COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

'என்னால் மூச்சு விட முடியவில்லை'

ஆர்.வித்யாசாகர்


'எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
எனது நான்கு குழந்தைகள் ஒரு நாள் அவர்களுடைய தோலின் நிறத்தை வைத்து மதிப்பிடப்படாமல், அவர்களின் பண்பியல்புகளை வைத்து மதிப்பிடப்படும் தேசத்தில் வாழ்வார்கள்'. 
'நீக்ரோவுக்கு குடியுரிமைகள் வழங்கப்படும் வரை அமெரிக்காவில் ஓய்வோ அமைதியோ இருக்காது. நீதியின் பிரகாசமான நாட்கள் உதிக்கும்வரை கிளர்ச்சியின் சூறாவளிகள் நம் தேசத்தின் அஸ்திவாரங்களை அசைத்துக்கொண்டே இருக்கும்'.
(பல லட்சம் பேர் திரண்ட வாஷிங்டன் பேரணியில், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் 1963ல் ஆற்றிய உரையிலிருந்து)
உலகம் முழுவதும், காலங்காலமாக ஆதிக்க சக்திகள் தங்கள் அதிகாரத்தையும் சுரண்டலையும் தடையின்றி தொடர, உழைக்கும் மக்களை ஒடுக்க, தங்களுக்கு சாதகமான பல சட்ட திட்டங்களையும், சமூகத்தில் சாதி, மதம், நிறம், இனம் போன்ற நிறுவனங்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.
1492ல், முதன்முதலில், ஸ்பெயின் சார்பில் கொலம்பஸ் அமெரிக்காவில் கால் பதித்ததிலிருந்து, பல அய்ரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பல்வேறு நிலப்பரப்புகளை தங்கள் காலனிகளாக ஆக்கிரமித்தன. இதை எதிர்த்த, ஏற்கனவே அமெரிக்காவில் இருந்த பல்வேறு  ஆதிகுடிகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.  17 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக கொண்டு வரப்பட்டு அனைத்து மனித உரிமைகளும் பறிக்கப்பட்டு விவசாயத்திலும், பிறகு தொழில் களிலும் ஈடுபடுத்தப்பட்டு சுரண்டப்பட்டனர். நிறத்தால் பிரிக்கப்பட்டு, அவர்கள் வெள்ளையர்களை விட மிகத் தாழ்ந்தவர்கள் என்ற சமூக சிந்தனை உருவாக்கப்பட்டு கொடுமைகளுக்கு, கொலைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் அடிமை நிலைக்கு எதிராக பல எழுச்சிகளை கட்டமைத்தனர். இவர்களது போராட்டத்தால் 1865 டிசம்பரில் அதிகாரபூர்வமாக, அன்றைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனால் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.
அடிமைமுறை ஒழிக்கப்பட்டாலும், அதன் மரபு வழி கருத்தோட்டம் காரணமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடர்ந்து நிறவெறி தாக்குதல்களை சந்தித்தனர். க்ளூ கிளஸ் க்ளான் (கே.கே.கே) என்ற நிறவெறி அமைப்பு கருப்பின மக்களை தொடர்ந்து கும்பல் படுகொலை செய்துகொண்டிருந்தது. கருப்பின மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்து அவர்களை மோசமாக பாகுபடுத்தும் வகையில் ஜிம் க்ரோ சட்டங்கள் இயற்றப்பட்டன. தொடர்ந்த நிற பாகுபாடுகளை 1960களில் நிகழ்ந்த குடியுரிமை போராட்டங்கள் முறியடித்து, அவர்களுக்கு உரிமை வழங்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
ஆளும் வர்க்கங்கள் இந்த பாகுபாடுகளை நீர்த்துப் போகாமல் பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பதால், அய்க்கிய அமெரிக்காவின் கருப்பின மக்களுக்கு சட்டரீதியாக உரிமைகள் இருந்தாலும், சமூகத்தின் பொது புத்தி அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று வரை கருப்பின மக்கள் மீதான நிறவெறி தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. சமூக கட்டுமானம் அதற்கு ஏற்றவாறு தக்கவைக்கப்பட்டிருக்கிறது. கருப்பின மக்கள் மீதான அமெரிக்க காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு இந்த பின்புலமே காரணம்.  கருப்பின மக்களிடையே முன்னேற்றங்கள் மிக மெதுவாகவே நிகழ்கிறது. கருப்பின மக்கள் தங்கள் சமூக பொருளாதார நிலைமைகளில் வெள்ளையர்களைவிட மிகவும் பின்தங்கியவர்களாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஜார்ஜ் ஃபிளாய்ட் படுகொலை
மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் கனவு கண்ட நீதியின் பிரகாசமான நாள் இன்னும் உதித்த பாடில்லை. மே 25 அன்று, வெறும் 20 டாலரில் எழுந்த பிரச்சனையால், 'என்னால் மூச்சு விட முடியவில்லை' என்று ஜார்ஜ் ஃபிளாய்ட் பல முறை கதறியும் அவரது கழுத்தின் மீது 8 நிமிடம் 46 வினாடிகள் மினியாபொலிஸ் காவல்துறை அதிகாரிகளால் முழங்காலால் அழுத்தி மூச்சுத் திணறத்திணற கொடூரமாக கொல்லப்பட்டார். இதை செய்த டெரிக் சாவினும் மூன்று மற்ற காவல்துறை அதிகாரிகளும் எதுவும் நடக்காததுபோல் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர்.
