COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 19, 2016

தலையங்கம்
தோழர் பி.வி.சீனிவாசனுக்கு சிவப்பு வணக்கம்!
இகக, இகக(மாலெ) நிறுவனத் தலைவர்களுள் ஒருவரான தோழர் பி.வி.சீனிவாசன், டிசம்பர் 6 அன்று அதிகாலை 2.30 மணி அளவில் டெல்லியிலுள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது வயது 77. கட்சி மத்திய அலுவலகத்தின் பராமரிப்பில் உயர்தர தனியார் மருத்துவமனை ஒன்றில் பல மாதங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் கூட அவர் குணமடைந்து வருகிறார் என்று கூறியது பெரும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஆனாலும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இறப்புக்கு எதிரான தோழர் சீனிவானது போராட்டமும் கட்சியின் கடும் முயற்சியும் தோற்றுவிட்டன. மரணம் வென்றுவிட்டது. தோழர் சீனிவாசன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். ஆனால், மரணத்தால் வெல்ல முடியாத அனுபவத்தையும் படிப்பினைகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். தோழர் பி.வி.சீனிவாசனது வாழ்வும் போராட்டமும் மூன்று தலைமுறை கம்யூனிஸ்ட்களது வாழ்வையும் போராட்டத்தையும் நினைவுபடுத்தக் கூடியது.

1939 பிப்ரவரி 1 அன்று பிறந்த தோழர் பி.வி.எஸ். ஆரம்பக் கல்வியைக் கூட முடிக்கமுடியவில்லை. 1950களின் இறுதிப் பகுதியில் தனது இளம் வயதிலேயே (பதின்மப் பருவத்திலேயே) ஓட்டல் தொழிலாளியாக வேலைத் தேடிக் கொண்டார். அக்காலத்தில் நட்சத்திர ஓட்டல்கள் லாபம் கொழிக்கும் நவீன தொழிலாக வளர்ந்து கொண்டிருந்தன. தென்மாநிலங்களிலிருந்து வேலை தேடி வருவோருக்கு வேலை தரும் புகலிடமாகவிருந்தது. ஓட்டல் தொழிலாளர் மீதான கடும் சுரண்டலும் அடக்குமுறையும் சென்னை நகர ஓட்டல் தொழிலாளர்களை கொந்தளிக்கச் செய்தது. தோழர் பி.வி.எஸ். கொந்தளித்த தொழிலாளர்களின் போர் முழக்கமாக இருந்தார். தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் அணிதிரட்டினார். மெட்ராஸ் சிட்டி ஓட்டல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். அந்த காலங்களில் ஓட்டல் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள் பல அறிமுகமாயின. வேலை நிறுத்தம், வழக்கு, கைது அடிதடி, கத்திகுத்து என பல வகையிலும் ஓட்டல் தொழிலாளர் அரங்கம் தீவிரமான போராட்டக் களமாக இருந்தது. இந்தப் போராட்டங்களை வழிநடத்தியதில் முன்னணிப் பங்கு வகித்தவர் தோழர் பிவிஎஸ். தொழிலாளர் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த அவர் முதலாளிகள் மீது எப்போதும் கடும் வெறுப்பும் கோபமும் கொண்டிருந்தார். அவர் எதற்கும் அஞ்சியதில்லை. உட்லண்ட்ஸ் ஓட்டல் முதலாளியை டேய் என்று அழைப்பார். அது தொழிலாளர்களை கிளர்ச்சி கொள்ளச் செய்தது.
மேலான ஊதியம், வேலை நிலைமைகளுக்காக தொழிலாளர் போராட்டங்களில் போலீஸ் தலையிடக் கூடாது என்பதற்காக ஓட்டல் தொழிலாளர்களுக்கு ஊதிய வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டங்கள் அக்காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான போராட்டங்களாகும். தொழிலாளர் ஆயிரங்களில் கலந்து கொண்ட மே தின ஊர்வலங்கள் அவரது முயற்சியில் நடந்தன. ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர அரசியல் ஊழியராக தொழிலாளர் தலைவராக கம்யூனிஸ்ட் அரசியல் தலைவராக பரிணமித்தார். அக்காலகட்டத்தில் தொழிலாளர் போராட்டங்களை நடத்தியதிலும் கம்யூனிஸ்ட் தலைவர்களாக உருவானதிலும் முக்கியமானவர்களான தோழர்கள் அரிபட், பிஜிகே, மேயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்னும் பலர் தோழர் பிவிஎஸ்ஸின் சமகாலத் தலைவர்கள். தொழிலாளர் போராட்டங்கள் கம்யூனிஸ்ட் அரசியலுக்கு அடித்தளமாக இருந்தன. கமயூனிஸ்ட் அரசியல் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் அரசியல் சக்தியாக எழச் செய்வதில் பெரும்பங்கு வகித்தன. ஏராளமான தொழிலாளர் கம்யூனிஸ்ட் முன்னோடிகள், தலைவர்கள் இந்த போராட்டங்களில் உருவானார்கள். ஏஅய்சிசிடியுவின் தமிழ்நாடு மாநிலத்தலைவரும் இகக(மாலெ) மாநிலத் தலைவர்களுள் ஒருவருமான தோழர் எ.எஸ்.குமார் போன்றோர் அப்போது உருவானவர்கள்.
