நாட்டு மக்களை துன்புறுத்தும் நரேந்திர மோடி தேசபக்தரா? தேசவிரோதியா?
மோடி ஆட்சியின் செயல்பாடுகள், நோக்கங்கள் பற்றி மக்கள் மத்தியில் கடுமையான கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ள பின்னணியில், மோடி ஆட்சி அனைத்து தளங்களிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் தோல்வி அடைந்து, துரோகமிழைத்து மக்கள் சீற்றத்தை எதிர்கொண்டிருக்கிற பின்னணியில், மக்கள் மீது எறியப்பட்ட வெடிகுண்டுதான் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு.
மக்கள் அனைவருக்கும் அவர்கள் இருத்தலையே கேள்விக்குறியாக்கிவிட்டால் பின்னர் அவர்கள் எந்தப் பிரச்சனையைப் பற்றி, என்ன கேள்வி எழுப்ப முடியும்? யாராவது ஒரு பிரிவினரை வஞ்சித்தால்தானே பிரச்சனை, அனைவரையும் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கலாம் என்று மோடி அரசு முடிவு செய்ததன் வெளிப்பாடே இந்தத் தாக்குதல்.
மக்கள் மீது போர் தொடுத்துவிட்டு, அவர்கள் அதை ஆதரிப்பதாக மோசடி நாடகம் நடத்துகிறார் மோடி. பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் சூட் போடும் மோடி மக்களிடம் மொக்கையாக 10 கேள்விகள் கேட்டு, அதற்கு உலகெங்கும் மெய்நிகர் தளத்தில் இருந்து 5 லட்சம் பேரிடம் அவர் விரும்பும் பதில்கள் பெற்று, 93% நாட்டு மக்கள், அரசு, அவர்கள் மீது தொடுத்துள்ள போருக்கு ஆதரவு தருவதாக பொய் சொல்கிறார்.
தனது அதிகாரம் கொண்டு, மக்களைத் திட்டமிட்டு துன்புறுத்துகிற மோடியிடம் கேட்க மக்களுக்கு பல கேள்விகள் உள்ளன. அவற்றில் சில கேள்விகள் இங்கு தரப்படுகின்றன.
- இந்தியாவின் பரப்பளவு, மக்கள் தொகை, நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்கள் வாழ்க்கை முறை, இந்திய மக்கள் எப்படி பிழைப்பு நடத்துகிறார்கள் என்பவை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
- நான்கு பேர் கொண்ட குடும்பம் சாதாரண உடுப்பி ஓட்டலுக்குப் போனாலே ரூ.400 காணாமல் போய்விடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
- இந்தியாவில் தனக்கே உரிய வாழ்க்கை முறை கொண்ட விவசாய சமூகம் இருக்கிறது, அதில் ஏழை, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
- நாட்டில் புழக்கத்தில் உள்ள கருப்புப் பணம் எவ்வளவு, அதில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் எத்தனை என்று எதாவது உங்களுக்குத் தெரியுமா?
- திடீரென்று கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் இருந்து அகற்றினால் என்ன பொருளாதார விளைவுகள் உருவாகும் என்று உங்களுக்குத் தெரியுமா? அகற்றுவதை மீண்டும் அந்த இடத்தில் வைக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று உங்களைச் சுற்றியிருக்கிற அல்லக்கைகள் யாரும் உங்களுக்கு அறிவு சொல்லவில்லையா?
- 500, 1000 ரூபாய் நோட்டுக்களை விட 2000 ரூபாய் நோட்டை எளிதாக பதுக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாதா?
- உங்கள் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதல்ல, ஒழிப்பதாகக் காட்டிக் கொள்வது மட்டுமே என்று சொன்னால் அது பொய்யாகுமா? சஹாரா, பிர்லா, பனாமா பேப்பர்களுக்கு என்ன பதில்?
- இருக்கிற வேலைகளை, கிடைக்காமல் கிடைத்த கேளிக்கை, ஓய்வு நேரத்தை எல்லாம் விட்டுவிட்டு, வங்கி, ஏடிஎம் வாசல்களில் வரிசைகளில் மக்கள் நிற்க நேர்ந்ததால் நாட்டில் ஏற்பட்ட மனித நாட்கள் இழப்பு என்ன?
- நாட்டு மக்கள் உணவுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த கொந்தளிப்பான நேரத்தில் ரூ.550 கோடி செலவில் மகளின் திருமணத்தை ஆடம்பரமான நடத்திய ஜனார்த்தன் ரெட்டியை கைது செய்வீர்களா? அவரது அலுவலகங்களில் நடக்கும் சோதனைகள் கண்துடைப்பு நாடகங்கள் என்று சொன்னால் தவறா?
- வரிசையில் நின்றதால், பணம் கிடைக்காததால், சொத்து விற்ற பணத்தை மாற்ற முடியாது என்ற அச்சத்தால், மருத்துவமனையில் பழைய நோட்டுக்களை வாங்காததால், இது போன்ற காரணங்களால் செத்தவர்களில் எத்தனை பேர் கருப்புப் பணம், கள்ளப் பணம் வைத்திருந்தார்கள்?
- மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் மல்கன்கரியிலும், தீவிரவாதத்தின் மீது போர் என்ற பெயரில் போபாலிலும் நடந்த மோதல் படுகொலைகளை மறைக்க ஒட்டுமொத்த மக்கள் மீதும் நடத்தப்படும் போர்தான் இந்த அறிவிப்பா?
- நாட்டு மக்களின் கலாச்சாரமாக இருக்கும் சிறுவர்த்தகத்தை முறைசாரா பொருளாதாரத்தை ஒழித்துக் கட்டி பெருநிறுவனங்கள் ஆதிக்கத்தை வளர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கமா?