இந்த கொடூர நிறவெறி தாக்குதலுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு உலகம் முழுவதும் எழுந்தது. அய்க்கிய அமெரிக்காவில் 140 நகரங்களில் மக்கள் அலைகடலென திரண்டு போராடினர். கருப்பின மக்கள் மட்டுமின்றி ஜனநாயக, சமத்துவ உள்ளம் கொண்ட வெள்ளையர்களும், மற்றவர்களும் இந்தப் போராட் டங்களில் கலந்து கொண்டதும் காவல்துறைக்கும் போராளிகளுக்கும் தெருவில் நடந்த மோதல்களும் தொலைக்காட்சிகள் மூலம் நாம் அறிந்ததே.
கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் என பல்வேறு நாடுகளில் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலைக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்தன. பல முக்கிய பிரபலங்கள் தங்கள் கண்டனக் குரல்களை பதிவு செய்தனர்.  உலகையே ஆட்டிப்படைக்கும் கோவிட் 19 தாக்குதலையும் மீறி மக்கள் தெருவுக்கு வந்தனர். கோவிட் 19 வைரசை விட நிறவெறி அதிகம் தாக்கும் நோய் என்பது போல் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். கண்ணீர் புகை குண்டுகளாலும், ரப்பர் குண்டுகளாலும் போராடுபவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டனர். 
அடக்குமுறைகளை மீறி 20 நாட்களுக்கு மேலாக பல நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் போராட்டம் ஜார்ஜ் ஃபிளாய்ட்டை  தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மட்டுமல்ல. இது போன்ற கொடுமைகள் இனியும் நடக்காத வண்ணம், காவல்துறைக்கு இது போல் நடந்து கொள்ள உதவும் அமைப்பில், சட்டங்களில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதற்காகவும்தான். நிற பேதங்களை முற்றாக ஒழிக்கவும்தான்.
உள்நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கும் டிரம்ப்
நடந்த பிரச்சனைக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக அய்க்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்கள் மீதே போர் தொடுக்கும் வண்ணம் மிரட்டியுள்ளார். மே 26 அன்று வெள்ளை மாளிகைக்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்களுக்கு அஞ்சி டிரம்ப்பும் அவரது குடும்பத்தாரும் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்குகுழிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜ÷ன் 1 அன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன் எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அமைதியாகத் திரண்ட மக்கள் மீது தலைநகர் இராணுவ காவல் துறையை பயன்படுத்தி, கண்களில் எரிச்சல் உண்டாக்கும் இரசாயன பொருட்களையும் மிக சத்தத்துடன் வெடித்து  அச்சுறுத்தும் குண்டுகளையும் பயன்படுத்தி  மக்களை கலைத்தனர். டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் போராட்டக்காரர்கள் மீது தாழப் பறந்து கொண்டிருந்தன. இவை அனைத்தும் டிரம்ப், அருகிலுள்ள சர்ச்சிற்கு சென்று புகைப்படம் எடுப்பதற்கு வழி ஏற்படுத்த. கையில் பைபிளுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ராணுவ செயலர் மார்க் எஸ்பெர் புகைப்படத்திற்கு டிரம்ப்புடன் நின்றார் என்ற காரணத்திற்காக, ராணுவ விஞ்ஞான வாரியத்தை சார்ந்த உயர் அதிகாரியான, ஜேம்ஸ்  மில்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
போராட்டக்காரர்கள் சிலர் போராட்டத்தின் போது கடைகளை உடைத்து பொருட்களை எடுத்து சென்றபோது, இது தொடர்ந்தால் துப்பாக்கி சூடு நடைபெறும் என்று டிரம்ப் அச்சுறுத்தினர். இதற்கு எதிர்வினையாக, ஹௌஸ்டன் போலீஸ் அதிகாரி ஆர்ட் ஆகி விடோ டிரம்ப்பிடம் 'உங்களால் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யமுடியவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டிருங்கள்' என்றார்.  ராணுவ அதிகாரிகள், வாஷிங்டன் மேயர் ஆகியோரின் வெறுப்பு காரணமாக வாஷிங்டனிலிருந்து ராணுவத்தை டிரம்ப் திரும்பப் பெற்றார். 
நூற்றாண்டு கால நிறவெறி ஒடுக்குமுறையும் போராட்டங்களும்
ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதும், அதற்கு எதிரான இயக்கமும் முதல் முறை நடப்பதல்ல. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் கருப்பின மக்கள் அவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றில்  வரலாற்றில் இடம் பெற்ற சில போராட்டங்களை தெரிந்து கொள்வது, அமெரிக்க கருப்பின மக்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவும்.
