COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, December 3, 2016

பொருளாதார சுனாமியில் சிக்கிக் கொண்ட விவசாய சமூகம்
பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் சொன்னதை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன் சிங் நீண்டகால நோக்கில்.... நாம் உயிருடன் இருக்க மாட்டோம்.. என்றார். இதையே, தனது துன்பம் பற்றி தனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த திருவாளர் பொது ஜனம், வருத்தத்தில் மூழ்கிய குரலில் இப்படிச் சொன்னார்: இப்படியே போனா மோடிதான் இருப்பாரு.... ஜனங்க இருக்க மாட்டாங்க... சென்னை நகரவாசி ஒருவருக்கு இந்தத் துன்பம் என்றால், கிராமப்புறங்களில் மக்கள் வாழ்க்கை எந்த அளவுக்கு தடம் புரண்டு போய் இருக்கும்?

மோடியின் பண மதிப்பகற்றும் நடவடிக்கையால் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணபரிவர்த்தனை முழுவதுமாக தடை செய்யப்பட்டுவிட்டது. கிராமப்புற வறிய மக்களின், ஏழை, நடுத்தர, சிறுகுறு விவசாயிகளின் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை என்று இதைச் சொல்ல முடியும்.
தமிழ்நாட்டில் காவிரி ஏமாற்றி, மழையும் வராமல் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிற நேரத்தில், அவர்கள் அவசரக் கடன் பெறும் குறைந்தபட்ச வாய்ப்பும் அடைக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 11 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நவம்பர் 7 வரை ரூ.2,075 கோடி அளவுக்கு மூன்றரை கோடி விவசாயிகளுக்கு கடன் தரப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் விவசாயிகள் விரோத கொள்கைகளால், போக்குகளால், நடவடிக்கைகளால் ஏற்கனவே பல்வேறு விதங்களிலும் கிராமப்புறப் பொருளாதாரம் முடக்கப்பட்டு கிடக்கும்போது, தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கியதால் விவசாயிகள் பெரும்சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி, இகக மாலெ புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி கந்தர்வகோட்டையில் உள்ள அந்த வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள், விவசாயிகள் சிலரிடம் பேசியபோது அவர்கள் சொன்ன விசயங்கள் இங்கு தரப்படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூர் தாலுகா, கன்னியாபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கீழ்நடுத்தர விவசாயி. 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். அவருக்குச் சொந்தமான ஆழ்துளைக் குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் குறைந்து விட்டது. தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்கிறார்.
2016 ஏப்ரலில் கீரனூர் வங்கியில் ரூ.6.10 லட்சம் ட்ராக்டர் கடன் வாங்கியிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தவணை செலுத்த வேண்டும். முதல் தவணை செலுத்திவிட்டார். இரண்டாவது தவணை செலுத்த இன்னும் அவகாசம் உள்ளது. செலுத்தவும் பணம் புரட்டிக் கொண்டிருக்கிறார்.  அவர் வீட்டில் இல்லாத போது, முன்னறிவிப்பு எதுவும் இன்றி, திடீரென ஓர் அதிகாரி 10 குண்டர்களுடன் வந்து ட்ராக்டரை பறிமுதல் செய்ய முயற்சி செய்துள்ளார்.
ரூ.7,200 கோடியை தள்ளுபடி செய்கிற அரசாங்கம், சில பத்தாயிரங்கள் கடனுக்காக விவசாயிகளைத் துன்புறுத்துகிறது. மறுபுறம் கடன் திரும்பச் செலுத்த வரும் விவசாயிகளை வாங்க முடியாது என்று சொல்லி துன்புறுத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அக்கம்பக்கமாக இரண்டு பிரச்சனைகளையும் விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள்.
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் 14 கூட்டுறவு கடன் வங்கிகள் உள்ளன. ஒவ்வொரு வங்கியிலும் மாதம் ரூ.50 லட்சம் வரை கொடுக் கல் வாங்கல் இருக்கும். மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் இந்த ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகா ரிகள் வந்து தொடக்க விவசாய கூட்டுறவு கடன் நிறுவனங்களில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை நவம்பர் 9 அன்றே எடுத்துச் சென்றுவிட்டார்கள். விவசாயிகளிடம் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று சொன்னவர்கள் கிளையில் இருந்து எடுத்துச் சென்ற நோட்டுக்களுக்கு ஈடான புதிய நோட்டுக்கள் தரவில்லை.
விவசாயிகள் இந்த வங்கிகளில் உள்ள தங்கள் கணக்குகளில் பழைய தாள்களை செலுத்த முடியாது. விவசாயிகளிடம் பழைய தாள்கள் மட்டுமே இருப்பதால், அவற்றை மாற்ற முடியாததால், விவசாயிகள் தங்கள் கடன்களையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
200 என்ற மிகச் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் பணக்கார விவசாயிகள் தவிர 2000 முதல் 4000 வரை மிகப்பெரும் எண்ணிக்கை யில் ஏழை, நடுத்தர, சிறுகுறு விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த கூட்டுறவு கடன் நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு விவசாயிகள் கடன் பெறுகிறார்கள்.
சிறு தொழில் கடன், ஆடு, மாடு வாங்கக் கடன் ஆகியவற்றைத் தர முடியவில்லை. வங்கிகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. உரம், இடுபொருட்கள், பயிர்க்கடன் என எதுவும் தர முடியவில்லை என்று கிளைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் சொல்கின்றனர்.
இந்த கூட்டுறவு நிறுவனங்களில் நகை அடகு வைத்தால் விவசாயிகளுக்கு 7% வட்டி என குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது. இந்தக் கடனை 7 மாதங்களில் முழுவதுமாக திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் இந்தச் சலுகையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்போது, 6 மாதங்கள் கடனைச் செலுத்திவிட்டு இந்த மாதம் மீதியை செலுத்தி விடலாம் என பழைய நோட்டுக்களுடன் வந்தவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அவர்கள் கடனை 7 மாதங்களில் அடைக்க முடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டித் தள்ளுபடி கிடைக்காமல் மொத்த கடன் தொகைக்கும், முதல் ஆறு தவணைகள் முறையாக கடனைக் கட்டி, அரசின் கொள்கையால் கடைசி தவணை மட்டுமே கட்ட முடியாததால் அவர்கள் 7% வட்டி கட்ட நேரும்.
தமிழ்நாடு முழுவதும், நாடு முழுவதும் விவசாயிகள் இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்தத் துன்பங்கள் மத்திய அரசால் ஏற்பட்டவை; மாநில அரசின் நடவடிக்கையால் துன்பம் இல்லாவிட்டால் எப்படி? ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியான கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி, வேண்டியவர்களுக்கு மட்டுமே செய்யப்படுவதாக, தள்ளுபடி பெற தகுதி பெற்ற விவசாயிகளிடம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தமிழக முதலமைச்சர் பொறுப்புக்களை கவனித்துக் கொள்ளும் பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிடக் கூட தயாராக இல்லை. அஇஅ திமுக அமைச்சர்களும் அவர்களுக்கு வேண்டிய அதிகாரிகளும் கூட உண்மையில் இந்த நேரத்தில், இந்த சுனாமியில் பெரிதும் ‘பாதிக்கப்பட்டிருப்பார்கள்’. அந்த ‘பாதிப்பில்’ இருந்து மீள்வது பற்றியே அவர்கள் சிந்தனையும் செயல்பாடும் இருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த இக்கட்டான நேரத்தில் விவசாயியாவது? தொழிலாளியாவது? மக்களாவது?

(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 01 – 15)

Search