COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 19, 2016

அஇஅதிமுக திமுக கட்சிகளின் நெருக்கடி 
தமிழக மக்களுக்கு வரமா சாபமா?
நாடோடி
ஜெயலலிதா தமது 68ஆவது வயதில் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். கருணாநிதியும் கூட 93 வயதில் உடல்நலக் குறைவுடன்தான் இருக்கிறார். தமிழக மக்கள் கோடிக்கணக்கில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விவசாயக் கூலி வேலையோ வேறு வேலைகளோ கிடைப்பதில், உழைத்துப் பிழைப்பதில் சிரமம் உள்ளது. வேலை கிடைத்தால், குறை வருமானமே கிடைக்கிறது. தமிழ்நாட்டு விவசாயம் சாகடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் இயற்கை, மனித வளங்கள் ஓயாமல் வேட்டைக்கார பணக்காரர்களால், அரசியல்வாதிகளால், அதிகாரிகள் துணையுடன் சூறையாடப்படுகின்றன. மாணவர், இளைஞர் கல்வியும் வேலைவாய்ப்பும் நம்பிக்கை தரவில்லை. பெண்கள், மதச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சாதியினர் சமத்துவத்துடன், அச்சமற்ற சுதந்திரத்துடன் வாழ வழியில்லை. தமிழக மக்களுக்கு கார்ப்பரேட் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை போன்றவை, வேறு வேறு மட்டங்களில் கட்டுப்படியாவதில்லை. கிராமங்கள் என்ற கொடிய நிலங்களில் இருந்து வெளியேறும் மக்கள் நரகமான நகரக் குப்பைத் தொட்டிகளில் வீசப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக, மூச்சுத் திணறுவதுடன் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா இறப்பதற்கு சில நாட்கள் முன்பு இறந்த மக்கள் கவிஞர் இன்குலாப் சொன்னார்: ‘எனக்கு வரலாறு என்பது மன்னர்களின் பீடுகளும் பெருமைகளும் அல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சும் கண்ணீரும் கோபமும் போராட்டமும்தான் நான் பார்க்கிற வரலாறு. அதைக் காணும்போது ராஜராஜனின் பெருமைகளோடு என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. அந்த பெருமையில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அவன் படையெடுப்பு மூலமாக ஜாவாவையும் சுமத்ராவையும் இலங்கையையும் வென்றான் என்று சொல்லும்போது, அவனுடைய படைவீரர்களின் வெற்றிக் களிப்பு, என்னுடைய களிப்பாவதில்லை. மாறாக, அவனால் தோற்கடிக்கப்பட்ட மக்களின் எல்லா ஆதங்கங்களுமே என்னுடைய ஆதங்கம். தமிழன் என்பதாலேயே, எல்லா ஆதிக்கத்தையும் தலையில் வைத்து என்னால் கொண்டாட முடியாது’. அஇஅதிமுக, திமுக வெற்றிகள், தமிழ்நாட்டு மக்களின் தோல்விகளாகவே இருந்தன. (திமுகவின் 1967 வெற்றி விதிவிலக்காகக் காணப்பட வேண்டும்).
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் தமிழ்நாட்டிற்கு வரலாறு அளித்த கொடைகள். இன்றைய கழகங்கள் தமிழ்நாடு சுமக்கும் பிணச் சுமைகள். ஒருவர் இறந்துவிட்டால், ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரிடம் இருந்திராத நற்பண்புகளை எல்லாம் அவரிடம் கண்டறிந்து புகழ்வது அரசியல் நாகரிகம் எனச் சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வது, மக்கள் சார்பு அரசியல், புரட்சிகர இடதுசாரி அரசியல் என்ற கோணத்தில் இருந்து ஒரு நோய் என்பது, அறுதியிட்டு உறுதியாகச் சொல்லப்பட வேண்டும்.
மக்கள் கவிஞர் இன்குலாப்புக்கு மரியாதை செய்தவர்கள், வலதுசாரி பிற்போக்காளர் சோவுக்கும் அஞ்சலி செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை, நாம் அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் செயல்பாடுகளில் இருந்து மதிப்பிட வேண்டும். அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட பண்புகள் என்பவற்றை அவர்களது அரசியலில் இருந்து பிரித்து அணுகுவது, சரியல்ல.
