பண மதிப்பகற்றும் நடவடிக்கை
மோடியின் வருமுன் காக்கும் திட்டமும் சஹாரா, பிர்லா பேப்பர்களும்
மோடியை துக்ளக் என்று சொல்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். தூற்றுகிறார்கள். எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள். மாபெரும் குளறுபடி செய்துவிட்டார், கட்டமைக்கப்பட்ட திருட்டு, சட்டபூர்வமான கொள்ளை என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். மோடி அசைய மறுக்கிறார். பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக நிற்கிறார். நாட்டு மக்கள் துன்பப்படுவது நன்றாகத் தெரிந்தும், கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். நிலைமை சீரடைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். காரணம் இருக்கிறது. காரணம் பற்றி ஆயும் முன் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிடப்படாத, அல்லது வெளிவந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிற ஒரு சுவாரசியமான நியமனம் பற்றி பார்க்கலாம்.
கருப்புப் பணத்தை கண்டு பிடிப்பதற்காகவே ஜென்மம் எடுத்துள்ள நரேந்திர மோடி, மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் கருப்புப் பணத்தின் ஆதாரங்களை கண்டுபிடிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைத்தார். அதற்கு ஓர் ஆலோசகரை நியமிக்க வேண்டுமல்லவா? நியமித்தார். அவர் திரு.சவுதரி. கர்மயோகி மோடி, ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கிறார் என்றால் அவருக்கு பலப்பல தகுதிகள் இருக்க வேண்டுமல்லவா? இவருக்கும் இருக்கின்றன.
வருமானவரித் துறையின் தலைமை அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற உடனேயே மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவி தரப்பட்டதால் இந்தப் பதவியும் அவருக்குத் தரப்பட்டது. வழக்கமாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிதான் மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்படுகிறார். சவுதரி விசயத்தில் விதிவிலக்காக இந்திய வருமானப் பணி அதிகாரி மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
சொந்த கட்சிக்குள் கூட ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோட்பாட்டைக் கடைபிடிக்கும் மோடி, ஓய்வுபெற்ற ஓர் அரசு அதிகாரிக்கு, வழமையான நடைமுறையை மீறி, இரண்டு பதவிகள் தருகிறார் என்றால் அவர் சிறப்புத் தகுதிகள் உள்ளவராக இருக்க வேண்டுமல்லவா? இவரும் அப்படிப்பட்டவர்தான்.
அப்படி என்ன தகுதி உள்ளவர் என்பதை அறிய 2014 தேர்தலுக்கு முந்தைய இரண்டு மூன்று வருடங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.
2013 அக்டோபரில், டில்லி, மும்பை, செகந்திராபாத், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள ஆதித்யா பிர்லா குழும நிறுவன அலுவலகங்களில், நிலக்கரிச் சுரங்க ஊழலை ஒட்டி, மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையின்போது, குழுமத்தின் செயல்தலைவர் சுபேந்து அமிதாப் என்பவரின் மடிக்கணிணி கைப்பற்றப்பட்டது; அவரது மின்னஞ்சல் பெட்டியில் 16.11.2012 தேதியிடப்பட்டு, குஜராத் சிஎம் - 25 கோடி (12 முடிந்து விட்டது - மீதி?) என்று ஒரு குறிப்பு இருந்தது.
