COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 26, 2017

தலையங்கம்
வறட்சி மாநிலம் என்ற அறிவிப்பின் வறட்சியும் அலட்சியமும்
(2017 ஜனவரி 16 – 31 மாலெ தீப்பொறி)
கங்கைச் சமவெளி நெசவாளர்களின் எலும்புக் கூடுகளால் வெண்ணிறமாகிப் போனது என்று, பிரிட்டிஷ் ஆட்சியில் நெசவாளர்களுக்கு நேர்ந்த துன்பத்தை மார்க்ஸ் விவரித்தார். இன்று மக்களின் வாக்குகளைப் பெற்று அமைக்கப்பட்டுள்ள ஆட்சியில் தமிழ்நாட்டின் காவிரி நதிக்கரை விவசாயிகளின் எலும்புக் கூடுகளால் நிறைந்து கொண்டிருக்கிறது. பூச்சி மருந்து குடித்து விடுகிறார்கள். தூக்கில் தொங்கிவிடுகிறார்கள். மன உளைச்சலில் இதயத்தை
நிறுத்திவிடுகிறார்கள். நவம்பர் 4 முதல் டிசம்பர் 29 வரை 40 விவசாயிகள் உயிரிழந்து விட்டனர். டிசம்பர் 30 அன்று, ஒரே நாளில், பயிர் கருகிப் போன அதிர்ச்சியில் 5 விவசாயிகள் இறந்துவிட்டார்கள். ஜனவரியின் முதல் வாரத்தில் மொத்த மொத்தமாக விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தது கூட நடந்தது. தமிழ்நாட்டில் இதுவரை காணப்படாத சாவுகள் இவை. அய்ம்பது ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிகள் முழுமையாக தோல்வியடைந்து விட்டதன் சாட்சிகள் இவை.
திருச்செங்கோடு கூட்டுறவு வங்கி ஒன்றில் வாங்கியிருந்த கடனுக்காக அந்த விவசாயிக்கு அறிவிப்பாணை வந்தது. ஜனவரி 5 அன்று வந்த அந்த அறிவிப்பாணை, ஜனவரி 9க்குள் ரூ.10,241 வட்டி கட்டிவிட வேண்டும் என்று சொன்னது. கடன்பட்டு கலங்கிக்கிடந்த நெஞ்சு ஜனவரி 6 அன்றே நின்றுவிட்டது. அவர் வாங்கியிருந்த கடன் வெறும் ஒரு லட்ச ரூபாய். இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஓர் அறிவிப்பு வந்திருந்தால் அந்த விவசாயி உயிர் பிழைத்திருப்பார். ஒரு கோடி லட்சம் கடன் வாங்கியவர் மேலும் கடன் பெற அரசாங்கமே வழி செய்யும்போது, வெறும் ஒரு லட்ச ரூபாய் கடன், அதைத் திருப்பித் தர தயாராகவே இருந்த ஒரு விவசாயியின் உயிரைப் பறித்துவிட்டது.
இந்த கோரச் சாவுகள் நிகழ்வதற்கான காரணங்கள் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. 2016 மே முதல் நடக்கும் ஆட்சி, அதற்கு முந்தைய அய்ந்தாண்டு கால ஆட்சி, அதற்கும் முன் நடந்த ஆட்சிகள், தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு தற்கொலைச் சூழலை மட்டுமே உருவாக்கியுள்ளன. ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது, மகசேசே விருது, நோபல் விருது ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று கேட்பவர்கள், சற்றும் மனசாட்சி உறுத்தல் இல்லாமல், ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டுமெனக் கேட்கிறார்கள். உயிரிழந்த விவசாயிகளின் ஆன்மாக்கள் அலறுவது, மூடநம்பிக்கைகளைச் சாடுபவர்களுக்குக் கூட கேட்கிறது.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு, அதிர்ச்சியில் உயிரிழப்பதற்கு, காவிரி, உச்சநீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு, தீர்மானம் என்று சொல்லிக் கொண்டு, மழை நீரை வீணாகக் கடலில் கலக்கவிட்ட ஜெயலலிதா முக்கிய காரணம். காவிரி பிரச்சனை ஒவ்வோர் ஆண்டும் எழுவது தெரிந்தும் தொடர்ந்து கடந்த அய்ந்து ஆண்டுகளாக, அதற்கு முன் ஆட்சிகளில் இருந்த காலங்களிலும் மாற்று ஏற்பாடுகளுக்கு வாய்ப்பிருந்தும், அவற்றுக்கு நிதி ஒதுக்குவதாக அறிவித்து, அவற்றை நிறைவேற்றிவிட்டதாகக் கணக்கு காட்டி, அவற்றை நிறைவேற்றாமல் பிரச்சனை மேலும் தீவிரமடைய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா.
காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பெறுவதில் உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்ற பிறகும் அது ஏட்டுச் சுரையாய் இருப்பது தெரிந்தும் விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, குறை தீர்க்க, உயிர் காக்க, பாசனத்துக்கு மாற்று ஏற்பாடுகள் முதல் வேறெந்த முயற்சியும் எடுக்காமல் காலத்தைத் தவறவிட்டவர், கடத்தியவர் ஜெயலலிதா. மீத்தேன் திட்டம், பாறை எரிவாயு திட்டம், கெயில் திட்டம் என பல்வேறு திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்த விவசாயிகளை இந்தத் திட்டங்கள் பதட்டத்தில் தள்ளிய நிலையிலும், மேம்போக்கு அறிவிப்புகள், கடிதங்கள் தாண்டி, அவர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்க முயற்சி செய்யாதவர் ஜெயலலிதா. இந்தத் திட்டங்கள் ரத்தானது தமிழக விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டங்களால்தானே தவிர ஆட்சியாளர்களின் அருளாலும் ஜெயலலிதாவின் கடிதங்களாலும் அல்ல. ஜெயலலிதாவின் பிறந்தநாளை விவசாயிகள் தினமாக அறிவித்தால் அது தமிழக விவசாயிகளுக்குச் செய்கிற இன்னும் ஒரு மிகப் பெரிய துரோகமாக தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெறும்.
டிசம்பரில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 45 விவசாயிகள் சாவு, காவிரி நெருக்கடி என்ற தலைப்புடன் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. விவசாயிகள் சாவுக்கு காவிரி நெருக்கடி மட்டும்தான் காரணமா? கர்நாடக அரசும் மத்திய அரசும் துரோகம் இழைத்து விட்டதாக மீண்டும் அஇஅதிமுக அரசு கை காட்டுகிறது. மோடி அரசு அதிகாரக் கணக்குப் பார்த்து தனக்கு உடனடி ஆதாயம் இல்லை என்பதால் தமிழக விவசாயிகள் சாவதை வேடிக்கைப் பார்க்கிறது. அந்தச் சாவுகளில் தனக்கு எந்தவிதமான பொறுப்பும் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நடந்துகொள்கிறது. கர்நாடகத்தில்தான் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது; தமிழ்நாட்டில் இல்லை. 
விவசாயிகள் சாவுகளைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டின் அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக ஆய்வு செய்யப் புறப்பட்டு விட்டார்கள். 2016ல் 135 விவசாயிகள் உயிரிழந்துவிட்டனர் என்று சொல்லப்படு கிறது. வயதானவர்கள், உடல் நலமற்றவர்கள் இறந்தார்கள் என்று சொல்லி ஆய்வுக்குச் சென்ற ஆட்சியாளர்கள் அந்தச் சாவுகளை வழக்கம் போல் கொச்சைப்படுத்துகின்றனர். முதலமைச்சர் கண்டலேறு நீர் வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். எல்லா வளங்களையும் திட்டமிட்டு அழித்துத் தின்று விட்ட பின் அண்டை மாநிலங்களிடம் கையேந்துவதைத் தவிர வேறென்ன வழி?
தமிழ்நாட்டு விவசாயிகள் பிரச்சனைகள் அனைத்தும் காவிரியுடன் துவங்கி காவிரியில் முடிந்துவிடுவதுபோல், விவசாயிகளை ஏமாற்றிப் பழகியவர்களும் ஏமாற்றிப் பிழைப்பவர்களும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
துயரத்தில் இருக்கும் விவசாயிகள் மிகத் தெளிவாக, ஒரு மிகச் சாதாரணமான கோரிக்கையை முன்வைக்கிறார்கள். தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து அதனடிப்படையில் விவசாயிகள் துயர்நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டார்கள். இந்தக் கோரிக்கைக்கு அரைமனதாக செவி சாய்ப்பதற்குள் இன்னும் சில பத்து விவசாயிகள் உயிரிழந்துவிட்டார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் கேளாச் செவியர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். கரையா மனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். விவசாயிகள் சாவுகள் அவர்களிடம் எந்த மனிதாபமான உணர்வையும் உருவாக்கவில்லை. இப்படி அறிவிக்க விதிகள் இடம் தருமா, தராதா என்று அவர்கள் விவாதம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.