தோழர் லெனின், சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளது, வர்க்கங்கள் கட்சிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன, கட்சிகளுக்கு தலைவர்கள் தலைமை தாங்குகிறார்கள் எனச் சொன்னார். தமிழகமும் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளது. தமிழ்நாட்டு சமூகத்தில் சாதியாதிக்கம், மதவெறி, ஆணாதிக்கம் எல்லாம் தாண்டவமாடுகின்றன. செல்வம் சிலரிடம் குவிந்து, ஏழு கோடி மக்களில் ஏகப்பெரும்பான்மையினர், சுரண்டலால், ஒடுக்குமுறையால் வதைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அஇஅதிமுக, திமுக கட்சிகள், மக்களின் வாக்குகளைப் பெற்று, முதலாளிகளின், கிராமப்புற மேட்டுக்குடியினரின், மதவெறியர்களின், சாதியாதிக்க சக்திகளின் நலன் காக்கும் ஆட்சி புரிகின்றனர். ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாடும், இரகசிய வாக்குச் சடங்குகளும், நாடாளுமன்ற ஜனநாயக முறையை புனிதப்படுத்தி, ‘ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு’ மக்கள் கட்சிகள் என்ற தோற்றத்தை, அந்தந்த நேர தடுமாற்றத்தை உருவாக்குகின்றன. பிரும்மாண்டமான கருத்து மறுஉற்பத்தி மூலம், ஆளும் வர்க்கங்கள் சிந்தனைரீதியாக மேலாதிக்கம் செலுத்துகின்றன. கோடிக்கணக்கானவர்களுக்கு கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போடுவது கடினம் என்பதால், முதலாளித்துவச் சமூகம், முதலாளித்துவப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்க, முதலாளித்துவ அரசியல் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மூளைகளுக்கு விலங்குகள் போடுகின்றது.
இங்கேதான், லெனின், சொன்ன ‘கட்சிகளுக்குத் தலைவர்கள் தலைமை தாங்குகிறார்கள்’ என்ற எளிமையான, சாதாரண சொற்றொடர் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 
பிம்பப் பொறி
தமிழ்நாட்டில் மிகவும் குறிப்பாக அஇஅதிமுகவின் தலைவர்களான எம்.ஜி.ராமச்சந்திரனும் ஜெயலலிதாவும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட சர்வவல்லமை படைத்த தலைவர்களாக எழுந்தனர். எம்.ஜி.ராமச்சந்திரன், ‘ஏழைப் பங்காளர்’ தோற்றம் தந்தார். அன்புச் சகோதரி ஜெயலலிதா, ஒரு கட்டத்துக்குப் பிறகு ‘நகை ஏதும் அணியாத’ தவ வாழ்க்கை வாழும் ‘அம்மாவாக’ தோற்றம் தந்தார். நிச்சயமாக, நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இந்த தோற்றங்கள் அவர்கள் அரசியல் செல்வாக்குக்கு, வெற்றிக்கு உதவின.
எம்.ஜி.ராமச்சந்திரன் ஊழல் எதிர்ப்பு அவதாரம் எடுத்தார். கணக்கு கேட்டு வெளியேறி கட்சி அமைத்து, எந்த கணக்கும் காட்டாத ஓர் ஆட்சியை, வானளாவிய அதிகாரங்கள் கொண்ட ஆட்சியை, பிரும்மாண்ட ஊழல்களுக்கு அடித்தளமிட்ட ஓர் ஆட்சியை, ஒரு போலீஸ் ராஜ்ஜியத்தை, பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து சாரத்திலும் வடிவத்திலும் துண்டித்துக் கொண்ட ஓர் ஆட்சியைத் தமிழ்நாட்டிற்கு தந்தார்.