அறுபதுகள் பல அரசியல் சூறாவளிகளைக் கண்டன. காங்கிரஸ் எதிர்ப்பு உக்கிரம் பெற்றது. தொழிலாளர் போராட்டங்கள் வீறு கொண்டு எழுந்தன. அரிசிப் பஞ்சம், அடக்குமுறை காங்கிரஸ் ஆட்சி, இந்தி திணிப்பு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு, திமுக ஆட்சியைப் பிடித்தது, நக்சல்பாரியின் வசந்தத்தின் இடிமுழக்கம் ஆகியவை அப்போதைய அரசியல் சமூகக் களமாக இருந்தன.
இந்த பின்புலத்தில் சென்னை, தொழிலாளர் போராட்டங்களின் போர்க்களமாக இருந்தது. பி அண்ட் சி, சிம்சன், டிவிஎஸ், துறைமுகம், போக்குவரத்து, ஓட்டல் துறை என அனைத்து துறைகளிலும் தொழிலாளர்கள் போராட்டங்களில் கிளர்ந்து எழுந்தனர். அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பெரம்பூர், திருவெற்றியூர் ஆகிய தொழிற்சாலைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் தோழர்கள் பிவிஎஸ், ஏஎம்கே, குசேலர் ஆகியோருக்கு முக்கியப் பங்குண்டு. தமிழ் இனம், நாடு அடையாளங்களை முன்வைத்து பெரும் வளர்ச்சி கண்டு வந்த திமுகவின் அண்ணாதுரை கூட கூவம் நதிக் கரையில் குமுறுகிறான் தொழிலாளி, தேம்ஸ் நதிக் கரையில் தெம்மாங்கு பாடுகிறான் கோயங்கா என்று வாய்வீச வேண்டி வந்தது. 1967 ஆட்சி மாற்றத்தில் தொழிலாளர்கள் பெரும் பங்கு வகித்தனர். ஆனாலும் தொழிலாளர் மத்தியில் சிவப்பு தொழிற்சங்கமும் கம்யூனிஸ்ட் அரசியலும் பெரும் செல்வாக்குடன் விளங்கின. திமுகவால் அந்தக் கோட்டையில் ஊடுருவ முடியவில்லை.
64ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தேசிய ஜனநாயகப் புரட்சியா, மக்கள் ஜனநாயகப் புரட்சியா என்ற விவாதம் தொடங்கி பிளவில் முடிந்தது. பிவிஎஸ் மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னிறுத்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பக்கம் நின்றார். முழுநேர ஊழியராக செயல்பட்டார். தோழர் அப்புவை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் ஏட்டுக்கு நிதி திரட்டுவதில், தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தார். 1965 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது, போராட்டத்தை ஆதரித்து தோழர் பிவிஎஸ், கோவை ஈஸ்வரன் மற்றும் சில தோழர்கள் உதவியுடன் 10,000 துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டனர்.
1968 வெண்மணி படுகொலை இந்தியாவையே உலுக்கியது. அண்ணாதுரையின் ஆட்சிக்கு பெரும் கரும் புள்ளியாக மட்டுமின்றி நெருக்கடியை உருவாக்கும் அளவுக்கு விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் செயல்வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது. ஆட்சிக்கு பங்கம் வராமல் தொழிலாளர்களின் கொந்தளிப்பை அமைதிப்படுத்திய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் அண்ணாதுரை நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தச் செய்தி தீக்கதிர் ஏட்டில் பெரிய அளவில் இடம் பெற்றது. தொழிலாளர்களை அமைதிப்படுத்திய இந்த நடவடிக்கை மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இருந்த போர்க்குணமிக்க முன்னோடிகளையும் தொழிலாளர்களையும் கோபமடையச் செய்தது. திமுகவை ஆட்சிக்கு கொண்டுவந்த தொழிலாளர்கள் ஆட்சிக்கு எதிராக கோபமுற்றனர். திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் ஏட்டுக்கு எதிராக மார்க்சிஸ்ட் செயல்வீரர்கள், தொழிலாளர்களின் கோபம் திரும்பியது. தீக்கதிர் எழுதும் பொய்யர்களே அண்ணாதுரையின் சீடர்களே என்ற முழக்கத்தோடு அந்த ஏட்டுக்கு தீயிடும் அளவுக்கு கோபம் உச்சத்தைத் தொட்டது. அந்த கோபம் கோபாலகிருஷ்ண நாயுடு தண்டிக்கப்படும் வரை கூட நீடித்தது.
