போபால் - மல்கன்கிரி – மலப்புரம்: தொடரும் மோதல் படுகொலைகள்
எஸ்.குமாரசாமி
பாகிஸ்தானுக்கு எதிராக, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக, வெற்றிகரமான ‘துல்லியத் தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதாக, நரேந்திர மோடி, (56 இன்ச்) மார் தட்டிக் கொண்டார்.
மோடியின் ஆட்சி எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து மக்கள் சீற்றத்துக்கு ஆளாகத் துவங்கியதில் இருந்தே, சங்பரிவார் கூட்டங்கள், தேசம் தேசியம் தேசபக்தி எனக் கூப்பாடு போடத் துவங்கின. பாஜக அரசு தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்றது. எதிர்ப்பு எழும் போதெல்லாம், எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களை நினைத்துப் பார்க்க மாட்டீர்களா எனக் கேட்டது. இராணுவத்தை அரசியல்படுத்தும், அரசியலை இராணுவமயப்படுத்தும் விபரீத ஆட்டத்தை ஆடத் துவங்கியது.
‘துல்லியத் தாக்குதலை’ அரசியல் ஆக்காதீர்கள் என ஒரு புறம் மோடி பேசியபோதே, சங்பரிவார், ஆர்எஸ்எஸ் வளர்ப்பால் வழிகாட்டுதலால்தான், பாஜக அரசாங்கம் துணிச்சலுடன் தாக்கியது என உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எல்லா வாக்குச் சாவடி மட்டத்திலும் பிரச்சாரம் செய்யச் சொன்னது.
அந்த நேரத்தில்தான், சங் பரிவார் கும்பல், உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சரையும் பிரதமரையும் புகழ்ந்து விளம்பரப்படுத்திய பதாகைகளில், ‘உங்களைக் கொல்வோம், உங்களை நிச்சயம் கொல்வோம். எங்களுக்கு வசதிப்படும் நேரம், எங்கள் தோட்டாக்களால் எங்கள் துப்பாக்கிகளால், உங்கள் இடத்தில், உங்களைக் கொல்வோம்’ என எழுதினார்கள். ‘உங்களை’ ‘உங்கள் இடத்தில்’ என அவர்கள் குறிப்பிட்டது, பாகிஸ்தான் படையினûரை, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளை மட்டுமில்லை. அது, இசுலாமியர்களுக்கு, குஜராத் உனாவில் தாக்கப்பட்ட தலித்துகளுக்கு, மோடி ஆட்சியை எதிர்த்து பல வடிவங்களில் போராடுபவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பது போபால், மல்கன்கிரி மோதல் படுகொலைகளால், ஜார்கண்டிலும் சட்டீஸ்கரிலும் நிகழும் ஜனநாயகப் படுகொலைகளால், உறுதி செய்யப்பட்டது.
இதே காலகட்டத்தில்தான், கருப்புப் பணத்திற்கெதிரான ‘துல்லியத் தாக்குதல்’ என்று சொல்லி, நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் மீது குண்டு வீசினார், மோடி. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற கொலைகார அறிவிப்பு, 70க்கும் மேற்பட்டவர்களை சாகடித்துவிட்டது. கார்பட் பாம்பிங் என வியட்நாம் மீது அங்குலம் அங்குலமாய் அய்க்கிய அமெரிக்கா குண்டு வீசியது போல், இப்போது இந்திய மக்கள்மீது ஒரு பொருளாதார அவசர நிலையை மோடி திணித்துள்ளார், மக்கள் சகஜ வாழ்க்கை மீது ஒரு போர் தொடுத்துள்ளார். போபாலில், மல்கன்கிரியில் மோடி கூட்டத்தினர், ‘துல்லியத் தாக்குதல்கள்’தான் நடத்தினர். சிறையில் நடத்தினார்கள். வனப்பகுதிகளில் நடத்தினார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக்கப்படுகிறது. நாடு ஒரு ‘போலீஸ் ராஜ்ஜியம்’ ஆக மாற்றப்படுகிறது.