சமூக ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ‘பிம்பப் பொறி’ என்ற நூலை ராமச்சந்திரன் பற்றி வெளியிட்டார். ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில் நடந்த மண்டைக்காடு கலவரம், ‘பகுத்தறிவு நீதிபதி’ வேணுகோபால் தந்த இந்துத்துவா ஆதரவு முடிவுகள், இந்து முன்னணி உருவானது, மிருகங்களை வேட்டையாடுவது போல், மனிதர்களான புரட்சியாளர்கள், நக்சல்பாரிகள் வேட்டையாடப்பட்டது, வேலை நிறுத்தங்களை சிறைக் கைதிகளைக் கொண்டு ஒடுக்கியது, பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது, ஆங்கில நர்சரி பள்ளிகளுக்கும் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அடித்தளம் அமைத்தது, தமிழகம் கண்டிராத அளவுக்கு, கருணாநிதி ஆட்சியையும் விஞ்சும் ஊழல் ஆட்சி, மேற்கு மற்றும் தென்மத்திய மாவட்ட மேல்சாதியினர் ஆதிக்கம் உறுதிப்படுவது, குலாக்குகள் வலுவடைந்தது, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது, தனிமனித வழிபாடு, சோசலிசம் கேப்டலிசம் கம்யூனிசம் ஆகிய மூன்றையும் சேர்த்து கலக்கி உருவாக்கப்பட்ட அண்ணாயிசம் என்ற கலவை ஆகியவை வளர்ந்து எழுந்தன. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது, பகுத்தறிவு, தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் விடை பெற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்கொலை, தீக்குளிப்பு, உடலுறுப்பு காணிக்கை, மக்கள் திரள் வேண்டுதல், கலவரம், சூறையாடுதல் அரங்கேறின. (அது ஜெயலலிதா சிறை சென்றபோது, பேருந்து எரிப்பு, உயிர் பறிப்பு, உடலுறுப்புக்களை துண்டித்துக் கொண்டவர்களுக்கு ரூ.50,000, உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது).
பணக்காரர்களிடம் வசூலிக்கப்படும் நிலவரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற வரி போன்றவை, 1960 - 1965 காலங்களில் 15.5% என இருந்து, அவரது ஆட்சிக் காலத்தில், 1.9% எனக் குறைந்தன. விலை உயர்வைக் கணக்கில் கொண்டு பார்த்தால், 1951 - 1952ல் விவசாயத் தொழிலாளர் பெற்ற குறை கூலியை விட 1979 - 1980ல் குறைவான கூலி பெற்றனர். ஏழை, நடுத்தர மக்கள் மீதான விற்பனை வரி, கலால் வரி மூலமே அரசாங்க கஜானா பெருமளவுக்கு நிரம்பியது. முந்தைய காலங்களை விட வேலை வாய்ப்பு வெகுவாகக் குறைந்தது.
பார்ப்பனர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் இருந்த கல்வி தனி உரிமை, அவர் படங்களில் சாமான்யர்களின் கைகளுக்குச் சென்றது. சாதி, வர்க்கம் தாண்டி, குடும்ப எதிர்ப்பு மீறி திருமணம் செய்யும் உரிமையை, புனைவு விடுதலையை அவரது படங்கள் பெண்களுக்குத் தந்தன. பணக்காரர்களை எதிர்கொள்ளும் ஏழை காவலனாக அவர் தோற்றமளித்த படப் பாடல்கள் சமூக விமர்சனங்களாகவும் அமைந்தன. அவரால், ஏழைகளின், வறுமையை புரிந்துகொள்ள முடியும், போக்க முடியும் என அவரால் மக்களை நம்ப வைக்க முடிந்தது.
கருத்துக்களை உருவாக்கும் கூட்டம், அவரை, கொடுத்துச் சிவந்த கை கொண்ட வள்ளலாகவும், அவரது ராமாபுரத் தோட்ட வீட்டை, அள்ள அள்ளக் குறையாமல் அன்னமிடும் அமுதசுரபி உள்ள இல்லமாகவும் சித்தரித்தன. பெண்களைப் பொத்திப்பொத்தி காக்க வேண்டும் என போதித்த அவர் படங்கள், இங்கிலீசு படித்தாலும் இன்பத் தமிழ்நாட்டிலே இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள எனவும் போதித்தன. அவர் படங்கள், ரஜினிகாந்துக்கு முன்னோடியாக, பிழியப் பிழிய தாய்ப்பாசம் பேசின. தமிழர் என்றால் தாய்ப் பாசம் என்றன. அவரது அரசியல் வாரிசு ஜெயலலிதா, கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து நிரந்தரக் கழகப் பொதுச் செயலாளர் பதவிக்கும், சகோதரி பதவியில் இருந்து அம்மா பதவிக்கும் பதவி உயர்வு பெற்றார்.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதா தமிழக மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டார். வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார். அவர் இறக்கும்போது, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு என்ன ஆகும் என்ற கேள்வி அவரது அரசியல் வாழ்வின் மீது, நிம்மதியின் மீது தொங்கும் கத்தியாகவே நின்றது. மெகா ஊழல்களில் சிக்கிய அவர், பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளால், மக்கள் விரோத நடவடிக்கைகளால் அவப்பெயர் பெற்ற அவர், தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்ட அவர், 2016 தேர்தலில் பதவியில் இருக்கும் போதே வெற்றி பெற்றார்.