1919 சிவப்பு கோடை காலம்: பல மாநிலங்களில் கருப்பினத்தவர் மீது நிறவெறி தாக்குதல்கள் நடத்திய வெள்ளை நிறவெறி சக்திகளுக்கு எதிராக, முதல் உலகப்போருக்கு பின் அமெரிக்கா திரும்பிய கருப்பின ராணுவ மக்கள் நிறவெறி ஆதிக்கத்திற்கு எதிராக தம் மக்களுக்காக போராடினர். 380,000 கருப்பின ராணுவ வீரர்கள் ராணுவத்திலிருந்து திரும்பியதால் பாகுபாடு சட்டங்களை அவர்கள் எதிர்க்கக் கூடும் என்று வெள்ளை நிறவெறி சக்திகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 97 கருப்பின மக்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்டனர். 
1921, துல்சா நிறவெறி படுகொலைகள்: ஓக்லஹோமாவில் உள்ள துல்சா நகரில் கருப்பர்கள் மட்டும் வாழும் பகுதி கிரீன்வுட். ஒரு வெள்ளையினப் பெண்ணிடம் ஒரு கருப்பின இளைஞன் தவறாக நடக்க முயன்றான் என்ற சொல்லி வெள்ளையர்கள்  கிரீன்வுட் மீது தாக்குதல் நடத்தி கருப்பின மக்களின் வீடுகளை கொளுத்தினர். முதல் உலகப் போர் முடிந்து திரும்பிய கருப்பின ராணுவ வீரர்கள் தம் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். 100க்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் கொல்லப்பட்டனர். கருப்பின மக்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இது அய்க்கிய அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற ஒரு மோசமான நிறவெறி தாக்குதல்.
1946ல், பள்ளிக்கூடங்களில் கருப்பின குழந்தைகளை தனியாகப் பிரித்து பாகுபடுத்துவதற்கெதிரான முதல் வழக்கு தொடரப்பட்டது.
1953 முதல் 1967 வரை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் 14ஆவது முதன்மை நீதிபதி ஏர்ல் வாரன் கருப்பின மக்களை பாகுபடுத்துவதற்கு எதிராக எழுந்த நாடு தழுவிய குடியுரிமை இயக்கத்தின் விளைவாக, முற்போக்கான தீர்ப்புகள் வெளியாயின.
1955ல் ரோசா பார்க்ஸ் என்ற கருப்பின பெண் பேருந்தில் தன் இருக்கையை வெள்ளையருக்கு விட மறுத்ததால் மோண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதுவே குடியுரிமை போராட்டத்தின் துவக்கமாகும்.
அதே ஆண்டில், டில் என்ற 14 வயது சிறுவன் ஒரு வெள்ளையினப் பெண்ணை பார்த்து விசில் அடித்தான் என்று சொல்லி வெள்ளையின நிறவெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டான். டில்லின் தாய் இந்த கொடுமை வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் மூடாத சவப்பெட்டியில் டில்லை கொண்டு சென்றார். இது நாடு முழுவதும் கருப்பின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது.
1963ல், கருப்பின மக்கள் அதிகம் வழிபடும், குடியுரிமை இயக்க தலைவர்கள் கூடும் அலபாமா, பிர்மிங்கஹாமிலுள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தின் மீது க்ளு கிளஸ் க்ளான் (நிறவெறி குண்டர்கள்) குண்டு  வீசினர். இதில் நான்கு பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். இதை ஒட்டி பெரும் கொந்தளிப்பும் போராட்டங்களும் நடந்தன.
1967ல் விர்ஜினியா மாகாணத்தில் ஒரு கருப்பின பெண்ணும், வெள்ளையின ஆணும் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது கருப்பின மக்களிடையே பெரும் போராட்டத்தை உருவாக்கியது.
1980ல், மியாமியில் கருப்பின இளைஞரை தாக்கிய வெள்ளை காவல் அதிகாரி எந்த குற்றச்சாட்டுமின்றி விடுதலை செய்யப்பட்டதால் அதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. மியாமி நிறவெறி தாக்குதல்களுக்கும் அதற்கு எதிரான போராட்டங்களுக்கும் ஏற்கனவே வரலாறு உண்டு.
1991ல் லாஸ் ஏஞ்சல்சில், கிங் என்ற கட்டிட தொழிலாளியை மோசமாக தாக்கிய காவல்துறை அதிகாரியை குற்றமின்றி விடுதலை செய்ததற்கு எதிராக வெடித்த போராட்டம் நடத்தப்பட்டது.
2012 ட்ரவ்யன் மார்ட்டின் என்ற 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரி தண்டனை இன்றி விடுவிக்கப்பட்டபோது போராட்டம் வெடித்தது.