சாத்தான் ஓதிய வேதம்
நரவேட்டை நரேந்திரமோடி, நவம்பர் 2 அன்று, டெல்லியில் ராம்நாத் கோயங்கா இதழியல் விருதுகள் வழங்கும் விழாவில் பேசினார்: “ஒவ்வொரு தலைமுறையும், அவசர நிலைக் காலம் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்; அதன் மூலம் அந்தப் பாவத்தை எந்த வருங்காலத் தலைவரும் நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது”. சிந்தையில் கள் விரும்பி சிவசிவ என்றிருப்பார் என நடிப்பு சுதேசிகள் பற்றி பாரதி சொன்னதை இன்றைய மோடி நினைவுபடுத்துகிறார்.
குஜராத்தில் நேற்று நடந்தது இன்று பல மாநிலங்களிலும் நடக்கிறது
பெரும்தொழில் குழும விசுவாசம், மதவாதம் என்பவற்றோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் ஆசியுடன் நடந்த மோதல் படுகொலைகளுக்கும் குஜராத்தே முன்மாதிரியாக இருந்தது. ஹிந்து ஹிருதய் சாம்ராட் அதாவது, இந்துக்களின் இதயங் கவர்ந்த பேரரசர் என்று பட்டம் சூட்டிக் கொள்ள, குஜராத் இசுலாமியப் படுகொலைகள் மட்டும் மோடிக்குப் போதவில்லை. பாகிஸ்தானில் இருந்து தம்மைக் கொல்ல பயங்கரவாதிகள் ஏவிவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தம்முடைய மற்றும் அமித் ஷா தலைமையில் வேட்டையாடப்படுவார்கள் என்றும், திரும்பத் திரும்ப குஜராத் மக்கள் காதுகளில் ஓதினார். 2002லிருந்து 2006 வரை 22 போலி மோதல் கொலைகள் குஜராத்தில் நிகழ்ந்தன. சமீர்கான் பதான், சாதிக் ஜமால், இஷ்ரத் ஜஹான், சோரபுதின் ஷேக், துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி மோதல் படுகொலைகள், மோடிக்கும் அவர் பக்தர்களுக்கும் காலைச் சுற்றிய பாம்பாக மாறின. அமித் ஷா சிறை சென்றார்.
சர்ச்சைக்குரிய 5 மோதல் படுகொலைகளில் மாநிலத்தின் உயர்காவல் அதிகாரிகளில் ஒருவரான வன்சாரா சம்பந்தப்பட்டிருந்தார். சோரபுதின் ஷேக்குடன், அவர் மனைவி கவுசர் பீயும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 32 காவல் துறையினர், 6 அய்பிஎஸ் அதிகாரிகள் வழக்குகளில் சிக்கினர். 2009ல் வந்த நீதிபதி எஸ்.பி.டமாங் அறிக்கை, அகமதாபாதில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான், சீஷன் ஜோஹர், ஜாவெத் ஷேக், அம்ஜத் அலி ராணா ஆகியோர் காவல்துறை உயரதிகாரிகளால் நேரடியாகக் கொல்லப்பட்டவர்கள் எனச் சொன்னது. அவர்கள் மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்ற பொய் அம்பலமானது. 2007ல் வன்சாரா கைதான பிறகுதான், குஜராத்தில் ‘போலி மோதல்கள்’ நின்றன.