அண்ணாதுரை காலத்தில் இருந்து கழகங்கள், ஜனரஞ்சக நல நடவடிக்கைகளில் நிபுணர்களாக இருந்தன. அண்ணாதுரை ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்றார். ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்காவிட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து சாட்டையில் அடிக்குமாறு, தம் வாக்குறுதிக்கு ஓர் உத்தரவாதத்தையும் வழங்கினார். எம்.ஜி.ராமசந்திரன் சத்துணவு தந்த வள்ளல் ஆனார். கருணாநிதி, கட்டணமில்லா மூக்குக் கண்ணாடி துவங்கி, அவரது துதிபாடிகள் சொன்னதுபோல், தொட்டில் முதல் சுடுகாடு வரைக்குமான நல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகச் சொன்னார். அரிசியும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் முக்கிய நடவடிக்கைகளாயின. ஆனபோதும் மக்களின் வறுமையின் முன்பு, அவரது குடும்பத்தினரும் கட்சிக்காரர்களும் செய்த வரலாறு காணாத ஊழல்கள், அவரது ஆட்சிக்கு முடிவு கட்டின.
விலையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம், மகப்பேறு பலன், ஆடு, மாடு, மாணவர் சீருடை, நோட்டுப் புத்தகம், மடிக்கணினி நடவடிக்கைகளும், 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்களுக்கு இரு சக்கர வாகனங்களுக்கு 50% மானியம் போன்ற வாக்குறுதிகளுடன், தவ வாழ்க்கை, மக்களால் நான், மக்களுக்காக நான் உரை வீச்சுகளும், நிச்சயமாய் ஒரு வறியவர் சார்பு பிம்பத்தை ஜெயலலிதாவுக்குத் தந்தன. இவற்றோடு கூடவே, திரை உலகிலும் அரசியலிலும் எதிரிகளோடு மோதி, தடைகளைத் தாண்டி, வீரத்துடன், துணிச்சலுடன் வெற்றி பெற்ற பெண் என்ற விசயமும் பெண்கள் மத்தியில் எடுபட்டது.
அண்ணாதுரையில் இருந்து ஜெயலலிதா வரை, வறண்ட வாழ்வில் எப்போதாவது ஒரு குவளை நீர் தருபவர்களாக, பசித்தவருக்கு எப்போதாவது ஒரு மீன் தருபவர்களாக, ஒரு போதும் மீன் பிடிக்க தூண்டில் தராதவர்களாக, மீன் பிடிக்கத் தெரிந்து கொள்ள விடாதவர்களாகவே இருந்துள்ளனர். (அண்ணா நாமம் வாழ்க எனப் பேசிய ஜெயலலிதா காலத்தில் நீர் நிலைகளில் நீரும் இல்லை, மீனும் இல்லை). அவர்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகள். அவர்களிடம் வேறு அடிப்படையான மக்கள் சார்பு விசயங்களை எதிர்ப்பார்ப்பவர்கள்தான் தவறு செய்கிறார்கள்.
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
அதே நேரம், தமிழ்நாட்டில், பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் சில சாதனைகள் செய்து, மக்கள் சார்பு நிலைப்பாடுகளுக்கு சில அடித்தளங்கள் போட்டுள்ளன. (இந்த அடித்தளங்களை அமைப்பதில் நிச்சயமாக கம்யூனிஸ்டுகளுக்கும் பங்கு உண்டு). நாட்டு விடுதலைக் காலங்களில், காந்தி விவசாய சமூகத்தையும், நேரு மாணவர் இளைஞர் சமூகத்தையும் பொது வாழ்வில் சமூக அரசியல் நடப்புகளில் திரள்திரளாய் திரட்டினார்கள். தமிழ்நாட்டில் பெரியாரும் கழகங்களின் அசல் முன்னோடிகளும், ஏகப்பெரும்பான்மை அடித்தட்டு மக்களை, சேவை சாதியினரை, பொது வாழ்வுக்கு, சமூக அரசியல் நடப்புகளுக்கு ஈர்த்தார்கள். அன்றைய தலித் முன்னோடிகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டார்கள். தமிழ்ச் சமூகத்தின் மேல், கீழ் வரிசையில் ஒரு கலைத்துப் போடுதல் நடந்தது. சாமரம் வீசி வந்த பாமரர்களுக்கு பல்லாயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், கல்வியில், வேலை வாய்ப்பில் இடம் கிடைத்தது. அரசாங்க பதவிகளும் அரசியல் பதவிகளும் விவசாய மற்றும் சேவை சாதியினருக்கு சாத்தியமாயின. இந்த அடித்தளம்தான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடு ஒப்பீட்டுரீதியாக சில சமூக பொருளாதார அம்சங்களில் முன்னேறிய நிலைமையில் இருக்க உதவியது.