வருமான வரித் துறை அதிகாரிகள் இது பற்றி 2013 நவம்பரில் அவரிடம் விசாரணை செய்ததற்கு, அவர்கள் கையொப்பமிடப்பட்ட ஆவணம் ஒன்றும் இருக்கிறது. குஜராத் சிஎம் என்றால் குஜராத் ஆல்கலி கெமிக்கல் என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். சி, எம் என்றால் என்ன எனக் கேட்டதற்கு மீண்டும் அதே பதிலை சொல்லியிருக்கிறார். வேறு சில கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான பதில்கள் சொன்னதால், சி, எம் என்பது பற்றி மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வருமான வரித்துறை விசாரணையில் தரப்பட்ட அறிக்கை சொல்கிறது. அதன் பிறகு அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
2014 நவம்பரில் டில்லியிலும் நோய்டாவிலும் உள்ள சஹாரா நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு சில குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. 2013 அக்டோபர் 30 முதல் 2014 பிப்ரவரி 21 வரை மோடிஜிக்கு ஜெய்ஸ்வால்ஜி மூலம் ரூ.40.10 கோடி தரப்பட்டுள்ளதாகவும் பாஜக தலைவர் ஷாய்னா என்சிக்கு 2013 ஆகஸ்ட் 28 முதல் 2014 ஜனவரி 20 வரை ரூ.4 கோடி தரப்பட்டுள்ளதாகவும் குறிப்புகள் உள்ளன.
தவிர, மத்தியபிரதேசம், சட்டிஸ்கர், டில்லி மாநில முதலமைச்சர்களுக்கு பணம் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்புகள் உள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்தும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இரண்டு சாட்சிகள், சோதனை நடத்தப்பட்ட அலுவலக பொறுப்பாளர் மற்றும் சோதனைக்கு பொறுப்பான வருமான வரித்துறை அதிகாரி ஆகியோரின் கையொப்பங்கள் உள்ளன. அந்த ஆவணங்களில் இருக்கும், வருமான வரித் துறை அதிகாரி அங்கிதா பாண்டேயின் கையொப்பம், அவருடையதுதான் என்று தடயவியல் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டு 2016 ஜ÷லை 1 அன்று அறிக்கை தரப்பட்டது. பாஜகவின் முன்னாள் தலைவர், வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, இந்த ஆவணங்களில் உள்ள கையொப்பத்தை, டில்லி மாநில அரசின் உதவியுடன் தடயவியல் ஆய்வில் சரிபார்த்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
வருமான வரித்துறையில் இருந்து கிடைத்த இந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்திக் கொண்டிருந்தவர்தான் திரு.சவுத்ரி. மொத்த விசாரணை போக்குவரத்துகளையும் கிடப்பில் போட்டு, மூடி மறைத்த திறமைசாலி திரு.சவுத்ரி. இப்போதும், மத்திய கண்காணிப்பு ஆணையர் என்ற பதவியில் இருந்து, அந்த ஆவணங்கள் மீது, வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடு கொண்டிருப்பவர் திரு.சவுத்ரி.
இந்த ஆவணங்கள் இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்கும் உள்ளன. இரண்டரை ஆண்டு காலமாக ஊழலற்ற ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் மோடி, ஊழலை ஒழிப்பதற்காகவே பண மதிப்பு அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகச் சொல்லும் மோடி, இந்த விசயத்தில் மறுப்பு இன்னும் தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு பிற பாஜக முதலமைச்சர்களுக்கு பிரபல பத்திரிகைகள் அனுப்பிய கடிதங்களுக்கு அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.
அக்டோபர் 25 அன்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வருமான வரித்துறை தலைவருக்கு இந்த ஆவணங்கள் தொடர்பாக புகார் கடிதம் அளிக்கிறார். சஹாரா, பிர்லா நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் முறையான விசாரணையை வருமான வரித் துறை மேற்கொள்ளவில்லை என்று அந்தப் புகாரில் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
நவம்பர் 15 அன்று இந்தப் குறிப்புகள் பற்றி இந்து ஆங்கில நாளேட்டில் செய்திகள் வெளியாயின. நவம்பர் 16 அன்று டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்தப் பிரச்சனை பற்றி சட்டமன்றத்தில் பேசினார்.
சஹாரா, பிர்லா நிறுவனங்கள் அரசியல் வாதிகளுக்கு கையூட்டு கொடுத்திருப்பதாக எழுப்பப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை உத்தரவிட வேண்டும் என்று காமன் காஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த ஆவணங்கள் போதுமானவை அல்ல, அவற்றின் அடிப்படையில் அப்படி உத்தரவிட முடியாது என்று நவம்பர் 25 அன்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.
