COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 4, 2017

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு
கடந்த காலத்தை நினைவு கூர்ந்து எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம்!

2016 டிசம்பர் லிபரேசன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் இறுதிப் பகுதி

நவம்பர் உணர்வு

நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன; மிகவும் மாறுபட்ட ஒரு சூழலில் நாம் இப்போது இருக்கிறோம்; நவம்பர் புரட்சியின் நேரடியான தொட்டுணரத்தக்க விளைவான சோவியத் யூனியன் இப்போது இல்லை; அதன் வீழ்ச்சி விட்டுச்சென்ற வடுக்களும் ஆழமான காயங்களும் உள்ளன. அப்படியானால் தோற்றுப் போன ஒரு பரிசோதனையின் நூற்றாண்டை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
ஆம். நாம் கொண்டாடத்தான் வேண்டும்; ஏனென்றால், கடந்தகாலத் தீங்குகளில் இருந்து மிகவும் அடிப்படையான தகர்வின், அதே நேரம், மானுடத்தின் எதிர்காலமான கம்யூனிசம் நோக்கிய சர்வதேச நீண்ட பயணத்தின் துவக்கத்தின் வழிமரபு அது. அனைத்து பொருளாயத, கலாச்சார வளத்தின் இறுதி ஆதாரமான உழைக்கும் மக்கள், ஒடுக்குமுறையின் சுரண்டலின் நுகத்தடியை தூக்கியெறிந்துவிட்டபோது, அவர்களது எல்லையில்லா படைப்பாற்றலும் திறமைகளும் தளைகளில் இருந்து விடுபட்டன; மிகக்குறுகிய காலத்தில் அந்தத் திசையில் அவர்கள் கணிசமான தூரம் பயணித்தார்கள். அது என்றென்றைக்கும் போற்றத்தக்க ஓர் அற்புதமான தருணம் அல்லவா?
சோசலிச சமூகம் நடைமுறையில் இதோ சாத்தியம் என்பதை, அதன் பிரம்மாண்டமான விடுதலை செய்யக்கூடிய, ஆக்கபூர்வ சக்தியை ஒட்டுமொத்த உலகத்துக்கும் முதல்முதலாக நிகழ்த்திக் காட்டியது நவம்பர் புரட்சி. சிறு குழந்தையாக இருந்த சோவியத் அரசு, பஞ்சம், அந்நிய படையெடுப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து வந்த உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று அதன் பிறகு, 1945ல் ரீஷ்டாக் மாளிகையின் உச்சியில் செங்கொடியை பறக்கச் செய்தது முதல் 1961 ஏப்ரலில் விண்வெளிக்கு முதல் மனிதரை அனுப்பியது வரை, அனைத்தும் தழுவிய விதத்தில் முன்னேற்றம் கண்ட, சாதனைகள் படைத்த ஒளிமிக்கப் பாதையில் நடைபோட்டதை யாராவது மறந்துவிட முடியுமா? அல்லது, உலகம் முழுவதும் நடந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு நவம்பர் புரட்சி மிகப்பெரிய உந்துதலாக அமைந்து, மறைமுகமாக மட்டுமின்றி, பொருண்மையான விதத்திலும், இடதுசாரி முற்போக்கு நீரோட்டங்களை முன்னகர்த்தியதைத்தான் மறந்துவிட முடியுமா?
தொன்றுதொட்டு, ரஷ்யாவிலும் உலகின் பல பகுதிகளிலும், இந்த மண்ணின் உரமாக இருக்கிற வீரமிக்க பெண்களும் ஆண்களும், சுதந்திரம், நீதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான போராட்டத்தில் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை துறந்துள்ளனர். நவம்பர் புரட்சிக்குப் பிறகு அவர்களுடைய கனவுகள் நனவாகத் துவங்கின. முன் அனுபவம் எதுவும் இல்லாதபோது, கடுமையான உள்ளார்ந்த சிரமங்களை, வெளிவயப்பட்ட பகைமைகளை எதிர்கொள்ள நேர்ந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி சில பெரிய தவறுகள் செய்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஆயுதமாக இருந்த ஒரு வலிமையான அரசை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது; ஆனால், அதைச் செய்தபோது, உட்கட்சி ஜனநாயகத்துக்கும் சோசலிச ஜனநாயகத்துக்கும் சேதம் விளைந்தது. ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, தவறுகளை திருத்திக் கொள்வது என்ற பெயரில், மார்க்சிய லெனினிய அடிப்படைகள் வீசியெறியப்பட்டன. அந்த நேரத்தில் மாவோ போன்றவர்கள் சொன்னது அங்கு யார் காதுகளிலும் விழாமல் போனது. அடுத்த பத்தாண்டுகளில், உலக மேலாதிக்கத்துக்காக அய்க்கிய அமெரிக்காவுடன் போட்டி போட்டு இன்னொரு வல்லரசாக எழும் பித்துப்பிடித்த தூண்டுதல் போன்ற, வேறு பல கடுமையான சிதைவுகளும் ஏற்பட்டன. இது உண்மையான உற்பத்தித் துறைகளில் இருந்து ராணுவத் துறைக்கு, பொருட்களும் மனித வளங்களும், தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு, திருப்பி விடப்படுவதற்கு இட்டுச் சென்றது; இது பொருளாதாரத்தில் தேக்கத்துக்கும் சரிவுக்கும் இட்டுச் சென்றது. இந்த விலகலும் அழுகலும் தொடர்ந்தன. இறுதியில், அந்த வல்லரசு அதன் சொந்த சுமையினாலேயே சரிந்தது.
புரட்சி நடத்துவதில் வெற்றி பெறுவதும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதில் துவக்க நிலை வெற்றி காண்பதும் பெரிய வழிவிலகல் களை, முதலாளித்துவம் மீண்டுவருவதை  தடுக்கிற உத்தரவாதங்களாக இருக்க முடியாது என்பதை இந்த துன்பகரமான நிகழ்வுகள் காட்டுகின்றன; அவற்றை தடுப்பதில், ஸ்தூலமான நிலைமைகள் பற்றிய ஸ்தூலமான ஆய்வின் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை தொடர்ந்து வளர்த்தெடுத்து கறாராக கடைபிடிப்பது அவசியமானதாகும். உண்மையில் இந்த விசயத்தில் கருத்தியல் தளத்தில் கடுமையான இடைவெளிகள் இருந்தன. ஆனால், இந்தப் பாதகமான அனுபவம், மகத்தான சாதனை அனுபவங்களுடன் சேர்ந்து கொண்டு, சோசலிசத்தைக் கட்டி எழுப்பும் அடுத்த வாய்ப்பு வரும்போது, அதன் முரண்பாடுகளை கையாள்வதில், உலக பாட்டாளி வர்க்கத்தை மேலான நிலையில் வைத்திருக்கிறது என்பதில் உண்மை உள்ளதுதானே.
இப்படித்தான் இந்த சர்வதேச போராட் டம் நடக்கிறது. தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டும்தான் - இந்த ஒவ்வொரு முயற்சியும் ஒரு பக்கத்தன்மை கொண்டதாக, சில முரண்களால் பாதிக்கப்படுவதாக இருக்கும் - எல்லா நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர ஒத்துழைப்பால்தான் முழுமையான சோசலிசம் உருவாகும் என்று லெனின் துவக்கத்திலேயே தெளிவாகச் சொல்லவில்லையா?
சோசலிசம் உருவான நாட்டில் அது சந்தித்த பின்னடைவு எவ்வளவுதான் சேதம் உருவாக்கியிருந்தாலும், நவம்பர் புரட்சியின் வாரிசுகளான நாமும் பல்வேறு நாடுகளிலும் உள்ள இடதுசாரி சக்திகளும், நமது சொந்த வழிகளில் முன்செல்ல போராடுகிறோம்; பின்னடைவுகள் இருந்தபோதும் இறுதியில் முதலாளித்துவத்தை சோசலிசம் வெல்லும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு, நவம்பர் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக்குகளின் தத்துவ வலிமை, அரசியல் செயலூக்கம், செயல்தந்திர நெளிவுசுளிவு, நம்பிக்கையின் துணிச்சல் மற்றும் அவர்களின் புரட்சிகர வெகுமக்கள் வழி ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை ஆய்ந்தறிய, உணர்ந்து கொள்ள, அவற்றில் இருந்து கற்றுக் கொள்ள, அதே நேரம், இன்னும் பலப்பல நவம்பர்களுக்கு தயாராக மக்களுக்கு அழைப்பு விடுக்க, ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்.
