இடதுசாரி
அரசியலில் தடுமாற்றம் ஏன்?
நாடோடி
ஜனநாயகத்
தேர்தல் கூத்து
தமிழ்நாட்டில்
முதலமைச்சர் ஜெயலலிதா 50 நாட்கள் தாண்டி அப்பல்லோ
மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையை விட்டு அவர் எப்போது
வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு
செய்வார் என அப்பல்லோ மருத்துவமனை
தலைமை மருத்துவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
முதல்வரின் சிகிச்சையை, அவர் எடுக்க வேண்டிய
மருந்துகளை முதல்வரே முடிவு செய்து கொள்வார்
என்று மட்டும் அப்பல்லோ ரெட்டி
சொல்லாமல் விட்டுவிட்டார்.
இந்த முறை தஞ்சாவூர், அரவக்குறிச்சி
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல்களில் முதல்வரின் கைநாட்டால்தான் அஇஅதிமுக வேட்பாளர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். எந்த விறுவிறுப்பும் இல்லாத
தேர்தல்களில் மு.க.ஸ்டாலின்
விடாப்பிடியாய்ப் பிரச் சாரம் செய்து
வருகிறார். 2021க்கு முன்பே ஆட்சி
மாற்றம் வரவும் வாய்ப்புண்டு என
தளபதி எதிர்பார்ப்புடன் சொல்ல, தளபதியின் தளபதிகளும்
2021க்கு முன்பே ஆட்சி மாற்றம்
எனப் பேசவும் எதிர்பார்க்கவும் துவங்கிவிட்டனர்.
அப்படி மாறினால், கருணாநிதிதான் முதலமைச்சர் என மு.க.அழகிரி சொல்கிறார்.
இந்த இரண்டு கட்சிகளின் பணப்
பட்டுவாடா மற்றும் ஊழல் நடவடிக்கையால்
மே 16 தள்ளி வைக்கப்பட்ட தேர்தல்,
நவம்பர் 19 அன்று தஞ்சையில், அரவக்குறிச்சியில்
நடைபெற உள்ளது. அதே கட்சிகள்,
அதே வேட்பாளர்கள், அதே நாடாளுமன்ற ஜனநாயகம்.
முதல்வர்
பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் கடமை எதுவும் ஆளும்
கட்சிக்கு கிடையாது. நீட் தேர்வு, உணவு
பாதுகாப்பு சட்டம், உதய் திட்டம்
என்ற தமிழக மக்கள் நலன்களைப்
பாதிக்கும் மூன்று விஷயங்களில், அப்பல்லோவுக்குச்
செல்லும் முன் ஜெயலலிதா மத்திய
அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவர் மருத்துவமனையில் இருக்கும்போது
எதிர்ப்பு ஆதரவாக மாறிவிட்டது. மக்களுக்கு
எந்த விளக்கமும் தரப்படவில்லை. இது ஆளும் கட்சி
நடைமுறைப்படுத்தும் ஜனநாயகம். தேர்தல் இல்லாமலே, தேர்தலுக்கு
முன்பாகவே தங்களுக்குச் சாதகமான ஆட்சி மாற்றம்
பற்றிக் கற்பனை செய்யும் எதிர்க்கட்சி.
நல்ல ஜனநாயகப் போட்டிதான்!
மக்கள்நலக்
கூட்டணி அனுபவம் இடதுசாரிகளுக்குப் படிப்பினைகள்
தந்ததா?
மே
2016 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், தமாகாவும்
தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணி
உறவிலிருந்து வெளியேறி விட்டனர். தேர்தல் நேரத்திய தேவைக்காக
வந்தவர்கள், தேர்தல் முடிந்த பிறகு,
அந்த உறவால் தேர்தலில் பயன்
இல்லை என்று தெரிந்ததும், உறவைத்
துண்டித்துக் கொண்டனர். இந்த அரசியல் முடிவு
புரிந்து கொள்ளத் தக்கதே.
ஆனால்,
கொள்கைக் கூட்டணியான(!) லட்சியக் கூட்டணியான(!) மக்கள் நலக் கூட்டணியின்
நிலை என்ன?