2014ல் இதுவரை ட்ரவ்யன் மார்ட்டினின் கொலைக்கு எதிரான போராட்டங்களை கட்டமைத்தவர்கள், 'கருப்பர்கள் உயிர் முக்கியம்' என்ற இயக்கத்தை துவங்கினர்.
2020ல் ஜார்ஜ் ஃப்ளாயிட் கொலைக்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்கள் நடக்கின்றன.
அய்க்கிய அமெரிக்காவில் காவல்துறை அடக்குமுறைக்கு அதிகம் ஆட்படுவது கறுப்பின மக்களே
2013 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில், (ஆராய்ச்சி மற்றும் வக்கீல் குழுவான மேப்பிங் போலீஸ் வன்முறை தொகுத்த தரவுகளின்படி), அய்க்கிய அமெரிக்காவில் காவல்துறையினர் 7,666 பேரைக் கொன்றதாக  சொல்லப்படுகிறது.  அய்க்கிய அமெரிக்காவில் காவல்துறை கொலைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அளவுக்கு அதிகமாக பாதிக்கிறது. அய்க்கியஅமெரிக்க மக்கள் தொகையில் 13% மட்டுமே இருந்தபோதும், வெள்ளை அமெரிக்கர்களை விட இரண்டரை மடங்கு அதிகமாக கருப்பின அமெரிக்கர்கள் காவல்துறையால் கொல்லப்படுகின்றனர். இந்த அறிக்கையின்படி, கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் காவல்துறை அதிகாரிகளால் கருப்பின மக்கள் கொல்லப்பட்டது அதிக எண்ணிக்கையில் உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும், காவல்துறை  அதிகாரிகளால், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களை விட மிக அதிகமாக கொல்லப்படுவதற்கான ஆபத்தை எதிர்கொள்கின்றனர். உட்டாவில், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மக்கள் தொகையில் வெறும் 1.06% பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில்  காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்களில்  10% பேர் கருப்பினத்தவரே. மினசோட்டாவில், வெள்ளை அமெரிக்கர்களை விட நான்கு மடங்கு  அதிகமாக காவல் துறையால் கொல்லப்படுறவதற்கான ஆபத்தை கருப்பின அமெரிக்கர்கள் சந்திக்கின்றனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே இருந்தபோதும், கொல்லப்பட்டவர்களில் 20% கருப்பின மக்கள் ஆவர்.
அய்க்கிய அமெரிக்காவில் கடந்த ஆண்டு காவல்துறையால் கொல்லப்பட்ட 1,000 பேரில், 24% கருப்பினத்தவர். அவர்கள் மொத்த மக்கள் தொகையில் வெறும் 13%. காவல் துறை கருப்பின மக்களை கொன்ற வழக்குகளிலெல்லாம், காவல் துறை மீது 99% எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லை.
அய்க்கிய அமெரிக்காவை பொறுத்தவரை ஒருவர் குற்றம் ஏதும் செய்யாவிட்டாலும், அவரால் ஆபத்து என்று யாரேனும் 911 என்ற எண்ணுக்கு (காவல் துறை தொலைபேசி எண்)  தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை விரைந்து வரும். கருப்பின மக்கள் என்றால் நடவடிக்கை கடுமையாக இருக்கும். அமெரிக்காவின் குற்றவியல் அமைப்பும், காவல் துறை அதிகாரங்களும் அப்படி. (சுரேஷ் படேல் என்ற,  இந்தியாவைச் சேர்ந்த, குற்றமே எதுவும் செய்யாத ஒரு முதியவர் சந்தேகத்தின் பேரில் கடுமையாக தாக்கப்பட்டு பின் இறந்து போனது நாம் அறிந்ததே). குற்றமே செய்யாதவர்களை கொலை செய்யும் நிறவெறி காவல் துறையின் வெறியாட்டங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம். கடந்த ஏழு ஆண்டுகளில் கறுப்பின மக்கள் காரணமே இன்றி சுடப்படுவதற்கான சில உதாரணங்கள் இதோ:
என்னால் மூச்சுவிட முடியவில்லை 
எரிக் கார்னர் முதல் ஜார்ஜ் பிளாய்ட் வரை, கறுப்பின மக்களை தொடர்ந்து கொல்லும் அமெரிக்க காவல்துறை
