COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, December 3, 2016

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கடந்த காலத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம்
(2016 டிசம்பர் லிபரேசன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் பகுதி 1)
“சித்தாந்த அறிஞர்கள் உலகத்தை பல விதங்களிலும் வியாக்கியானம் செய்தார்கள். ஆனால், பிரச்சனை, அதை எப்படி மாற்றுவது என்பதுதான்”. 1845ல், ஃப்யூர்பாக் பற்றிய ஆய்வின் இறுதி வரிகளை இளம் காரல் ஹெயின்ரிச் மார்க்ஸ் இப்படி எழுதியபோது, சித்தாந்தத் தளத்திலும் அரசியல் தளத்திலும் ஒரு மவுனப் புரட்சி நடந்தது.

மிகவும் முன்னேறிய வர்க்கமான நவீன பாட்டாளி வர்க்கம், நிஜ வாழ்க்கையில், பாரீஸ் நகரத்தில் அதைத் துவக்கி வைத்தது. 1871ல் அங்கு பாட்டாளி வர்க்கத்தின் முதல் ஆட்சி நிறுவப்பட்டது. அந்த வன்முறை புரட்சி, இரண்டு மாதங்கள் கடந்த சில நாட்களில் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஆனால், மார்க்ஸ் சொன்னதுபோல், “உலக அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய புறப்படும் புள்ளி கிடைத்துவிட்டது”.
அந்தப் புள்ளியில் இருந்து துவங்கி, அடுத்த தொடர்வரிசை தாக்குதல்கள் ரஷ்யாவில் நடத்தப்பட்டன. கடுமையான சமூக, பொருளாதார, தேசிய மற்றும் பிற முரண்பாடுகளும் செழுமையான புரட்சிகர மரபும் கொண்ட ரஷ்யாவில் இது விரைவாக அடுத்தடுத்து நிகழ்ந்தது: 1905ல் நடந்த புரட்சி ‘தோற்றுப் போனது’; 1917ல் பிப்ரவரி புரட்சியும் பிறகு அதே ஆண்டில் நவம்பர் புரட்சியும் நடத்தப்பட்டன. இவற்றில் முதலில் நடந்தது ஓர் ஒத்திகையாக அமைந்து, சம்பந்தப்பட்ட வரலாற்று சக்திகள் நிறைகுறைகளை நிதானமாக மதிப்பிட்டுக் கொள்ள ஒரு வாய்ப்பளித்தது; இரண்டாவதாக நடந்தது ஜாரை அடியோடு வீழ்த்தி, அரசு அதிகாரத்தை வெல்ல, முதலாளித் துவத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான வெளிப் படையான, நேரடியான  தீர்மானகரமான போராட்டத்துக்கு களத்தை தயார் செய்தது; மூன்றாவதாக நடந்ததில், பாட்டாளி வர்க்கம், விவசாயிகளுடனும் போர் வீரர்களுடனும் ஒன்று சேர்ந்து ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டு சோவியத் சோசலிசக் குடியரசு நிறுவப்பட்டது.
தங்குதடையற்ற புரட்சி
1905ல் லெனின் எழுதினார்: 
“நமது சக்திக்கேற்ப,  வர்க்க உணர்வுள்ள, அமைப்பாக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் வலிமைக்கேற்ப, ஜனநாயகப் புரட்சியில் இருந்து உடனடியாக நாம் சோசலிசப் புரட்சி நோக்கிச் செல்லத் துவங்க வேண்டும். நாம் தங்குதடையற்ற புரட்சிக்காக நிற்கிறோம். நாம் பாதி வழியில் நின்றுவிடக் கூடாது... ஜனநாயகப் புரட்சியை நடத்த மொத்த விவசாய சமூகத்துக்கும் உதவ நாம் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்; அப்போதுதான் பாட்டாளி வர்க்கக் கட்சியான நாம் எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு துரிதமாக, சோசலிசப் புரட்சி என்ற புதிய, உயர்ந்த கடமையை நோக்கிச் செல்வதை எளிதாக்க முடியும்”. (விவசாயிகள் இயக்கம் பற்றிய சமூக ஜனநாயகத்தின் அணுகுமுறை).