இககவும்,
இகக(மா)வும் தேர்தல்
தோல்வி பற்றி கருத்து சொல்லும்போது,
வைகோவும் திருமாவளவனும் சொன்னது போல், பண
பலத்தால், தோற்கடிக்கப்பட்டதாகவே சொன்னார் கள். மக்கள் பணம்
வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள்
என்றுதான் நேரடியாகவும் சுற்றி வளைத்தும் சொன்னார்கள்.
இப்போது நடக்கிற தேர்தலில் நிற்பது
பற்றி, யாரை ஆதரிப்பது என்பது
பற்றி எல்லாம் தமக்குள்ளும் குழம்பி,
தமக்கு வெளியேயும் குழப்புகிறார்கள்.
மக்கள்
நலக் கூட்டணி உருவாக்கம், அதன்
செயல்பாடு பற்றி, இகக, இகக(மா) கட்சிகளை விட, இந்திய
தொழிற்சங்க மய்யம் (சிஅய்டியு) மேலான
மதிப்பீடுகளைச் செய்துள்ளது. 2016 செப்டம்பர் 9 - 12 தேதிகளில் நடந்த அதன் 13ஆவது
மாநாட்டு அறிக்கையின் பக்கங்கள் 29, 30, பாரா 22.1 பின்வருமாறு சொல்கிறது:
‘தமிழ்நாட்டில்
நடைபெற்ற 15ஆவது சட்டமன்றத் தேர்தலில்,
50 ஆண்டு காலமாக ஆட்சியில் மாறி
மாறி இருக்கும் திமுக, அஇஅதிமுக கட்சிகளுக்கு
மாற்றாக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி,
தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கடந்த காலங்களில் திமுக அல்லது அஇஅதிமுகவை
ஆதரிப்பது என்கிற இடதுசாரிகளின் நிலைப்பாடு
பற்றி தொழிற்சங்க அரங்க முன்னணி ஊழியர்கள்
மத்தியில் ஒரு விதமான கருத்துக்கள்
மேலோங்கின. இதன் காரணமாக மனம்
உவந்து பணியாற்றும் நிலை இல்லாமல் இருந்தது.
இதற்கு மாறாக, கடந்த சட்டமன்றத்
தேர்தலில், இடதுசாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி,
குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. இது சிஅய்டியு முன்னணி
ஊழியர்கள் மத்தியில் உத்வேகத்தை உருவாக்கியது. பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பையும் பெற்றது’.
சிஅய்டியு
சொல்வதை பளிச்செனப் போட்டு உடைத்துச் சொன்னால்,
இடதுசாரிகள் மாறி மாறி திமுக,
அஇஅதிமுகவை ஆதரிப்பதை தொழிலாளர்கள் விரும்பவில்லை; திமுக, அஇஅதிமுகவை ஆதரிப்பதை
வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்தனர். இடதுசாரிகள் முயற்சியில் உருவான அணி, மக்கள்
கோரிக்கைகள் அடிப்படையில் குறைந்த பட்ச செயல்திட்டத்தை
வைத்ததால், தோழர்கள் உற்சாகம் அடைந்தனர். மக்கள் வரவேற்றனர்.
சிஅய்டியு
மாநாட்டு அறிக்கை மேலும் சொல்கிறது:
‘மக்கள்
நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்த பின்
முதல்வர் வேட்பாளராக விஜய்காந்தை அறிவித்ததை மக்கள் ஏற்கவில்லை. வைகோவின்
உணர்ச்சிவயப்பட்ட பேச்சு, தேவையற்ற பிரச்சனைகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பது,
மக்கள் பிரச்சனைகள் மீது அக்கறை செலுத்தாதது
போன்றவற்றால், தொழிலாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்க முடியவில்லை.’ (கட்டுரையாளர் அடிக்கோடிட்டுள்ளார்).
சிஅய்டியுவின்
கணிப்பில், கவலையில் நியாயம் உள்ளது. ஆனால்,
அவற்றை இககவும் இககமாவும் கணக்கில்
கொள்ள வேண்டுமே! அவர்கள் கணக்கில் கொண்டார்களா
இல்லையா என்பதை, நவம்பர் 19 தேர்தல்
தொடர்பான அவர்கள் கருத்துக்களிலிருந்து பார்ப்போம்.