காங்கிரஸ் அரசுக்கு முதுகெலும்பு இல்லாததால், மோடி சிறை செல்லாமல் தப்பினார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், பகிரங்கமாக, படுகொலைகளை நியாயப்படுத்தி மக்களிடம் இந்து மதவெறி நஞ்சைப் பரப்பினார் மோடி. பிரதமரான பிறகு, வழக்குகள் எல்லாம் திசை மாறின. அப்போது தேடப்பட்ட, பிறகு சிறை சென்ற காவல் உயரதிகாரி பாண்டே, இன்று குஜராத் மாநிலத்தின் காவல் தலைவராக (பொறுப்பில்) உள்ளார். வன்சாரா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, குஜராத்தில் தங்க முடியாமல் மகாராஷ்ட்ராவில் தங்க நேர்ந்தது. அவர் நிபந்தனைகள் தளர்ந்து குஜராத் திரும்பியபோது, இந்துத்துவா வீரருக்கான வரவேற்பு அவருக்கு தரப்பட்டது. தொடர் கொலையாளி என அறியப்பட்ட அந்த உயர் காவல் அதிகாரி, அடுத்து தேர்தலில் போட்டியிடத் தயாராகியுள்ளார். சட்டவிரோதமாக, நீதிபரிபாலன முறைகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் படுகொலைகளை, ஆளும் வர்க்கங்களும் அவர்களது அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நியாயப்படுத்துகின்றன. கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள், தேசவிரோத பயங்கரவாதிகள், அவர்கள் படையினரைக் கொன்றவர்கள், கொல்லப் பார்த்தவர்கள், ஆகவே, அவர்கள் சாவைப் பற்றி கேள்வி கேட்பது தேச விரோதம், சமூகவிரோதம் என இடைவிடாமல் பிரச்சாரம் செய்கின்றனர். அது மக்கள் மீது தாக்கம் செலுத்தவும் செய்கிறது. மோதல் படுகொலை ‘ஸ்பெஷலிஸ்டுகளாக’ ஜனரஞ்சக திரைப்பட நாயகர்கள் போட்டி போட்டு நடிப்பதும் அந்தப் படங்கள், வர்த்தகரீதியாக வெற்றி பெறுவதும் காணத் தக்கவையே. இந்தப் பின்னணியில், குஜராத் வழியில், போபால், மல்கன்கிரி, மலப்புரம் ‘போலி மோதல் படுகொலைகள்’ நடந்தன என்று சொல்ல முடியும்தானே?
போலி மோதல் படுகொலைகளும் நீதிமன்ற வழிகாட்டுதல்களும்
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஆந்திராவில், தமிழ்நாட்டில், கம்யூனிஸ்டுகள் பொய்யான காரணங்கள் அடிப்படையில் கொல்லப்பட்டார்கள். நக்சல்பாரி இயக்கத்தினர் இந்தியாவெங்கும் ‘போலி மோதல் படுகொலைகளுக்கு’ உள்ளாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் தோழர்கள் அப்பு, பாலன், சீராளன், மச்சக்காளை போன்ற தோழர்கள் கொல்லப்பட்டனர். மேற்குவங்கமும் ஆந்திராவும், போலி மோதல் படுகொலைகளால் அவப்புகழ் பெற்ற மாநிலங்கள். பாப்ரி மசூதி இடிப்பு மற்றும் நியுயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா எங்கும் இசுலாமியர்கள் போலி மோதல்களில் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. காஷ்மீரில் வடகிழக்கு மாநிலங்களில் ‘போலி மோதல் படுகொலை’ சகஜமான ஒரு நிகழ்வு.
இப்படிப்பட்ட நாட்டில், ஆந்திர உயர்நீதிமன்றம் மனித உரிமைகளுக்குக் சாதகமாக 2009ல் ஒரு தீர்ப்பு வழங்கியது. “ஒருவரைக் கொல்ல ஒருவர் துப்பாக்கி எடுத்துச் செல்லும்போது பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்க்கு தற்காப்பு உரிமை உண்டு; துப்பாக்கியுடன் செல்பவர்க்கு, அந்த தற்காப்பு உரிமையைப் பறிக்கும் விதம் கொல்வதற்கு உரிமை கிடையாது”. “தமது பணிகளைச் செய்யும் போதோ அல்லது தற்காப்புக்காகவோ, ஒரு காவல் அதிகாரி ஒருவரின் மரணத்திற்குக் காரணமாகிறார் என்றால், அந்தச் சூழல் பற்றி முதல் தகவல் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை ஆவணப்படுத்தப்பட வேண்டும்”. இந்தத் தீர்ப்புக்கு, ஆந்திர காவல்துறை அதிகாரிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது.
2014ல் தலைமை நீதிபதி லோதாவும் நீதிபதி ராபின்டன் ஃபாலி நாரிமனும் ‘மோதல் படுகொலைகள்’ தொடர்பாக 16 வழிகாட்டு தல்கள் தந்தார்கள்.
- ஆயுதம் பயன்படுத்தப்படும் மோதலில் உயிரிழப்பு நிகழந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 157ன்படி முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்திற்கு உடனே அனுப்ப வேண்டும்.
- மோதல் நடத்திய காவல் குழுவை விட உயர்பதவியில் உள்ள காவல் அதிகாரியின் மேற்பார்வையில் மோதல் பற்றிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- மோதலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு வெகுமதிகள், முறை தாண்டிய பதவி உயர்வுகள் வழங்கக் கூடாது.
