிய விதிகள், அவசரச் சட்டங்கள் போடுகிறது.
மானியங்களை ஒழித்துக்கட்டுவது, விலை நிர்ணயம் செய்ய ஆணையம், மின்சாரம் வாங்க முன்பணம் செலுத்துவது என கார்ப்பரேட் ஆதரவு அம்சங்களுடன் திருத்தப்பட்டுள்ள மின்சார சட்டம், மின்உற்பத்தி, மின்விநியோகம், விலை நிர்ணயம், மானியம் வழங்குவது ஆகியவற்றில் மாநில உரிமைகளை பறித்துவிடுகிறது.
உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற மிக அத்தியாவசியமான, மிக அடிப்படையான உணவுப் பொருட்கள் அத்தியாவசிய உணவு பொருட்கள் சட்டத்தின் கீழ் இனி வராது என்று ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டுவிட்டது. வெங்காய விலை ஏறினால் அதைக் கட்டுப்படுத்து என்று அரசிடம் கேட்க முடியாது. மின்சாரத்துக்கு அதானி சொல்வதுதான் விலை என்றால், ஜியோ மார்ட்டில் ஆன்லைனில் வெங்காயத்துக்கும் உருளைக்கிழங்குக்கும் இனி முகேஷ் அம்பானி சொல்வதுதான் விலை. உணவு தானியங்கள் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இல்லை என்றால், அவை பொது விநியோகத்துக்கான உணவுப் பொருட்கள் பட்டியலிலும் இருக்க வேண்டியதில்லை. மாநிலத்தில் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு மத்திய அரசு தருவதை விடக் கூடுதல் விலை தருவது இனி மாநில அரசுக்கு அவசியமற்ற வேலையாகி விடும். உணவுப் பாதுகாப்பு என்ற பதங்கள் மறைந்து போகும். அதிகாரம் எதுவும் இல்லாமல் மாநில அரசு வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.
காவிரி நீர் மேலாளுமை வாரியம் மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது என்று ஓர் அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. காவிரி நீர் மேலாளுமை வாரியத்தின் சுதந்திர செயல்பாடு இருந்தாலே தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை பாதுகாக்கப்படுமா என்ற கேள்வி இருக்கும்போது, கவலையே வேண்டாம், எல்லாம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று மத்திய அரசு சொல்கிறது. 
8.6 கோடி வாடிக்கையாளர்களும் ரூ.4.86 லட்சம் கோடி சேமிப்பும் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்கு கீழ் இயங்கும் என்று மோடி அரசு அவசரச் சட்டம் போட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் தந்துவிட்டார். இடையில், இந்த அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பழனிச்சாமி சொன்ன அடுத்த நாளே, பாரத் நெட் சேவைக்காக மாநில அரசு தந்த ஒப்புந்தப் புள்ளியை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. மாநில உரிமையை விட்டுத் தருவதா அல்லது முறைகேட்டு ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் கமிஷன், காசு பார்ப்பதா என்று இரண்டில் ஒன்றை பழனிச்சாமி அரசு இப்போது தேர்வு செய்ய வேண்டும்.
மக்கள் வாழ்வு பறிபோகிறது. மாநில உரிமைகள் பறி போகின்றன. முதலமைச்சர் பழனிச்சாமி விரைந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் அவர்தான் முதலமைச்சர். அவரிடம்தான் அதிகாரம், நிதி மற்றும் உள்கட்டுமானம் மீதான கட்டுப்பாடு எல்லாம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பொருத்தமான பொறுப்பான பதில் சொல்வது என்பதிலிருந்து கூட அவர் துவங்கலாம்.

Search