ஜ÷லை, 17, 2014: எரிக் கார்னர், நியூயார்க் கில் உள்ள ஸ்டேட்டன் தீவில், அருகிலுள்ள ஒரு பகுதி வழியே நடந்துகொண்டிருந்தபோது, நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் இருவர் பயன்படுத்தப்படாத சிகரெட்டுகளை தெருவில் விற்பனை செய்ததாக கார்னரைத் தடுக்க பல அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நியூயார்க் காவல்துறையால் தடை செய்யப்பட்டிருந்த, ஒரு வகை கிடுக்கிப்பிடியால் அவரை இறுக்கினர். 'என்னால் மூச்சு விட முடியவில்லை' என்று அவர் சொன்னதை பொருட்படுத்தாத காவல்துறையின் இந்த பிடிப்பு, இறுதியில் அவரைக் கொன்றது. கார்னரின் கடைசி வார்த்தைகளான 'என்னால் மூச்சுவிட முடியவில்லை' என்ற திணறல் வார்த்தைகள் 'கருப்பர்களின் உயிர் முக்கியம்' என்ற பெரும் இயக்கத்திற்கான குரலாக மாறியது. டிசம்பர் 2014ல், ஸ்டேட்டன் தீவின் பெரும் நடுவர் மன்றம், கார்னரின் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரி பாண்டலியோவை குற்றவியல் குற்றச்சாட்டுகளில் குற்றஞ்சாட்ட மறுத்துவிட்டது. ஜ÷லை 2019ல், இந்த வழக்கை விசாரித்த, மத்திய நீதித்துறையும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மறுத்துவிட்டது. பாண்டலியோ ஆகஸ்ட் 2019ல் நியூயார்க் காவல் துறையிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் தனது வேலையைத் திரும்பப் பெற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ஃபெர்கூசன் நகரில் தனது நண்பனுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த 18 வயதான மைக்கேல் பிரவுன், ஆகஸ்ட் 9,  2014ல் காவல்துறையின் ஆறு குண்டுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். காரணம், அவர்களை நடைபாதையில் நடந்து செல்ல சொன்ன காவல் அதிகாரிக்கும் மைக்கேலுக்கும் இடையே நடந்த வாக்குவாதம்.
அக்டோபர் 20, 2014, சிகாகோ நகரில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த லாஃவன் மெக்டொனால்ட் என்ற 17 வயது சிறுவன் 16 துப்பாக்கி குண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். காரணம் அவனிடம் கத்தி வைத்திருந்ததால் தற்காப்பிற்காக காவல்துறை சுட்டது என்று சொல்லப்பட்டது.
நவம்பர் 22, 2014 அன்று, 12 வயதான தமீர் ரைஸ் என்ற சிறுவன் வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை, உண்மை துப்பாக்கி என்று நினைத்து, கிளீவ்லாண்ட் பூங்காவில் சிலர் காவல்துறைக்கு அவசர அழைப்பு விட காவல்துறை அதிகாரி தனது காரிலிருந்து இறங்கி இரண்டு வினாடிகளுக்குள் தமீர் ரைஸ்சய் சுட்டுவிட்டார். மறுநாள் மருத்துவமனையில் ரைஸ் இறந்துவிட்டான்.
ஏப்ரல் 4, 2015ல், வால்டர் ஸ்காட் வடக்கு சார்லஸ்டன் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை மடக்கிய காவல்துறை, அவர் ஓட ஆரம்பித்தார் என்று சுட ஆரம்பிக்க 8 குண்டுகளில் 5 குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏப்ரல் 12, 2015ல், 25 வயதான ஃபிரெட்டி க்ரே, கத்தி வைத்திருந்தார் என்று பால்டிமோர் காவல்அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டு காவல்துறை வண்டியில் சென்றபோது, நினைவிழந்து முதுகெலும்பு உடைக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின் மருத்துவமனையில் கோமா நிலையில் உயிரிழந்தார்.
நவம்பர் 15, 2015ல், மினியாபொலிஸில் 24 வயதான ஜாமர் கிளார்க்,  ஜ÷லை 5 2016ல், லாஸ் ஏஞ்சல்ஸ், பால்டன் ரோக் என்ற இடத்தில் பேட்டன்  ஸ்டெர்லிங்,  ஜ÷லை 6, 2016ல், மினியாபொலிஸின் வெளியில் செயின்ட் பால் என்ற இடத்தில, 32 வயதான பிலாண்டோ காஸ்ட்டி அவருடைய பெண் நண்பர் மற்றும் நான்கு வயது குழந்தையுடன் காரில் சென்ற போது, மார்ச் 18, 2018ல் ஸ்டீபன் கிளார்க் மீது, கலிபோர்னியா சாக்ரமோன்ட் காவல்துறையால் 20 முறை சுடப்பட்டது, செப்டம்பர் 6,  2018ல், பொத்தம் ஜீன், டல்லாஸ் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது, மார்ச் 13, 2020, லூயிஸ்விலி நகரில், பெரோனா டெய்லர் என்ற பெண்மணி, எட்டு குண்டுகளால் துளைக்கப்பட்டது, மே 25, 2020, ஜார்ஜ் பிளாய்ட் கொடூரமாக கொல்லப்பட்டது வரை கருப்பின மக்களை காவல்துறை நிறவெறியோடு மிக மோசமாக நடத்துவதற்கான ஆதாரங்கள் பல அறிக்கைகளில் உள்ளன.