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் 1,528 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் 08.07.2016 அன்று பின்வருமாறு தெரிவித்தனர்: ‘இந்த மோதல்கள் தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையும் இல்லை. ஒரு குற்றவியல் வழக்கும் இல்லை. அநீதி இழைக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு கோருவதோடு, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும் கோர முடியும். நீதி விசாரணை, தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை அல்லது 1982 விசாரணை கமிஷன் சட்டப்படியான விசாரணை அவசியம் இருக்க வேண்டும்’. பொதுவாக அரச வன்முறை நிகழும் போது, அநீதி இழைக்கப்பட்டவர் தரப்பில் அமைதி திரும்ப, உண்மை கண்டறியப்பட்டு, நியாயம் வழங்கப்பட வேண்டும். நடைமுறையில் இந்தத் தீர்ப்புக்கள் அமலாவதில்லை. உட னடியான, நியாயமான விசாரணை நடப்பதில்லை: குற்றச்சாட்டுக்கு ஆளான காவல்துறையினர் மீது குற்றவியல் வழக்கு போடப்படுவதில்லை; நீதித்துறையில் இழுத்தடிப்பு நடக்கிறது; காவல்துறையும் துணைராணுவமும் சட்டப்படி பொறுப்பேற்காமல், தமக்கு தாமே சட்டமாகின்றன; குடிமை சமூகத்தின் அலட்சியம், மோதல் படுகொலைக்கு துணையாய் நிற்பதாக அமைகிறது; இது போன்ற காரணங்களால்தான் போலி மோதல் படுகொலைகள் நீடிக்கின்றன.
போபாலில் நடந்தது என்ன?
இந்தியாவில் இசுலாமிய இளைஞர்களைக் கொல்ல, அவர்கள் ஸ்டூடன்ட்ஸ் இசுலாமிக் மூவ்மென்ட் ஆஃப் இந்தியாவை (சிமி), (இந்திய இசுலாமிய மாணவர் இயக்கம்) சேர்ந்த பயங்கரவாதிகள் என அவர்களுக்கு முத்திரை குத்தினால் போதும். சமீபத்தில், தெலுங்கானாவில், சிமி இயக்கத்தினர் என முத்திரை குத்தப்பட்டு, காவலில் இருந்த இசுலாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மத்தியபிரதேச தலைநகர் போபாலில், சர்வதேச தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (அய்எஸ்ஓ) சான்று பெற்ற உயர் பாதுகாப்பு சிறைச்சாலை உள்ளது. அங்கே சிமி இயக்க பயங்கவரவாதிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு, இசுலாமிய இளைஞர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அங்கே காவல் கோபுரங்கள் இருந்தன. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. 31.10.2016 அன்று அதிகாலை 3 மணிக்கு சிமி பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தப்பட்ட 8 பேர், 8 அடி உயரத்திலான இரண்டு சுவர்களைத் தாண்டி, 26 அடி உள்ள ஒரு சுவரைத் தாண்டி சிறையில் இருந்து தப்பித்ததாக செய்தி சொல்லப்பட்டது. அவர் கள் தப்பிக்கும் போது, ராமா சங்கர் யாதவ் என்ற சிறைக் காவலர் கழுத்தை அறுத்துக் கொன்றனர் என்றும் இன்னொரு காவலரைப் பூட்டி வைத்தனர் என்றும் சொல்லப்பட்டது. பிளாஸ்டிக் ஸ்பூன், டூத் பிரஷ் கொண்டு சாவி தயாரித்ததாகச் சொல்லப்பட்டது! அன்று கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை என்றும், காவல் கோபுர கண்காணிப்பை மீறித் தப்பிவிட்டனர் என்றும் சொல்லப்பட்டது!