- ரொக்கமற்ற பொருளாதாரம் நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் நியாயமாக கையில் வைத்துள்ள 15 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் அவர்கள் கைகளில் போய் சேராதா?
- 500, 1000 ரூபாய் தாளில் மட்டும்தான் கள்ளப்பணம் உள்ளதா? 100 ரூபாய் தாளில் கள்ளப் பணம் இல்லையா?
- கருப்புப் பொருளாதாரத்தை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
- எரிசக்தி உற்பத்திக்கு, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ரூ.3.82 லட்சம் கோடி நிதி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளன என்று, எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் சொல்கிறார். ஏற்கனவே திவாலாகிக் கிடக்கிற வங்கிகளில் மக்கள் பணத்தை கொண்டு போய் சேர்த்து, ஏற்கனவே ரூ.4 லட்சம் கோடி வரை கடன் நிலுவை வைத்திருக்கும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் அதைத் தருவதுதான் உங்கள் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலா?
- உங்கள் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, தீவிரவாதம் ஒழிப்பு என்றுதானே சொன்னீர்கள்? இப்போது ரொக்கமற்ற பொருளாதாரம், டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்களில் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றனவா?
- மின்னணு பரிவர்த்தனைக்கு மக்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்குச் செல்ல வேண்டும் என்பதை ஏற்கனவே சொôல்லாமல் சொல்லிவிட்டீர்கள். இப்போது மொபைல் பரிவர்த்தனை என்ற ஒன்றும் சொல்கிறீர்கள். வாட்ஸ்அப் போல எளிமையானதுதான், கற்றுக் கொள்ளுங்கள் என்கிறீர்கள். எந்த நிறுவனத்தின் அலைபேசியை வாங்க வேண்டும் என்று நீங்கள் இன்னும் சொல்லவில்லையே. சாம்சங்கா? ஆப்பிளா? அடுத்த விளம்பரம் யாருக்கு?
- உங்களைப் பிரதமராக்க பணம் செலவழித்த அம்பானிக்கும் அதானிக்கும் நீங்கள் காட்டும் விசுவாசத்தை அளக்க கருவி எதுவும் உள்ளதா?
- மக்களை திசைத் திருப்ப நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சி வெற்றி பெறுமா?
- நீங்கள் இந்தியாவின் ஹிட்லர் என்று சொல்வது தவறாக இருக்குமா?
- இந்த நடவடிக்கையை அறிவிக்கும் முன் யாருக்கெல்லாம் சிக்னல் கொடுத்தீர்கள்?
- அக்லக், ரோஹித், ஜேஎன்யு என எல்லா விசயங்களிலும் வலுவான எதிர்ப்பு எழுந்த பின்னர்தான் பேசினீர்கள். இப்போது நாட்டு மக்கள் அனைவரும் துன்பப்படும்போதும் நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறீர்கள். உங்களுக்கு வசனம் எழுதித் தருபவர்கள் அடிக்கடி விடுமுறையில் சென்றுவிடுகிறார்களா?
- குஜராத் படுகொலையை இந்துத்துவ வெறி கும்பல், காவல்துறை துணை கொண்டு நடத்தினீர்கள். இப்போது 70 பேர் உயிரிழந்துவிட்டனர். கும்பல் இல்லை. தடி இல்லை. கத்தி இல்லை. சூலம் இல்லை. தோட்டா இல்லை. வெறும் அறிவிப்பு. கொலைகார அறிவிப்பு. அந்தப் படுகொலையை நாய்க்குட்டி காரில் மாட்டிக் கொண்டது என்றீர்கள். இன்று மக்கள் சந்திக்கிற துன்பங்களுக்கு கருப்புப் பணத்தின் மேல் போர் என்று பெயர் சூட்டுகிறீர்கள். குற்றஉணர்வு சற்றும் இன்றி படுகொலைகளை வழிநடத்த எங்கு கற்றீர்கள்?
- வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட விஜய் மல்லையாவும் லலித் மோடியும் கருப்புப் பணமும் நாடு திரும்ப என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்?
- காஷ்மீர் மக்கள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள், பண மதிப்பகற்றும் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் கருப்புப் பண ஆதரவாளர்கள் என்றால், ராணுவ வீரர்களை, விவசாயிகளை, சாமான்ய மக்களை படுகொலை செய்வதுதான் தேசப் பற்றா? ஊழல் ஒழிப்பா? வளர்ச்சித் திட்டமா?
- உங்களுக்கு வாக்களித்ததைத் தவிர இந்திய மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களில் பல லட்சக்கணக்கானவர்களுக்கு இன்னும் மின்வசதி கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? முதலாளிகள், பணக்காரர்கள், மேல்சாதிக்காரர்கள் தவிர மற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று கருதுகிறீர்களா?
- நாட்டின் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வேலையின்றி வருமானமின்றி வாழ்க்கையின்றி ஏற்கனவே கடுமையான துன்பத்தில்தான் இருக்கிறார்கள். மக்கள் துன்பப்படும் நடவடிக்கைகளை எடுக்கவா உங்களுக்கு அதிகாரம் தரப்பட்டது? மக்களுக்கு தண்டனை தர நீங்கள் யார்? மக்களுக்குத் துன்பம் என்று தெரிந்தும் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறீர்கள் என்றால் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் நல் இதயம் கொண்டவரா நீங்கள்?
- நாட்டு மக்களை துன்புறுத்தும் நீங்கள் தேசபக்தரா? தேசவிரோதியா?
வாசகர்கள் தங்களுக்கு எழுகிற கேள்விகளையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 01 – 15)