ஆக, சில மாதங்களாக, சஹாரா, பிர்லா நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மக்களவை தேர்தல்களுக்கு முன் கையூட்டு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்படும் சாத்தியப்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வந்தன. சவுத்ரி போன்ற உயர் அரசு அதிகாரிகளை வளைத்துப் போட்டது ஓரளவு பயன் தந்திருந்தாலும், தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
காமன் காஸ் நிறுவனமும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் இந்த ஆவணங்கள் தொடர்பாக எடுத்து வரும் முயற்சிகளை ஆன வரை தாமதப்படுத்தி அது பொது அரங்குக்கு வரும் நேரம் அதை நீர்த்துப் போகச் செய்ய கடுமையாக முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வருகிறது. மோடியின் பண மதிப்பகற்றும் நடவடிக்கை, தனியொரு நடவடிக்கை அல்ல, பல நடவடிக்கைகளின் முதல் படி என்று மோடியும் பாஜக பேச்சாளர்களும் கூவிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உண்மைதான் சொல்கிறார்கள்; சஹாரா, பிர்லா ஆவணங்களால் பாஜக அரசுக்கு, மோடிக்கு, நேரக் கூடிய பின்னடைவுகளை தவிர்க்கும் தடுக்கும் முயற்சியும் இதன் ஒரு பகுதியாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
இப்போது நாட்டு மக்கள் அனைவரும் சொந்த உழைப்பில் ஈட்டியக் காசை பயன்படுத்த முடியாமல், அத்தியாவசிய செலவுகளை கூடச் செய்ய முடியாமல் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள். இப்போது பிர்லா என்றாலோ, சஹாரா என்றாலோ அவர்கள் காதுகளில் விழாது. ஆறு மாதங்கள் இப்படித் தள்ளிவிட்டால் பிறகு சமாளித்துக் கொள் லாம், இந்தப் போக்கில் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து ஊழல் எதிர்ப்புப் போராளி என்ற பட்டத்தையும் பெற்று விடலாம் என்று மோடியும் சங் பரிவார் கும்பலும் திட்டமிட்டிருப்பதாகவே தெரிகிறது.
இது ச்சும்மா ட்ரெய்லரு...
- அனில் அம்பானி செலுத்த வேண்டிய ரூ.4,800 கோடி வரியை அவர் கட்ட வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- விஜய் மல்லையா உள்ளிட்டோர் வாங்கியுள்ள ரூ.7,500 கோடி கடனை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தள்ளுபடி செய்துள்ளது.
- நாட்டின் 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளுக்கு தர வேண்டிய கடன் பாக்கி ரூ.5 லட்சம் கோடி. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கவுதம் அதானி மட்டுமே ரூ.4 லட்சம் கோடி பாக்கி வைத்திருக்கின்றனர். அவர்கள் செலுத்தாத கடன் தொகை முறையே ரூ.1,87,079 கோடி. ரூ.1,21,000 கோடி. ரூ.96,031 கோடி.
- ஜுன் 30, 2016 அன்றைய நிலவரப்படி 50 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பித் தராதவர்கள் 2,071 பேர். இவர்கள் திருப்பித் தராததால் ரூ.3,88,919 கோடி வாராக் கடனாகிவிடுகிறது. நவம்பர் 21 அன்று மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தந்த விவரம் இது.
- கட்டுமானத் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி அளவுக்கு வரிச் சலுகையை வருமான வரித்துறை முறைகேடாகத் தந்துள்ளது. ரிலையன்ஸ் போர்ட்ஸ் அண்டு டெர்மினல்ஸ் நிறுவனம் ரூ.1,766 கோடி, ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம் ரூ.51 கோடி, டாடா பவர் ரூ.38 கோடி, ஜேஎஸ்டபிள்யு நிறுவனம் ரூ.340 கோடி என சலுகை பெற்றுள்ளனர்.
(மாலெ தீப்பொறி 2016 டிசம்பர் 01 – 15)