COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

மலேரியா ஒழிப்பு தொழிலாளர் போராட்டம்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7ஆவது மண்டலத்தில் மலேரியா நோய் ஒழிப்பு தொழிலாளர்கள் சுமார் 200 பேர் ஜுன் 9 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மலேரியா நோய் ஒழிப்பு பணியாளர்கள் நல சங்கத்தின் சட்ட ஆலோசகர் தோழர் கே.சுரேஷ் தலைமை தாங்கினார். எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் பாரதி சிறப்புரை ஆற்றினார். ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எம்.சங்கர், வழக்கறிஞர் தோழர் புகழ்வேந்தன், உழைப்போர் உரிமை இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் ஆர்.மோகன், ஜி.முனு சாமி, வேணுகோபால், பசுபதி, ராஜேந்திரன், முருகன், மற்றும் சங்கத்தின் கிளை தலைவர் முரளி மோகன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஜோஸ்பின், கருணாகரன், மலர், மாதவன், சங்கர், ரமேஷ், சீனிவாசன், நிர்வாகிகள் கமிட்டி உறுப்பினர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா நோய்த்தொற்று உள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்வது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது, பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிப்பது போன்ற முன்கள பணிகளில் ஈடுபடும் சங்க கிளைத் தலைவர் முரளி மோகன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் மிரட்டியதை கண்டித்தும் சங்க நடவடிக்கைகளுக்காக பணியிட மாற்றம் போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஏழாவது மண்டல அலுவலரின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
கொரோனா தடுப்புக்கான களப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அருண் என்ற மலேரியா ஒழிப்பு தொழிலாளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு அரசு அறிவித்த பயன்கள் உடனடியாக கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நோய் தொற்று காலத்தில் வழங்கப்படும் உணவுகள் மிகவும் தரமற்றதாக இருப்பதாக தொழிலாளர்கள் சொல்கின்றனர். தொற்று தடுப்பில் முன்களப் பணியாளர்களான மலேரியா ஒழிப்பு தொழிலாளர்களுக்கு சத்தான, தரமான, சாப்பிட உகந்த உணவு தரப்பட வேண்டும்.
முன்கள பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நாளொன்றுக்கு ரூ.500 சம்பளம் வேண்டும்.
மண்டல அலுவலக வாசலில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்களை கலைப்பதாகச் சொல்லி அவர்கள் மீது தாக்குதல் நடத்த காவல்துறை முயற்சி செய்தது. தோழர்கள் சுரேஷ், வேணுகோபால், ராஜேந்திரன் மற்றும் தொழிலாளர்களை கைது செய்வேன் என்று மிரட்டியது.
அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பர முருகேசன் மாநகராட்சி மண்டல அலுவலரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். தோழர் சுரேஷ் தலைமையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மண்டல அலுவலர் கேட்டுக் கொண்டதன்படி எழுத்துபூர்வமாக மனு தரப்பட்டுள்ளது. கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தொழிலாளர்கள் அமைதியாக பணி செய்ய அனுமதிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
- ஆர்.மோகன்

Search