சோவியத் குடியரசு வீழ்ச்சியுறுவதற்குக் காரணமான பலவற்றில், பொருளாதார செயலூக்கம் வற்றிப் போனதும், சோசலிச ஜனநாயகம் தொடர்ந்து அரித்துப் போய் கெட்டித்தட்டிப் போனதும் இரண்டு முக்கிய காரணங்களாகும். சோவியத் குடியரசு மறைந்து போன பிறகு, அதைத் தொடர்ந்து அதன் கூடவே ஒட்டுமொத்த சோசலிச முகாமும் சிதைந்து போன பிறகு, அய்க்கிய அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசாக தொடர்கிறது. பொருளாதார செயலூக்கம் மற்றும் ஜனரஞ்சக அங்கீகாரம் என்ற பொருளில், அய்க்கிய அமெரிக்காவின் மேல்நிலையை, சோவியத் வீழ்ச்சி தானாகவே உருவாக்கிவிட்டதைப் போல், அய்க்கிய அமெரிக்காவும் தார்மீக உயர்நிலையை எட்டிவிட்டதாகக் காட்டப் பார்த்தது. அய்க்கிய அமெரிக்காவும் அந்தத் தருணத்தைக் கைப்பற்றி, உலகின் பல்வேறு நாடுகளில் பொம்மை ஆட்சிகளை நிறுவியதன் மூலம் நவதாராளவாதக் கொள்கைகளை திணித்து, ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து ஒரு மூர்க்கமான அரசியல் ராணுவ இயக்கத்தைத் துவக்கியதை, நாம் பார்த்தோம். இந்த நிரந்தர சர்வதேசப் போர் இயக்கம், ஒரு காலத்தில் வளர்ந்து வந்த அதன் பொருளாதாரத்தை தடம்புரளச் செய்து, அதன் உள்நாட்டு ஜனநாயகத்தை மேலும் மேலும் அகற்றி, அய்க்கிய அமெரிக்காவைத் திருப்பித் தாக்கத் துவங்கியதை சமீப ஆண்டுகளில் பார்க்க முடிகிறது. வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம், கருப்பு உயிர்களுக்கும் பொருளுண்டு போன்ற உத்வேகம் தரும் இயக்கங்களின் வடிவத்தில், அய்க்கிய அமெரிக்காவில் சக்திவாய்ந்த வெகுமக்கள் போராட்டங்கள் வளர்வதை நாம் பார்க்கிறோம். இந்த வெகுமக்கள் ஜனநாயக அறுதியிடலும் அமெரிக்க மக்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தேடலும் ஒரு சக்திவாய்ந்த அரசியல் வெளிப்பாட்டை, வடிகாலை தேடுகிறது. (தன்னை சோசலிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு மிக அருகில் வந்தது, சமீப காலம் வரை கூட யோசித்துப் பார்க்க முடியாதது). மறுபுறம், இனவெறி, இசுலாமியர் வெறுப்பு, அந்நியர் வெறுப்பு, பெண்கள் வெறுப்பு ஆகியவற்றின் ஆபத்தான கலவையின் சக்தி பெற்று, அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி சூழலால் ஊக்கம் பெற்று, சமீபத்திய அதிபர் தேர்தல்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பது, ஒரு விடாப்பிடியான சமத்துவ ஜனநாயகத்துக்காக, முதலாளித்துவத்துக்கு அப்பால் தேட வேண்டிய ஓர் அவசர தேவையை மீண்டும் ஒரு முறை அடிக்கோடிட்டு காட்டுகிறது. முதலாளித்துவ ஜனநாயகங்களின் நெருக்கடி, ட்ரம்ப், எர்டோகன், மோடி போன்றவர்களை அவர்களுடைய நாடுகளில் மிகஉயர்ந்த அரசியல் பதவிகளில் அமர வைத்திருக்கும்போது, வரலாற்றின் இந்த நெருக்கடியான கட்டத்தில் நாம் முன்னேறிச் செல்வதற்கான பாதையை காண நவம்பர் புரட்சியின் உணர்வும் ஒளியும் நிச்சயம் நமக்குத் தேவை.
நவம்பர் புரட்சியின் உணர்வு நீடுழி வாழ்க!

மார்க்சிய லெனினியத்தின் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்!

Search