ராமச்சந்திரன், கருணாநிதி, ஜெயலலிதா பயணம் போக ஒரு வசதியான பாதை, 1940களில் இருந்து 1960களின் பிற்பகுதி வரை அமைக்கப்பட்டது. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் அனைத்து முற்போக்கு விழுமியங்களில் இருந்தும் முற்றாகத் துண்டித்துக் கொண்டு, தொடர்ச்சி எனச் சொல்ல எதுவும் இல்லை என்ற நிலையை, அது முடிந்துபோன கதை என்ற நிலையை, கடந்த சில பத்தாண்டுகளில் கழகங்கள் உருவாக்கிவிட்டனர். சங் பரிவாரின் மோடி, சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதலும் ஆசியும் தந்துள்ளதுடன், தமிழகத்தின் புதிய முதலமைச்சரை அவர் இறுக அணைத்ததுடன், அந்தப் பாரம்பரியம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
பெரியாரின், சுயமரியாதை இயக்கத்தின் பாரம்பரியம், சாதி எதிர்ப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பெண் சுதந்திரம் ஆகியவற்றின் பாரம்பரியமாக இருந்தது. பெரியார் தமது வாழ்நாளின் இறுதி வரை, நிலவுகிற சமத்துவமற்ற அநீதியான அமைப்பின் அதிருப்தியாளராகவே, கலகக்காரராகவே இருந்தார். பெரியார், தேர்தல் அரசியல் என்ற மிகப் பெரிய களத்தில் இருந்தும் அரசாங்கங்களில் இருந்தும் விலகியே நின்றார். 1940களின் பார்ப்பன பனியா ஆர்ய ராஜ்ய எதிர்ப்பும், சாதியற்ற திராவிட நாடு கனவும், ‘திராவிட நாட்டின்’ உள்பதட்டங்கள், முரண்பாடுகள் வர்க்க, சாதி, மத, பால்ரீதியான ஆதிக்கங்கள் மறைவதற்கு இட்டுச் செல்லவில்லை. 1952லிருந்து 1967 வரை, குறிப்பாக, காமராஜர் காலத்தில், பார்ப்பனரல்லாத முதலமைச்சர் மூலம், இடஒதுக்கீடு, அரசாங்க, அரசியல் பதவிகளில் பார்ப்பனரல்லாதோருக்கு உரிய இடங்களை உறுதி செய்யும், அரசியல்ரீதியான ஒரு காரியசாத்தியவாத முயற்சியில் பெரியார் ஈடுபட்டார். பெரியாரின் அரசியல் கருத்தியல் நிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் ஒரு வலுவான கருத்தியலாக, சாதி ஒழிப்பு சுரண்டல் ஒடுக்குமுறை ஆதிக்க எதிர்ப்பு இயக்க செயல்திட்டமாக வேரூன்றவில்லை. சாமான்யர்களுக்கே, சாதாரண மக்களுக்கே அனைத்தும் வேண்டும் எனக் கருதிய, களப் பணியாற்றிய குடியரசுவாதியான பெரியார், விவரங்கள் இல்லாத மக்களின் பங்கேற்பு ஜனநாயகமும் தேர்தல் முறையும் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கே இட்டுச் செல்லும் என நம்பினார். அவரது அமைப்பு முறைகளிலும் ஜனநாயகத்திற்கு இடம் இல்லாமல் போனது. 