கருப்பின மக்கள் கூடுதலாக தண்டிக்கப்படுவது
அய்க்கிய அமெரிக்காவில் கருப்பின மக்கள் தண்டனை  பெறுவதும் அவர்கள் மக்கள் தொகைக்கு சம்பந்தமில்லாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது. நீதிமன்றங்களும் நிற பேதங்களுக்கு ஆட்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மே 2019ல் பியூ ஆராய்ச்சி மய்யம் நடத்திய ஆய்வில், 87% கருப்பின மக்கள், குற்றவியல் நீதி அமைப்பு கருப்பின மக்கள் மீது பாகுபாடு காட்டுகிறது. வெள்ளையர்களை நடத்துவதுபோல் கருப்பின மக்களை நியாயமாக நடத்துவதில்லை என்று சொல்கின்றனர். வெள்ளையர்களில் 31% பேர் இந்த கருத்தை ஆதரித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களின் விவரங்களை பார்க்கும்போது இது மேலும் தெளிவாகிறது.
2014ல், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், மொத்த 6.8 மில்லியன் கைதிகளில் 2.3 மில்லியன் அல்லது 34% ஆக இருந்தனர்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெள்ளையர்களின் விகிதத்தை விட 5 மடங்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களுக்கான சிறை தண்டனை விகிதம் வெள்ளை பெண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.
நாடு முழுவதும், கைது செய்யப்பட்ட குழந்தைகளில் ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தைகள்  32% .
ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஹிஸ்பானியர்களும் அமெரிக்காவின் மக்கள் தொகையில்  32%. ஆனால் 2015ல் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 56% ஆக இருந்தனர்.
கருப்பின மக்கள் கைது செய்யப்படும்போது, வெள்ளையர்களை விட அதிக விகிதாச்சாரத்தில் அவர்கள் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுவதுடன், தண்டனையும் நீண்ட கால சிறை தண்டனையாக இருக்கிறது.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஹிஸ்பானியர்களும் வெள்ளையர்களைப் போலவே மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், சிறை மற்றும் சிறை மக்கள் தொகை கிட்டத்தட்ட 40% குறையும்.
சிறையிலிருக்கும்போதும், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் வாக்குரிமை மறுக்கப்படும். சில மாகாணங்களில், சிறை வாசம் முடிந்த பிறகு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 2.5% மக்கள் இதனால் வாக்குரிமை இழப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. 7.4% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இதன்மூலம் வாக்குரிமை இழந்திருக்கின்றனர். மற்ற மக்களில் இது வெறும் 1.8%. கணிசமான கருப்பின மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இதன் மூலம் மறுக்கப்படுதுகிறது.
1865ல் அடிமை முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டபின், 1877 முதல் 1960 வரை அமெரிக் காவின் பல மாகாணங்களில், குறிப்பாக கருப்பின மக்கள் அதிகமாக அடிமைகளாக நடத்தப்பட்ட அமெரிக்காவின் தென்மாநிலங்களில், ஜிம் க்ரோ சட்டங்கள் கருப்பின மக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டன. இச்சட்டங்கள்படி, கருப்பின மக்கள் பள்ளிக்கூடம், போக்குவரத்து, பணியிடம், வெள்ளையர்கள் நீரருந்தும் நீரூற்றுகள் போன்ற பல விசயங்களில் பாகுபடுத்தப்பட்டனர். வெள்ளையர்கள் புழங்கும் பொது இடங்கள் எதிலும் கருப்பின மக்கள் போக முடியாது, கருப்பின மக்கள் வெள்ளையினத்தவரை திருமணம் செய்ய தடை, கருப்பின மக்கள் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை போன்றவற்றின் மூலம் கருப்பின மக்கள் வளர்ச்சி வாய்ப்பின்றி பின் தள்ளப்பட்டு அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. இந்தச் சட்டங்களை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். வெள்ளையின மக்கள் அருந்தும் நீரூற்றுகளில் நீரருந்தினால், பொது இடங்களில், வெள்ளையர்களுக்கு உள்ள இடங்களில் வந்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இந்த சட்டங்களை மீறுபவர்கள், அவர்கள் வீடு, வேலை, உயிரையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெள்ளையர்கள் கருப்பின மக்களை அடித்து துன்புறுத்தினாலும் சட்டப்படி அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது.
இதுபோன்ற பாகுபாடான நிறவெறி சட்டங்களுக்கு எதிராக அமெரிக்க கருப்பின மக்கள் தொடர்ந்து நடத்திய குடியுரிமை போராட்டங்கள் மூலமாகவே ஜிம் க்ரோ சட்டங்கள் ஒழிக்கப்பட்டு கருப்பின மக்களின் பல்வேறு மனித உரிமைகளை நடைமுறைபடுத்த சட்டங்கள் இயற்றப்பட்டன. 1965ல் கருப்பின மக்களுக்கான வாக்குரிமை சட்டம் நிறைவேறியது.