“புரட்சியை நிரந்தரமாக நடத்துவது” என்று மார்க்ஸ் சொன்னதன் அறிவார்ந்த, படைப்பாற்றல்மிக்க விளக்கத்தை ரஷ்ய பின்னணியில் காண முடியும். ரஷ்யா போன்ற “விவசாய நாட்டில்”, விவசாய இயக்கத்தின் ஆதாரமான பாத்திரமும் அதை முன்னகர்த்துவதில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பொறுப்பும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டு அழுத்தம் தரப்பட்டது என்ற விதத்தில் அது படைப்பாற்றல் மிக்கது; ‘நிரந்தர புரட்சி’ என்ற ட்ராட்ஸ்கியின் தத்துவத்தில் இதைக் காண முடியாது.
லெனினைப் பொறுத்தவரை, பிப்ரவரி மற்றும் நவம்பர் புரட்சிகள் இரண்டும், தமக்குள் ஒன்றாகி நின்றவை. ரஷ்யப் புரட்சியின் உள்ளடக்கம் அல்லது அரசியல் இயல்பு பற்றி 1921ல் லெனின் எழுதினார்:
“ரஷ்யாவில் நடந்த புரட்சியின் நேரடி மற்றும் உடனடி நோக்கம் ஒரு முதலாளித்துவ ஜனநாயக புரட்சி, அதாவது மத்திய காலங்களின் எஞ்சியிருந்த அம்சங்களை அழித்து அவற்றை முழுவதுமாக ஒழித்துவிடுவது, நமது நாட்டின் அனைத்து கலாச்சாரம் மற்றும் முன்னேற்றத்தின் பாதையில் இருக்கிற இந்தப் பெரிய தடையை இந்த காட்டுமிராண்டித்தனத்தை, இந்த அவமானத்தை ரஷ்யாவில் இருந்து அகற்றுவது, என்பதாக இருந்தது”.
“இதற்கு முன் யாரும் முடிக்காதவாறு, நாம் முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சியை நடத்தி நிறைவு செய்திருக்கிறோம். நாம் உணர்வுபூர்வமாக, உறுதியாக, தடுமாற்றமின்றி, சோசலிசப் புரட்சி நோக்கிச் செல்கிறோம்; முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சியில் இருந்து சோசலிசப் புரட்சி எந்த சீனச் சுவற்றாலும் பிரிக்கப்படவில்லை என்பதை புரிந்துகொண்டு முன்செல்கிறோம். முன்னது பின்னதாக வளர்ச்சியுறுகிறது. பின்னது, அதன் போக்கில், முன்னதன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறது. பின்னது, முன்னதன் பணியை வலுப்படுத்துகிறது. போராட்டம், போராட்டம் மட்டுமே, பின்னது, முன்னதைத் தாண்டி எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை தீர்மானிக்கிறது”.
லெனினின் வார்த்தைகளில், முற்றிலும் உறுதியாகச் சொல்வதின், வரலாற்று தீர்மானகரவாதத்தின் சுவடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் தலைவர், காத்திருந்து பார்ப்பதற்கு பதிலாக, சவாலை ஏற்றுக்கொண்டு போராட உறுதியேற்கிறார்.
மார்க்சியத்தின் புரட்சிகர இயங்கியல்
நவம்பர் புரட்சி வியப்பூட்டும் விதத்தில் துரிதமாக வெற்றி பெற்றது என்றாலும், மார்க்சிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக் கொண்ட, திடமற்ற இதயங்கொண்ட குட்டி முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் எதிர்ப்புக்கு எதிராக எழுந்தது. வாதம் இப்படி முன்வைக்கப்பட்டது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் நன்கு வளர்ச்சியுற்ற உற்பத்தி சக்திகளின் கட்டமைப்பின் மீது மட்டுமே, அதுபோன்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தினரின் கூட்டு முயற்சிகளால் மட்டுமே சோசலிசத்தை கட்டியெழுப்ப முடியும் என்று  மார்க்சியம் சொல்கிறது. ஆனால், ரஷ்யாவில் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான பொருளாயத அடிப்படை இல்லை என்று, புதிதாக உருவான சோசலிச அரசு, வளர்ச்சி யடைந்த அய்ரோப்பிய நாடுகளின் ஆதரவு எதுவும் இல்லாமல், தன்னந்தனியே, ஆட்கொல்லி முதலாளித்துவ உலகை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நன்கு தெரிந்திருந்தும், போல்ஷ்விக்குகள் சோசலிசப் புரட்சி நோக்கி விரைந்தார்கள். எனவே, போல்ஷ்விக்குகள் இரட்டை தவறு புரிந்தவர்களாவார்கள்: ஒரே ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்ப முயற்சி செய்தார்கள்; ஒரு பின்தங்கிய நாட்டில் அதைச் செய்யப் பார்த்தார்கள்.