மாறிய பயணம்
பெரியாரின், சுயமரியாதை இயக்கத்தின் உந்துதலால், ஆத்திரம் கொண்டு அடிக்கப் புறப்பட்ட போராளிகளாக மக்கள் எழுந்தனர். அண்ணாதுரை, கருணாநிதி, ராமச்சந்திரன், ஜெயலலிதா காலங்களில், அரசாங்கத்தின் தயவை, தலைவர்களின் நல் எண்ணத்தைச் சார்ந்திருக்கும் பயனாளிகள் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கழகங்களின் ஆட்சி துவங்கும் போதே, கிராமப்புற புதுப்பணக்காரர்களான குலாக்குகளும் உருவாயினர். புதிய இடைநிலை மேல்சாதியினர் நேரடியாக தலித்துகள் தலைகளில் கால் வைப்பவர்களாக மேலெழுந்தனர். 1967ல் இருந்து 2016 வரை பெரும்பாலான வருடங்களுக்கு, கழகங்களை, குறிப்பாக எம்.ஜி.ராமச்சந்திரனை ஆதரித்த இடதுசாரிகள், கழகங்களிடம் தமது பாரம்பரிய அடித்தளத்தை இழப்பதும் நடந்தேறியது. கூட்டணி தர்மமும் ஒதுக்கப்பட்ட இடங்களும் சுதந்திரமாய் வளர விடாமல் முடக்கிப் போட்டன.
கழகங்களின் அரசியல், தனிமனித வழிபாட்டை கலாச்சாரரீதியாக புதிய சிகரங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது. ராமச்சந்திரன் கட்சிக்காரர்களைக் கன்னத்தில் அறைவாராம். அடித்து உதைப்பாராம். ஜெயலலிதா காலில் விழ வைத்தார். இன்று அது ரத்தத்தில் ஊறி இயல்பு குணமாக மாறி, சின்னம்மா சசிகலா முன் குனிந்து கும்பிட வைக்கிறது. தமிழக இடதுசாரி கட்சித் தலைவர்கள் அண்ணாதுரை, ராமச்சந்திரன், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களை பெயர் சொல்லி அழைப்பதில்லை. இனி அம்மாவின் உடன்பிறவாச் சகோதரியை எப்படி அழைக்கப் போகிறார்களோ?
ஜெயலலிதாவை வேறு எதற்காக இல்லாவிட்டாலும், போராடிய துணிச்சலான பெண் என்பதற்காகப் புகழ வேண்டும் எனச் சிலர் உறுதியாக வாதாடுகிறார்கள். ‘அம்மா’ என அவரும் இணங்கி ஈடுபட்டு உருவாக்கிய பிம்பமே ஆணாதிக்க பிம்பம்தான். ‘அம்மா’ பிம்பம், ‘அம்மா’ கட்டமைப்பு, பெண் விடுதலைக்கு, பெண் சுயேச்சைத் தன்மைக்கு நேர் எதிரானது. பெண் ஏன் அடிமையானாள் பிரசுரத்தில் பெரியார் எழுதுகிறார்: ‘இன்றைய நம் உலகில் ஆண் பெண் இருவர்களினுடையவும் சுயேச்சைக்கே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும், பெண்கள் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கின்றது. பெண்களும், சொத்தும் வருவாயும் தொழிலும் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை எதிர்ப்பார்த்தே தீர வேண்டியிருக்கிறது. அதனால்தான், நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிறோம். பெண்கள் விடுதலைக்கும் சுயேச்சைக்கும் முன்னேற்றத்திற்கும், அவர்கள் பிள்ளை பெறுவதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்கிறோம்’. அம்மாக்கள், ஆணாதிக்கத்தின் சின்னங்கள். ‘அம்மா’ புனித பிம்பங்களைக் கட்டுடைப்பதில், இடதுசாரிகள், பெண்ணியவாதிகள், பெரியாரிய, அம்பேத்காரியவாதிகள் கரம் சேர்க்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் ‘காதல் போருக்கு’ எதிராக தருமபுரியில் நாயக்கன்கொட்டாய் பற்றியெரிந்தது. கண்ணகி, முருகேசன், கோகுல்ராஜ், சங்கர், விமலாதேவி போன்றோர் ஆதிக்கக் கொலை செய்யப்பட்டனர். வாச்சாத்தியில் பல பழங்குடி பெண்கள் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அந்தியூர் விஜயாவும் சிதம்பரம் பத்மினியும் ஜெயலலிதாவின் ஆணாதிக்க எதிர்ப்புக்கு எப்படி சாட்சியங்களாவார்கள்? தாலிக்குத் தங்கம், திருமாங்கல்யத் திட்டம் ஆகிய இரண்டுமே பெண்ணடிமை விலங்குகளுக்கு தங்க முலாம் பூசி வலுப்படுத்தும் புண்களே.