இதே காலகட்டத்தில் சர்வதேச நிலைமைகளில் பல முக்கிய நிகழ்வுகள் தோன்றின. வியட்நாம் மீதான அய்க்கியஅமெரிக்க போருக்கெதிராக உலகெங்கும் உள்ள முற்போக்கு சக்திகள், மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். அப்போது சென்னை ஓட்டல் தொழிலாளர்கள் ‘அமாரா நாம், துமாரா நாம் வியட்நாம்’ எனும் பிரபலமான முழக்கத்துடன் வீதிகளில் திரண்டனர். இந்த ஊர்வலங்களை தோழர் பிவிஎஸ் வழிநடத்தினார். சீனத்தில் கலாச்சார புரட்சி, அது குறித்த இந்திய கம்யூனிச இயக்கத்தில் எழுந்த அரசியல், தத்துவார்த்த விவாதங்கள் மேற்குவங்க நக்சல்பாரியில் எழுந்த உழவர் புரட்சி, வசந்தத்தின் இடிமுழக்கம் உள்ளிட்டவை மார்க்சிஸ்ட் கட்சியிலும் எதிரொலித்தது. தமிழ்நாட்டிலும் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த புரட்சியாளர்களை அகில இந்திய புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அணிதிரள வைத்தது. தோழர் அப்பு, பிவிஎஸ், ஏஎம்கே, கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட பலரைக் குறிப்பிடலாம்.
தோழர் சாருமஜ÷ம்தார் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)அய் தமிழ்நாட்டில் உருவாக்கிய அப்பு உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுள் ஒருவராக தோழர் பிவிஎஸ் விளங்கினார். அப்போது சென்னை தொழிலாளர்கள் மத்தியிலுள்ள செல்வாக்கை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியுடன் கொண்டுவர பெரும்பாடு பட்டார் தோழர் பிவிஎஸ். அப்போதைய கட்சி வழியான ‘கிராமங்களுக்கு செல்லுங்கள்’ அழைப்பை ஏற்று பிவிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கிராமங்களுக்கு சென்றதன் காரணமாக அது வெற்றி பெறவில்லை. அப்போதைய கட்சி வழிப்படி கிராமப்புறங்களில் கட்சி கட்டும் பணியில் ஈடுபட்டார். மக்களோடு அய்க்கியப்படவும் கட்சிக்கு தொடர்புகளை உருவாக்கவும் கடின வாழ்வின் உச்சங்களையெல்லாம் கடந்து வந்தார். தொழிலாளர்களோடு சேர்ந்து கிணறு வெட்டும் வேலை, அறுவடை செய்யும் வேலை, கல்லுடைக்கும் வேலைகளில் ஈடுபட்டார். அப்போதைய அழித்தொழிப்பு போராட்ட முறையை செயல்படுத்தப் பாடுபட்டார்.
1972ல் தோழர் சாருமஜ÷ம்தார் கொல்லப்பட்டதை அடுத்து கட்சி சிதறுண்டது. மலிந்து போன குழப்பங்கள், சச்சரவுகளுக்கு மத்தியில் துண்டிக்கப்பட்ட நிலை உருவானது. தமிழ்நாட்டில் அப்புவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். 1974ல் தோழர்கள் ஜாகர், வினோத் மிஸ்ரா, ஸ்வதேஷ் ஆகியோரை உள்ளடக்கி புனரமைக்கப்பட்ட மாலெ அமைப்பு அகில இந்திய அளவில் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்த முயன்று வந்தது. தமிழ்நாட்டிலும் பிவிஎஸ் உள்ளிட்ட தோழர்கள் அகில இந்திய மய்யம் ஒன்றை தேடிக் கொண்டிருந்தனர்.
இந்தக் காலகட்டத்தில் மனிதன் பத்திரிகை கொண்டு வரப்பட்டது. அது கலை இலக்கிய வட்டத்தில் படைப்பாளிகள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. கலை இலக்கிய துறையை கைப்பற்றி வைத்திருந்த திராவிட வகை போக்குக்கு பெரும் சவாலாக எழுந்தது. மக்கள் கவிஞர் இன்குலாப் போன்ற பல படைப்பாளிகள், எழுத்தாளர்களை தமிழுக்கு கொண்டு வந்தது. மனிதன் பத்திரிகையை கொண்டு வருவதில் தோழர்கள் பிவிஎஸ், கோவை ஈஸ்வரனது பங்கு முக்கியமானது.
இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். தோழர் பிவிஎஸ்ஸின் தங்கையும் புரட்சிகர பயணத்தில் தோழராகவும், தோழர் கோவை ஈஸ்வரனது வாழ்க்கைத் துணைவருமான, தோழர் ரத்னாவின் திருமணத்தின் முதல் நாள் மாலை திருமண மண்டபத்தில் கைது செய்யப்பட்டார் தோழர் பிவிஎஸ். அவரது தங்கையும் காவல்துறை அடக்குமுறையில் சொல்லொணா துயரத்தை அனுபவித்து நோயுற்று பின்னாளில் அதனாலேயே மரணமுற்றார். தோழர் பிவிஎஸ் அவசரகால நிலை முடியும் வரை 19 மாதங்கள் சிறையிலிருந்தார். அவருடன் தோழர்கள் ஏ.எம்.கோதண்டராமன், இப்போது அகில இந்திய மக்கள் மேடையின் தமிழக பொறுப்பாளர்களுள் ஒருவராக இருக்கும் ஆர்.வித்யாசாகர், ஸ்விச் கியர் பார்த்தசாரதி, இன்னும் பலர் சிறையிலிருந்தனர். விடுதலையான பிறகு கட்சி மய்யத்துடன் தொடர்பு ஏற்பட்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினராக, அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றார். கட்சியின் தென் மாநிலங்களின் பொறுப்பாளராக செயல்பட்டார். ஆந்திராவில் ஆரம்பகால தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். கட்சியின் மூன்றாவது காங்கிரசில் முதன்முதலாக விவசாயத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தோழர் பிவிஎஸ் அதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் விரிவான ஆய்வு படிப்புகளை மேற்கொண்டார். கட்சி மத்தியக் கமிட்டியின் கூட்டு முயற்சியோடு அதை எழுதி வெளியிட்டார். பொதுச் செயலாளருக்கு அடுத்ததாக இரண்டு செயலாளர்கள் என்ற முறை கட்சியில் சிறிது காலம் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு செயலாளராக, கிருஷ்ணன் என்ற பெயரில் பணியாற்றினார். கட்சியின் 4ஆவது காங்கிரசின் தலைமைக் குழு தலைவராக பணியாற்றியுள்ளார். கட்சியின் சர்வதேச துறையை கையாளும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிர்வகித்திருக்கிறார்.
கட்சியின் மாநிலத் தலைமையை நிறுவுவதில் பங்காற்றினார். சாதி, ஒடுக்குமுறைக்கெதிராக சிவகங்கை மாவட்ட அம்பலங்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் தோழர் சுப்பு போன்ற வீர இளைஞர்களை கண்டெடுத்து கம்யூனிஸ்ட் போராளியாக்குவதில் கவனம் செலுத்தினார். கட்சி வழியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப கட்சி வழியை அமலாக்குவதில் சிரத்தையுடன் பாடுபட்டார். தோழர் சி.ஏ.சேஷாத்திரி போன்ற மேட்டுக்குடி அறிவாளிப் பிரிவினரைக் கொண்டு மக்கள் முன்னணி போன்ற புதிய வளர்ச்சியைக் கொண்டு வருவதில் தலைமைப் பங்காற்றினார். எண்பதுகளில் கட்சிக்கு அறிமுகமான இளம்தலைமுறை தோழர்களை கட்சிக்குள் ஒன்றிணைக்க தனிக் கவனம் செலுத்தினார். சிறிது காலம் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார்.
அவர் கட்சியின் டெல்லி மத்திய அலுவலகத்தில் இருந்து பல ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்தியா முழுவதும் உள்ள கட்சி முன்னோடிகளுக்கும் தலைமைத் தோழர்களுக்கும் ஏராளமான உலக விவரங்கள், கட்டுரைகள், படைப்புகள், ஆய்வுகளைத் திரட்டித் தந்து வந்தார். மார்க்ஸ் லெபரட்டரி எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் அதை செய்து வந்தார். கம்ப்யூட்டர் யுகத்திலுள்ள புதிய தலைமுறைக்கு சவால் விடும் வகையில் இயங்கினார். முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த அதன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அதற்கு எதிராக பயன்படுத்த வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்த தோழர் பிவிஎஸ் அவ்வாறே செயல்பட்டார். மய்ய அலுவலகத்தில் அவர் இருந்தபோதும் அவருக்கு இந்தி மொழி கைகூடவில்லை. அவரது புன்சிரிப்பும் திக்குமுக்காடச் செய்யும் உபசரிப்புமே மொழியாக இருந்தது.