லெனின் அவர்களுக்கு பதில் சொன்னார்: “அவர்கள் அவர்களை மார்க்சிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்; ஆனால் மார்க்சியம்  பற்றிய அவர்களது புரிதல் சாத்தியப்படாத அளவுக்கு வெற்று போதனையாக இருக்கிறது. மார்க்சியத்தில் தீர்மானகரமானது எது என்பதை, அதன் புரட்சிகர இயங்கியலை புரிந்துகொள்ள அவர்கள் முழுவதுமாக தவறி விட்டார்கள்; மொத்த உலகத்தின் வரலாறும் பொதுவான விதிகளின்படி வளர்ச்சியடைகிறது என்பதாலேயே, வளர்ச்சியின் குறிப்பிட்ட கால கட்டங்கள், வளர்ச்சியின் வடிவத்திலோ, வரிசைதொடரிலோ, தனிப்பண்புகளையும் வெளிப்படுத்தக் கூடும் என்பதை, தவிர்த்துவிட முடியாது, மாறாக, அனுமானிக்க முடியும் என்ற கருத்துக்கு அவர்கள் முற்றிலும் புதிதானவர்கள்”. (நமது புரட்சி, 1923).
இருபதாவது நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் இரண்டாவது பகுதி அதுபோன்ற விதிவிலக்கான காலகட்டங்களில் ஒன்று. 1916ல் எழுதப்பட்டு 1917 ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் நூலில் லெனின் குறிப்பிட்டதைப் போல, ஏகாதிபத்தியத்தின் சர்வதேசச் சங்கிலி அதன் பலவீனமான கண்ணியில் உடைக்கப்படும் பொதுவான சாத்தியப்பாடு, ரஷ்யாவில், முதல் உலகப் போரின் பின்னணியில், அந்த நாட்டில் இருந்த சில குறிப்பான சூழல்கள் அல்லது சாதக அம்சங்களின் விளைவால், ஓர் அவசரக் கடமையாக, ஓர் உடனடி தேர்வாக ஆனது. (முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த முதலாளித்துவ சக்திகள், ரஷ்யப் புரட்சியை நசுக்க ஒன்று சேரும் நிலையில் இல்லை. அய்ரோப்பிய நாடுகளில் இருந்த முதலாளித்துவத்தாருடன் ஒப்பிடுகையில், ரஷ்ய முதலாளித் துவம் உறுதியற்றதாக இருந்தது; நிலப்பிரபுத்துவ வர்க்கம் விவசாய சமூகத்தின் எழுச்சிகளால் மிகவும் சோர்வடைந்திருந்தது). மென்ஷ்விக்குகளின், சமூகப் புரட்சியாளர்களின் ஊசலாட்டத்தை ஓரந்தள்ளி, புரட்சிகர பாட்டாளி வர்க்கம் அந்தக் கடமையை நிறைவேற்றி அதன் வர்க்க அதிகாரத்தை நிறுவ, போல்ஷ்விக்குகள், அதற்கு துணிச்சலுடன் தலைமை தாங்கினார்கள். புரட்சி வெற்றி பெற்றது.