டஜன் கணக்கானவர்களைச் சாகடித்த வியாபம் ஊழலில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த, மத்தியபிரதேச மாநில பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு, இந்துத்துவா வெறியை உசுப்பிவிட úவ்ண்டிய அவசியம் இருந்தது. சிறையில் இருந்து தப்பிய எட்டு பேரும் இந்தியா முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்ற கதை பரப்பப்பட்டது. எட்டு பேரும், சிறையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு சிறிய குன்றின் மேல் பகல் 11 மணிக்கு காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெனரல், அவர் களிடம் துப்பாக்கிகள் இருந்தன என்றும், பயங்கரவாத எதிர்ப்பு குழு அவர்களிடம் துப்பாக்கி ஏதும் இல்லை என்றும் சொன்னார்கள்! உள்ளூர் மக்கள் எனப் பேசியவர்கள், எட்டு பேரும் காவல்துறை மேல் கல் எறிந்ததாகச் சொன்னார்கள்! இறந்தவர்கள் புது துணிகளும் புது காலணிகளும் அணிந்து இருந்தனராம்! சம்பவம் தொடர்பான ஆடியோ பதிவுகள், வீடியோ பதிவுகள், அந்தக் கொலைகள் போலி மோதல் படுகொலை எனப் புலப்படுத்தின.
8 மணி நேரம், (3 முதல் 11 மணி வரை) ஏன் எட்டு பேரும் தனித்தனியாகப் போகாமல் சேர்ந்தே, அதுவும் நடந்தே போனார்கள்? புது துணி, புது காலணி ஏற்பாடு செய்தவர்கள், துப்பாக்கி, வண்டிகள் ஏற்பாடு செய்து கொள்ள முடியவில்லையா? விடாப்பிடியான சங் பரிவார் ஆதரவாளர்கள் தவிர, வன்மையான அரசுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தவிர, நாடெங்கும் மக்கள் இந்த இசுலாமிய இளைஞர்கள் படுகொலை கண்டு அதிர்ந்து போயினர். அவர்களது வழக்கறிஞர் பர்வேஸ் ஆலம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் சிமி இயக்கத்தவர் என்று சொல்லி போடப்பட்ட 111 வழக்குகளில் 91 வழக்குகளில், வழக்கு தள்ளுபடியானது அல்லது அரசாங்கமே வழக்கை கைவிட்டது என்றும், இந்த எட்டு பேரும் விரைவில் வெளியே வர வாய்ப்பு இருந்ததால்தான், எட்டு பேரும் ஒரே வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்றும் குற்றம் சுமத்தினார்.
பாராட்டுக் கூட்டம் நடத்தி, படுகொலை செய்தவர்களுக்கு, ஆளுக்கு ரூ.2 லட்சம், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு ஆளுக்கு ரூ.1 லட்சம், சம்பந்தப்பட்ட உள்ளூர் வாசிகளுக்கு ரூ.40 லட்சம் வெகுமதி என அறிவித்த மத்தியபிரதேச அரசு, வெடித்து எழுந்த எதிர்ப்பால் பின்வாங்கி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊடகத் துறையினர் சிலர் துரிதமாகப் பழிக்குப் பழி வாங்கி விட்டோம் என கேவலமான முறையில் குதூகலம் அடைந்தனர். பிரதமர் அலுவலக துணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், சிமி இயக்கத்தவரை காவல் துறையினர் கொன்றது நாட்டிற்கே நம்பிக்கை அளிப்பதாகச் சொன்னார். மத்திய உள்துறை துணை அமைச்சர் கிரென் ரிஜ்ஜ÷ காவல் துறையினரைக் கேள்வி கேட்கக் கூடாது என உபதேசம் செய்தார். இந்துத்துவா அரசாங்கம் தன் அரசியல் ஆதாயத்திற்காக, இசுலாமிய இளைஞர்களைக் கொன்றது பளிச்செனப் புலப்பட்டது.
இந்திய மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 14.2% பேர். (2011 மக்கள் தொகைக் கணக்கு). நாடு முழுவதும், காவல் சிறைவாசிகளில் 20.9% இசுலாமியர்கள். தண்டனை பெற்ற சிறைவாசிகளில் 15.8% பேர் இசுலாமியர்கள். தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 6% உள்ள இசுலாமியர்கள், விசாரணை சிறைவாசிகளில் 16% தண்டனை சிறைவாசிகளில் 17% உள்ளனர். மத்தியபிரதேச மக்கள் தொகையில் 7% உள்ள இசுலாமியர்கள் காவல் சிறைவாசிகளில் 13% தண்டனை சிறைவாசிகளில் 10% உள்ளனர். மகாராஷ்டிரா மக்கள் தொகையில் 11.5% உள்ள இசுலாமியர்கள், காவல் சிறைவாசிகளில் 30%, தண்டனை சிறைவாசிகளில் 20% உள்ளனர். இந்திய சமூகம், அரசியல், அரசு நிறுவனங்கள் தம் இயல்பிலேயே இசுலாமியர்களுக்கு எதிரானவை. இந்த நிலையில் மத்தியில் இந்துத்துவா மதவெறி அரசாங்கம் ஆளும் போது, போபாலில் நடந்த படுகொலை இந்தியாவில் இசுலாமியருக்கு பாதுகாப்பில்லை என பிரகடனம் செய்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படியான ஆட்சிக்குப் பதிலாக இந்துத்துவா ஆட்சி இருப்பதை புலப்படுத்துகிறது.