வைகோ திறந்த மனதோடு, கவலைகள்
ஏதும் இல்லாமல் 09.11.2016 தேதியிட்ட ஆனந்தவிகடனுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.
கேள்வி:
இடைத் தேர்தலை மக்கள் நலக்
கூட்டணி ஏன் புறக்கணிக்கிறது?
பதில்:
இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின்
ஆதரவு யாருக்கும் கிடையாது. கடந்த கால இடைத்தேர்தல்களை
திமுக அஇஅதிமுக போன்ற கட்சிகள் புறக்கணித்துள்ளன.
அப்போது போலவே, இந்தத் தேர்தலில்
நாங்கள் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம்.
கேள்வி:
இவ்வளவு அரசியல் அனுபவம் கொண்ட
நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக விஜய்காந்தை அறிவித்தது சரி என நினைக்கிறீர்களா?
பதில்:
‘விஜய்காந்தை முதல் அமைச்சர் வேட்பாளராகச்
சொன்னதால் உங்கள் இமேஜ் போய்விட்டதே’
எனச் சொல்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை.
ஆனால் எந்தச் சூழ்நிலையில் இந்த
முடிவு எடுக்கப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க
வேண்டும்’.
(இதற்குப்
பிறகு திமுக, கருணாநிதி ஸ்டாலின்
பற்றிச் சில விஷயங்களைக் குறிப்பிட்டு
விட்டு வைகோ தொடர்கிறார்)
‘ஆனால்,
மதிமுகவை பாதுகாக்க வேண்டும் என்றுதான் நான் அந்த முடிவை
எடுத்தேன்’.
‘மக்கள்
கூட்டு இயக்கம் நடத்த வேண்டும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜனும்
ஜி.ராமகிருஷ்ணனும் வந்தார்கள். திருமாவளவனும் பேசினார். ‘வெற்றி பெற முடியுமா’
எனக் கேட்டேன். போராடிப் பார்ப்போம் என்றார்கள். திருமாவளவன்தான் மூன்றாம் அணி பற்றி முதன்முதலில்
என்னிடம் பேசினார். அப்போது விஜய்காந்த் அவர்கள்
திமுகவோடுதான் போகப் போகிறார் என்ற
செய்தி பலமாக அடிபட்டது. எங்கள்
கூட்டணியில் உள்ளவர்கள் விஜய்காந்த் வந்தால் நாம் வெற்றி
பெற முடியும் என்றார்கள். தம்மை முதலமைச்சர் வேட்பாளராக
அறிவித்தால்தான் கூட்டணிக்கு வருவேன் என்று விஜய்காந்த்
சொன்னார். நாம் வெற்றி பெற
வேண்டும் என்றால், இதுதான் சரி என
நாங்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால் விஜய்காந்த் பெயரை
முன்மொழிந்தது தவறுதான்’.
வைகோவுக்கு
இககமா மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் கே.பாலகிருஷ்ணன் மறுப்பு
தெரிவித்த செய்தி அடுத்து வந்த
ஆங்கில இந்து நாளேட்டில் இடம்
பெற்றுள்ளது.
‘விஜய்காந்தை
முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தியது சரியான முடிவுதான். சட்டமன்றத்
தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின்
மோசமான செயல்பாட்டிற்கு பல காரணங்கள் உண்டு.
அவ்வாறு இருக்க, திரு.விஜய்காந்தை
முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தியதைத் தனித்த காரணமாகக் காட்டுவது
சரி அல்ல’.
‘நாங்கள்
தேமுதிக, தமாகாவைச் சேர்த்துக் கொண்டு அணியை விரிவுபடுத்த
முடிவு செய்த போது, விஜய்காந்த்
மக்கள் நலக் கூட்டணியில் சேரும்
முன்பு, மக்கள் நலக் கூட்டணி
தலைவர்கள் அவரை முதல்வர் வேட்பாளராக
அறிவிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை
மட்டுமே விதித்தார். அதனை நாங்கள் ஏற்றுக்
கொண்டோம்’.
‘திமுகவும்
பாஜகவும் விஜய்காந்தை தத்தமது முகாமில் சேர்க்க
கடுமையாக முயன்று வந்தனர். அவர்
திமுக அணியில் சேர்ந்திருந்தால் தேர்தல்
முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கும்.
திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும்’.
‘மக்கள்
நலக் கூட்டணி தோல்விக்கு பல
காரணங்கள் உண்டு. கூட்டணியின் அமைப்பாளரான
திரு வைகோ கடைசி நேரம்
போட்டியில் இருந்து விலகியதைக் கூட
வாக்காளர்கள் ஏற்கவில்லை’.
திருமாவளவனை
முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், தலித் முதலமைச்சர் வேட்பாளர்
என்று நாம் சொல்வது நல்லது
என்ற குரல், விடுதலைச் சிறுத்தைகள்
தரப்பில் இருந்து மக்கள் நலக்
கூட்டணிக்குள் (தேமுதிக தமாகா வருகைக்கு
முன்பு) எழுந்தபோது, தேர்தல் முடிந்த பிறகு
முதல்வர் யார் என முடிவு
செய்வதுதான் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு உகந்தது
என மதிமுக, இகக, இககமா
தெரிவித்தனர். (விஜய்காந்த் வந்தவுடன் உயர்ந்த நாடாளுமன்ற ஜனநாயக
மரபு பின்னுக்குப் போய்விட்டது). திருமாவளவனும் இந்த முடிவை ஒப்புக்கொண்டார்!
விஜய்காந்தை
முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறு என வைகோ
சொன்ன பிறகும், சிஅய்டியு மாநில மாநாடு, மக்கள்
நலக் கூட்டணி விஜய்காந்தை முதல்வர்
வேட்பாளராக அறிவித்ததை மக்கள் ஏற்கவில்லை என
செப்டம்பர் 2016ல் சரியாகக் குறிப்பிட்டபோதும்,
இககமாவின் தோழர் பாலகிருஷ்ணன், விஜய்காந்தை
முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது சரிதான் என வலுவாக
வாதாடுகிறார். அப்படி செய்திருக்காவிட்டால் அவர் திமுக
பக்கம் போயிருப்பார்; திமுக வென்று ஆட்சியைப்
பிடித்திருக்கும் என்றும் ஒரு காரணம்
சொல்கிறார்.
பாஜகவுடன்
முதல்வர் பதவிக்கு பேரம் பேசி
வந்த, திமுகவோடு கூட்டணி பேரம் பேசி
வந்த, விஜய்காந்தை, முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தியது என்ன கொள்கை அடிப்படையில்
என தோழர் பாலகிருஷ்ணன் விளக்கவில்லை.
வைகோ மற்றும் தோழர் பாலகிருஷ்ணன்
என்ற இருவருமே, தங்கள் அணி யோடு
சேர்ந்து போட்டியிட, தம்மை முதலமைச்சர் வேட்பாளராக
முன் நிறுத்த வேண்டும் என்ற
ஒற்றை நிபந்தனையை விஜய்காந்த் போட்டதையும், அதனை தாம் ஏற்றுக்
கொண்டதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். (விஜய் காந்தை முதலமைச்சர்
வேட்பாளராக நிறுத்தி கூடுதல் வாக்குகள் பெறுவதுதான்
அன்றிருந்த கொள்கை, லட்சியம்!) விஜய்காந்த்
நிபந்தனை போட்டார். இகக, இககமா கட்சிகள்,
நாங்கள் மக்கள் நலன் காக்கும்
கூட்டியக்கம் நடத்தி, மக்கள் நலக்
கூட்டணி அமைத்துள்ளோம், ஒரு குறைந்தபட்ச கொள்கைத்
திட்டம் உருவாக்கி உள்ளோம், அதை நீங்கள் ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அவரிடம் நிபந்தனை
போட்டார்களா? குறைந்தபட்சம் அது பற்றிப் பேசினார்களா?
இல்லை என்பதுதான் பதில்.
மதுவும்
ஊழலும் இல்லாத தமிழகம், கூட்டணி
ஆட்சி என்ற பொதுவான விஷயங்கள்
தாண்டி, மக்கள் சார்பு உள்ளடக்கம்
கொண்ட, மக்கள் பிரச்சனைகள் மீது
அக்கறை செலுத்தும் பிரச்சாரம் எதையும் மக்கள் நலக்
கூட்டணி நிறுவியவர்கள் செய்யவில்லை. சிஅய்டியு சொல்வது சரிதானே! பிடிவாதமாக
இப்போதும், தங்கள் தரப்பில் எந்தத்
தவறும் இல்லை என இடதுசாரிகள்
சொல்வது, அவர்களுக்கு அரசியல்ரீதியாக நன்மை தராது.