ஆக, நவம்பர் புரட்சி, முதலாளித்துவரீதியாக பின்தங்கிய ஒரு நாடு, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் முன்னால், முதலாளித்துவத்தின் நுழைவாயிலைக் கடந்து, தத்துவரீதியாக எதிர்ப்பார்க்கப்பட்ட வளர்ச்சியின் வரிசைத் தொடரை மாற்றியமைப்பது, கடந்த காலங்களில் நடந்ததுபோல், முதலாளித்துவத்தின் தலைமையில் ஜனநாயக புரட்சி என்றல் லாமல், உழைக்கும் விவசாய சமூகத்துடன் சேர்ந்து பாட்டாளி வர்க்கம் அதற்குத் தலைமை தாங்கி, சோசலிச புரட்சி நோக்கி தங்குதடையின்றி செல்வது என்ற விதத்தில்  வளர்ச்சியின் ‘சாதாரணமான’ போக்கு அல்லது வடிவத்தில் மாற்றத்தை கொண்டுவருவது ஆகியவற்றின் முதல் நிகழ்வாக அமைந்தது. ரஷ்யாவில் போதுமான அளவிலான முதலாளித்துவ வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி இல்லை என்ற விமர்சனத்துக்கு, லெனினின் பதில் பின்வருமாறு இருந்தது: “சோசலிசத்தை கட்டியெழுப்ப நாகரிகம் அவசியம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். மிகவும் நல்லது. ஆனால், நிலப்பிரபுக்களையும் ரஷ்ய முதலாளித்துவத்தாரையும் வெளியேற்றி நமது நாட்டில் நாகரிகத்துக்கான முன்நிபந்தனைகளை முதலில் உருவாக்கி, அதன் பின் ஏன் சோசலிசம் நோக்கிச் செல்ல முடியாது? வழக்கமான வரலாற்றுரீதியான வரிசைத் தொடர் நிகழ்வுகளில் அது போன்ற மாறுபட்ட போக்குகளை அனுமதிக்க முடியாது அல்லது சாத்தியமில்லை என்று எங்கே, எந்தப் புத்தகத்தில், படித்தீர்கள்”? (நமது புரட்சி, 1923).
ஒரு நாட்டில் சோசலிசம் என்பதற்கான எதிர்ப்பைப் பொறுத்தவரை, “முதல் வெற்றி இன்னும் இறுதி வெற்றியாகவில்லை.... நாம் ஒரு துவக்கத்தை நிகழ்த்தியிருக்கிறோம். எப்போது, எந்தத் தேதியில், எந்த நேரத்தில், எந்த நாட்டின் பாட்டாளி வர்க்கம் இந்த இயக்கப்போக்கை நிறைவுறச் செய்யும் என்பது முக்கியமல்ல. துவக்கத்தை நிகழ்த்திவிட்டோம், வழியை திறந்துவிட்டோம், பாதையை காட்டிவிட்டோம் என்பதுதான் முக்கியம்” என்றார் லெனின். (அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு தினம், 1921).
ஆனால், நாம் நமது பணியை நிறைவேற்றி விட்டோம், மற்றவர்கள் அவர்கள் பணியை செய்யட்டும் என்று இதற்குப் பொருளல்ல. நவம்பர் புரட்சிக்குப் பிறகு லெனின் சொன்னது போல், “ஒரு நாட்டில் வெற்றி பெற்ற புரட்சி எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு, எல்லா நாடுகளிலும் புரட்சிகள் வளர, உதவ, எழுச்சி பெற ஆனதெல்லாம் செய்ய வேண்டும்”. (பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடிப்போன காவுட்ஸ்கியும், 1918).
சோசலிசப் புரட்சியின், புரட்சியின் பொதுவான போக்கில் அதுபோன்ற மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் நிகழ்வதை அங்கீகரிப்பது, அதற்கேற்றவாறு கட்சியின் போர்த்தந்திர, செயல்தந்திர நோக்குநிலைகளை வளர்த்தெடுப்பது ஆகியவற்றில்தான், மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பொய்மைப்படுத்துவதில் இருந்து புரட்சிகர மார்க்சியம் உறுதியாக மாறுபடுகிறது. நமது புரட்சி கட்டுரையின் இறுதியில் லெனின் எழுதுகிறார்:     - அவர் தீர்க்கதரிசி என்பதை மெய்ப்பிக்கிறார் -  “...இன்னும் கூடுதலாக மிகப்பெரிய மக்கள் தொகையும் சமூக நிலைமைகளில் இன்னும் கூடுதலாக மிகப்பெரிய பன்முகத்தன்மையும் கொண்ட கீழைத்தேச நாடுகளில் தொடர்ச்சியாக, நடக்கும் புரட்சிகள், ரஷ்யப் புரட்சியில் காணப்பட்டதை விட இன்னும் கூடுதலான தனித்தன்மைகளை சந்தேகத்துக்கிடமின்றி வெளிப்படுத்தும்”.

(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 01 – 15)

Search