கேரளாவில் பிறந்திருந்தாலும் அவரது வாழ்வும் மொழியும் தமிழ்மொழி சார்ந்தது. தமிழ் இலக்கியம், வரலாறு, மரபு, தொன்மம் குறித்த ஆழ்ந்த தேடுதலையும் இடைவிடாத படிப்பையும் கொண்டிருந்தார். மக்களோடு தோழர்களோடு அய்க்கியப்படுவதற்காக எல்லாவித உச்சக்கட்ட சிரமங்களையும் விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.
ஆரம்பக் கல்வியைக் கூட முடிக்காத தோழர் பிவிஎஸ் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ படைப்புகளை ஆங்கிலத்திலேயே படித்திருக்கிறார். மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். படிப்பாளிகளும் வியக்கும் வண்ணம் உரையாடியிருக்கிறார். பல ஆய்வாளர்களுக்கு உதவியிருக்கிறார். தோழர்கள் இன்குலாப், எஸ்விஆர் போன்ற படைப்பாளிகள், மார்க்சிய ஆய்வாளர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். அவர்களும் இவர் மீது அதே அளவு மதிப்பு கொண்டவர்கள். கட்சி தாண்டி, மறைந்த வலம்புரிஜான், திமுக சுப்பு போன்றவர்களிடம் நட்பு கொண்டிருந்தார். சேர்ந்து பணியாற்றும் நுட்பமும் கொண்டிருந்தார். பன்முக ஆளுமையாக விளங்கினார்.
கட்சி வளர்ச்சியின் ஏற்றஇறக்கமும் தலைவர்களின் ஏற்றஇறக்கமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றன் மீது மற்றொன்று செல்வாக்கு செலுத்தக் கூடியவை. இந்த பின்னிப்பிணைந்த ஏற்றஇறக்கத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாதவை. ஆனால், அவரது எழுபது ஆண்டு கால வாழ்க்கை மக்களுக்கானது. புரட்சிக்கானது. கம்யூனிசத்துக்கானது. அவரது சிந்தனையும் வாழ்வும் எப்போதும் நெருப்பும் நேசமுமாய் ஜொலித்துக் கொண்டிருந்த கண்களும் கம்யூனிசத்தை விட்டு கம்யூனிச வாழ்க்கையை விட்டு விலகியதில்லை. மக்கள் நலன், புரட்சி நலன், வெற்றி பெறச் செய்யும் முனைப்பும் திடசித்தமும் கொண்ட மூடக் கிழவன் அவர்.
துரும்பனைய மரணத்தை மலையொத்த மரணமாக, தேசிய திருஉருவாக காட்ட முனைகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் மக்களுக்காக வாழ்தலே மரணத்தைக் கூட மகிழ்வானதாக்கும் என்ற கொள்கை கொண்ட பிவிஎஸ் போன்ற புரட்சியாளர்களும் நம்மிடையே வாழ்ந்துள்ளனர். அவர்களுடைய கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஒளியுள்ளதாக மாற்ற வேண்டும். அவரது இறப்புக்கு சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தபோது அங்கு கட்சி இன்னும் கொஞ்சம் வளரட்டும் என்று சொன்னார். அவர் ஒரு சர்வதேசியவாதியாக இருந்தபோதும் தமிழ்நாட்டு கட்சி வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.
அதற்கான வேர் அவரது வாழ்விலும் போராட்டத்திலும் இருக்கிறது. அவரது இளமைக் காலத்து அரசியல் களத்தில் உதித்த உருக்கொண்ட கம்யூனிஸ்ட் அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் இடையிலான உக்கிரமான போட்டி இன்னும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் அரசியலை கடந்து முன்வந்துவிட்ட திராவிட அரசியலை தோற்கடித்து பாஜக வகை அரசியலையும் தோற்கடிக்கிற ஆற்றலையும் திறனையும் வளர்த்துக் கொண்டு அய்க்கியப்பட்டு முன்னேற வேண்டும். அய்ம்பது ஆண்டுகால நக்சல்பாரி வரலாற்றில் அதன் வெற்றிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தனது அனைத்தையும் முழுமுற்றாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர் பிவிஎஸ்ஸின் முடிக்கப்படாத கனவை நனவாக்க நாம் நம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வோம். தோழர் பி.வி.சீனிவாசனுக்கு சிவப்பு வணக்கம்.
(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 16 - 31)

Search