தற்போதைய
தேர்தல் விஷயத்தில் என்ன நடக்கிறது? வைகோ,
தேர்தலை புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தடாலடியாய் அறிவிக்க,
இகக, இககமா தோழர்கள் அதிருப்தி
அடைந்தனர். திரும்பப் பேசியும் வைகோ மாறாததால், ‘கூட்டணி
தர்மம்’ காக்க, அந்த முடிவுப்படி,
நின்றுவிட்டனர். திருமாவளவன் பக்கத்து புதுச்சேரியில் மதச்சார்பின்மை காக்க, காங்கிரஸ் முதல்வர்
நாராயணசாமியை ஆதரித்துள்ளார். (நாராயணசாமியும் காங்கிரசும் விசிகவை அணுகி ஆதரவு
கேட்டார்களா இல்லையா எனத் தெரியவில்லை).
திருமாவளவன், ‘அரசியல் நாகரிகம் காக்க’
முதல்வர் நலம் விசாரிக்கிறார். காவிரிக்காக
திமுக கூட்டும் கூட்டத்திற்கு போனால் என்ன என்கிறார்.
மதவெறி, சாதியாதிக்க, பாசிச மோடி அரசில்
அங்கம் பெறும் ராம்விலாஸ் பஸ்வான்,
ராம்தாஸ் அதாவாலே, உதித் ராஜ் ஆகியோரைக்
கூட்டி மாநாடு நடத்த உள்ளார்.
அவரும் தோழர் முத்தரசனும், தற்போதைய
தேர்தலில் தேமுதிக ஆதரவு கேட்டால்
பரிசீலிக்கத் தயார் என்றனர். அவர்களுக்கு
எந்த விதத்திலும் உதவாமல், பிரேமலதா, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என
நினைப்பவர்கள் தாமாக முன்வந்து தேமுதிகவை
ஆதரிக்க வேண்டும் என்றார். அதற்குப் பிறகு திருமாவளவன், ‘யாருக்கும்
வலியச் சென்று ஆதரவு தரும்
நிலையில் மக்கள் நலக் கூட்டணி
இல்லை. தேமுதிகவை ஆதரிப்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ கூறிய கருத்துதான் எனது
கருத்து. 3 தொகுதி தேர்தலில் தேமுதிகவை
ஆதரிப்பதாக இல்லை. மக்கள் நலக்
கூட்டணியின் முடிவே எங்கள் முடிவு’
என்றார்.
இவ்வளவு
கூத்துக்குப் பிறகு, உள்ளாட்சி தேர்தலை
மக்கள் நலக் கூட்டணி ஒன்றாகச்
சந்திக்குமா, மக்கள் நலக் கூட்டணியில்
இனியும் மக்கள் நலன் ஏதாவது
உள்ளதா என்பதை இகக, இககமா
கட்சிகள்தான் விளக்க வேண்டும்.
நோயின்
மூல வேர் எங்குள்ளது?
06.11.2016 அன்று
தோழர் தா.பாண்டியன் தமிழ்
இந்து நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகளைக் காண்போம்.
‘இரண்டு
திராவிட கட்சிகளும் பதவியைக் கைப்பற்றுவதில், பதவியைப் பயன்படுத்தி பல வகையில் பணம்
திரட்டுவதில், திரட்டிய பணத்தைக் காப்பாற்ற வேண்டும், பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதில்தான்
முழுக்கவனம் செலுத்துகின்றன. இதில் இரு திராவிட
கட்சிகளுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.
கம்யூ னிஸ்ட் - திராவிட கட்சிகள் கூட்டணிக்கு
வாய்ப்பு இருக்கலாம். அவர்கள் பாஜகவை எதிர்த்து
கொள்கையில் உறுதியாக நின்றால், மற்றவற்றை மறந்து ஒத்துழைக்கலாம்’.