மல்கன்கிரி படுகொலை
அரசு தரும் விவரங்கள்படி, படையினருக்கும் இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் 2013ல் 218 மோதல்கள் நடந்தன; படையினர் 22 பேரும், இடதுசாரி தீவிரவாதிகள் 99 பேரும் இறந்தனர். 2014ல் 221 மோதல்கள் நடந்தன; படையினர் 7 பேரும் இடது தீவிரவாதிகள் 60 பேரும் இறந்தனர். 2015ல் 247 மோதல்கள் நடந்தன; படையினர் 25 பேரும் இடது தீவிரவாதிகள் 89 பேரும் இறந்தனர். 2016ல் 75 மோதல்கள் நடந்தன; படையினர் எவரும் இறக்கவில்லை. இடது தீவிரவாதிகள் 50 பேர் இறந்தனர்.
2016ல் எந்த உயிர் இழப்புக்கும் ஆளாகாத படையினர், பெரும் எண்ணிக்கையில், ஆந்திர ஒடிஷா எல்லையில் உள்ள மல்கன்கிரியில் அக்டோபர் 24 அன்று மாவோயிஸ்ட்களைச் சூழ்ந்து கொண்டனர். சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டனர். 39 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் சாதாரண பழங்குடியினர் கணிசமானவர்கள். சாம்பல் நிற வேட்டை நாய்கள் (கிரே ஹவுண்ட்ஸ்) படையினர் தரப்பில் ஒருவருக்கும் காயம் கூடப் படவில்லை! அக்டோபர் 24ல் ஒரு மோதல், 25ல் 4 மோதல்கள், 27ல் 2 மோதல்கள் என காவல்துறை திசை திருப்புகிறது. படையினர், கையில் எந்த ஆயுதமும் இல்லாதவர்களை, ‘போலி மோதல் படுகொலையில்’ போட்டுத் தள்ளியுள்ளனர். இயற்கை வளங்களை, கனிம வளங்களை, பழங்குடியினர் வனங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாட, எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகவே அரசுகள் மாவோயிஸ்டுகளை திட்டமிட்டு அழித்தொழிக்கின்றன. அதனால்தான், மல்கன்கரி படுகொலையும் நடந்தது.
மலப்புரம் படுகொலை
கேரளாவில், நவம்பர் 23 இரவு மாவோயிஸ்ட் கட்சியின் தோழர் குப்பு தேவராஜ÷ம் தோழர் அஜிதாவும், நிலம்பூர் காடுகளில் கேரள அதிரடிப் படையினரால் (தண்டர் போல்ட்) கொல்லப்பட்டனர். ஒரு சிறிய கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவர்களை, பெரும்படையினர் நவீன ஆயுதங்களுடன் சூழ்ந்துகொண்டு கொன்றனர். தோழர் தேவராஜ் உயர்இரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் உள்ளவர் என்றும், அவர் நடப்பதற்கு ஊன்றுகோல் தேவை என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு தோழர்கள் உடல்களிலும் ஏராளமான குண்டுகள். ஆனால் காவல்துறையினரில் எவருக்கும் எந்த காயமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 2016 நெடுக நாடெங்கும் படையினர் எவரும் இறக்கவில்லை. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் மாவோயிஸ்ட் நடமாட்டம் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில், தோழர்கள் குப்பு தேவராஜ் அஜிதா போலி மோதல் படுகொலை எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல; கொடூரமானது.