1955ல் மொண்டோகமெரி பேருந்து புறக்கணிப்பு போராட்டத்திலிருந்து 1968ல் அவர் சுட்டுக்கொல்லப்பட்டது வரை, மார்ட்டின் லூதர் கிங் ஜ÷னியர், மக்கள் உரிமை போராட்டத்தில் சிறந்த பங்காற்றினார். போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதில், மக்களை திரட்டுவதில் பெரும் பங்காற்றினார். 1963ல் 2 லட்சத்திற்கும் மேலான மக்களை திரட்டி வாஷிங்டன் நகரில் பெரும் பேரணியை நடத்தினார். இது கருப்பின மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக சட்டம் இயற்றுவதில் பெரும் பங்கு  ஆற்றியது. 1964ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மால்கம் எக்ஸ், கறுப்பின மக்களின் முக்கிய தலைவரும் பல போராட்டங்களை நடத்தியவரும் ஆவர். 1963ல் இவர் மெக்காவிற்கு சென்று இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். 1965ல் அவர் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் கருப்பின மக்களின்
சமூக பொருளாதார நிலை
அய்க்கிய அமெரிக்காவில் 2017ல் 25 வயதிற்கு மேலுள்ள மொத்த மக்கள் தொகையில் 90% பேர் உயர்நிலை பள்ளி கல்வியை முடித்தவர்கள். கறுப்பின மக்களிலும் 87% பேர் உயர்நிலை பள்ளி கல்வியை முடித்திருக்கின்றனர். 25 வயதிற்கும் மேற்பட்ட கறுப்பின மக்களில் 24% பேர் நான்கு வருட கல்லூரி கல்வியை முடித்திருக்கின்றனர். 1993ல் இது வெறும் 12%.
அய்க்கிய அமெரிக்காவில் உழைக்கும் மக்களில் கருப்பின மக்கள் 12% மட்டுமே. கல்வியில் முன்னேற்றம் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் குறைவான வருமானம் கிடைக்கும் பணிகளில்தான் இருக்கின்றனர். கொரியர் மற்றும் டெலிவரி வேலைகளில் 25%, தபால் தொழிலாளிகளின் 27%, பொது மற்றும் நகர்ப்புற போக்குவரத்து துறையில் 31%, சுகாதார பணியர்களில் 31%, செவிலியர் பணிகளில் 28%, மளிகை கடைகள், மால்கள், மருந்து கடைகள் போன்றவற்றில் 12% என உள்ளனர். பெரும்பான்மையான இத்தொழில்கள் கரோனா தோற்று பரவ அதிக வாய்ப்புக்கள் உள்ள தொழில்கள். எனவேதான் கரோனா தொற்றில் அதிக கருப்பின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அய்க்கிய அமெரிக்காவில் மொத்த குடும்பங்களில் 11% வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். ஆனால் கருப்பின மக்கள் மத்தியில் 23% குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளன.
அய்க்கிய அமெரிக்காவில் சொத்து மதிப்பில் பொதுவாக மிகப்பெரிய ஏற்றதாழ்வுகள் இருக்கிறது. அய்க்கிய அமெரிக்க கருப்பின மக்களிடையே உள்ள சொத்து மதிப்பைவிட வெள்ளையர்கள் சுமார் 7 மடங்கு அதிகமாக வைத்திருக்கின்றனர்.
அய்க்கிய அமெரிக்காவில் 39% கருப்பின குழந்தைகளும், வளரிளம் பருவத்தினரும்  வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இது மற்றவர்களை காட்டிலும் இரண்டு மடங்கு  அதிகம்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் வேலை அற்றவர்களின் எண்ணிக்கை மற்றவர்களை விட இரண்டு மடங்கு.
தொடரும் நிற பேதங்கள்
2015 - 2016 பள்ளி கல்வி ஆண்டில், கருப்பின குழந்தைகள் 15% மட்டுமே. ஆனால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர்களில் 35% கருப்பின குழந்தைகள். பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவரில் 36% கருப்பி னத்தை சார்ந்தவர்கள். 
கோவிட் 19 ஆப்ரிக்க அமெரிக்கர்களை அதிகம் கொன்றிருக்கிறது. லூசியானாவில் மக்கள் தொகையில் 33% உள்ள கருறுப்பின மக்களில், இறந்து போனவர்களில் 70%. அலபாமாவில் மக்கள் தொகையில் 26%. ஆனால் இறப்பில் 44%. பல மாகாணங்களில் கருப்பின மக்களின் இறப்பு விகிதம் மற்றவர்களை விட மிக அதிகம்.
அமி ஹார்மோன் என்பவர் 2020 ஜனவரி மாதம் கருப்பின வளரிளம் பருவத்தினரிடம் செய்த ஒரு ஆய்வின்படி, நிற பேதமாக கிண்டல் கேலி செய்வது, சமூக வலைதளங்களில் மிரட்டுவது, வலைதளங்களில் மோசமான செய்திகள் அனுப்புவது, மிரட்டுவது போன்ற பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சொல்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் குறைந்தது 5 சம்பவங்களேனும் சந்திக்கின்றனர்.