மனிதனின் வாழ்க்கையைப் பாதுகாக்கவே விதிகளும் வரையறைகளும். அதற்குத் தடையாக இருக்கும் விதிகளை மாற்ற வேண்டியதுதானே. யாரையும் கேட்காமல் நாட்டின் பொருளாதாரத்தையே இருளில் தள்ளிவிட்ட ஒரு பிரதமர் நமக்கு இருக்கிறார். யாரையும் கேட்காமல் இந்த விதிகளையும் வளைத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைச் செய்யலாமே. மறுக்கிறார்கள். போக்கு காட்டுகிறார்கள். வஞ்சகர் கள். மத்திய அரசின் உதவி பெறும் அளவுக்கு வர்தா புயல் சேதம் ஏற்படுத்தவில்லை என்று அறிக்கை தரும் அளவுக்கு பெருங்குணம் கொண்டவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்தே தீருவது என்று ஜல்லிக்கட்டுக்குக்கூட கத்திக் கொண்டிருப்பவர்கள், வறட்சி மாநிலம் கோரிக்கை பற்றியோ, வர்தா புயல் போதுமான அளவுக்கு பாதிக்கவில்லை என்ற அறிக்கை பற்றியோ பேசாமல் இருக்கிறார்கள்.
அஇஅதிமுக ஆட்சியாளர்கள் அம்மா போன துக்கத்தில் இருப்பதாக காட்டிக் கொள்ளக் கூட முயற்சி செய்யவில்லை. அவர்கள் அதிகாரச் சண்டையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பாதித்ததை காப்பாற்றிக் கொள்ள, இன்னும் சம்பாதிக்க வழி என்ன என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் தமிழ்நாட்டு மக்களின் துயரம் தொடர்கிறது. விவசாயிகளின் சாவுகள் தொடர்கின்றன. 
பன்னீர்செல்வம் சில நாட்கள் நிமிர்ந்து நடந்ததைப் பார்க்க முடிந்தது. சின்னம்மாவின் காலில் விழுந்து எழுந்தார் என்றும் சொல்லப்பட்டது. மற்ற அஇஅதிமுககாரர்களும் இனி எப்படி காலில் விழுவார்கள், கார் டயருக்கு வணக்கம் சொல்வார்கள் என்றெல்லாம் நாம் இனிதான் பார்க்க வேண்டும். (விதியே விதியே என் செய நினைத்திட்டாய் தமிழச்சாதியை?) ஆனால், இவர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கிற வரை, விவசாயிகள் உயிர்கள் போகட்டும் என காத்திருக்க முடியாது.
இன்றைய தமிழக அரசு பலவீனமான அரசு. மக்கள் வாக்குகள் பெற்று ஆட்சியமைத்திருந்தாலும் மக்கள் செல்வாக்கு இல்லாத அரசு. மத்திய அரசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லா முனைகளிலும் நெருக்கடியைச் சந்திக்கிற அரசு. அரசின் இந்த பலவீனமான நேரத்தில் மக்கள் போராட்டங்கள் முன்னேறித் தாக்க வேண்டும். 
தமிழ்நாட்டில் பற்றியெரியும் பிரச்சனையான விவசாயிகள் சாவுகளுக்கு உடனடியாக தீர்வு வேண்டும். சென்னை தவிர பிற மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய நிவாரணங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். வறட்சி நிவாரண அறவிப்பே வறட்சியாக இருக்கும் நிலைக்கு முடிவு கட்டி, விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஏற்ப உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பயிரிழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கப்பட வேண்டும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். வேலை உறுதித் திட்ட கூலி பாக்கி உடனே வழங்கப்பட வேண்டும். வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை, நாள் கூலி ரூ.500 வழங்கப்பட வேண்டும். ஜன் தன் கணக்குகளில் தலா ரூ.1 லட்சம் செலுத்தப்பட வேண்டும். 
அடுத்த ஆண்டும் காவிரி புராணம் பாடாமல் விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, பாசன வசதிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, அமலாக்கப்பட வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்கள் இவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்க மக்கள் போராட்டங்கள் நிர்ப்பந்தம் உருவாக்க வேண்டும். தமிழ் நாட்டில் பொது விநியோகத்தில் கைவைப்பது தமது ஆட்சிக்கு குழி தோண்டிக் கொள்வது என்பதை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பது தொடர்வதும் அது போன்ற ஒரு நிலைக்கு ஆட்சியாளர்களைத் தள்ளும் என்ற அச்சம் அவர்களுக்கு உருவாவதை தமிழக மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

Search