கேரள இடது முன்னணி அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய கூட்டாளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தோழர் கர்ணம் ராஜேந்திரன் இந்தப் படுகொலை பற்றிச் சொன்னது கவனிக்கத்தக்கது: ‘பழங்குடியினர் தலித்துகள் நலன் காக்கப் பலரும் பாடுபடுகின்றனர். அவர்களது முழக்கங்களைக் காது கொடுத்து கேட்கும் நேரம் வந்து விட்டது. ஒரு நாகரிக சமூகம், இந்தக் குரல்களைக் கேட்டு உணர வேண்டுமே தவிர, இந்தக் குரல்களை நசுக்கக்கூடாது. தங்கள் கருத்துக்களைச் சொல்பவர்களைச் சொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. வடஇந்திய நிலைமைகளிலிருந்து கேரள நிலைமை மாறுபட்டது. கேரள சூழலில், மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில், இத்தகைய மிருகத்தனம் ஏற்புடையதல்ல. மக்கள், நரேந்திர மோடியைப் பின்பற்ற இடது முன்னணியைத் தேர்ந்தெடுக்கவில்லை’. கர்ணம் ராஜேந்திரன் சொல்வது சரிதான். தோழர் அச்சுதானந்தனும் இந்தப் படுகொலையை கண்டித்துள்ளார். நரேந்திர மோடியைப் பின்பற்ற வேண்டாம் என நினைக்கும் கேரளாவும், ‘போலி மோதல் படுகொலையில்’ நரேந்திர மோடியைப் பின்பற்றுவதுதான் நாட்டுக்கு நேர்ந்துள்ள பேராபத்து.
கொலைகாரர்களின் சட்டைக்கை ஓரத்தில்
கரை ஏதும் இல்லை
இரத்தத்தின் அறிகுறி இல்லை,
சிவப்பின் சுவடு ஏதும் இல்லை
கத்தி நுனியிலும் இல்லை.
வாள் முனையிலும் இல்லை
என ‘காணாமல் போன இரத்தத்தைத் தேடி’ என்ற கவிதையில், ஃபயஸ் அகமது ஃபயஸ், எழுதியுள்ளார். நெஞ்சை உலுக்கும் இந்தக் கவிதை வரிகளுக்குப் பின்னால், காலகாலமாக ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றுரீதியான வலியும் வேதனையும் இருக்கின்றன.
‘போலி மோதல் படுகொலைகள்’, சுவடே இல்லாமல் மறைந்துபோக அனுமதிக்கக் கூடாது. மக்கள் மத்தியில், ஜனநாயக விழுமியங்கள், மாண்புகள் பற்றிய விரிவான, ஆழமான கருத்துரீதியான பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும். ராணுவத்தினர், துணைராணுவத்தினர், காவல்துறையினர் மரணங்களும் வருந்தத் தக்கவைதான். அவர்கள் பொதுவாக, சாமான்யர் வீட்டுப் பிள்ளைகளே. ஆனபோதும், அவர்கள், மக்கள் மீது அநியாயமாக தாக்குதலில் ஈடுபடும்போது, அவர்கள் தேசத்திற்காகவோ, தேச மக்களுக்காகவோ, படுகொலைகள் செய்வதில்லை; சித்திரவதை செய்வதில்லை; பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை. Not in our name, எங்கள் பெயரால் இவை நடப்பதில்லை என மக்கள் சமூகம் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். அனைத்து வகை படையினரும் மக்கள் மத்தியில் இருந்தே வருவதால், மக்கள் பணத்தில் ஊதியம் பெறுவதால், அவர்களுக்கும் மக்களே எசமானர்கள் ஆவார்கள். மக்கள், அவர்கள் நல்வாழ்க்கை மற்றும் சுயமரியாதை தொடர்பாக கரிசனம் கொள்ள வேண்டும்; அதே நேரம் படையினர் எந்த மட்டத்திலும், கார்ப்பரேட்டுகளுக்கு, மதவெறியர்களுக்கு, சாதியாதிக்கத்துக்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக ஏவப்படுவதை தயக்கமின்றி எதிர்த்திட வேண்டும். எல்லையில் நிற்பவர்களை, சட்டம் ஒழுங்கு காக்க வேண்டியவர்களை, மக்களுக்கு எதிராக நிறுத்துபவர்கள்தான் தேசவிரோதிகள் என்ற புரிதல் மக்கள் மத்தியிலும் படையினர் மத்தியிலும் வலுப்படுவதே, போல் மோதல் படுகொலைகளுக்கு முடிவு கட்டும்.
(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 01 – 15)