COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, December 3, 2016

தோழர் பிடல் காஸ்ட்ரோ நீடுழி வாழ்க
கியூபப் புரட்சியின் தலைவரும் உலகெங்கும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் ஆதர்ச உருவுமான பிடல் காஸ்ட்ரோ ரஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இககமாலெ தனது கொடியை இறக்கிப் பறக்க விடுகிறது. ஒடுக்குமுறை பாடிஸ்டா ஆட்சியை தூக்கியெறிந்த, வெற்றிகரமான கியூபப் புரட்சிக்கு பிடல் காஸ்ட்ரோ தலைமை தாங்கினார். சின்னஞ்சிறிய புரட்சிகர கியூபாவை அழித்துவிட உறுதியாக இருந்த, அடுத்தடுத்த அய்க்கிய அமெரிக்க ஆட்சிகளின் பற்களில் இருந்து கியூபாவைப் பாதுகாத்தார். அய்க்கிய அமெரிக்க உளவு அமைப்பான சிஅய்ஏயின் 600க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகளை முறியடித்து, தனது 90ஆவது வயதில் மறைந்தார்.

ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் அய்க்கிய அமெரிக்கா, தன்னுடன் உடன்படாத அரசியல் கொண்ட உலக நாடுகளின் தலைவர்களை படுகொலை செய்யும் முயற்சிகள் மேற்கொண்டு வரும்போது, அய்க்கிய அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிடல் ஒரு கொடூரமான சர்வாதிகாரி என்று சொல்லியிருப்பது விந்தை முரணானது.
கொலைகார ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக பிடல் விடாப்பிடியாக உயிர் பிழைத்திருந்ததும் எதிர்ப்பு தெரிவித்ததும், கியூபாவின், அதன் மக்களின் புரட்சிகர திராணியையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது. ஏகாதிபத்தியத் தடைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அண்டை நாடான பெரியண்ணன் மனப்போக்கு கொண்ட அய்க்கிய அமெரிக்கா உள்ளிட்ட வளமான முதலாளித்துவ நாடுகளும் வெட்கப்படும் அளவுக்கு, அனைத்தும் தழுவிய மருத்துவம் மற்றும் கல்வி கட்டமைப்புகளை கியூபா உருவாக்கியிருக்கிறது. மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்காவுக்கும், பிற உலக நாடுகளுக்கும் இலவச மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தன்னிடம் இருக்கும் சொற்ப ஆதாரங்களையும் பயன்படுத்துகிறது. பிடல் தலைமையில் தனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தி காலனி எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் கியூபா ஆதரவு தெரிவித்தது; சர்வதேசியத்தை நடைமுறைப்படுத்தியது. பிடல் காஸ்ட்ரோவின் வாழ்வும் மரபும் கொண்டாட்டத்துக்கானது; துக்கம் அனுசரிப்பதற்கானதல்ல. அவர் மறைந்த பிறகும், அவரது மரபு புரட்சியாளர்களுக்கு, சோசலிஸ்டுகளுக்கு, உலகெங்கும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளுக்கு உத்வேகமூட்டும்.
பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக இகக மாலெயின் அனைத்து அலுவலகங்களிலும் செங்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.
பிரபாத் குமார் 
இகக மாலெ மத்திய கமிட்டிக்காக, 2016 நவம்பர் 25
(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 01 – 15)


Search