பிம்பப் பொறிகளில் இருந்து தமிழக மக்கள் விடுதலை பெற, தமிழ்நாட்டின் இடதுசாரி கட்சிகள் அவர்களை தயார்ப்படுத்தவில்லை. பிம்பப் பொறிகளை எதிர்த்துப் பகைத்துக் கொண்டால், அது அரசியல்ரீதியாக முட்டாள்தனம் என்று கருதினார்கள். காஸ்ட்ரோவின் 80ஆவது பிறந்த நாளில், நோபல் பரிசு பெற்ற பிரபல படைப்பாளி கேப்ரியல் கார்ஷியா மார்க்வெஸ், ‘எனக்குத் தெரியும் என்று நான் நம்பிய பிடல் காஸ்ட்ரோ’ என எழுதிய குறிப்பில், ‘நீங்கள் என்னிடம் இருந்து உண்மைகளை மறைக்கிறீர்கள். எனக்கு கவலை தர வேண்டாம் என நினைத்து அவ்வாறு செய்கிறீர்கள். ஆனால், நான் அவற்றைக் கண்டயறியும்போது, எனக்குச் சொல்லப்படாத அந்த உண்மைகளின் தாக்கத்தால் நான் இறந்து போவேன்’ என காஸ்ட்ரோ அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார். அவர் மேலும் சொல்கிறார்: ‘காஸ்ட்ரோ வீதிகளில் மக்களிடம் உரையாடும்போது, உண்மையான அன்பு, அப்பட்டமான வண்ணமயமான மொழியில் வெளிப்படும். அவரை மக்கள் பிடல் என அழைத்தார்கள்’. இந்தச் செய்தி, ஜனநாயக, குடியரசு விழுமியங்களை நேசிப்பவர்களுக்கு இன்பத் தேனாக காதில் பாயும்.
ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு என்ன விட்டுச் சென்றுள்ளார்? 
படுகொலை செய்யப்பட்ட சர்வாதிகாரி சீசர் இறந்த இடத்தில், அண்டோனியஸ், சீசரைக் கொன்றவர்களுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழ வைப்பதாக, ஷேக்ஸ்பியரின் ஜ÷லியஸ் சீசர் நாடகம் சொல்லும். மக்களிடம் சீசரின் உயில் படித்துக் காட்டப்பட்ட பிறகு, மக்கள், சீசரின் இறந்த உடலை தொட்டுப் பார்க்க முயற்சி செய்தார்களாம். சீசரின் ரத்தத்தை தங்களின் கைத் துணிகளில் நனைத்துக் கொள்ள விரும்பினார்களாம். சீசர், ஒவ்வொரு ரோமானியருக்கும் 75 ட்ராக்மா (1,875 அய்க்கி அமெரிக்க டாலர்) சேர வேண்டும் எனவும் தனது தோட்டங்கள், பூங்காக்கள், நிலங்கள் அனைத்தும் மக்கள் நடக்க, மனம் மகிழ்ந்து பொழுது போக்க மக்களிடம் தரப்பட வேண்டும் எனவும் எழுதியிருந்தானாம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா நிச்சயமாக, பெரியவர் பாண்டியன் மொழியில், மக்கள் சக்தி சசிகலாவை மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்!
அடுத்து என்னதான் நடக்கும்?
அதிகாரமும் அதனோடு வரும் பணமும் புகழும் சக்தி வாய்ந்த இணைக்கும் பசையாக இருக்கும். கட்சிக்குள் இருக்கிற பல்வேறு குழுக்களும் சாதியினரும் ஒரு சமரசத்துக்கு வரவே உடனடி வாய்ப்புண்டு. பன்னீர்செல்வம் சசிகலா சொற்படி ஆட்சி நடத்துவார். இரண்டு பேரையும் தமிழக அரசையும் மத்திய மோடி அரசு கட்டுப்படுத்தும். அஇஅதிமுக மூத்த தலைவர்கள் பலர் மீது, இன்று மத்திய அரசு எளிதாக கை வைக்க முடியும். பினாமி சொத்துக்கள், சட்டவிரோதமாக கணக்குக் காட்டாமல் வெளிநாடுகள் வரை குவித்து வைக்கப்பட்டுள்ள செல்வங்கள், ஊழல்கள் என பிடி கொடுத்துவிடும் விசயங்கள் மலிந்து கிடக்கின் றன. ரூ.100 கோடிக்கும் மேல் புதிய ரூபாய் நோட்டுக்களுடன் பிடிபட்ட சேகர் ரெட்டி, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருடன் சேர்ந்து திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு, நிழற்படத்தில் தோன்றியது, நாடறிந்த செய்தி.