‘சமுதாய
மாற்றத்திற்காக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்
வரையில், சமுதாய மாற்றத்திற்காகச் செய்யப்படுகின்ற
ஒவ்வொரு காரியத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தர
வேண்டும். சமுதாய மாற்றத்திற்கு முட்டுக்கட்டையாக
இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். ஆதரவாக உள்ளவர்களை ஒன்று
நண்பராக்க வேண்டும்; முடியாவிட்டால் எதிரி என்று சொல்லாமலாவது
இருக்க வேண்டும்’.
‘என்னைப்
பொறுத்தவரையில் கொள்கை சித்தாந்த அடிப்படையில்
கம்யூனிஸ்ட்களின் முதல் எதிரி பாஜகதான்.
அதைத்தான் முழுமூச்சாக எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராகத்தான் அணி திரட்ட வேண்டும்.
அந்த அணியில் காங்கிரசைக் கூடச்
சேர்த்துக் கொள்ளலாம். காங்கிரசின் தவறுகளை விமர்சிக்கலாம். ஆனால்
எதிரியாகக் கருதக் கூடாது. திராவிட
இயக்கம் அடிப்படைக் கொள்கையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இருக்கவே முடியாது’.
அதாவது
பாஜக எதிர்ப்பு என்று சொல்லும் எவரோடும்
இடதுசாரிகள் அணிசேரலாம், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை, ஆதிக்க
சாதி ஆதரவு அரசியலை, வன்மையான
அரசு கடுமையான சட்டங்கள் என்ற கொள்கையை, மென்மையான
இந்துத்துவா நிலைப்பாட்டை, ஏகாதிபத்திய
ஆதரவுத் தன்மையை காங்கிரஸ் மற்றும்
பிற பிராந்திய கட்சிகள் கொண்டுள்ளனவா என்பவை எல்லாம் முக்கியம்
இல்லை என்கிறார் தோழர் பாண்டியன்.
டிரம்ப்
வெற்றிக்குப் பின்னால் ஒபாமாவின், ஹிலாரியின் கொள்கைகளும் இருந்தன. மோடி வெல்ல காங்கிரசே
பாதை அமைத்தது. இதனை மறப்பது, சுதந்திர
இடதுசாரி அரசியல் வேரூன்ற விரிவடைய,
தடையாக மாறும்.
இகக(மாலெ)யின் கருத்தியலாளரான
தோழர் அரிந்தம் சென் இகக, இககமாவின்
இந்தப் போக்கை கிரிட்டிக்கல் டெயிலிசம்
என்கிறார். அதாவது காங்கிரசை, கழகங்களை
கடுமையாக விமர்சிப்பது, ஆனால் நடைமுறையில் அவர்கள்
பின் செல்வது என்பதாக இந்த
நோய் அமைகிறதாம். நெருக்கடி நிலை பிரகடனத்தை இகக
ஆதரித்தது, மேற்கு வங்க சட்டமன்றத்
தேர்தலில் இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்டணி ஆகியவை இந்த
நோயின் வெளிப்பாடுகளே. இககமாவின் அரசியல் தலைமைக்குழுவும் மத்தியக்
குழுவும், மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசோடு கூட்டு வைத்தது தவறு
என முடிவு எடுத்தன; ஆனால்
வலுவான மேற்கு வங்க மாநிலக்
கமிட்டியின் எதிர்ப்பால் தங்கள் முடிவை அறிவிக்காமல்
கோட்பாடற்ற சமரசம் செய்து கொள்கின்றனர்.
இப்போது, பாஜக ஆபத்து இருக்கும்போது
காங்கிரஸ் வலுவாக இல்லையே, காங்கிரஸ்
சரிந்துவிட்டதே எனக் கவலைப்படுகின்றனர்.
மக்கள்
மீது, மாற்றத்தின் மீது, இடதுசாரிகளின் மீது
நம்பிக்கையோடு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையோடு, மக்கள்
போராட்டங்கள் அடிப்படையில் இடதுசாரி அரசியலைப் பலப்படுத்துவது மட்டுமே இடதுசாரிகளுக்கான பாதையாக
இருக்க முடியும்.
(மாலெ தீப்பொறி 2016 நவம்பர் 16 - 30)