காலங்காலமாக கருப்பின மக்கள் வசிக்கும் இடங்கள் வெள்ளையின மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வெளியே தனியாகத்தான் உள்ளன. வரலாற்றுரீதியாக அரசாங்கத்தின் வீட்டு வசதி கொள்கைகள் இது போன்ற பிரித்தலையே ஊக்குவித்திருக்கிறது என பல ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். (இந்தியாவில் தலித்துகள் ஒதுக்கப்படுவதை போல). அய்க்கிய அமெரிக்காவில் வீடற்ற மக்களில் பெரும்பாலானோர் கருப்பின மக்களே.
கருப்பின மக்கள் வீடு வாடகைக்கு எடுக்கும் போதும் பாகுபாடுகள் இருக்கின்றன. வெள்ளையர்கள் வசிக்கும் இடத்தில் இவர்களுக்கு வீடு கிடைக்காது. 'காக்கை குருவி எங்கள் சாதி' என்று ஆதவன் தீட்சண்யா எழுதிய ஒரு சிறுகதையில், தலித் மக்கள் வீடு வாடகைக்கு எடுக்க படும் பாட்டினை மிகவும் உணர்வுபூர்வமாக விளக்கியுள்ளார். மிகவும் வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடு என்று பிரகடனப்படுத்தும் அய்க்கிய அமெரிக்காவிலும் இதே நிலைதான்.
நிற பாகுபாடு கருப்பின மக்களின் முன்னேற்றத்திற்கு பெருந்தடை என பெரும்பான்மை கருப்பின மக்கள் சொல்கின்றனர்.
மாதிரி ஆய்வொன்றின்படி, மூன்றில் இரண்டு பங்கு மக்கள், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, நிறவெறி மனப்பான்மை மக்களிடையே மேலும் பரவியிருக்கிறது என்கின்றனர்.
'புதிய ஜிம் க்ரோ: நிறபேத நோக்கற்ற காலத்தில் பெரும் மக்கள் திரள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது' என்ற புத்தகம் மிச்செலே அலெக்சாண்டர் என்ற மனித உரிமை போராளி, வழக்குரைஞர் எழுதி 2010ல் வெளி வந்த புத்தகம். அய்க்கிய அமெரிக்காவில் நிறவெறி தொடர்வதற்கான காரணங்களை இது விவரிக்கிறது. கறுப்பின மக்களை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைக்க ஏதாவது ஒரு வழியை கடைப்பிடிப்பதில் அமெரிக்காவிற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. முதலில் அடிமை முறை. அது தடை செய்யப்பட்டவுடன் ஜிம் க்ரோ சட்டங்கள். குடிஉரிமை இயக்கத்திற்கு பின்னால்  பெருமளவில் அவர்களை சிறையில் அடைப்பது என்பது இன்றைய நிலைமை. இன்று பெருமளவில் கருப்பின மக்கள் சிறையில் தள்ளப்படுவது அவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே. அவர்களை தாழ்ந்த நிலையிலேயே வைத்திருந்து அவர்கள் உழைப்பை சுரண்டுடவே.
அய்க்கிய அமெரிக்க அரசின் ஓர் அங்கமான காவல்துறைக்கு, காவலர்களுக்கு காலங்காலமாக நிறவெறி இருக்குமானால், அது அரசால் பொருட்படுத்தப்படாமல் விட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். நிறவெறி கொண்ட காவலர்கள் அரசால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அய்க்கிய அமெரிக்க அரசும் நிறுவனங்களும் நிறவெறியில் ஊறியிருப்பதாகத்தான் இதை புரிந்து கொள்ள முடியும்.
ஜார்ஜ் ஃபிளாயிட் கொலைக்குப் பின் அமெரிக்காவே கொந்தளித்துக் கிடக்கிறது. இதற்கு முன்பும் காலங்காலமாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அநீதிக்கெதிரான இந்த மக்கள்திரள் போராட்டங்கள் அமைப்புரீதியான முறையில் இல்லாமல், வழமையான, அரசியல் தலைமை இல்லாத போராட்டங்களாக தொடர்கின்றன. இவை அடிப்படையிலான மக்கள் சார்பு மாற்றங்கள் என்ற திசைவழியில், நன்கு கட்டமைக்கப்பட்ட போராட்டங்களாக எழுவதற்கு, புது வகை தலைவர்கள் எழுவதற்கு உந்துதலை தராமலா போய்விடும்?
உழைக்கும் மக்களை ஒடுக்க பல்வேறு பாகுபாடுகள் தொடர்ந்து சமூகத்தில், ஆளும் சக்திகளால் வளர்க்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. மூச்சுத் திணறத் திணற மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். உழைப்புச் சுரண்டலும், சமூக பாகுபாடுகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உழைக்கும் மக்கள் அரசியல் சித்தாந்த அடிப்படையில் அமைப்புரீதியாகத் திரண்டு அனைத்து கொடுமைகளுக்கும், சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Search