பெரியாரின் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று விட முடியுமா என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. திமுகவும் அஇஅதிமுகவும் சங் பரிவாருக்கு முட்டுக் கொடுத்து, பாஜகவை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தனர். தமிழ்நாட்டில்தான் அப்படிச் செய்தனர். அசாமில், கேரளத்தில், கர்நாடகாவில் கால் பதித்துள்ள பாஜக, தமிழ்நாட்டிலும் வளர முடியும். அஇஅதிமுகவும் பாஜகவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி மரபணு கொண்ட கட்சிகள். 2016 கோவை கலவரத்தில் இந்துத்துவ சக்திகள், கோவையையும் திருப்பூரையும் முற்றிலும் தங்கள் கை வசம் வைத்தி ருந்தனர். மருத்துவமனை மர்மங்களுக்குத் துணை போன மத்திய அரசு, மாநில அரசை வெளிப்படையாக கட்டுப்படுத்துகிறது. நடந்த மூன்று தொகுதி தேர்தல்களில் அஇஅதிமுக, திமுகவுக்கு அடுத்து, பாமக, தேமுதிக தாண்டி பாஜகதான் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக என்ற கார்ப்பரேட் மதவாத கட்சி தமிழ்நாட்டில் வளர்வதை, நாம் விழிப்புடன் எதிர்கொண்டாக வேண்டும்.
அஇஅதிமுக, திமுகவுக்கு மாற்று சாத்தியம்தானா?
வர்க்க எதிரிகளை, மக்கள் விரோத கட்சிகளை கூடுதலாக மதிப்பிட்டு, மக்கள் ஆற்றலை, மக்கள் போராட்ட வாய்ப்புக்களை குறைத்து மதிப்பிடுவது, போராடும் இடதுசாரி அரசியலுக்குப் பொருத்தமானதல்ல. தேர்தல் கணக்குகள்படியே, அஇஅதிமுக, பலம் பெற்றுள்ளதா, பலவீனமாகியுள்ளதா என்று பார்க்க முடியும். 2016ல் 55% தமிழக வாக்காளர்கள் ஜெயலலிதா வேண்டாம் என வாக்களித்துள்ளனர். வெறும் 1.1%, 4,41,746 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர் ஆட்சியைப் பிடித்தார். 2011ல் 203 இடங்களில் வெற்றி பெற்ற அஇஅதிமுக, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் 217 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை பெற்ற அஇஅதிமுக, 2016ல் 134 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அஇஅதிமுக பலவீனப்பட்டுள்ளது.
திமுக பலமாகிவிட்டதா? 2016 தேர்தலில் வாக்களித்த 100 பேரில் 56 பேர், திமுக மேல் நம்பிக்கை வைக்கவில்லை. திமுக இது வரை இல்லாத அளவுக்கு உட்பூசல்களை, பகிரங்கமான கோஷ்டி மோதல்களைச் சந்தித்தது. அதன் மீது படிந்த ஊழல் கறை இன்னமும் நீங்கவில்லை. மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைய, கழகங்களின் நெருக்கடிகளும் தீவிரமடையும்.
அய்ம்பது ஆண்டு கால கழக ஆட்சிகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வேண்டும். சாத்தியமானவற்றை மட்டும் செய்வதில் இருந்து அவசியமானவற்றைச் செய்ய, சுதந்திரமாக வலுப்பெற, இடதுசாரிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பாதை கரடுமுரடானதுதான். வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது. வாய்ப்புக்களை வழங்காத சவால்கள் கிடையாது. இடதுசாரிகள், வலதுசாரிகளோடு தீவிரமாகப் போட்டியிட்டு வென்றாக வேண்டும்.

Search